இந்தியாவில் இந்தத்துவா சக்திகளால் மத சுதந்திரத் துக்கான அச்சுறுத்தல்கள் மேலும் மேலும் மோசமடைந்து வருவதாக அமெரிக்காவின் மத சுதந்திரத்துக்கான ஆணையத்தின் ஆண்டறிக்கை கூறியுள்ளது. ஏப்.26ம் தேதி, 2016ஆம் ஆண்டுக்கான அறிக்கையை அமெரிக்காவில் இந்த ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து தேசியவாதக் குழுக்களும் அவர்களின் ஆதரவாளர்களும், மதச் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களுக்கு எதிரான வன்முறை, துன்புறுத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது. 10 மாவட்டங்களில் இது மிகவும் மோசமாக நடந்து வருகிறது. நாட்டின் தேசிய மற்றும் மாநிலங்களின் சட்டங்களும் இந்த வன்முறைக்கு சாதகமான சூழல்களை உருவாக்கி வருகின்றன என்று குற்றம்சாட்டும், அந்த அறிக்கை பசுவதைத் தடைச் சட்டம், மற்றும் மத மாற்றத் தடைச் சட்டம் ஆகியவற்றை சுட்டிக்காட்டியுள்ளது.

பிரதமர் மோடி, சகிப்புத் தன்மை, மதச் சுதந்திரம் பற்றி பேசினாலும், ஆளும் கட்சியின் உறுப்பினர்களும் அவர்களோடு நெருக்கமாக இருக்கும் மத தேசியம் பேசும் அமைப்பினரும் மதச் சுதந்திரத்துக்கு எதிராக வன்முறை, கலவரங்களைத் தூண்டி விடுகிறார்கள் என்று அறிக்கை குற்றம்சாட்டுகிறது. காவல்துறையும், நீதித் துறையும் ஒரு சார்பாக செயல்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

கல்வித்துறை மீது தொடரும் மோடி அரசின் தாக்குதல்

உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப்படிப்புகளுக்கான நிதி ஒதுக் கீட்டை குறைத்துக்கொண்டே வரும் மோடி அரசு, சமூகப் பாகுபாடு பற்றிய ஆய்வு மையங்களுக்கான நிதியை முற்றிலுமாக நிறுத்தி விடுவதென முடிவெடுத்துள்ளது.

நாட்டின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் சமூகப் பாகுபாடு பற்றிய ஆய்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையங்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (யுஜிசி) நிதி அளித்து வருகிறது.

இந்நிலையில் 11-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நிலையங்கள் (2007-2012) மற்றும் 12-ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட சமூக பாகுபாடு பற்றிய ஆய்வு மையங்களுக்கான நிதியை நிறுத்தப் போவதாக யுஜிசி தெரிவித்துள்ளது.

13ஆவது திட்டத்தின் மூலம் மீண்டும் இத்திட்டம் நீட்டிக்கப்படும் என பல்கலைக்கழகங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், மார்ச் 31 முதல் இவற்றுக்கான நிதி நிறுத்தப்படும் என பல்கலைக்கழகங்கள் சில வற்றுக்கு யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பெண்கள் மீதான சமூக பாகுபாடு தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் இதர ஆய்வு மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், மோடி அரசின் புதிய அறிவிப்பு பல்கலைக் கழகங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக யுஜிசி துணைச் செயலாளர் சுஷ்மா ராத்தூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவுப்படி , 12-ஆவது திட்டக் காலம் முடிவடைந்தபின், சமூகப் பாகுபாடு ஆராய்ச்சி நிலையங் களுக்கான நிதியை யுஜிசி இனி மேல் வழங்காது; 12-ஆவது திட்ட காலம் முடிவடைந்த பின்னர் சமூக விலக்கல் மற்றும் உள்ளீடான திட்டங்களுக்கு யுஜிசி எந்த வகையிலும் பொறுப் பேற்காது; இது தொடர்பாக இனி பேசுவதைக்கூட யுஜிசி விரும்பவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், ‘பல்கலைக்கழக விதிகளுக்கு உட்பட்டு சமூகப் பாகுபாடுபற்றிய ஆராய்ச்சியை மேம்படுத்தாத நிலையங் களுக்கு மட்டுமே நிதி நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது’ என்று யுஜிசியும், மனிதவளத்துறை அமைச்சகமும் கூறுகின்றன.

‘வேத ஆய்வுகள் குறித்த படிப்புகளுக்கு, யுஜிசி நிதி அளிக்கஆரம்பித்தது. அதன் பின்னர், தலித்துக்களின் மேம்பாடு, அம்பேத்கரின் தத்துவம், இட ஒதுக்கீடு போன்றவை தொடர்பான ஆராய்ச்சி படிப்புகளுக்கு நிதிகளை படிப்படியாக யுஜிசி நிறுத்திவிட்டது’ என்கிறார், தில்லி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் ஆசிரியரும், அம்பேத்கரிய அறிஞருமான சுகுமார்.

மோடி அரசின் புதிய முடிவு காரணமாக மூடப்படும் ஆய்வு மையங்களில், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள சமூகப் பாகுபாடு ஆய்வு மையமும் ஒன்றாகும்.

இந்தத் துறையில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் வேறு துறைக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் தள்ளப்பட்டு உள்ளனர்.

அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த நாளை ஒட்டி தலித் மக்கள் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தப் போவதாக மோடி அறிவித்தார். ஆனால், சமூக பாகுபாடு பற்றிய ஆய்வு மையங்களுக்கான நிதியைக் கூட மோடி அரசு நிறுத்தியுள்ளது. 

Pin It