இப்பூவுலகில் வாழ்ந்துவரும் பெரும்பாலான உயிரினங்கள் தற்போது வேகமாக அழிந்து வருகின்றன. ஒளிவுமறைவற்ற வகையில் நாமனைவரும் இன்று இதைக் கண்ணுற்று வருகிறோம். இன்னும் சொல்லப்போனால் இவ்வழிவிலிருந்து மனிதனும் தப்பப் போவதில்லை. இந்நிலையில் சூழலியல் சிக்கல்கள் அனைத்துக்குமான காரணியானது, முதலாளித்துவத்தின் பொருளாதாரக் கட்டமைப்பில் வேர்விட்டிருக்கிறது எனலாம். அதாவது நிலவுகிற முதலாளித்துவ அமைப்பே நமது சூழலியல் சிக்கல்களுக்கு பெரும் அச்சுறுத்தலை விளைவிக்கிறது என்பது வெள்ளிடைமலை. ஆனாலும் முதலாளித்துவம் குறித்த நமது புரிதல் என்னவோ இன்னும் போதாமையாகவே உள்ளது எனலாம். அதன் விளைவாக ஒருபுறம் சுற்றுச்சூழலை அழிக்கும் முதலாளித்துவ அமைப்பானது, மறுபுறம் இயற்கை முதலாளியம் (natural capitalism), காலநிலை முதலாளியம் (climate capitalism) என்ற வகையில் சூழலைக் காக்கும் அமைப்பாக வேறுவடிவில் புது அவதாரத்துடன் எழுச்சி பெறுகிறது. இம்முரண்பாட்டிற்கு முக்கியக் காரணமாகத் திகழ்வது நிலவுகிற உற்பத்திமுறைக் குறித்தானக் குறை மதிப்பிடலாகும். அதாவது முதலாளித்துவத்தால் இப்பூவுலகுக்கு ஏற்படுத்தப்படுகிற அச்சுறுத்தலுக்கும் உற்பத்திமுறைக்குமான உறவைச் சரியான கண்ணோட்டத்தில் அணுகாததும் குறை அவாதனிப்பும் இச்சிக்கலுக்கு மையக் காரணியாகின்றன. ஆகவே, மார்க்சிய வழிப்பட்ட முதலாளித்துவத் திறனாய்வின் வழியில் செல்வது மட்டுமே இன்றையச் சூழலியல் சிக்கல்களின் முழுப்பரிமாணத்தைப் புரிந்துகொள்ள நம்முன் உள்ள வாய்ப்பாக இருக்கிறது.

முதலாளியத்தால் ஏற்படுத்தப்படுகிறச் சூழல் சிதைவுக் குறித்த மார்க்சியத் திறனாய்வானது பொதுவாகப் பலவீனமாகவே இருகின்றது. காரணம், அத்திறனாய்வுகள் அனைத்தும் 19 ஆம் நூற்றாண்டில் நிலவிய வரலாற்றுச்சூழலை மையநீரோட்டமாக கொண்டவையாகும். இதன் விளைவாக இருபதாம் நூற்றாண்டின் வரலாற்று வகைப்பட்ட சூழலியல் சிக்கல்கள் அனைத்தும் குறைவாகவே பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. சூழல் சிதைவு குறித்த மார்க்சின் பகுப்பாய்வானது அவர் வாழ்ந்த வரலாற்றுச் சூழலின் வரையறைக்கு உட்பட்ட ஒன்றாகும். அதாவது முதலாளியத்தின் போட்டி மிகுந்த வரலாற்றுச் சூழலில் ஏற்பட்ட சூழல் சிக்கலை முன்வைத்த மார்க்சால், ஏகபோக முதலாளித்துவத்தால் ஏற்படவிருக்கிற சூழல் சிக்கல்கள் குறித்தான சில பண்புகளை அவதானிக்க முடியாமல் போனது. ஆகவே இனிவரும் வாதங்களில் சூழலியல் சிக்கல்கள் குறித்த மார்க்சு, எங்கெல்சின் பகுப்பாய்வை மட்டும் விவாதிக்கப்போவதில்லை. மாறாக இவர்களுக்கு பின்வந்த மார்க்சியர்கள், அரசியல் பொருளாதார அறிஞர்களான வெப்லன் (Veblen), பால் பாரன் (Paul Baran), சுவீசி (Sweezy) மற்றும் ஆலன் சிணைபார்க் (Allan Schnaiberg) போன்றோரின் சூழலியல் திறனாய்வையும் விவாதிக்கலாம்.

