திராவிடக் குழப்பம் தொடங்கிய இடம்:    

            தென்னிந்திய மொழிகளுக்கு ‘திராவிட மொழிக்குடும்பம்’ என்று பெயரிடக் காரணமாக, கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்ததாகக் கருதப்படும் குமரிளபட்டர் ‘ஆந்திர - திராவிட பாஷா’ என்று குறிப்பிடுகிறார் என்றும், தென்னிந்தியாவில் அதிக அளவில் மக்கள் பேசும் பேச்சுமொழிகள் இவையே என்றும், கன்னடமொழி தெலுங்கில் அடங்கும் என்றும், மலையாளம் தமிழில் அடங்கி யதாகக் கருதலாம் என்றும், இவையன்றி மேலும் சிறிய பேச்சுமொழிகளையும் உள்ளடக்கி, இவை ஒரு ‘பாஷை’என்று கருதப்பட்டது என்றும் கால்டுவெல் குறிப்பிடுகிறார். ‘திராவிடர்’ என்ற சொல்லைப் பொறுத்தவரை சமஸ்கிருதமொழி யியலாளர்கள் தென்னிந்திய மக்களைக் குறிக்க ஒரு பொதுச் சொல்லாக அதைப் பயன்படுத்தி யிருக்கிறார்கள் என்று கூறிவிட்டு மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டுகிறார்.

            அயல் மொழியாளர்கள் தென்னிந்திய மக்களை எவ்வாறு அழைத்தார்கள் என்ற சொல்லைத் தேடும் கால்டுவெல், பழங்காலத்தில் தென்னக மக்கள் தங்களை என்ன பெயரால் அழைத்துக் கொண்டிருந்திருப்பார்கள் என்ற ஆய்வுக்குள் நுழைந்து அச்சொல்லை தென்னக மக்களினத்திற்குப் பொதுப் பெயராக வைக்கும் முயற்சியில் இறங்கவில்லை.

            தென்னிந்திய மக்களைத் திராவிடர்கள் என்று அழைக்க வேறு ஏதேனும் காரணங்களைக் கால்டுவெல் காட்டுகிறாரா? மனுஸ்மிருதியில் குறிப்பிடப்படும் கீழ்நிலையடைந்த குடிகளில் தென்னிந்தியப் பகுதிகளில் உள்ளவர்கள் திராவிடர் மட்டுமே என்றும், ஆகவே அந்தப் பெயர் தென்னிந்தியக் குடிகள்(கூணூடிஞஞுண்) அனைத்தையும் குறிக்கும் சொல்லாகத் தோன்றுவதாகவும் கால்டுவெல் குறிப்பிடுகிறார். இப்படிப்பட்ட குடிகளுள் சேர்க்கப்படாதவர் உண்டென்றால் அது ஆந்திரர் என்றும், அவர்கள் பெயர் ஐத்ரேய பிராமணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், அதுவுங்கூட புந்திரர், சபரர், புலிண்டர் ஆகியோருடன் சேர்த்து, விசுவாமித்திரரின் இழிநிலையடைந்த வழித்தோன்றல் கள் என்று குறிப்பிடப்படுவதாக கால்டுவெல் தெரிவிக்கிறார். மேலும் மகாபாரதத்திலும் இதுபோன்ற செய்தி பேசப்படுவதாகக் கால்டுவெல் கூறுகிறார். இழிநிலை அடைந்த சத்திரியர்களைப் பற்றிய இரண்டு பட்டியல்களிலும் தென்னிந்தியப் பகுதியைச் சேர்ந்தவர்களாகக் குறிப்பிடுவது திராவிடர் மட்டுமே. ஆகவே, பாண்டியர், சோழர் ஆகிய குறிப்பிட்ட பெயர்கள் வடஇந்தியாவுக்குத் தெரிந்திருந்தாலும், திராவிடர் என்ற பெயர் பொதுப்பெயராகப் பயன்படுத்தப் பட்டுள்ளதாகக் கால்டுவெல் முடிவு செய்கிறார். பாகவத புராணத்தில், சத்யவிரதன் என்பவன் இப்பொருளிலேயே, திராவிட மன்னன் என்று ஐயத்திற்கிடமின்றி அழைக்கப் பட்டுள்ளதாகக் கால்டுவெல் குறிப்பிடுகிறார். (RobertCaldwell, A Comparative Grammar of Dravidian Languages(1856), 1875, Kavithasaran Pathipagam, Chennai, 2008, p.6)

            கால்டுவெல் தென்னிந்திய மக்களைக் குறிக்க, மனுஸ்மிருதி, ஐத்திரேய பிராமணம், மகாபாரதம், பாகவத புராணம் ஆகியவற்றில் சொற்களைத் தேடுகிறார். ஆனால் மகாபாரதமோ திராவிடர்களைத் தனியொரு பிரிவாகக் காட்டுகிறது.

