நாட்டின் அரசியல் வாழ்வில் பங்கேற்கவும், அரசியல் உணர்வுகளை வெளிப்படுத்தவும் குடிமக்களுக்கு உள்ள அடிப்படை உரிமைகளுக்கு இந்திய அரசியல் சாசனம் உத்திரவாதம் அளிக்கிறது. ஆனால், காவல் துறை, அதிகார வர்க்கம் மற்றும் அரசியல் வாதிகளால் நமது சுதந்திரம் முற்றுகையிடப்பட்டுள்ளது. குடிமக்களின் நேர்மையான நடவடிக்கைகள் கூட, சட்ட மீறல்களாகக் கருதப்படுகின்றன. சட்ட உரிமைகள் பற்றிய பொதுவான அறியாமையை, அரசின் சட்டத்தை செயல்படுத்துகிற சக்திகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்றன. எனவே, மனித உரிமை மீறல் கள் நாளுக்கு நாள் அச்ச மூட்டும் அளவுக்கு அதிகரித்து வருகின்றன. ‘கைதும் ஜாமீனும்’ என்ற இக்குறிப்பின் நோக்கம், காவல் துறை மற்றும் நீதித்துறையைச் சேர்ந்தவர்களை எதிர் கொள்ளும் போது தங்களது உரிமை களை அறியும் வகையில் குடிமக்களிடம் சட்ட விழிப்புணர்வை எழுப்பு வதேயாகும்.

ஒரு நபரின் கைது

ஒரு காவல்துறை அதிகாரி, குடிமக்கள் ஒருவரைக் காவலில் வைக்கும் போதோ அல்லது அவரது செயல்படும் சுதந்திரத்தைக் குறிப்பிடத்தக்க வகையில் தடை செய்து, ஒரு குற்றத்திற்குப் பதிலளிப்பதற்காக நிறுத்தி வைத்திருந்தாலோ அந்த நபர் கைது செய்யப்பட்டவராகிறார். பிடிப்பாணை (வாரண்ட்) உடனோ அல்லது பிடிப்பாணை இல்லாமலோ ஒருவரை கைது செய்யாமல், விசாரிப்பதற்கென அவரைக் காவலில் வைக்க இந்தியாவில் உள்ள காவல் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை.

கைதுக்கு பிடிப்பாணை:

இது ஒரு குற்றவாளியைக் கைது செய்து கொண்டு வரவும், குறிப்பிட்ட பொருளுக்காக அவரது இடத்தைச் சோதனையிடவும் காவல்துறை அதிகாரிக்கு நீதிமன்றம் அளிக்கும் எழுத்து மூலமான பிடிப்பாணையை நிறைவேற்றும் காவல்துறை அதிகாரி, கைது செய்யப்படும் நபரிடம் அதன் விவரத்தைத் தெரிவிக்க வேண்டும். அந்த நபர் கேட்டால், பிடிப்பாணை யைக் காண்பிக்க வேண்டும். தேவையற்ற தாமதமின்றி தேவைப்படும் நபரை நீதிமன்றத்திற்கு அவர் கொண்டு வர வேண்டும்.

சட்டப்படியான பிடிப்பாணை:

கைதுக்கான பிடிப்பாணையானது

 • எழுதப்பட்டிருக்க வேண்டும்.
 • நீதிமன்றத்தில் தலைமை அலுவலர் (நீதிபதி) கையொப்பம் இட்டிருக்க வேண்டும்.
 • நீதிமன்றத்தின் முத்திரை பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும். குற்றவாளியின் பெயர். முகவரி அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் என்ன என்பதும் குறிப்பிடப்பட வேண்டும். மேற்கண்டவற்றில் ஏதேனும் இல்லாதிருந்தால், பிடிப்பாணை சரியான ஒன்றல்ல. அத்தகைய பிடிப்பாணையை நிறைவேற்றுவதன் மூலம் செய்யப்பட்ட கைதானது சட்ட விரோதமானதாகும்.
 • பிடிப்பாணைகள் இருவகைப்படும்:
 • பிணையில் (ஜாமீனில்) விடக் கூடியது.
 • பிணையில் விட முடியாதது.

