ஆக்ஸ்போர்டு அகராதி ‘கல்வி’ என்ற சொல்லுக்கு போதனையும் பயிற்சியும் வழங்கும் முறை குறிப்பாக ‘குழந்தைகளுக்கு’ என்று குறிப்பிடுகிறது. இதிலிருந்து முன்பு கல்வி என்பது மதபோதனையோடு இணைக்கப்பட்டிருந்ததை அறிய முடிகிறது. போதனையளித்தல் என்பது பாடத்தை சொல்லித் தருதல் என ஆவதற்கே பல போராட்டங்கள் நடைபெற்றது.

                தொழிற்புரட்சியின் வளர்ச்சியையொட்டி பள்ளிகள் உருவாக்கப்பட்டது. அப்பள்ளிகள் குழந்தைகளை மிக மோசமாக நடத்தியது என்பது வரலாற்று உண்மை. ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டன் கல்விச் சாலைக்கு சென்று கல்வி பெற உரிமையில்லாத கீழ்நிலை வர்க்கத்தில் பிறந்தவர். அறிவியலாளர் ஐசன் நியூட்டன் கேம்பிரிஜ் பள்ளி விடுதியில், செல்வந்தர் வீட்டு குழந்தைகளுடைய துணிகளை துவைத்தும், பாத்திரபண்டங்கள் கழுவியும் படிக்க வேண்டியிருந்தது. ஆப்பிரிக்காவின் கருப்பினக் குழந்தைகள், அமெரிக்க நீக்ரோக்கள், இந்திய தலித்துக்கள் மற்றும் பெண்கள் கல்விக் கூடங்களில் காலடி எடுத்து வைக்கவே நூறாண்டு காலம் போராட வேண்டி இருந்தது என்பது வரலாற்று உண்மை.

                “இரும்பை அடித்து உலையிட்டு காய்ச்சுவதும், கல்வியளித்து குழந்தைகளை தயார்படுத்துவதும் ஒன்று தான்“ என்று வாட்டிகனின் போப்பாண்டவர் 1856 ஆம் ஆண்டு திருவாய் மலர்ந்தார். கிருஸ்துவமும் ஏனைய பிற மதங்களும் பள்ளிக்கூடம் திறந்ததற்கு பின்னே மதித்திணிப்பும், அதிகார வெறியும் இருந்தது.

                 குழந்தைகளின் உரிமைகள் குறித்த முதல் பிரகடனம் 1924 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 1914 முதல் 1918 வரை நடைபெற்ற முதல் உலகப் போரில் குடும்பம், வீடு, பெற்றோர் என அனைத்தையும் இழந்து நிராதவரான குழந்தைகளின் அவல நிலையை அடிப்படையாகக் கொண்டு, ஜெனிவாவிலிருந்து பதினேழு நாடுகள் கையொப்பமிட்டு பிரகடனப்படுத்தப்பட்டது. ஜெனிவா பிரகடனத்தில், பள்ளிக் கூட குழந்தைகளிடையே பாரபட்சம் காட்டக்கூடாது எனவும், போர்க் காலத்தில் குழந்தைகள் நடத்தப்பட வேண்டிய நெறி முறைகளையும் வெளிப்படுத்தியது.

                ஜக்கிய நாடுகள் சபை 1959 ஆம் ஆண்டு, குழந்தைகளின் உரிமைகள் மீதான பிரகடனத்தை வெளியிட்டது. கல்வியை விரிவாக்கிட அரசுகள் நிதி ஒதுக்கவும், கல்வி கற்பதை ஊக்கப்படுத்தவும் உலகின் பல நாடுகள் முன்வந்தன.

                 கல்வி என்ற பெயரில் குழந்தைகள் எப்படியெல்லாம் மன ரீதியாகவும், உடல் நீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உலகிற்கு எடுத்துரைத்தவர் ஜான் ஹோல்ட் .

                ஜான் கால்ட்வெல் ஹோல்ட் 1923 ஆம் ஆண்ட ஏப்ரல் 14 ஆம் நாள் அமெரிக்கவின் கொலராடேவில் பிறந்தார். பட்டப் படிப்பை முடித்ததும் அமெரிக்க கப்பற்படையில் சேர்ந்து, இரண்டாம் உலகப் போரில் நீர்மூழ்கி யுத்தக்கப்பலில் படை வீரராக பணியாற்றினார். போரின் முடிவுக்குப் பின் அணு ஆயுதப் பெருக்கம் தான் உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தல் என்பதை உணர்ந்தார். பின்னர், அமெரிக்க கப்பல் படையிலிருந்து வெளியேறி, பெடரலிஸ்ட் அமைப்பில் இணைந்து அணு ஆயுத எதிர்ப்பு பரப்புரையில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

                தமது தங்கையின் விருப்பத்திற்கிணங்க, நியூயார்க் நகரில் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். தான் படித்த காலத்தைவிடவும் இயந்திரமயமாகிப் போன கல்விச்சூழலை கண்டு மனம் வெதும்பினார். பல ஆண்டுகள் அந்தப் பள்ளியில் பணிபுரிந்து, மாணவர்களை தரம் உயர்த்த முயன்றும் அவரால் பெரிய அளவில் எதையும் செய்ய இயலவில்லை. அவர், கல்வியில் மாணவர்களது சுயவிருப்பம் எவ்வளவு அவசியமானது என்பதை உணர்ந்தார். விரைவில் போஸ்டன் நகர் பள்ளிக்கு ஆசிரியராகச் சென்றார். கிராமம், நகரம் என எங்கும் கல்வியின் மந்தப் போக்கும், வகுப்பறை வன்முறையும் ஒன்றாகவே உள்ளதை கண்டறிந்தார்.