            மகாபாரதத்தில் யுதிஸ்திரன்(தர்மர்) இராஜசூய யாகம் நடத்தும் முன்பு அனைத்து மன்னர்களையும் வெல்ல விரும்பி தம்பி சகாதேவனைப் படையுடன் அனுப்புகிறான். சகாதேவன் தெற்கே ‘திக்விஜயம்’ மேற்கொண்டு திராவிடர், சோழர், கேரளர் மற்றும் பாண்டியரை வென்றான் என்று மகாபாரதம் கூறுகிறது. (Maha bharata, ii, 34, 1988). இதன் பொருள், ‘திராவிடர்’ என்ற சொல்லை கால்டுவெல் தவறாகக் தெரிவு செய்தார் என்பதே ஆகும்.

கோளாறு எந்த இடத்தில் தொடங்குகிறது?

            சற்றே பிற்காலத்தில் மொழி யியலாளர்களும் ‘திராவிட’ என்ற சொல்லை தாம் கூறும் பொரு ளிலேயே பயன்படுத்தி யுள்ளதாகக் கால்டுவெல் கூறுகிறார். கால்டுவெல் கூறும் செய்தியின் சாரம் இதுதான்: இதற்குமுன் மொழிகளைத் தொகைப் படுத்தி வகை பிரித்து வைத்தபடி, முதன்மையான பிராகிருத அதாவது பாகத மொழிகள் என்பவை மூன்று. அவை, மகாராஷ்டிரி, சௌரசேனி, மாகதி ஆகியவை. இவற்றுக்கு அடுத்த படியாக சிறிய பிராகிருதங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று என ‘திராவிடர்’ பேசும் ‘திராவிடி’ சேர்க்கப் படுகிறது. சமஸ்கிருத மூலநூல் களைத் தொகுத்த மூர் கூறுகிறபடி, ஒரு சமஸ்கிருத மொழியியலாளர் திராவிட மொழி யை ‘விபாஷா’ அல்லது சிறிய பிராகிருதம் என்று குறிப்பிடுகிறார். மற்றொருவர் ‘திராவிடர்’ பேசும் மொழியைத் திராவிடி என்று குறிப்பிடுகிறார். ஆகவே, தமிழ், தெலுங்கு அல்லது வேறு எந்த மொழியையும் தனித்து அந்த சொல் குறிக்காமல், திராவிடமொழிகள் பொதுவாக ஒரு மொழியைச் சேர்ந்தவையாக வடஇந்திய நூலாசிரியர்களால், தெளிவற்ற வகை யில், கருதப்பட்டது. பிராமண மொழியாளர்களின் வெறுப்பைக் காட்டும் வகையில் திராவிட மொழி பைசாச பிராகிருதத்தில் சேர்க்கப்பட்டது. நமது காலம் வரையிலும் கூட, சில சமயங்களில் ‘திராவிடி’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. (Caldwell, p.6).

            1854ஆம் ஆண்டு அளவிலும் கூட பாபு ராஜேந்திரலால் மித்ரா, ‘திராவிட’ என்பது சௌரசேனியுடன் ஒருங்கிணைத்து எண்ணுமளவிற்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட பிராகிருதங்களுள் ஒன்று என்று குறிப்பிடுகிறார்.

            ஆகவே, ‘திராவிட’ என்ற சொல்லிலிருந்தே ‘Dravidian’ என்ற சொல்லை உருவாக்கிக் கொள்வதாகவும், இந்தச் சொல்லை உள்நாட்டு மொழிவாணர்கள் எப் போதாவது தெளிவற்றமுறை யிலாவது, பயன்படுத்தியுள்ளதால் இச்சொல்லைத் தாம் ஏற்றுக் கொண்டு, ‘தமிழிய’(Tamilan) என்ற சொல் தெளிவாகத் தமிழைக் குறிக்க வைத்தபடியாகவும் கால்டுவெல் குறிப்பிடுகிறார்.

            கோளாறு எந்த இடத்தில் தொடங்குகிறது என்பதை சரியாக அடையாளம் காணலாம். தன் விருப்பப்படி ஒரு பெயரைத் தெரிவு செய்து, அதை மொழியாய்வு வரம்பைத் தாண்டி அந்த மொழிக் குடும்ப மக்கள் பிரிவினர்களுக்கும், இனப்பெயராகக் கால்டுவெல் சூட்டுகிறார். தென்னிந்திய மக்கள் தொன்மை காலந்தொட்டு ஒரு பண்பாட்டு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதுவது சரியானது; ஆனால் அவர்களைத் திராவிடர்கள் என்று அடையாளப்படுத்தியது தவறானது. அவ்வாறு திராவிடர்கள் என்று பெயரிடத் தக்கக் காரணங்கள் இருந்ததாகக் கால்டுவெல் நம்பினார். கால்டுவெல் கொண்ட புரிதல் சரியானதுதானா? அவர் எந்த இடத்தில் தவறு செய்திருக்கிறார் என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும்.

