தமிழ் மண்ணின் தனிச்சிறப்பு மிக்க கதைப்பாடல்கள், மக்களின் கலாச்சார நிகழ்வுகளிலும் வழிபாட்டுச் சடங்குகளிலும் இரண்டறக் கலந்திருக்கும் நிகழ்வை காலங்காலமாக கண்முன்னே விரித்துக் கொண்டேயிருக்கிறது வரலாறு.

கதைப்பாடல்களும், கதைச்சொல்களும் மக்களிடையே இறைமைக் கூறுகளைக் கட்டமைக்கிற அதே சமயத்தில், அதன் இன்னொரு பரிமாணம் அவர்களுக்குள் பேதத்தை உருவாக்கிவிடுகிற நிழ்வையும் ஒரு சில கதைப்பாடல்களில் உணரலாம். அது போன்ற ஒரு கதைப்பாடல்தான் பொன்னர் சங்கர் கதை என்னும் அண்ணமார் சாமி கதைப்பாடல்.

கொங்குநாட்டின் செழுமையான கிராமிய மரபில் காலூன்றி விசுவரூபம் கொண்டு எழுந்திருக்கும் இதன் கதைப்போக்கும், கதை சொல்லும் நுட்பத்தில் பொதிந்திருக்கும் கதை கேட்கவைக்கும் அபரிதமான ஆர்வமும், குருட்சேத்திர யுத்தத்தை நினைவுபடுத்தும் படுகளக்காட்சிகளும் மிகமிக அழகான முறையில் வடிவமைக்கப்பட்டு, பாத்திரங்களாக வலம் வரும் பாங்கில் இந்த நாட்டுப்புறச் சொல்கதை, படிப்படியாக விரிவடைந்து பெருங்கதையாடலாக மாறிக் கொண்டேயிருக்கிறது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு கதைப்பாடல்கள் கிடைத்திருந்தாலும், கொங்கு நாட்டுப்பகுதியில் இந்த கதைப்பாடல் தவிற வேறெதுவும் கிடைத்ததற்கான சான்று இல்லை. இதன் கதைப்பின்னலில் மக்களின் கலாச்சார வாழ்வியல் கதையும்-வழிபாடுமாக பிணைந்து நிற்பதை, போன மாசி மாதத்தில் வீரப்பூரில் நடந்த பெரிய காண்டியம்மன் தேரோட்டத்தில் காணலாம்.

திருச்சி-கரூர் பக்கம் மணப்பாறை பகுதியான வீரப்பூர் காட்டில் இந்தத் திருவிழாநடக்கிறது. அந்த இடம் பொன்னி வளநாடு என்று அன்று அழைக்கப்பட்ட பெயரிலேயே இன்றும் அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் மாசிப்பௌர்ணமியன்று நடக்கும் இந்தத் திருவிழாவில் சாதிபேதமற்று எல்லா இனத்தவரும் பல்லாயிரக்கணக்கில் கூடிக் கொண்டாடுகின்றனர். எட்டுநாள் நடக்கும் இவ்விழாவில்,பரிவேட்டை, கிளிவேட்டை, அம்பு போடுதல் போன்ற நிகழ்வுகள் அரங்கேறும். இறைமையும் கதைமையும் இணைந்து இணைந்து தரிசனம் காட்டும் இவ்விழாவில் மக்கள் அணி அணியாய்த் திரளுவர். ஆனால், வேட்டுவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இந்த விழாவில் வந்து கலந்து கொள்ளக் கூடாது. மீறிக் கலந்து கொண்டால் ரத்தம் கக்கி செத்துப் போவார்கள் என்பது அய்தீகம். மேலும், சுற்று வட்டாரத்தில் உள்ள ஊர்களில் குடியிருக்கும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இந்தத் திருவிழா நடக்கும் தருணத்தில் முற்றிலும் வேறு ஊர்களுக்கு வெளியேறிவிடுவார்கள். இந்தச் செயல்பாடுகளை ஏற்றுக் கொள்ளாமல் அங்கேயே இருப்பவர்கள் செத்துப் போய்விடுவார்கள் என்பதும் அய்தீகம்.