மார்க்சும் முதலாளித்துவ “கொள்ளையும்”

மார்க்சின் அரசியல் பொருளதாரப் பகுப்பாய்வானது பயன்மதிப்பிற்கும் (Use Value) பரிவர்த்தனை மதிப்பிற்குமான (Exchange Value) வேறுபாட்டினை விளக்குவதிலிருந்து தொடங்குகிறது. ஒவ்வொரு சரக்கிற்கும் பயன் மதிப்பும் பரிவர்த்தனை மதிப்பும் இருக்குமென்று தனது மூலதன தொடக்க பக்கங்களில் விளக்கும் மார்க்ஸ் போக போக பரிவர்த்தனை மதிப்பானது பயன்மதிப்பை ஆளுமை செய்வதை விளக்கிச் செல்வார் . பொதுவாக பயன்மதிப்பானது உற்பத்தி தேவையோடு இணைவாக்கம் பெற்று இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவை அடித்தளமாகக் கொண்டிருக்கும்; அதாவது மனிதத் தேவையைப் பூர்த்திசெய்வது. ஆனால் இதற்கு மாறாக பரிவர்த்தனை மதிப்பானது இலாப நோக்கத்தை சுற்றி இயங்குவதாக இருக்கிறது. முதலாளிய உற்பத்திக்கும் பொதுத்தேவை உற் பத்திக்குமான முரண்பாடு இங்கிருந்துதான் உருவாகிறது.

இம்முரண்பாடு மார்க்ஸ் காலத்தில் தீவிரமாக நிலவியது என்பதை ஜேம்ஸ் மைட்லாந்தின் (The eighth Earl of Lauderdale (17591839) வாயிலாய் அறியலாம். ஜேம்ஸ் மைட்லாந்து தொடக்க காலத்தைய சிறந்த பொருளாதார அறிஞர் ஆவார். பொது வளத்தைப் பற்றின “An Inquiry into the Nature of Public Wealth and into the Means and Causes of its Increase” (1804) எனும் நூலை எழுதியவர். அவரின் விளக்கப்படி பொது வளங்களானது பயன் மதிப்புகளைக் கொண்டிருக்கும் உதாரணமாக நீர், காற்று போன்ற வளங்கள் மிகுதியாக எப்போதும் இருக்கிறது. மாறாக தனியுடைமை செல்வமானது பரிவர்த்தனை மதிப்பென்னும் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது. இச்சூழ்நிலையில் தனியுடைமை செல்வந்தர்கள் கைகோர்த்துக்கொண்டு பொதுவளங்களை அழித்தொழிக்கும் இந்நிகழ்முறை அமைப்பைக் கண்டிக்கிறார். அதாவது முன்பு நீர் ஆதாரங்களை இலவசமாக பயன்படுத்த முடிந்தது. ஆனால் தனியுடைமை அமைப்பில் கிணற்றிலிருந்து நீர் எடுக்க பணம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தால் தேசத்தில் தனியுடைமை செல்வந்தர்கள் அதிகரித்தனர்.

மனிதனுக்கு உபயோகமானதும் பயன்மிக்கதுமாய் உள்ள சரக்குகளுக்கு பற்றாக்குறையை ஏற்படுத்தி செல்வந்தர்கள் ஆகும் தனியுடைமைவாதிகளுக்கு எதிராய் “மனிதனின் பகுத்தறிவு” கண்டிப்பாக “கலகம்” செய்யும் என்று அறிவித்தார். ஆனால் இதற்கு மாறாக அவரின் காலத்திலேயே பூர்ஷுவா சமூகமானது(முதலாளியத்திற்கு முன் கட்டம் எனலாம் ) முன்னவே இச்சுரண்டலைத் தொடங்கிவிட்டது என்பதை பின்னாளில் உணர்ந்து கொண்டார். குறிப்பாக டச்சு காலனியர்கள், காடுகளில் உள்ள பூக்களை, இலைகளை, விதைகளை சேகரித்ததற்காக பூர்வகுடி மக்களைக் கொளுத்தி கொலை செய்தது, வெர்கீனியாவில் உள்ள நிலக்கிழார்கள் தங்களின் பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் விளைவித்தப் பயிர்களுக்கு சட்டப்படி தீ வைத்தது போன்ற வற்றைக் கண்டு இவ்வாறு எழுதுகிறார் "தனியுடைமை செல்வந்தர்களுக்கு எதிராய் , பொது வளங்களைக் காக்கும் பொருட்டு பொதுவாக ஒன்றிணைய முடியாத இயலாமை அன்றி வேறொன்றுமில்லை. ’’