            கால்டுவெல் இவ்வாறு பேசுகிறார்:

“பாபு, திராவிடி என்னும் பிராகிருதத் திலிருந்து பிறந்தவை என சில நாட்டு மொழிகளை குறிப்பிடும் போது, அவர் குறிப்பிடும் அந்த வழக்கு மொழிகள் சந்தேகத் திற்கிடமின்றி வட இந்தியப் பண்டிதர்களால் சில சமயங்களில் ‘பஞ்ச திராவிர’ என்று குறிப்பிடும் மொழிகளையே ஆகும். நவீன இந்தியாவின் பேச்சுமொழிகள் இரண்டு பிரிவுகளாகப் பண்டிதர்களால், அவை ஒவ்வொன் றிலும் ஐந்து வழக்கு மொழிகள் அடங்குமாறு பிரிக்கப்படுகின்றன. இவற்றுக்கு முறையே ‘பஞ்ச கௌர’என்றும் ‘பஞ்ச திராவிர’என்றும் பெயரிடப் பட்டிருக்கின்றன. இதில், ‘கௌடா’ அல்லது ‘கௌரா’ மொழிகள் என்பவை ‘பாஷா’களை அல்லது வட இந்திய மக்கள் மொழிகளைக் குறிக்கும். அவற்றுள் தலைமை யானது வங்காள மொழி; அதுவே ‘கௌரா’ எனப்படுவது. தற்போது, வங்காளி, ஒரியா, இந்தி, அதன் மகளாகிய இந்துஸ்தானி, பஞ்சாபி, சிந்தி, குஜராத் மற்றும் மராத்தி ஆகியவை ‘கௌரிய’ மொழி வகுப்பை உருவாக்குபவை எனக் கருத லாம்; அவற்றுடன் காஷ்மீரியன், மார்வாரி, அஸ்ஸாமி மற்றும் நேப்பாள அரசவை மொழி என பதினோறு மொழிகளை, ஐந்து என்பதற்குப் பதிலாக நான் சேர்ப்பேன்.

            பண்டிதர்களின் கூற்றுப்படி, ஐந்து திராவிடர்கள் அல்லது திரவிரங்கள் என்பவை, தெலிங்க, கர்நாடக, மராத்தி, குஜராத்தி மற்றும் திராவிர அல்லது தமிழ் - ஆகியவையாகும். சப்த - கல்ப - ட்ருமா இவ்வாறு பட்டியலிடுகிறது: திராவிட, கர்னாடக, குஜராட்ட, மராட்ட மற்றும் தெலிங்க.

            மராத்தியும், குஜராத்தியும் தவறுதலாக இந்தப் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. மகாராஷ் டிர அல்லது மராத்தி சிறிய அளவிற்கு திராவிட வேர்ச்சொற் களையும் பெற்றிருக்கிறது என்பது உண்மை தான். அது தெலுங்கு அல்லது கன்னட மொழிப்பகுதிக்கு அருகாமையில் அமைந் திருப்பதால் அதை (அவ்வாறு திராவிடச் சொற்கள் காணப்படுவது) நாம் எதிர்பார்க் கலாம்; மராத்தியும் கூர்ஜரம் அல்லது குஜராத்தி தென்னகத்து மொழி களின் சில பண்புக் கூறுகளை ஒத்த பண்புகளைப் பெற்றிருக்கின்றன. இம்மொழி கள் அப்பண்புகளை அதே மூலத்தி லிருந்தோ அல்லது ஒத்திருக்கும் வேறு மூலத்தி லிருந்தோ பெற்றிருக்கலாம். ஆனால், இவ்வாறு சில பண்புக் கூறுகளால் ஒருமித்து இருந்த போதிலுங்கூட, இந்த இரண்டு மொழிகளும் திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து மிக உடனடி யாகவும் அதிக அளவிலும் வேறுபடுகின்றன. இவ்விரண்டு மொழிகளையும் (தென்னக மொழிப்பிரிவிலிருந்து பிரித்து) வடக்கத்திய மொழிக் குழுவுடன் சேர்ப்பதில் எந்த தயக்கமும் இருக்கத் தேவையில்லா அளவிற்கு, வட இந்திய மொழிக்குழுவுடன் மிக நெருக்க மான தொடர்புடையவையாக இருக்கின்றன.

            திராவிட மொழிப் பகுப்பில் எஞ்சியுள்ள மூன்று மொழிகளான கர்னாடகம், எனப்படும் கனரீசு, தெலிங்கா அல்லது தெலுகு மற்றும் திராவிட எனப்படும் தமிழ் ஆகியவை தென்னக அல்லது திராவிடக் குடும்பத்தின் உறுதியான மற்றும் முகாமை யான உறுப்பினர்கள். மலை யாளம் மற்றும் துளு ஆகியவை சமஸ்கிருதக் குடும்பப் பட்டி யிலில் இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இவற்றில் முதலாவது (மலையாளம்) தமிழில் ஒரு வழக்குமொழி; ஆகவே அது திராவிடத்தின் (தமிழின்) வகையெனச் சேர்க்கப் படுவதாகக் கருதலாம். இரண் டாவது மொழி (துளு) பற்றி ஏதும் அறியப்படாமல் இருந் திருக்கலாம். செழுமையுறாத வழக்குமொழிகளான - துடா, கோடா, கோண்டு மற்றும் கோண்ட் - ஆகியவை பற்றிப் பண்டிதர்களுக்குத் தெரிந்திருக்க வில்லை என்று தோன்றுகிறது அல்லது இவை பற்றி அறிந்தி ருந்தாலும், இவை கவனத்தில் கொள்ளத் தகுதியுடையன அல்ல என்று கருதப்பட்டிருக்கலாம்.

