கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எல்லை தாண்டியதாகக் கைது செய்யப்பட்டு, எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவது நடைமுறையில் வழக்கம். பகை நாடுகளாக உறவாடும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கூட இதுதான் நடைமுறையில் உள்ளது. ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் கொண்டு செல்லப்படுவதும் இன்றுவரை நீடிக்கிறது. சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை சுமார் 600ஐ நெருங்குகிறது. இதுபோல் படுகொலைகளை வேறு எந்த நாட்டுக் கடற்படையாவது செய்திருக்குமானால் அந்த நாட்டின் மீது போர் தொடுத்திருப்பார்கள். ஆனால், இந்திய அரசு இலங்கையை நட்பு நாடு என்று சொல்லிக்கொண்டு தமிழக மீனவர்களை மூன்றாம்தர குடிமக்களாக நடத்துகிறது.

இலங்கை அரசைக் கேட்டால், ‘‘விடுதலைப் புலிகளுக்குத் துணைசெய்கிறார்கள். எனவே நடவடிக்கை எடுத்தோம்’’ என்று நியாயம் கற்பித்தனர். 2009 மே மாதம் முள்ளி வாய்க்காலில் அரசின் அறிவிப்பை நம்பி, கூடிய நிராயுதபாணி ஈழத்தமிழர்களை கொத்துக் குண்டுகளை வீசி, 50,000க்கும் மேற்பட்டவர் படுகொலை செய்யப்பட்டதும், ஆயிரக்கணக்கானோர் ஊனமுற்றவர்களாக்கப்பட்டதும் சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்த நிகழ்வாகும். ‘‘விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது, தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார்’’ என இலங்கை அதிபர் இராசபக்சே கொக்கரித்தான். இந்திய அரசிற்காக இக்கடமையைச் செய்ததாக வெளிப்படையாக அறிவித்தான். இராணுவ உதவி, நிதி உதவி, அதிகாரிகள் வழிகாட்டல் என இந்திய அரசு ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணை நின்றது சர்வதேச சமூகத்திற்குத் தெரிந்த இரகசியம்.

2009க்குப் பின்னரும் தமிழக மீனவர் படுகொலையும், கைதும், படகுகள் பறிமுதலும் தொடர்ந்தது. எதற்காக? ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின்னரும் இராஜபக்சே அரசுக்கு நிதி உதவி, இராணுவப் பயிற்சி, இலங்கையை நட்பு நாடு என அறிவித்து இனப்படுகொலையாளன் இராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதும் நீடித்தது. காங்கிரஸ் கூட்டணி அகற்றப்பட்டு ஏகப்பெரும்பான்மையாக பா.ச.க ஆட்சியில் அமர்ந்து மோடி இராஜ்ஜியம் தொடங்கியதிலிருந்து இராஜபக்சேவுக்கு வரவேற்பும், காங்கிரஸ் முன்னெடுத்த நட்பு நாடு முழக்கமும், இராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சியும் தொடர்ந்தது. ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதிலும் தமிழகத்தின் உணர்வுகளைத் துச்சமென எண்ணுவதிலும் காவியும், கதரும் ஒன்றுதான் என்பதைத் தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நவம்பர் 28, 2011ல் கடலில் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும்போது இராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் அகஸ்டஸ், எமர்சன், வில்சன், பிரசாத், லாங்நெட் ஆகியோர் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த மூன்றாண்டுகளாக வழக்கு நடைபெற்றது. விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் தங்கச்சி மடம் மீனவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்திய உளவுத்துறையும், தமிழக உளவுத் துறையும் மீனவர்கள் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு எனக் கூறியுள்ளனர். யாழ்நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கு கொழும்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த அக்டோபர் 30 அன்று கொழும்பு நீதிமன்றம் தமிழக மீனவர்கள் ஐந்துபேர் உட்பட எட்டு மீனவர்களுக்குத் தூக்குத் தண்டனை அறிவித்தது. இலங்கை கடற்படை கைது செய்தபோது ஹெராயின் போதை மருந்து கைப்பற்றப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் சொல்லப்படவில்லை. இது திட்டமிட்ட வகையில் பழிவாங்கும் நோக்கில் போடப்பட்ட பொய்வழக்கு. போதை மருந்து கடத்தலுக்கு இதுவரை இலங்கையில் தூக்குத் தண்டனை வழங்கியதில்லை. 1976 முதல் இன்றுவரை இலங்கை நீதிமன்றங்கள் மரண தண்டனை தீர்ப்பளித்ததில்லை. இந்நிலையில், தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பு திடீரென்று வழங்கியது ஏன்? யார் கொடுத்த துணிச்சல்? என்ன பின்னணி?