"மதிப்பின் இவ்விரு (பயன் மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு) வடிவங்களின் தலைகீழ் விகிதம்" முதலாளித்துவ உற்பத்தியின் முதன்மை முரண்பாடாய் (பாரடாக்ஸ்) மார்க்ஸ் காண்கிறார். முதலாளித்துவ வளர்ச்சியின் அனைத்து அம்சங்களும் சமூகத்தின் இயற்கை வளங்களை அழித்து துடைத்துவிட்டுப் போகிற பண்புகளுக்கு உரித்தானவகையாக உள்ளன. இவையெல்லாம் பற்றி மார்க்ஸ் எழுதுகிறார் "முதலாளித்துவ உற்பத்தியானது வணிக நோக்கத்தாலும், போட்டிகளாலும் அனைத்து வளங்களையும் தேவையற்ற வகையில் வீணடிக்கின்றது. இது சமூகத்திற்கு (பொதுவளத்திற்கு) இழப்பாகவும் தனியுடமை முதலாளிகளுக்கு ஆதாயமாகவும் அமைகின்றது" முதலாளித்துவ வளர்ச்சியில் பரிவர்த்தனை மதிப்பு பயன் மதிப்பை ஆளுமை செய்வது மற்றும் அதனால் சூழலுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து மார்க்ஸின் மூலதன சூத்திரமான MCM′ (பணம் சரக்கு பணம்) காணலாம். பொதுவாக மூலதனத்தை விளக்குவோர், அதை ஒரு எளிமையான சரக்கு உற்பத்தி முறைமை என்றும் சரக்கு உற்பத்திக்கும் பரிவர்த்தனைக்கும் இடையிலான நிகழ்முறையில் பணம் இடையீட்டுப் பாத்திரம் வகிக்கிறது என்றும் கூறுவர். அதாவது CMC (சரக்கு பணம் சரக்கு) ; துவக்கம் முதல் இறுதி வரை சரக்கின் குறிப்பிட்ட பயன்மதிப்பில் அது உருக்கொண்டுள்ளதென விளக்குவர். இதற்கு மாறாக மார்க்ஸ் விளக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறையில் பரிவர்த்தனை உறவானது MCM′ஆக உள்ளது. இதில் மூலதன பணத்தை கொண்டு உழைப்பையும் பொருளையும் சரக்காக உற்பத்தி செய்து பின் அதிக பணத்திற்காக அச்சரக்கை விற்பனை செய்து முடிக்கிறது. அதாவது M′அல்லது M + CM (உபரி லாபம்). ஏனையோர் விளக்கும் உற்பத்தி முறையிலிருந்து மார்க்சின் விளக்கம் இங்கு பெரிய அளவில் வித்தியாசப்படுகிறது . அதாவது (மார்க்ஸின் விளக்கமான) பரிவர்த்தனை உறவில் பணமானது சீரிய பாத்திரம் வகிக்கும் வரையில் இந்நிகழ்முறை முடிவில்லாது ஒன்றாக தொடர்ந்து கொண்டிருக்கும்; உபரி லாபம் மீண்டும் MCM′ஆக முதலீடு செய்யப்பட்டு அது மீண்டும் MCMற்கு ஊக்குவித்து காலம் தோரும் தொடர்ந்து கொண்டிருக்கும். மதிப்பின் இச்சூத்திரமானது தனி முதலாளிகள் மற்றும் முதலாளி வர்க்கம் முழுமையிடமும் , ”இன்னும் போ! இன்னும் போ!” என்று ஓயாது கூறுகிறது. தொடர் உற்பத்தி பெருக்கமானது தொழிலாளர் சக்தியை ஒன்றிணையாமல் இடம் பெயர்த்து இலாபத்தை விரிவுபடுத்தி வளத்தைக் குவிக்கிறது. அதேநேரம் உற்பத்தி அதிகரிக்க நுகர்வு வட்டமும் அதையொட்டி அதிகரிக்கிறது. அரசியல் பொருளாதாரம் பற்றின மார்க்ஸின் இந்த உள்ளார்ந்த பகுப்பாய்வானது தொடர்உற்பத்தி பற்றின கருத்தாக்கத்திற்கு வித்திட்டது. இதுவே பின்னாட்களில் “தொடர் உற்பத்தி“ எனும் சிணைபார்க்கின் கருத்தமைவிற்கு அடிப்படையாக அமைந்தது.

(தொடரும்) 

தமிழில் - அருண் நெடுஞ்செழியன்

Pin It