மேலும் விழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியான ‘அம்புபோடும் நிகழ்வு’ நடைபெறும். அதில் பொன்னர் குதிரை மீது அம்பு ஏந்திக்கொண்டு ஆக்ரோஷமாகப் புறப்பட்டு அணியாப்பூர் என்னுமிடத்திற்குச் சென்று அன்பு போடுவார் (வேட்டுவபடை மீது அம்பு போடுவதாக அய்தீகம் அந்த அம்பாகப்பட்டது பாய்ந்து, ஏதாவது ஒரு இடத்திலுள்ள ஒரு வேட்டுவர் இறந்து போவார் என்பதும் அய்தீகம்) இந்த அய்தீகத்தை முன்வைத்து இந்த சமூகத்தவர்கள் யாரும் இந்த விழாவிலோ அல்லது வேறு செயல்பாடுகளிலோ கலந்து கொள்வதில்லை. அவர்களுக்குள் ஒரு அவலம் சுழன்று கொண்டேயிருக்கிறது.

மக்களின் கலாச்சார வாழ்வில் பிணைந்து உருவாகியுள்ள இந்த கதைப்பாடல், மறுவாசிப்புக்கு உட்படுத்துவதன் மூலமும் அதன் பல்வேறு பரிமாணங்களை ஆராய்வதன் மூலமும் இந்த அம்சத்தை கேள்விக்கு உட்படுத்தலாம்.

திருவிழாவிலும், அச்சுவடிவிலும், உடுக்கடிப்பாடல் வடிவிலும் சொல்லப்படும் அண்ணமார் கதைப் பாடலை முதலில் பார்க்கலாம்.

கொங்குவேளாளர் சமூகத்தைச் சேர்ந்த குன்னுடையாக் கவுண்டன் தனது பங்காளிகளால் ஏற்பட்ட சண்டையில் பொன்னி வளநாட்டுக்குக் குடிபெயர்கிறார். தெய்வ அருளால் அவருக்கு பொன்னர், சங்கர் என்று இரு ஆண்குழந்தைகளும், அருக்காணித்தங்காள் என்கிற பெண் குழந்தையும் பிறக்கிறது. பங்காளிகள் மறுபடி சூழ்ச்சி செய்து குழந்தைகளை கொல்லப் பார்க்கின்றனர். தெய்வ அருளால் தப்பிய குழந்தைகள் தலித்தான சாம்புகன் வீட்டில் மறைந்து வாழ்கின்றனர். அண்ணன்மார் பெரியவர்களானதும் அவர்களுடைய குலவரலாற்றைச் சொல்லி தாய் தந்தையிடம் சேர்ப்பிக்கிறான் சாம்புகன். பங்காளிகளின் சூழ்ச்சிகளை ஒழித்து பெற்றோருடன் சேர்ந்து செல்வாக்குடன் வாழ்கின்றனர் அண்ணன்மார்.

தலையூர்க் காளி என்கிற வேடுவ சிற்றரசன் அண்ணன்மாரின் அருக்காணித்தங்கத்தை பெண்டாளன் முயற்சிக்கிறான். தொடர்ந்து கொடுமைகள் செய்து கொண்டேயிருக்கிறான். அவனது காட்டுப்பன்றி அண்ணன் மாரின் வெள்ளாமைக் காட்டை அழிமாட்டம் செய்கிறது.

பெரியண்ணன் சின்னண்ணனிடம் அருக்காணித் தங்கம் முறையிட்டு தீமைகளைச் சொல்லியழ, அண்ணன்மார் போருக்குப் புறப்படுதல். அழிக்க முடியாத காட்டுப் பன்றியை அழித்தொழிக்கிறார்கள். இதனால் வெகுண்டெழுந்த அரசன் போருக்கு ஆயத்தமாக, போர் நடக்கிறது. வேடுவர் படையை அழித்தொழிக்கிறார்கள் அண்ணன்மார். ஆனால், தலையூர்க் காளியின் சூழ்ச்சியால் பொன்னர் சங்கருக்கு மரணம் நேர்கிறது.
அருக்காணித் தங்கம் தங்களது குலதெய்வமான பெரியக் காண்டியம்மனை வேண்டி அண்ணன்மாரை உயிர்ப்பிக்க, அவர்களும் உயிர் பெற்றெழுந்து வந்து தங்காளுக்கு ஆறுதல் கூறுகின்றனர். பிறகு ‘மாண்டவர் மீண்டால் நாடு தாங்காது’ என்று சொல்லிவிட்டு உயிர் துறக்கிறார்கள். பத்தினியான தங்காள் சாபமிடுகிறாள்.

