சட்ட அறிவிப்பு / வக்கீல் நோட்டீஸ்

அனுப்புனர்,

திருமதி.ச.தமிழரசி, திருமதி. கொ. லடிஸ்லா மேரி, திரு.கு.கெபிஸ்ட்டன் மற்றும் திரு. ச. பால், இடிந்தகரை
திரு.சே.ஜான் தாமஸ் அன்டன், திரு. ஜெ. லாசர், கூத்தென்கழி,
திரு. வே. ராஜலிங்கம், திரு. அ. ஆதிலிங்கம், கூடங்குளம்

பெறுனர்,

நிர்வாக இயக்குனர், இந்திய அணுமின் கழகம், மும்பை.
தலைவர், அணுசக்தி ஒழுங்காற்று வாரியம், மும்பை
நிலைய /வளாக இயக்குனர், கூடங்குளம் அணுமின் நிலையம்

கூடங்குளம் அணு உலையைச் சுற்றி 5 கி.மீ.சுற்றளவுக்கு திட்ட பாதிப்புக்கு உள்ளாகும் கிராமங்களில் வாழும் மேற்சொன்ன மக்களால் அறிவுறுத்தப்பட்டு, கூடங்குளம் அணு உலையை இயக்கினால் இந்த மக்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும், உடல் நலத்திற்கும் ஆபத்து ஏற்படுத்தும் என்கிற காரணத்தால், இவர்களின் சார்பாக நான் இந்த சட்ட அறிவிப்பை அனுப்பி வைக்கிறேன்.

முதல் நபர், கூடங்குளம் அணுஉலைக்கு உரிமையாளரும், அதை இயக்குபவராகவும் இருக்கிறார்.

இரண்டாவது நபர், இந்த அணுஉலையை மேற்பார்வை செய்பவராகவும் மற்றும் கண்காணிப்பாளராகவும், 06.06.2013 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அரசியல் சாசனம் வழங்கிய நம்பிக்கை/உறுதிப்பாடு அடிப்படையில் முதன்மையாக/தலையாகிய கொடுக்கப்பட்ட பணியான அணுசக்தி பாதுகாப்பு மற்றும் அதை ஒழுங்குபடுத்து பவராகவும், மக்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க கூடியவராகவும் இருக்கிறார்.

எனது வாடிக்கையாளரின் புரிதலின் படி, கடந்த 2008 ஆம் ஆண்டு ரஷ்ய – இந்திய அரசுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட இருநாட்டு துணை ஒப்பந்தத்தின் படி, அணுஉலை வடிவங்களையும், அணுஉலையின் இயந்திரபாகங்களையும் வழங்குதல், அவற்றை இயக்குதல், கட்டுப்படுத்துதல், அவற்றின் மொத்த வடிவத்தொகுப்புகள் அனைத்தையும் நிறுவுதல் போன்ற அனைத்தும் ரஷ்ய நாட்டைச் சார்ந்ததே. அவைகள் அனைத்தும் ரஷ்யாவில் இருந்தே வரவழைக்கப்பட வேண்டும். இந்திய அணுமின் கழகம் மற்றும் அவர்களோடு இருக்கும் இந்தியக் கட்டிட ஒப்பந்ததாரர்கள் அனைவரும் இணைந்து அணு உலையை கட்டுவார்கள். ரஷ்ய நாட்டைச் சார்ந்த வல்லுனர்கள்,ஆலோசகர்களாக கூடங்குளம் அணுஉலை வளாகத்தில் தங்கி இருந்து அணு உலையை கட்டுவதற்கு, அணு உலையின் இயந்திர பாகங்களை நிறுவுவதற்கு, அதை இயக்குவதற்கு தேவையான தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்கி, அதை இந்திய அணுமின் கழகம் செயல்படுத்தும் வரை ரஷ்ய நாட்டவர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது..