                ஜான் கால்ட்வெல் ஹோல்ட், தமது சக ஆசிரியரான பில்ஹீல் என்பவரோடு இணைந்து மிக முக்கியமான பள்ளிக் கல்வி செயல் திட்ட சோதனைகளில் நேரடியாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பதினொரு ஆண்டு ஆசிரியப்பணிக்குப் பின் 1964 ஆம் ஆண்டு, ‘ குழந்தைகள் ஏன் தேர்வில் தோற்கிறார்கள் ? ‘(How  children Fail?) என்னும் நூலை எழுதி வெளியிட்டார். நூல் வெளிவந்த சில மாதங்களிலிலேயே மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

                அந்த நூலை அவரது சக ஆசிரிய நண்பர் பில்ஹீல் என்பவருடன் இணைந்து பத்தாண்டுகள் கடுமையாக பயிற்சி சோதனைகளை நடத்தி, ஆயிரக்கணக்கான குழந்தைகளிடம் நேரடி ஆய்வு நடத்தி தொகுத்த செய்திகளை, புள்ளி விவரங்களோடு, ஆதாரங்களோடு வெளியிட்டார். மேலும், ‘ குழந்தைகள் தேர்வில் தோற்பதற்கு காரணம், பள்ளியினால் தான்’ என்பதை தமது ஆய்வின் முடிவாக அறிவித்தார்.

                இந்த நூல், குழந்தைகள் பள்ளிக் கூடத்தை விரும்பாதது ஏன் என்பதை ஆய்வு செய்துள்ளது என்பதால், அமெரிக்கா முழுவதும் அதன் தாக்கம் ஏற்பட்டது. ஜான் கால்ட்வெல் ஹோல்ட் பத்திரிக்கை முதல் தொலைக்காட்சி வரை எங்கும் பேச அழைக்கப்பட்டார். அவர் தமது கருத்துக்களை சமரசம் செய்து கொள்ளாமல் துணிவுடன் வெளிப்படுத்தினார்.

                 ‘ குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் ’ (How children learn) என்னும் நூலை 1967 ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்நூலில் பள்ளிக்கூடங்களின் பலவீனத்தை மிக அழகாக ஆய்வு செய்து வெளிப்படுத்தினார். மேலும், “மனிதன் இயல்பாகவே கற்க விரும்பும் விலங்காவான், தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் விடப்பட்டால் அவன் அதிகம் கல்வி கற்க முடியும்” என்று அந்நூலில் குறிப்பிட்டார். குழந்தைகளின் கற்கும் முறையை விரிவாக, படிப்படியாக விளக்கியுள்ளார்.

                இந்த நூல் அய்ரோப்பா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. “பள்ளிக் கூடங்களை எனது வாழ்நாளுக்குள் மாற்ற முடியாது என்றே தோன்றுகிறது. அவை இப்படியே இருப்பதை தான் அரசாங்கமும் சமூகமும் விரும்புகின்றன ” என்று குறிப்பிட்டு பேசிய அடுத்த நாளே ஆசிரியர் பணியிலிருந்து வீட்டற்கு அனுப்பப்பட்டார். அமெரிக்காவில் கல்வி எவ்வளவு கீழ்த்தரமாகவும், வன்கொடுமை நிறைந்ததாகவும் இருந்தது என்பதை அவரது நூல்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன. “ அமெரிக்கா மட்டுமல்ல உலகில் ஏறக்குறைய அனைத்து நாடுகளின் ஆளும் வர்க்கமும் தங்கள் சார்புள்ள அரசியலை வரலாறு என்று குழந்தைகளுக்கு திணிக்கின்றன ” என்கிறார் மார்க்சிய விமர்சகர் நோம் காம்ஸ்கி.

                கல்வியை குழந்தைகளின் விருப்பத்திற்கும், சுதந்திரத்திற்கும் விட்டுவிட அரசுகள் ஒருக்காலும் சம்மதிக்காது என்பதைக் கண்ட ஜான் கால்ட்வெல் ஹோல்ட், பள்ளிக்கே செல்லாமல் இருப்பது தான் அதிலிருந்து தப்பிக்கும் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்தார்.