தங்கச்சிமடம் மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை என்ற செய்தி வந்ததிலிருந்தே இராமேஸ்வரம் கொதிப்படையத் தொடங்கியது. மீனவர்கள் மட்டுமல்ல அனைத்துப் பிரிவினரும் தங்களது போர்க்குணமிக்க எதிர்ப்பைக் காட்டத் தொடங்கினர். இரயில்வே தண்டவாளங்கள் பிடுங்கி எறியப்பட்டன. பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இராமேஸ்வரம் இந்தியாவிலிருந்து துண்டிக்கப்பட்டது. காவல்துறை செய்வதறியாது திகைத்து நின்றது. கடலுக்கு போகாமல் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் நாடெங்கும் தமிழ்நாடு மாணவர் இயக்கம், தமிழ்நாடு இளைஞர் இயக்கம் உள்ளிட்ட மாணவர், இளைஞர் அமைப்புகள் சென்னை, கும்பகோணம் மற்றும் பல்வேறு இடங்களில் இரயில் மறியல் போராட்டம், இலங்கைத் தூதரக முற்றுகை என போராட்டக் களத்தில் இறங்கினர். வாழ்வுரிமைக் கூட்டமைப்பு தூதரக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டது. தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் கண்டனங்கள், எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மீனவர்கள் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட வேண்டும் என மீனவர்களின் குடும்பங்கள் நேர்காணலில் தெரிவித்தனர்.

இலங்கையில் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்ட மீனவர்களின் மேல்முறையீட்டு வழக்குச் செலவிற்காகத் தமிழக அரசு 20 இலட்சம் ரூபாய் வழங்கியதாக தினசரிகளில் செய்தி வெளியானது. இதைக் கண்ட பொதுமக்கள் தமிழக மீனவர்கள் இந்தியர்களா? இல்லையா? ஏன் தமிழக அரசு பணம் கொடுக்கிறது? இந்திய அரசு தனது குடிமக்களுக்குச் செலவழிக்காதா? எனப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு, விவாதிக்கப்பட்டன. சட்ட ரீதியான மேல்முறையீடு செய்யப்படும் என இந்திய அரசின் அதிகாரிகள் அறிவித்தனர். இலங்கை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இராசபக்சே பொதுமன்னிப்பு வழங்கி மீனவர்களை விடுதலை செய்து இந்தியா அனுப்பி வைக்கத் தயாராக இருப்பதாக தொண்டைமான் வாரிசுகள் மூலம் அறிவிக்கப்பட்டதுடன், மேல்முறையீட்டு மனு திரும்பப் பெறப்பட்டால்தான் விடுவிக்க முடியும் எனக் கூறப்பட்டது. ஒரு நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை அவ்வளவு எளிதாக ஓர் அரசு விடுதலை செய்யுமா? இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த, ஊனப்படுத்திய இராசபக்சேவுக்கு 5 மீனவர்களின் உயிர் பெரிய விசயமா? பல பத்தாயிரம் பேரைப் படுகொலை செய்ய முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் இலங்கை இராணுவத்திற்குத் துணை நின்ற, 500 பேருக்கும் மேல் தமிழக/ இந்திய மீனவர்கள் இலங்கை கப்பற்படையால் படுகொலை செய்யப்பட்டதை வேடிக்கை பார்த்த இந்திய அரசுக்கு 5 மீனவர்களின் உயிர்கள் மீது என்ன திடீர் அக்கறை?