எனது வாடிக்கையாளர்களின் .புரிதலின் படி, கூடங்குளத்தில் கட்டப்படும் அணு உலைகள் ரஷ்யாவின் விவிஇஆர் 1000 மாதிரி வடிவம் கொண்ட நன்னீர் அழுத்த அணுஉலைகள். ஆனால், கடந்த கால இந்திய அனுபவத்தின்படி, இந்தியர்களுக்கு கனநீர் அழுத்த அணுஉலைகளைக் கட்டித்தான் அனுபவம் உண்டு. ஆனால், இந்தியர்களுக்கு நன்னீர் அழுத்தத்தில் இயங்கும் அணுஉலை குறித்து எந்த அனுபவமும் இல்லை, தற்போதுதான் நன்னீர் அழுத்தத்தில் இயங்கும் ஒரு சிறியரக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை மட்டும் வடி வமைத்து வைத்திருக்கிறார்கள், அதைக்கூட அவர்கள் இன்னும் செயல்படுத்தவில்லை, இயக்கவில்லை. தொழிற்நுட்ப ரீதியாக பார்த்தால் ரஷ்யாவின் விவிஇஆர் 1000 மாதிரி நன்னீர் அழுத்த அணுஉலைகள், இந்திய கனநீர் அழுத்த அணுஉலைகளைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டது. ஆனால், ரஷ்யர்கள் சுமார் இருபது விவிஇஆர் - 1000 மாதிரி நன்னீர் அழுத்த அணுஉலைகளை வடிவமைத்து, கட்டியிருக்கிறார்கள். கடந்த காலங்களின் இந்திய அணுமின் கழகத்தோடு இணைந்து பணியாற்றக் கூடிய இந்திய அணுமின் கட்டிட ஒப்பந்ததாரர்களுக்கும் விவிஇஆர் 1000 மாதிரி நன்னீர் அழுத்த அணுஉலைகள் கட்டுகின்ற அனுபவம் குறைவு. ஆகவே, மேற்சொன்ன அனுபவம் இல்லாத நபர்களிடம் கூடங்குளம் அணு உலைகள் (1 & 2) கட்டும் பொறுப்பை ஒப்படைத்திருப்பது, கட்டுமானப் பணிகளை பகிர்ந்தளித்திருப்பது சரியான முடிவாகாது.ஏனெனில், இத்தகைய பெரிய, இறக்குமதி செய்யப்பட்ட, குழறுபடியான விவிஇஆர் 1000 மாதிரி நன்னீர் அழுத்த அணுஉலைகளை கட்டுவதற்கு அவர்களுக்கு எவ்வித தொழிற் நுட்ப அறிவும், திறமையும் இவர்களுக்கு கிடையாது.

எனது வாடிக்கையாளரின் கூற்றுப்படி, கூடங்குளம் அணு உலைக்கான மைய கொதிகலன்கள் மற்றும் இதர இயந்திரபாகங்கள் கடந்த 2005ஆம் ஆண்டே கூடங்குளம் அணுஉலை வளாகத்திற்கு வந்து சேர்ந்து விட்டன. திட்டமிட்டபடி கடந்த 2007 ஆம் ஆண்டே அணு உலையை அவர்கள் இயக்கி இருக்க வேண்டும். இந்தியாவின் தலைமை அமைச்சர், பிரதம அலுவலக இணை அமைச்சர் மற்றும் குற்றவாளியான அணுமின் கழக மூத்த அதிகாரிகள, அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் தலைமை அதிகாரிகள் என பலரும் அணு உலையை இயக்குவதற்கான பல இறுதி நாட்களை அறிவித்த பிறகும், அணு உலை இன்னும் இயங்கு வதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அவர்கள் மேற்கொண்ட அனைத்து சோதனை ஆய்வுகளும் தோல்வி அடைந்து விட்டதாகவே தெரிகிறது. ஆனால், இந்த தோல்வியான ஆய்வின் உண்மைகளை அவர்கள் இரகசியம் என்கிற போர்வையில் மக்களுக்கு வெளிப் படுத்தாமல் மறைத்து வருகிறார்கள்.

எனது வாடிக்கையாளர் கூறுவது போல, கடந்த 2012ஆம் ஆண்டு அணு உலையின் மைய கொதிகலனில் பற்றவைப்புகள் இருந்ததாக செய்திகள் வெளிவந்தன. இது அவர்கள் முதலில் ஒப்புக்கொண்ட/ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்திற்கு மாறானது/எதிரானது., இது தவிர 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கூடங்குளம் உட்பட மேலும் பல அணு உலைகளுக்கு தரமில்லாத, போலியான அணு உலை இயந்திரபாகங்களை வழங்க/சப்பளை செய்ய கையூட்டு பெற்றதாக ரஷ்யநாட்டின் உளவு அமைப்புகள் ரஷ்யாவில் செயல்படும் சியோ போடால்ஸ்க் நிறுவனத்தின் பொருள் கொள்முதல் அலுவலர்களை கைதுசெய்து சிறையில் அடைத்திருப்பதாக செய்திகள் வந்தன. அணு உலையின் இயந்திரபாகங்களை தயாரிக்க தரமில்லாத இரும்பை மற்றும் பிற தரம் குறைந்த உலோகங்களை பயன்படுத்தியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ளது.