            திராவிட மொழிகளைச் சேர்ந்த எந்த சொல்லும், எப்போதுமே, இக்குடும்ப உறுப்புமொழிகள் அனைத்தையும் அடையாளப்படுத்தப் பயன் பட்டதே இல்லை; அல்லது உள்நாட்டு தமிழ் அல்லது தெலுங்கு இலக்கண வல்லு னர்கள், அவரவர்களது மொழி - இலக்கணத்தில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்த போதிலும், ஒப்பிலக் கணத்தில் போதுமான அறிமுகம் பெற்றிருந்த போதிலும், இம் மொழிகள் அனைத்தும் ஒரு மூலத்தைக் கொண்டவை. என்றும், அவற்றை ஒரு பொதுச் சொல்லால் அடையாளப் படுத்துவது அவசியம் என்ற முடிவுக்கும் வந்ததேயில்லை. சில ஐரோப்பிய அறிஞர்கள், திராவிட மொழிகளுள் ஏதாவது ஒன்றை மட்டுமே சிறப்பாகக் கற்பதுடன் தங்கள் கவனத்தை குறைத்துக் கொண்டவர்கள் இந்த மொழிகள் அனைத்தும் தனித்தனியானவை, ஒன்றோடொன்று தொடர் பற்றவை என்ற அதே எண்ணப் பிசகில் வீழ்ந்திருக்கின்றனர்.

            (மொழிகளின்) இலக்கணங் களுக்கிடையேயான உறவுகளும், வேறுபாடுகளும் பற்றி திராவிட மொழி இலக்கணாசிரியர்களை விட சமஸ்கிருதப் பண்டிதர்கள் தெளிவான பார்வையைப் பெற்றிருப்பதாகத் தோன்றுகிறது. சமஸ்கிருதப் பண்டிதர்களின் (ஒத்த மொழிகளின் தொகுப்பு களுக்கு) பொதுப் பெயரிடுதல் என்பது மிகச்சரியானதாக இல்லாமல் இருந்திருந்தாலும் கூட, அது இந்திய மொழிகளின், வடபுலத்து மற்றும் தென்னக மொழிக் குடும்பங்களைக் குறிப்பதற்கான சொற்களை அளித்திருக்கிறது.

            கால்டுவெல்லின் புரிதல் குறைபாடுள்ளது. 1838-ஆம் ஆண்டு சென்னை வந்த கால்டுவெல், தென்னிந்திய மொழிகளையும் சமஸ்கிருதத்தையும் கற்றார். 1856இல் தமது திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை வெளியிட்டார். தென்னிந்திய மொழிக்குடும்பம் தனித்துவமானது, சமஸ்கிருதத்துடன் குடிஉறவு அற்றது என்பதை முறையாக ஒப்பிலக்கண ஆய்வின் மூலம் நிறுவினார். கால்டுவெல்லின் மொழியறிவையும், உழைப்பையும், ஆய்வு நேர்மையையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் அயல்நாட்டவரான அவரால் இந்தியத் துணைக் கண்டத்தில் நிலவிய சில சமூக நிறுவனங் களையும், மரபுகளையும் புரிந்து கொள்ள முடியாமற் போனது எனக் கருதலாம்.

        பிரச்சினை இதுதான். ‘பஞ்ச கௌடர்’, ‘பஞ்சதிராவிடர்’ யார் அல்லது ‘பஞ்ச கௌட’ ‘பஞ்ச திராவிட’ மொழிகள் எவை? அவை ஏன் அவ்வாறு வகைப்படுத்தப் பட்டுள்ளன என்பதைக் கால்டுவெல் அறிந்து கொள்ளத் தவறினார். ‘பஞ்ச திராவிடம்’ என்ற பிரிவில் ‘தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி’; ஆகியவை ஏன் வைக்கப் படுகின்றன? கால்டுவெல் மொழி யியல் அறிஞர். ‘பஞ்ச திராவிடம்’ என்னும் பிரிவில் ஐந்து மொழி பேசும் ஐந்து நிலப்பகுதியைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கி வரையறை செய்தவர்கள் சமய - சமூக செயல்பாட்டை நிர்ணயித்த சாத்திரக்காரர்கள். கால்டுவெல்லின் நோக்கமும், அளவுகோலும் வேறு; அவர்களுடைய நோக்கமும் அளவுகோலும் வேறு. முதலில் ‘பஞ்ச கௌட’, ‘பஞ்ச திராவிட’ என்பவை மொழிக்குடும்பங்கள் அல்ல என்பதை கால்டுவெல் அறிந்து கொள்ளவில்லை. பஞ்ச திராவிடத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் இவற்றோடு மராத்தி யையும், குஜராத்தியையும் தவறு தலாகச் சேர்த்துவிட்டதாக கால்டு வெல் குறைகூறுகிறார்.

