2012 நவம்பர் மாதம் 12 ஆம் நாள் முதல் தருமபுரியை மையமாக வைத்து சாதி வெறியர்கள் கட்டவிழ்த்து விட்ட வெறியாட்டங்களை எந்தவித மனசாட்சியும் இன்றி தமிழகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. சினிமாக்களில் காதலர்களைக் கொண்டாடும் இளையோர் கூட்டமும் காதலின் பெயரால் நடைபெறும் வன்முறை வெறியாட்டங்களைக் கண்டுகொள்ளவில்லை. ஈழத்தில் கொல்லப்படும் மக்கள்தான் தமிழர்கள் என்று அவர்கள் கண்டுபிடித்த காரணத்தினால் தமிழகத்தில் தமிழர்கள் இல்லை மாறாக எல்லோரும் சாதியர்களாக இருக்கிறார்கள் என்று அமைதியாக இருந்தார்கள். வடதமிழகம் சாதி வெறிபிடித்தவர்களால் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக எரிந்து கொண்டிருக்கிறது.

மக்களின் மனசாட்சி சாதியத்தினால் மறத்துப்போன நிலையில் இளவரசன் திவ்யா காதல் நிர்க்கதியாக நின்றது. சாதி வெறிபிடித்த வன்னியர்களின் கையில் அவர்களது காதல் கதறியழுதது. யாரும் மனம் இறங்கவில்லை.. ராமதாசின் அடிவருடிகள் குரூரத்தின் உச்சத்தில் கொட்டம்போட்டார்கள். அவர்களுக்கு சவுக்கடி கொடுப்பதுபோல திவ்யா நீதிமன்றத்தில் நான் இளவரசனுடன் வாழ விரும்புகிறேன் என்று சொன்னார். ஆனால் திவ்யா வாழ விரும்புவதை குடிகலக்கி ராமதாஸ் விரும்பவில்லை. அவரது அடியாட்களாக இருக்கும் வழக்கறிஞர்களை ஏவினார், திவ்ய மனம் தளரவில்லை, இளவரசனும் மனம் தளரவில்லை, எதிர்ப்புகளை எதிர்கொண்டார்கள். ஆனால் ஒரு பெரிய சாதி வெறிபிடித்த கூட்டத்திடம் எவ்வளவு நாள் தாக்குபிடிக்க முடியும்.. விளைவு இளவரசன் படுகொலை செய்யப்பட்டான்.

இளவரசன் படுகொலை.. ஆனால் தற்கொலை என்று செய்தி பரப்பப்படுகிறது. ஏன் அவன் படுகொலை செய்யப்பட்டான் என்பதற்கான அடிப்படைகள்..

1. 2013 மார்ச் மாதம் 19ஆம் நாள் நீதிமன்றத்தில் ஆஜரான திவ்யா நான் இளவரசனுடன் வாழ விரும்புகிறேன் என்று வாக்குமூலம் அளித்தார். இதனால் பாமகவினர் கடுமையாக அதிர்ச்சியடைந்தனர். அந்தப் பெண்ணை தங்களது கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர்.

2. 2013 மார்ச் 27 அன்று நீதிமன்றத்தில் ஆஜரான திவ்யா தமது முடிவில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். இளவரசன் குடும்பத்தினர் தம்மை நன்றாக கவனிப்பதாகத் தெரிவித்தார்.

3. பிறகு இளவரசனுடன் சேர்ந்த வாழ்ந்துவந்தார். தனது அம்மாவைப் பார்க்கப்போன திவ்யா பாமகவினரால் கடத்தப்படுகிறார். ஒரு ரகசிய இடத்தில் வைத்து மிரட்டப்படுகிறார், அவர் தங்க வைக்கப்பட்ட இடம் தைலாபுரம் என்று பத்திரிக்கைகள் எழுதின.

4. பிறகு ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்தபோது தான் தன் அம்மாவை கவனிக்க விரும்புவதாகவும் தெரிவித்து அவருடன் சென்றார்.

5. 2013 சூலை 1 அன்று அதே மனு விசாரணைக்கு வந்தபோது நீதியரசர்கள் தனியாக தமது அறையில் அவரை விசாரிக்க வேண்டும் என்று கூறினர். வன்னியர்களின் வழக்கறிஞர்கள் அதை கடுமையாக எதிர்த்தனர். தனியாக விசாரித்தால் அவர் சுதந்திரமாக உண்மையை கூறிவிடக்கூடும் என்று பயந்தனர். ஆனால் நீதிபதிகள் தமது அலுவலை காரணம் காட்டி மாலை 4 மணிக்கு தமது அறையில் விசாரிப்பதாக உத்தரவிட்டனர்.