ஈழப் பிரச்சனை, மீனவர் பிரச்சனை காரணமாக காங்கிரஸ் தமிழகத்திலிருந்து துடைத்தெறியப்பட்டு விட்டது. மாறி மாறித் தமிழகத்தை ஆளும் தி.மு.க. அ.தி.மு.க கட்சிகளில் காங்கிரசின் கூட்டாளியாக இந்திய அரசில் பதவியிலிருந்து ஈழப் படுகொலையை வேடிக்கை பார்த்த தி.மு.க கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தைக்கூட பிடிக்க முடியாத அளவிற்கு தோற்கடிக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டுள்ளது. 18 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட ரூபாய் 60 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த செப் 27ல் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு, மேல்முறையீட்டு கால அவகாசத்துடன் பிணையில் வந்த அ.தி.மு.க முதல்வர் பதவியை இழந்தது மட்டுமின்றி தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் அ.தி.மு.க பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரே ஒரு இடம் பெற்றுள்ள பா.ச.க.வின் தாய் நிறுவனமான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கவனம் தமிழகம் நோக்கித் திரும்பியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே கச்சத் தீவு மீட்பு, மீனவர்கள் பிரச்சனை என இராமேஸ்வரம் நோக்கி அனுப்பி வைக்கப்பட்ட சுஸ்மா சுவராஜ், இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர். தமிழக பா.ச.க நிர்வாகிகள் மத்திய இணைஅமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், இல.கணேசன் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோருடன் தமிழக மீனவப் பிரதிநிதிகள் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்க வைக்கப்பட்டனர். ஆம், இலங்கை அரசு மீனவர்களுக்கு மரண தண்டனை கொடுத்தது, இந்தியாவின் மோடி அரசு வேண்டுகோள் விடுத்ததால் பொது மன்னிப்பு, விடுதலை. இராசபக்சே மோடி நாடகம் அரங்கேறத் தொடங்கியது. நவம் 14 முதல் 19வரை தொடர் நாடகம். மேல்முறையீடு, பொதுமன்னிப்பு அறிவிப்பு, மகிந்த இராசபக்சே வின் மனிதாபமானச் செயல் என இந்தியத் தூதரக அதிகாரிகள் உருகியுள்ளனர்.

நவம்பர் 9ம் தேதி அன்று பிரதமர் மோடி இராசபக்சேவிடம் பேசியதாக தூதரக அதிகாரிகள் 19ம் தேதி அன்று அறிவிக்கின்றனர்.

• பிரதமர் மோடியால் மீனவர் விடுதலை சாத்தியமாகியிருக்கிறது.....

மீனவர் விடுதலை நிரந்தரத் தீர்வுக்கான நம்பிக்கை அளிக்கிறது...

அரசியலுக்காக அல்ல மீனவர் நலனுக்காகவே நடவடிக்கை..... என

தில்லியிலிருந்து இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் அள்ளிவிடுகிறார்.

•பிரதமர் நரேந்திரமோடியும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மாசுவராஜும் மேற்கொண்ட முயற்சிகள்தான் மீனவர் விடுவிப்புக்கு முக்கிய காரணமாகும் என தமிழக பா.ச.க.வின் தலைவர் டாக்டர் தமிழிசை அவர்கள் தனது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பது போல தமிழ் மீனவர்களை விடுவித்த இராசபக்சே மிகப் பெரிய மனிதாபிமானி எனும் செய்தியை சர்வதேசச் சமூகத்திற்கும், காலூன்ற முடியாத தமிழகத்தில் மீனவர் மத்தியிலும், பிற சமூகத்தினர் மத்தியிலும் மோடி, பா.ச.க. செல்வாக்குப் பெறுவதற்கும், காங்கிரசை விட பா.ச.க தமிழர்கள் மீது அக்கறையுள்ள கட்சி என்பதைக் காட்டுவதற்கும் மோடி இராசபக்சே திட்டமிட்டு நடத்திய நாடகமே இவை அனைத்தும் என்பதைப் புரிந்து கொள்வோம். மோடி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அப்படியே கச்சத்தீவை மீட்டெடுப்பார் என நம்புவோமாக.

Pin It