வல்லுனர்களின் அறிவுறுத்தலின்படி, எனது வாடிக்கையாளர்கள் நம்புவது போல, தரக்கட்டுப் பாட்டில் கவனம் செலுத்தாமல், அதில் பொறுப்பில்லாமல், அணுஉலையில் தரமில்லாத இயந்திரங்களைப் பொருத்தி, அதை நிறுவியதோடு மட்டுமல்லாது, அங்கே இவற்றை விட மேலும் கூடுதலாக மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய வகையில் இருக்கக்கூடிய இயந்திரக்கருவியல் மற்றும் கட்டுபாட்டில் பெரிய சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. அதனால் தான் கூடங்குளம் அணு உலையின் முதல் பிரிவு இன்று வரையிலும் அவர்கள் குறிப்பிட்ட தேதிகளில் இயங்க முடியாமல், தள்ளிப் போடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அங்கே தீர்க்கமுடியாத, கண்டுபிடிக்க முடியாத மின்காந்த குறிப்பலைகள் பல இடங்களில் பதிக்கப்பட்டுள்ள கேபிள்களில் இருந்து வெளிப்படுகின்றன. இந்த மின்காந்த இடையூறுகளினால் ஏற்படுகின்ற அதிரடியான போலியான குறிப்பலைகள், பாதுகாப்பிற்கு பெரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இத்தகைய போலியான மின்காந்த குறிப்பலை களினால், உண்மையாக வெளிப்படுகின்ற மின்காந்த குறிப்பலைகளை கண்டுணர முடியவில்லை. இதனால் இவைகள் தவறான கட்டுப்பாட்டு சமிக்ஞைகளை அனுப்புவதால், பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய இயந்திரங்களுக்கு ஆபத்தாகவும், எதிர்பாராத கோளாறுகளையும், விபத்துக்களையும் ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

தங்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் வல்லுனர்களின் கூற்றுப்படி, எனது வாடிக்கையாளர்கள் தெரிவிப்பது என்னவெனில், கூடங்குளம் அணு உலையில் தற்போது பொருத்தப்பட்டுள்ள கேபிள்கள் அனைத்தும், மின்காந்த காப்புறைகள் எதுவும் எவ்வித கேபிள் தேர்வு தரத்திற்கும் பொருந்திப்போவதாக இல்லை. அவைகள் தரமிக்கதாகவும் அமைக்கப்படவில்லை. குறிப்பாக ரஷ்யாவின் தரக்கட்டுப்பாட்டு நிலைக்கோ அல்லது இந்திய தரத்திற்கு இணையாகவோ அல்லது வேறு எந்த தரத்திற்கும் ஈடாகவோ அவைகள் பொருத்தப்படவில்லை. இந்த மின்காந்த இயந்திரக் கோளாறு காரணமாகத்தான், அணு உலையில் சோதனைகள் நடக்கும் போது, அணு உலை கட்டுப்பாட்டு அமைப்புகளில் மின்தடங்கல் ஏற்பட்டு, தவறான மின்காந்த குறிப்பலைகளும் ஏற்படுகின்ற காரணத்தால், மிகுந்த சப்தமும், இரைச்சலும், அதிர்வுகளும் ஏற்பட்டு, அணு உலையின் அருகில் வாழும் மக்களிடையே மிகுந்த அச்சத்தையும், பீதியையும் உண்டாக்குகிறது. அணு உலை கொதிகலனின் மையப்பகுதியின், அந்த கொப்பரை வடிவில் இருக்கும், காங்க்ரீட் கூடார சுவரை இடித்து, அதன் பிறகு கேபிள்கள் பதித்ததால் உண்டான விளைவுகள் தான் இவைகள். இதனால், இந்த கட்டுப்பாட்டு அமைப்பு முறைகள் பலமிழந்து போய்விட்டன. நம்பகத்தன்மையை இழந்து விட்டன. தற்போது இருக்கும் இந்த மோசமான சூழ்நிலையில், இந்த அணு உலை இயக்கப்பட்டால், இந்த அணு உலை பேரழிவை ஏற்படுத்தும் சக்தியை வெளியிட்டு, கட்டுக்கடங்கமுடியாத வகையில் அணுப்பிளவை உண்டாக்கி, இந்த அணு உலையானது ஒரு அணு குண்டாக மாறி, எனது வாடிக்கையாளர்கள் வாழும் குடியிருப்பு பகுதியை முற்றிலுமாக அழித்து விடும்.