பிணையில் விடுவிக்கக் கூடிய பிடிப்பாணை என்பது, ஒரு நபர் கைது செய்யப்படும் போது, நீதிமன்றத்தின் முன் ஆஜராவதை உறுதிப்படுத்தி தகுந்த பிணையை அளித்தால் காவலிலிருந்து அவரை விடுவிக்கும் படி கூறும் நீதிமன்ற ஆணையாகும். இதில், எத்தனை பிணையாளிகள், பிணைத் தொகை மற்றும் நீதிமன்றத்தின் முன் எப்போது ஆஜராக வேண்டும் என்ற விவரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கும் (குற்றவியல் நடை முறைச் சட்டம் 71 வது பிரிவு). பிணையில் விடுவிக்க முடியாத பிடிப் பாணையில், பிணையில் விடுவது பற்றி ஏதும் குறிப்பிடப்பட்டிருக்காது.

பிடிப்பாணையின்றி கைது:

ஒரு நபர் கைது செய்வதற்குரிய குற்றம் செய்ததாக சந்தேகம் ஏற்பட்டால் அவரை பிடிப்பாணை இன்றி கைது செய்வதற்கு காவல் துறை அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது. கைது செய்வதற் குரியதல்லாத குற்றங் களில், பொதுவாக, குற்றவியல் நீதித்துறை நடுவரிடமிருந்து பிடிப்பாணை பெறாமல் ஒரு நபரை காவல்துறை அதிகாரி கைது செய்ய முடியாது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் இணைப்பில் முதல் பிரிவில் கைது செய்வதற்குரிய குற்றங்களும் கைது செய்வதற்குரியதல்லாத குற்றங்களும் பகுக்கப்பட்டு வகைப்படுத்தப் பட்டுள்ளன. கொலை, வன்புணர்ச்சி, கொள்ளை, திருட்டு, அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல் போன்ற மிகக் கடுமையான குற்றங்கள் கைது செய்வதற்குரியனவாகும்.

பிடிப்பாணையின்றி ஒரு நபரை எப்போது கைது செய்யலாம்?

 • பிடிப்பாணையின்றி ஒரு நபர் கைது செய்யப்படுவது:
 • கைது செய்வதற்குரிய குற்றத்தில் சம்பந்தப்பட்டிருந்தால் அல்லது கைது செய்வதற்குரிய குற்றம் புரிந்திருப்பதாக நியாயமான சந்தேகம் இருந்தால், முறையீடு அல்லது தகவல் தரப்பட்டிருந்தால்;
 • வீட்டை உடைப்பதற்கான சாதனங்கள் வைத்திருந்தால்;
 • களவுபோன பொருட்களை வைத்திருந்தால்;
 • அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக இருந்தால்;
 • பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரியைத் தடுத்தால்;
 • சட்டப்பூர்வமான காவலிலிருந்து தப்பி ஓடினால்;
 • ராணுவம், கடற்படை, விமானப்படையிலிருந்து பணியை விட்டு ஓடி வந்தவராக இருந்தால்;
 • இந்தியாவிற்கு வெளியிலிருந்தபோது, நாடு கடத்தப்பட்ட குற்றவாளிகள் சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் புரிந்திருந்தால்;
 • விடுவிக்கப்பட்ட தண்டனைக் குற்றவாளி நீதிமன்றம் விதித்திருந்த கட்டுப்பாடுகனை மீறியிருந்தால்;
 • கைது செய்வதற்குரிய குற்றம் புரிவதற்குத் தயார் செய்வதாகச் சந்தேகம் தோன்றினால்;
 • வாடிக்கையான குற்றவாளியாக இருந்தால்;
 • காவல்துறை அதிகாரி முன்பாக, கைது செய்வதற்குரியதல்லாத குற்றத்தைப் புரிந்துவிட்டு, அவரது பெயர், முகவரியைக் காவல் துறை அதிகாரியிடம் தர மறுத்தால் அல்லது தவறான பெயரையும். முகவரியையும் தந்தால்;
 • கைது செய்வதற்குரிய குற்றம் புரிந்திருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், மற்றொரு காவல் நிலையத்தின் அதிகாரிக்கு அந்த நபர் தேவைப்பட்டால்; 
Pin It