            ‘பஞ்ச திராவிடர்’ என்போர் யார் என்பது குறித்து முன்னமே (இயல்-5) விளக்கப்பட்டுள்ளது. பஞ்ச திராவிடம் என்பது ‘ஒரு சமூக - சமய மரபுகளும், நடைமுறை களும் அடங்கிய ஒரு முறைமை’ (அ குதூண்tஞுட் ணிஞூ குணிஞிடிச்டூ ச்ணஞீ ணூஞுடூடிஞ்டிணிதண் ஞிதண்tணிட்ண் ச்ணஞீ ணீணூச்ஞிtடிஞிஞுண்). பஞ்ச திராவிடர் பற்றி முன்னமே விளக்கியிருந்தாலும், தெளிவு கருதி மேலும் சில செய்தி களை அறிந்து கொள்வது அவசியம். ‘பஞ்ச கௌட’, ‘பஞ்ச திராவிட’ சமூகங்களைப் பற்றிப் பேசும் M. ஸ்ரீனிவாச ஐயங்கார் இச்செய்திகளை அளிக்கிறார்:

            “பௌதாயனர், திராமிடசார் போன்ற தொடக்கக் கால பிரம்ம சூத்திர உரையாசிரியர்கள் திராவிட பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர்கள். திராவிட பார்ப்பனர்களின் வாழ்வு முறை, மரபுகள், நடைமுறைகள், சடங்குகள் ஆகியவை மிக்க உயர் ஆன்மிகத் தன்மை கொண்டவை யாகக் கருதப் பட்டன. திராவிட பார்ப்பனர்களின் சடங்குகள் விரி வானவை மற்றும் எண்ணி றந்தவை. இச்சடங்குகளை முறை யாகப் பின்பற்றாத ஒரு திராவிடப் பார்ப்பனன் கீழ் நிலைக்குத் தள்ளப் படுவான் அல்லது பார்ப்பன சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப் படுவான். ஒரு திராவிட பார்ப் பனன் மீன் அல்லது இறைச்சி உண்ணக்கூடாது அல்லது உண வோ, நீரோ பார்ப்பனர் அல்லாத ஒருவனி டமிருந்து பெறக்கூடாது; அப்படிப் பெற்றால் அவன் தன் சாதியை இழப்பான். ஒரு மணமான பார்ப்பனப் பெண் வெண்ணிற ஆடை அணியக் கூடாது. அவள் உடையணியும் போது அவளு டைய கால்களுக்கடையில் துணி வருமாறு கட்ட வேண்டும். கி.பி. இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் நிலவிவரும் வழக்கப்படி, ஒரு திராவிடப் பார்ப்பன விதவை தலையை மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும்; அணிகலன் களைத் துறக்க வேண்டும். இத்தகைய கட்டுப்பாடுகளைத் தளர் வின்றி திராவிடப் பார்ப்பனர்கள் பின்பற்றி வர வேண்டும்.

            இதற்கு மாறாக, கௌடா பார்ப்பனர்கள் கட்டுப்பாடுகள் குறைந்தவர்கள். திராவிடப் பிரா மணர்கள் பொதுவாக மிகவும் பழமைவாதிகள். மேலே குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடு களைத் திராவிடப் பிராமணர்கள் தளர்வின்றிப் பின்பற்றுவதற்குத், ‘தங்கள் ஆரியக் குருதித் தூய்மையைக் காப்பாற்றும் இயல்பான ஆசையே காரணம்’ எனக் கருதப் படுகிறது”. (M.Srinivasa Aiyangar, Tamil Studies, A.E.S., Madras, 2001, pp. 3-4)  

“திராவிடப் பிராமணர் களுள் மலபார் நம்பூதிரிகள் ஒரு விதி விலக்கு (கி.பி. 6-7 நூற்றாண்டுகள் அளவில் அவர்கள் கேரளா வந்தி ருக்கக்கூடும் - கட்டுரையாளர்). விந்தியத்துக்கு அப்பாற்பட்ட பகுதிக்குரிய அல்லது கௌட மரபுகளை அப்படியே இருந்தபடியே தக்க வைத்துக் கொண்டவர்களாகத் தோன்றுகிறது. மேலும், சங்கரர், இராமானுஜர், ஆனந்த தீர்த்தர் போன்றோரின் நலம் பயக்கும் சீர்திருத்தங்களை எதிர்த்தனர். வலுவில் நிலை நிறுத்தப்பட்ட பலதார மணம், ஆரியர் அல்லாதா ருடன் கொண்ட தாராள உறவுகள், அவர்களுடைய ஒரு சில ‘அனாச்சார’ வழக்கங்கள் அல்லது ஆரியமுறைக்கு மாறுபட்ட வழக்கங்கள் ஆகியவை அவர்களுடைய ஆரிய இனவழித் தோற்றத்தைப் பற்றிய சந்தேகத்தை எழுப்புகின்றன. அவர்களிடையே இன்று மேலோங்கி வரும் கடும் சமூக வழக்கங்கள், சந்தேகத் திற்கிடமின்றி தட்ப வெப்ப நிலையாலும் அவர்களுடைய வாழ்வு முறையாலும் பெறப்பட்ட அவர்களுடைய நல்ல நிறம்- ஆகியவற்றை அவர்கள் பெற்றிருந் தாலும் நம் உள்ளத்தில் இந்த சந்தேகம் எழுகிறது” (மேலது, பக். 4)

            நம்பூதிரிகள் கடுமையான சமூக நடைமுறைகளைக் கைக் கொண்டிருந்தாலும் கூட வரலாற் றறிஞர் M.ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்களுடைய குடிவழி பற்றி சந்தேகம் கொள்கிறார். ஏனெனில், திராவிடப் பார்ப்பனரின் மரபுகளும், நடைமுறைகளும் வேறு மாதிரி யானவை. அவர்களால் ‘திராவிட சம்பிரதாயம்’ என்ற ஒன்று பேணப் பட்டது.