எனது வாடிக்கையாளர்கள் கொடுக்கும் தகவலின் படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் ஐந்து பேருக்கும் குறையாத நபர்கள் அணு உலையில் பயன்படுத்தப்பட்டுள்ள தரமில்லாத, பழுதடைந்த மின் கேபிள்களால் ஏற்பட்ட மின்கசிவு மற்றும் மின்அதிர்வு காரணமாக இறந்து போனதாக கூடங்குளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திரு. தினேஷ், த/பெ,திரு தர்மராஜ் (குற்ற வழக்கு எண் 129/09), திரு. ஆறுமுகப்பெருமாள், த/பெ. திரு. முத்துசாமி பிள்ளை (குற்ற வழக்கு எண் 259/09), திரு. பிரவீன் குமார், த/பெ, திரு. சித்திரை (குற்ற வழக்கு எண் - 50/11), திரு . கல்யாண சுந்தரம், த/பெ, மாயாண்டி (குற்ற வழக்கு எண் - 395/12), திரு. அசோக் சம்ந்தராய், தபெ.சுசில் சமந்தராய் (குற்ற வழக்கு எண் -52/13). இதை உள்ளூர் காவல்நிலையத்தினர் உறுதி செய்துள்ளனர். ஆகவே, இந்திய அணுமின் கழகம், மற்றும் அதன் திட்ட அதிகாரிகள் அனைவரும் மனிதப் படுகொலை செய்த குற்றத்திற்காக, அத்தகைய கொலைக் குற்றத்திற்கு ஈடான தண்டனைக்குரியவர்கள், அவர்களின் அலட்சியப் போக்கிற்காக, தங்கள் பொறுப்பில் இருந்து தவறியதன் காரணமாக விளைந்த இறப்புகளுக்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனது வாடிக்கையாளர்கள் வாழும் பகுதியில், பேரிடர் முன் தயாரிப்பு, பேரிடர் மேலாண்மை, மக்களை வெளியேற்ற அவசரகால ஒத்திகை நடவடிக்கைகள், அதற்கான அமைப்புகள், பயிற்சிகள் எதுவும் நடைமுறையில் இல்லை. மாவட்ட அதிகாரிகளோ, அல்லது அணு உலை நிர்வாகத்தினரோ, அணுஉலையில் ஏதேனும் விபத்து நடந்தால் அதை அவர்களால் எதிர்கொள்ளக்கூடிய, அதைக் கையாளக்கூடிய வகையில் அவர்கள் எவரும் தயார் நிலையில் இல்லை. அப்போது மக்களைக் காப்பாற்றும் நிலையில் அவர்கள் எவரும் திறன் படைத்தவராக இல்லை.

கடந்த 2013 மே மாதம் ஆறாம் நாள் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, இந்திய அணுமின் கழகமும், (முதல் நபர்) அணுசக்தி ஒழுங்காற்று வாரியமும் (இரண்டாவது நபர்) இணைந்து அணு உலையின் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும், குறிப்பாக அணு உலையின் பாதுகாப்பு, சுற்றுச்சூழலில் அது ஏற்படுத்தும் தாக்கம்/ பாதிப்பு மற்றும் அணுஉலை பாகங்கள் அனைத்தின் தரம் குறித்து முழுமையான ஆய்வு அறிக்கையை, அவர்கள் அணு உலையை இயக்கும் முன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்