இந்தக் கதைப்பாடலின் பின்பகுதியை முற்றாக மறுக்கிறது, அச்சு வடிவம் பெறாத ஒரு சொல்கதை.
காட்டை வசிப்பிடமாகக் கொண்ட வேடுவர்களின் நிலத்தை மண்ணாசை பொங்கப் பொங்க ஆக்கிரமிப்பு செய்தவர்கள்தான் அண்ணன்மார். வேடுவர்களின் குடியிருப்பான காட்டை அழித்து நிர்மூலமாக்கி வெள்ளாமை செய்ய ஆரம்பித்ததால், காட்டில் சுதந்தரமாகத் திரிந்த அவர்களது பன்றிகளும், விலங்குகளும் வெள்ளாமைக்காட்டில் புகுந்ததில் வியப்பென்ன? தலையூர்க்காளிக்கும் அண்ணன்மாருக்கும் இப்படி வந்த பகைதானே தவிற பெண் இச்சையால் வந்த பகை அல்ல. மேலும் தலையூர்க் காளி சிறந்த காளி பக்தன்.
அண்ணன்மார் வேடுவர்களை முற்றாக நீர்மூலமாக்கிய நிலை கண்டு, காளியிடம் போய்க்கதறி வேண்டுகிறான்.
உடனே காளி பிரசன்னமாகி, ‘உன்குலம் இனி அழியாது வெட்ட வெட்டத் தழையும் உன் குலம்’ என்று வரம் கொடுக்கிறாள். ஒரு வஞ்சகனை, பெண்பித்தனை கடவுள் எப்படி ஏற்றுக் கொண்டு வரம் கொடுக்கும்?
அண்ணன்மார் காட்டை அழித்ததால்தான் காட்டின் தெய்வம் வெகுண்டெழுந்து அவர்களை அடித்துப்போட்டு விட்டது.

அருக்காணித்தங்காள் அழுது புலம்பி, ‘காட்டைச் சீர்திருத்தி வெள்ளாமை செய்து பிழைக்கும் வெள்ளாளர்கள் தானே நாங்கள்... இதில் என்ன தவறு?’ என்று நியாயம் கேட்டாள். காட்டுத்தெய்வமும் மனமிரங்கி ‘காட்டை உண்டதால் நீங்கள் காஉண்டர் என்ற அவச்சொல்லுக்கு ஆளானீர்கள். முழுக்க காட்டை அழிக்காமல் விலங்குகளுக்கும், காட்டில் வசிக்கும் வேடர்களுக்கும் தொல்லை தராமல் வாழ்வீர்களாக...’ என்று அண்ணன்மாரை உயிர்ப்பித்துவிட்டது.

இந்த இருபார்வைகளையும் முன் வைத்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதுவரை நிறைய ஆய்வுகள் வந்து கொண்டிருந்தாலும் காத்திரமான தளத்தை நோக்கி நகரவில்லை. ஆய்வியல் அறிஞரான அமெரிக்காவைச் சேர்ந்த திருமதி பிரெண்டாபெக், சக்திக் கனல் போன்றோரின் கதைப்பிரதிகள் இவ்வாய்வு தளத்திலேயே செயல்படுகின்றன. இதுவரை அச்சு வடிவம் பெறாத மாற்றுக் கதைச் சொல்களையும், அச்சு வடிவமாக்கி ஆய்வுக்கு உட்படுத்தும்போது இந்தச் செழுமை மிக்க கதைப்பாடல், மனித மனங்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும். உலக அளவிலான இலக்கியத் தளங்களில் தனது சுவடுகளைப் பதிக்கும்.

Pin It