            வர்ணசாதிக் கட்டுப்பாடு களுடன் கூடிய ஆன்மிக நெறிப்பட்ட வாழ்க்கைமுறை தமிழ் பேசிய பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. வட மொழியாளர்கள் தமிழைத் ‘திராவிட’ என்று அழைத்த காரணத்தால் இப்பார்ப்பனர்கள் ‘திராவிடர்’ என்று அறியப்பட்டனர். இவர்கள் உரு வாக்கிய கடுமையான சமூக - ஆன்மிக - சடங்கு ஆச்சார அனுஷ் டானங்களுக்கு ‘திராவிட சம் பிரதாயம்’ என்ற பெயர் தரப்பட்டது. இதை திராவிடப் பிராமணர்கள் வாழ்விலும், வழிபாட்டி லும் கடைபிடித்தனர். (திராவிட சம் பிரதாயம் குறித்து முன்னமே இயல்-5 இல் பேசப்பட்டுள்ளது). ஆன்மிக நடைமுறையில் இது உயர்நிலை கொண்டதாகக் கருதப் பட்டது. இம்முறையை தென்னிந்தியப் பகுதியில் தமிழ் பேசும் பிராமணர் களுடன், தெலுங்கு, கன்னட பிராமணர்களும் ஏற்றனர். இவர் களோடு, மகாராஷ்டிர, கூர்ஜரப் பகுதி பிராமணர்களும் ஏற்று கடைபிடிக்கலாயினர். இவ்வாறு திராவிட சம்பிரதாயத்தை ஏற்றுக் கடைபிடித்த தமிழ், தெலுங்கு, கன்னட, மகாராஷ்டிர, குஜராத்தி, பார்ப்பனர்களே ‘பஞ்ச திராவிடம்’ அதாவது ‘திராவிட சம் பிரதாயத்தை’ ஏற்றுக் கொண்டு, வாழ்வில் நடைமுறையில், வழிபாட்டில், சடங்குகள் செய்வதில் - நடைமுறைபடுத்த முனைந்த பார்ப்பனச் சமூகங்களே ‘பஞ்ச திராவிடர்கள்’.

            இவ்வாறுதான் சமஸ்கிருதக் குடிவழி தொடர்பற்ற மொழியான தமிழ், தெலுங்கு, கன்னடம் பேசும் பார்ப்பனர்களும், சமஸ்கிருதத்தில் தோற்றம் பெற்ற மராத்தி, குஜராத்தி மொழிப் பார்ப்பனர்களும் ‘பஞ்ச திராவிடர்’ என்ற சமூகங் களின் குழுவாக அடை யாளம் பெற்றனர்.

            திராவிட பிராமணர்கள் வார்த்தெடுத்த கடுமையான இந்த சம்பிரதாயங்களை ஏற்காதவர்கள் ‘பஞ்ச கௌடா’(கச்ணஞிடச் எதச்ஞீச்ண்).

            இராபர்ட் கால்டுவெல்லின் புரிதல் தவறானது என்பது அறிந்து கொள்ளக் கூடியதே. ‘பஞ்ச திராவிடம்’ என்பதை ஐந்து மொழி களைக் கொண்ட மொழிக்குடும்பம் என்று தவறாகப் புரிந்து கொண்டார். அதுமட்டுமின்றி, சமஸ்கிருத மூலம் கொண்ட மராத்தியையும், குஜராத்தியையும், சமஸ்கிருதத்துடன் தொடர்பற்ற தமிழ், தெலுங்கு, கன்னடத்துடன் வடமொழி இலக் கணா சிரியர்கள் சேர்த்து விட்டதாகக் குறை கூறினார். சமஸ்கிருதப் பண்டிதர்களுக்கு திராவிட மொழி இலக்கண ஆசிரியர்களைவிடத் தெளிவான பார்வை இருந்தது என்று பாராட்டுகிறார். ஏனெனில் மொழிக் குடும்பங்களைக் குறிக்க ‘திராவிட’ ‘கௌட’ போன்ற சொற்களை அவர்களுடைய பொதுப் பெயரிடும் முறை அளித்துள்ளதாகக் கூறுகிறார்.