                இங்கிலாந்தில் ஜான் கால்ட்வெல் ஹோல்ட்டின் சுதந்திரமான கல்வி முறையிலும், பள்ளிக் குழந்தைகள் உரிமையிலும் நாட்டம் கொண்ட தேசிய பள்ளி கட்டமைப்பு (National  Union of school students) 1972 ஆம் ஆண்டு,, உலகின் முதல் பள்ளி மாணவர் உரிமை கோரும் மாநாட்டை நடத்தியது. அம்மாநாட்டில், குழந்தைகள் உரிமை மீட்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்தீர்மாணங்கள் உலகெங்கும் உள்ள கல்வி ஆர்வாலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது . மாநாட்டுத் தீர்மானங்கள் கீழ்க்கண்ட நான்கு முக்கிய பிரச்சனைகளை முன்வைத்து தீர்வு காண வலியுறுத்தியது.

1)            மாணவர்களை அடிப்பது, உடல் ரீதியில் தண்டனைகள் வழங்குவதை உடனே தடைசெய்திட வேண்டும்.

2)            உணவு இடைவேளையோடு, இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை குறைந்த பட்சம் பதினைந்து நிமிடம் ஆசுவாசப் படுத்தலை அமல் செய்திட வேண்டும்.

3)            இடைவேளையின் போது பள்ளி வளாகத்தினுள் எங்கும் சுற்றித்திரியும் சுதந்திரம் வேண்டும் .

4)            சீருடை திணிப்பை நிறுத்தி, சீருடைகளை தேர்ந்தெடுக்கும் உரிமையை மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும்.

மேலும், ஜான் கால்ட்வெல் ஹோல்ட், மேற்கண்ட மாணவர் கோரிக்கைகள் வரிசையில், குழந்தைகளுடன் தங்களுக்கு விருப்பமான பாடத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை, குழந்தைகள் அப்பாடங்களுக்கான ஆசிரியரை அல்லது வகுப்புப் பிரிவை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை முதலியவற்றையும் சேர்த்தார்.

கல்விக்குப் பதிலாக (Instead of  Education) என்றும் நூலை 1976 ஆம் ஆண்டு வெளியிட்டார். வீட்டிலிருந்தே சுதந்திரமாய் கல்வி கற்பது மிகவும் நல்லது என்று அந்நூலில் விவாதித்து சான்றுகளை முன்வைத்தார். அதையொட்டி அமெரிக்கா உட்பட பலநாடுகளில் ஜான் கால்ட்வெல் ஹோல்ட் ஆதரவாளர்கள் குழந்தைகளை பள்ளிகளிலிருந்து விலக்கிக் கொள்ளத் தொடங்கினார்கள், “ பள்ளிக் கூடம் என்பது நாகரீக உலகின் அறிவிக்கப்படாத கொத்தடிமை முறை ” எனும் ஜான் கால்ட்வெல் ஹோல்ட்டின் வாக்கியம் அந்த நூலில் தான் இடம் பெற்றிருக்கிறது.

தங்களுக்கு எதிரான ‘பள்ளி சார்ந்த – சாராத‘ வன்முறைகளிலிருந்து தப்பிப்பது எப்படி என்பதை விளக்கி, ‘Escape from childhood’ என்னும் நூலை வெளியிட்டார். அப்பொழுது, குழந்தைகளின் உரிமைகள் குறித்து உலகளாவிய விவாதங்களும், போராட்டங்களும் தொடர்ந்தன. குழந்தைகள் தாங்கள் சார்ந்திருக்க வேண்டிய மதம், பள்ளிக்கூடம், பெற்றோர் அல்லது பாதுகாவலரை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை வேண்டுமென்பது ஜான் கால்ட்வெல் ஹோல்ட் கருத்து. குழந்தைகள் நலனுக்கான தனி பட்ஜட், குழந்தைகளுக்கும் ஒட்டுப் போடும் உரிமை என அவரது கனவுகள் பரந்து விரிந்தன. மேலும், இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை பாடமுறை மாற்றப்பட வேண்டுமென அவர் முன் மொழிந்தார்.

                ஜான் கால்ட்வெல் ஹோல்ட் 1985 ஆம் ஆண்டு காலமானர். அப்பொழுது 117 நாடுகளில் குழந்தை உரிமை பேராயங்கள் நிறுவப்பட்டிருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் குழந்தைகளை அடிப்பது சிறைத் தண்டனை அளிக்கக்கூடிய குற்றமாகும் . விருப்பப்பாடங்கள் என்ற ஒரு தனிப்படைப்பிரிவு இல்லாத பள்ளியே இல்லை எனும் நிலை உருவாகியது. ஆனால், இந்தியாவில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை ஆசிரியர்கள் துன்புறுத்துவது, அடிப்பது, தண்டனையளிப்பது, வெளியில் நிற்க வைப்பது, அவமானப்படுத்தாவது, அவமானப்படுத்துவது தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டுதான் வருகிறது. இக்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து குழந்தைகள் சுதந்திரமாக கற்பது எப்போது?

- பி.தயாளன்

Pin It