எனது வாடிக்கையாளரின் கூற்றுப்படி, கூடங்குளம் அணுஉலையில் தரமற்ற, பழுதடைந்த இயந்திர பாகங்களை பயன்படுத்தியுள்ளது மற்றும் அதன் நம்பகமில்லாத தன்மை குறித்து அணு மின் கழகத்திற்கும், அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு முதலே நன்கு தெரியும். அவர்களுக்கு தெரிந்தே அனைத்து கட்டுமானப் பணிகளும் நடந்துள்ளன. இது தவிர, இவர்கள் இந்த குறைபாடுகள் குறித்த தகவல்களை இரகசியம் என்ற போர்வையில் நாட்டு மக்களுக்கு தெரிவிக்காமல் மூடி மறைத்து வைத்துள்ளனர். இதில் என்ன கொடுமை என்றால் இந்த பிரச்சனைகள் அனைத்தையும் முழுமையாக அறிந்தே, இவர்கள் இருவரும், இந்த தரமற்ற அணு உலையை இயக்குவதற்காக பல தடவைகள் முயற்சிகள் எடுத்துள்ளனர். இதனால், பேரிடரை ஏற்படுத்தக்கூடிய அளவில் இவர்கள் இருவரும் செயல்பட்டு, மக்களின் உடல்நலத்திற்கும், மக்களின் வாழ்வுக்கும், வாழ்வாதாரத்திற்கும் ஆபத்து ஏற்படுத்தக் கூடிய அளவில் நடந்துள்ளனர். இதனால் பெரிய அளவில் சாவும், அழிவும் எனது வாடிக்கையாளர்கள் வாழுகின்ற பகுதிகளிலும், அதன் அருகில் உள்ள கிராமங்களிலும் ஏற்பட்டிருக்கும்.

ஆகவே, இந்த சட்ட அறிவிப்பின் படி, நீங்கள் இருவரும் கூடங்குளம் அணு உலையில் நடைபெறும் அனைத்து பணிகளையும் உடனடியாக நிறுத்திவிட்டு, தரமற்ற இயந்திர பாகங்களால் கட்டப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலையை இனியும் காலம் கடத்தாமல் அதை அதிரடியாக மூட வேண்டும். இதன்படி, நீங்கள் இருவரும், உங்களுக்கு தெரிந்த அனைத்து உண்மை நிலவரங்களை, இது வரை நீங்கள் மறைத்து வைத்த உண்மைகளை உடனடியாக நாட்டு மக்களுக்கு தெளிவாகவும், இறுதியாக தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறீர்கள்.

இந்தப் பிரச்சனை குறித்த நியாயமான, சட்டபூர்வமான எதிர்பார்ப்புகளை நீங்கள் இந்த சட்ட அறிவிப்பு கிடைக்கப் பெற்ற 15 நாட்களுக்குள் நிறைவேற்றத் தவறினால், நீங்கள் மனமுவந்து, திட்டவட்டமாக இந்த தரமற்ற, பழுதடைந்த கூடங்குளம் அணு உலையை இயக்குவதற்கு, அதனால், எனது வாடிக்கையாளர்கள், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள், பக்கத்துக்கு கிராமத்து மக்கள் அனைவரின் உடல்நலத்திற்கு, உயிருக்கு, வாழ்வாதாரத்திற்கு ஏற்படப் போகும், மதிப்பிட முடியாத அனைத்து விளைவுகளுக்கும் முழுவதும் உடந்தையாக இருந்திருக் கிறீர்கள் என்ற குற்றத்திற்கு ஆளாகுவீர்கள்.

அரசியல் சாசன சட்டம் பிரிவு 21,வாழ்வதற்கான உரிமை எனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இதற்கு ஏதாவது குந்தகம்/இடையூறு ஏற்பட்டால், எதிர்பாராத வகையில் எதாவது நிகழ்வு ஏற்பட்டால், இவற்றை அலட்சியம் செய்த குற்றத்திற்காக, நீங்கள் இருவரும் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டி வரும். இதன்படி, எனது வாடிக்கையாளர்கள் நீங்கள் செய்த இந்தக் குற்றத்திற்காக, அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளுக்காக, இன்னபிற விளைவுகளுக்காக உங்களை பொறுப்பேற்க வைக்க உங்கள் இருவர் மீதும், சிவில், குற்றவியல், மற்றும் அரசியல் சாசனச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட குற்றத்திற்காக, சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிவரும் என்று இந்த சட்ட அறிவிப்பு மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

வழக்கறிஞர் திரு. தி.லஜபதி ராய், M.L

இடம் : மதுரை

நாள் : 02.07.2013

Pin It