            கால்டுவெல் பஞ்ச திராவிடத்தில் மராத்தி, குஜராத்தி யை நீக்கி விட்டு, மலையாளம், துளு ஆகியவற்றைச் சேர்த்தார். திராவிட மொழிக் குடும்பம் என்று பெயரிட்டு இரு பிரிவுகளாகப் பிரித்தார். அவை, 1. திருந்திய மொழிகள்: தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு, குடகு; 2. திருந்தாத மொழிகள்: துதம், கோதம், கோண்டு, கூ, ஒரியன், இராஜ்மஹால் ஆகியவை.

            ஒப்பிலக்கண ஆய்வைப் பொறுத்தவரை கால்டுவெல் நல்ல திறனாளர். தென்னிந்திய மொழிக் குடும்பம் பற்றிய அவரது ஆய்வு சிறப்பானது. ஆனால், ஆரிய இனக்குருதித் தூய்மையைக் காப் பாற்றுவதற்காக தென்னகப் பார்ப் பனர்களால் உருவாக்கப்பட்டு (M.ஸ்ரீனிவாச ஐயங்கார் கூறுகிறபடி), கடைபிடித்து வந்த திராவிடச் சம்பிரதாயக் காரர்களான தென்னகப் பார்ப்பனர்களின் பொதுப் பெயராக விளங்கியது ‘திராவிடர்’ என்ற பெயர். இராபர்ட் கால்டுவெல்லின் தவறான புரிதல் காரணமாக இச்சொல் இடம் மாறியது.

            சமூக - சமய சடங்கு முறைகளில் கடுநெறி ஒழுங்கைக் கைக்கொண்ட ஐந்து பார்ப்பன சமூகங்களைக் குறிக்கும் பொதுப் பெயரான ‘பஞ்ச திராவிட’ என்னும் சொல்லை ஐந்து மொழிகளைக் கொண்ட மொழிக் குடும்பத்தின் பெயர் என்று கருதி மயங்கிய கால்டுவெல்லின் குழப்பத்தில் “திராவிடம்” கருக்கொண்டது. பின்னர், தென்னிந்திய மொழிக் குடும்பத்து அதாவது ‘திராவிட’ மொழிக் குடும்பத்து மொழிகளைப் பேசும் மக்களுக்குத் திராவிடர் என்ற பெயர் ஏற்பட்டது. திராவிடர் என்ற பெயர் இவ்வாறு தடுமாறி, இடம் மாறி நிலைத்த பெயர் ஆகும்.

            இவ்வாறு தென்னிந்திய மொழிகளுக்குத் திராவிட மொழிகள் என்றும், அதைப் பேசும் மக்களுக்குத் திராவிடர்கள் என்றும் பெயரிட்ட பின், ஆய்வுலகில் அந்த சொல் பயன்பாட்டுக்கு வந்தது. மொழி யியல், மானிட ஆய்வியல், தொல்லியல் ஆகியவற்றில் திராவிடர் என்ற சொல் கலைச் சொல்லாகப் பயன்படத் தொடங்கியது. இச்சொல் பயன்படத் தொடங்கிய காலத்தில் அறிஞர்களால் முழுமையாக ஏற்கப்படாத ஒரு நிலை இருந்தது எனக் கருதலாம். 1865-இல் மானிடவியல் ஆய்வாளர் தாமஸ் ஹக்ஸ்லி தென்னிந்திய மக்களைக் குறிப்பிடும் போது ‘திராவிடர் என்பதாக சொல்லப்படுகிற தென் இந்துஸ் தானத்து மக்கள்’ என்று கூறுகிறார். இதன் பொருள் திராவிடர் என்ற சொல் இனப்பெயராக இன்னமும் வழக்கில் வரவில்லை என்பதுதான்.

            கால்டுவெல் அளித்த சொல்லைக் கடவுள் அளித்த சொல்லாகக் கருதி தென்னிந்திய தொடர்பான அத்தனை ஆய்வு களிலும் அறிஞர் பெருமக்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந் நிலை 1856 முதல் இன்றுவரைத் தொடர்கிறது.

            கால்டுவெல்லுக்கு முன் தென்னிந்திய மொழிக் குடும்பம் பற்றி எவருமே பேசவில்லையா? திராவிடம் என்ற தவறான சொற் பயன்பாடு இன்றி மொழிக் குடும்பத்தை எவரும் அடையாளப் படுத்தவில்லையா?

            அந்த அறிவார்ந்த செயலை பிரான்சிஸ் வைட் எல்லிஸ் செய்திருக் கிறார். தென்னிந்திய மொழிகள் ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற கருத்தை கால்டுவெல்லுக்கும் முன்னால் (1816-இல்) வெளிப் படுத்திய எல்லிஸ் - சென்னை அரசின் வருவாய் வாரியச் செயலாளர், நிலச்சுங்க அதிகாரி, சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் தென்னிந்திய மொழி களையும் பிற இந்திய நாட்டு மொழிகளையும் ஆங்கிலேய நிர்வாக அதிகாரிகளுக்குப் பயிற்றுவிக்க (கல்கத்தா வில்லியம் கோட்டைக் கல்லூரியைப் போலவே) ஏற்படுத்தப் பட்ட புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியின் நிறுவனர்(1812), சென்னையில் திருவள்ளுவர் உருவம் தாங்கிய இரட்டை வராகன் எடையுள்ள தங்கக் காசுகளை வெளி யிட்டவர், சென்னை ஆட்சியர் என்ற முறையில் குடிநீர்ப்பிரச்சினையைத் தீர்க்க கிணறுகள் வெட்டியவர், அவற்றில் தமிழ்க் கவிதை வடிவில் திருக்குறளோடு கல்வெட்டுகள் கண்டவர்; தென்னிந்திய மொழி களையும், சமஸ்கிருதத்தையும் நன்கு கற்றவர்; திருக்குறளை மொழி பெயர்த்தவர் (பணி நிறைவுற வில்லை); நல்ல மொழியியல் ஆய்வாளர் - இத்தனை பெரு மைக்கும் உரிய எல்லிஸ் தமது 41-வது வயதில் இறந்து போனார்.