6. மாலை 4 மணிக்கு நீதியரசர்கள் விசாரித்தபோது தாம் இளவரசனுடன் வாழ விரும்புவதாகவும் ஆனால் தன் அம்மா அதை ஏற்கும்வரை அவருடன் இருக்க விரும்புகிறேன் என்றும் சொன்னார். அதை அறியாத பாமக வழக்கறிஞர்கள் இளவரசன் கட்டாயப்படுத்துகிறார், மிரட்டுகிறார் எனவே அந்தப் பெண்ணை அம்மாவுடன் அனுப்ப வேண்டும் என்று வாதிடுகின்றனர். அவர்களின் எண்ணத்தை அறிந்த நீதியரசர்கள் 3ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைக்கின்றனர். அப்போது திவ்யா / இளவரசன் ஆகிய இருவரும் நீதிமன்றத்திற்கு வரக்கூடாது என்று உத்தரவிடுகின்றனர். அப்போது மாலை 5 மணி.

7. திவ்யா நீதியரசர்களிடம் சொன்ன செய்தி பத்திரிக்கைகளில் வந்தது. அதைக்கண்ட பாமகவினர் கடுமையாக அதிர்ச்சியடைந்தனர். தமது நெருக்கடிகளைத் தாண்டி திவ்யா உண்மையைக் கூறிவிட்டதால் கடும் கோபம் அடைகின்றனர். இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின்படி இளவரசன் தருமபுரிக்கு கிளம்பிப் போகிறார்.

8. 3ஆம் தேதி நீதிமன்றத்தை திசைதிருப்புவதற்காகவும், திவ்யாவின் வாக்குமூலம் பத்திரிக்கையில் வெளியானதை மறுக்கவும் அவர் கடுமையாக மிரட்டப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுகிறார். அன்றைக்கு அவர் ஆஜராகத் தேவையில்லை என்று நீதிமன்றம் கூறிய பிறகும்கூட. நீதிமன்றத்திற்கு வந்த திவ்யா தான் இளவரசனுடன் வாழ விரும்பவில்லை என்று பத்திரிக்கையாளர்களிடம் தழுதழுத்த குரலில் கூறிவிட்டுச் செல்கிறார், சிறிது நேரத்தில் மயக்கம்போட்டு விழுகிறார்.

9. தருமபுரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட திவ்யா அவ்வை நகர் என்ற இடத்தில் உள்ள தமது பெரியம்மா வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இளவரசன் ஊரில் செய்தி பரவுகிறது. இதைக் கேள்விப்பட்ட இளவரசன் திவ்யாவை சந்திக்கப் போகிறார். அங்கே படுகொலை செய்யப்படுகிறார். இளவரசன் கொலை செய்யப்பட்டுக் கிடந்த இடத்திற்கு அருகில்தான் அவ்வை நகர் இருக்கிறது.

10. இளவரசனை கொலை செய்ய இரும்பு உருட்டை பயன்படுத்தப்பட்டிருக்கிறது, கொலை செய்தவர்களின் கையுறையும், இரும்புத் தடியும் அருகில் கிடந்திருக்கிறது, ஆனால் அவை மாயமான விவரம் இன்னும் ரகசியம்..?

11. ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்ற சந்தேகம், அல்லது அவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற அறிவிப்பு அத்தனையும் பொய். ஏனெனில் அவன் கொலையுண்ட நேரம் 2.15 என்று தெரியவந்துள்ளது. அவன் இறந்த நேரத்தில் எந்த ரயிலும் அந்தப் பக்கம் போகவில்லை என்று ரயில்வே அட்டவணையில் தெரியவந்துள்ளது.

12. ரயிலில் விழுந்திருந்தால் அவன் தலையில் ஒருபக்கம் மட்டும் சிதறியிருக்காது, தலை வேகமாக ஓடும் ரயிலில் மோதியிருந்தால் முழுவதும் சிதறியிருக்கும். அடித்த வேகத்தில் கற்களின் மீது விழாமல் உடல் நீண்டதூரம் தூக்கி வீசப்பட்டிருக்கும்.

13. அப்படி தூக்கி வீசப்படும்போது உடலில் கடுமையான சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டிருக்கும். போட்டிருந்த உடை கிழிந்து சின்னாபின்னமாகியிருக்கும்.

14, ரத்தம் உறைத்து கருத்துப்போவதற்கான கால அவகாசம் அங்கு இல்லை, காய்ந்த ரத்தமே அங்கு இருந்தாக தெரியவந்துள்ளது..

15. ரயில் ஓடும்போது உருவாகும் புழுதி அவன் மீது இல்லை.

16. இளவரசன் இறந்த செய்தி கிடைத்த உடனே அனைத்து ஊடகங்களும் அவன் தற்கொலை செய்து கொண்டான் என்று 3 மணிக்கே அறிவித்தன. காவல் துறையும் உறுதி செய்கிறது. முக்கால் மணி நேரத்திற்குள் தமது கண்டுபிடிப்பை உறுதி செய்த அதிசயம் இளவரசன் கொலையில் தான் நடந்துள்ளது.

17. இளவசரன் கொலை செய்யப்பட்டதின் மூலம் திவ்யாவின் வாழ்க்கை சீரழிந்துவிட்டது.. அதற்கு யார் பொறுப்பு? தமது சொந்த குடும்பத்தின் நலனுக்காக, சாதி வெறிக்காக அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையை சூறையாடிய குடிகலக்கி ராமதாஸ் தான் காரணம்.

- கௌதம சன்னா

Pin It