            சென்னை கோட்டை கல்லூரியின் கண்காணிப்புக் குழுவில் தலைவராக இருந்த எல்லிஸ், அக்குழுவின் உறுப்பினரும் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாக அதிகாரியுமான அலெக்சாண்டர் காம்பெல் என்னும் தெலுங்கு இலக்கண நூலுக்கு, ஒரு முன்னுரைக் குறிப்பு எழுதியிருக்கிறார். இதில் தென் னிந்திய மொழிகள் தனிக்குடும்பம் என்பதையும், இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்துடன் குடிஉறவு அற்றவை என்பதையும் இராபர்ட் கால்டுவெல் கூறுவதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்னமே தெளி வாகக் கூறிவிட்டார்.

            எல்லிஸ் கூற்றுக்கும், கால்டு வெல் கூற்றுக்கும் வேறு பாடுகள் உண்டு. கால்டுவெல் தென்னிந்திய மொழிக் குடும் பத்தை ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்றும், தென்னிந்திய மக்களைத் ‘திராவிடர்கள்’ என்றும் பெயரிட்டழைத்தார். ஆனால் எல்லிஸ், தென்னிந்திய மொழிகள் ஒரு மொழிக்குடும்பம் என்று அடையாளப்படுத்தி, அம் மொழிகளை ‘Dialects of Southern India’ என்று அழைத்தார்.

            தமிழும், தெலுங்கும் அவற்றின் ஒரே மூலத்தைக் கொண்ட பிறமொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தவை அல்ல என்றும் இவை தனித்துவமான ஒரு மொழிக்குடும்பம் என்றும் 1816-லேயே அறிவித்தார். இதுவரை தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட எந்த கடிதத்திலும் அல்லது அவரது எழுத்து வடிவங்களிலும் ஓரிடத்தில் கூட ‘திராவிட’ என்ற சொல்லை எல்லிஸ் பயன்படுத்தவில்லை. தென்னிந்திய மொழிக்குடும்பம் பற்றிய செய்திகளை எல்லிசும் அவருடன் இருந்த அறிவுத் தோழர்களும் முன் வைத்தமை பற்றிய புதிய தரவுகளும் நூல்களும் வெளிவந்துள்ள நிலையில் அவை பற்றியும் பேசப்பட வேண்டும்.

            ஆனால் கவலை தரும் காட்சி இதுதான். கடந்த ஜூன் மாதம் 23ந்தேதி முதல் 27-ந்தேதி வரை கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் இரண்டாவது நாள் நடைபெற்ற ஆய்வரங்கத்தின் தொடக்க விழாவில் தொடக்க உரையாற்றிய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இப்படி கருத்துரைத்தார்:

            “கொல்கத்தாவில் ஆசியக் கழகம் மூலமாக 1786-ல் வில்லியம் ஜோன்ஸ் அறிவித்த இந்தோ- ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கம் சமஸ் கிருதத்தை மையமாகக் கொண்டு அமைந்தது. திராவிட மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கத்தை 1816-ல் எல்லிசு, அவரைத் தொடர்ந்து 1856-ல் கால்டுவெல் என ஐரோப்பிய அறிஞர்கள் பலரும் மையப்படுத்தி ஆராய்ந்தனர்”.(தினத்தந்தி, தஞ்சாவூர், 25.06.2010).

            திராவிட மொழிக் குடும்பம் என்னும் கருத் தாக்கத்தை எல்லிசு எந்த காலத்தில் முன் வைத்தார்? தென்னிந்திய மொழிகள் ஒரு தனித்துவமான மொழிக் குடும் பம் என்பது தான் எல்லிசின் பார்வை. அது சரியான பார்வை. திராவிட மொழிக்குடும்பம் என்பது கால்டுவெல்லின் பார்வை; அது பிழையாகப் பெயரிடப்பட்ட ஒன்று. கால்டு வெல் செய்த பிழையை நாற்ப தாண்டுகளுக்கு முன்பே சரியான கருத்தைப் பதிவு செய்த எல்லிசின் தலையில் கட்டும் கலைஞர் கருணாநிதியின் கருத்து பிழை யானது. இந்த கருத்துப் பிழையை அவர் மட்டுமா செய்கிறார்? ஆய்வாளர்களும் செய்கிறார்கள்.

(வரும்)

Pin It