சென்ற ஜனவரி 31, 2015 அன்று வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் உள்ள SIDCO தொழிற்பேட்டையில் உள்ள தோல் சுத்திகரிப்புக் கழிவு நீர்த் தொட்டி ஒன்று வெடித்து, அதிலிருந்து வெளிவந்த கடும் விஷத் தன்மை மிக்க கழிவுநீரில் மூழ்கி 10 தொழிலாளிகள் அந்த இடத்திலேயே உயிர் நீத்தனர். இவர்கள் அனைவரும் கழிவு நீர்த் தொட்டியை ஒட்டி உள்ள "ஆர்கே லெதர்ஸ்" என்கிற தோல் பதனீட்டுத் தொழிலகத்தில் பணியாற்றியவர்கள். இவர்களில் ஒன்பது பேர் இந்தத் தொழிலகத்தில் உள்ள ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள். இவர்கள் மேற்கு வங்கத்திலுள்ள பஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளிகள்.

ranipettai 335

தமிழகத்தின் ஆக மோசமான சுற்றுச் சூழல் மாசுபட்ட நகரமான ராணிப்பேட்டையில் தொடர்ந்து இத்தகைய விபத்துகளில் தொழிலாளிகள் மரணமடைவது நிகழ்கிறது. இந்த விபத்தைப் பொருத்தமட்டில் இரு அம்சங்கள் கவனம் பெறுகின்றன 1. விதிகளை மீறி திடக் கழிவுகளைச் சேமிப்பதற்கான தொட்டியில் (SLF- Secured Land Facility) திரவத் தன்மையுடன் கூடிய கொடும் விஷக் கழிவைச் சேமித்து வைத்திருந்தது 2. இதை ஒட்டி ஒரு தோல் தொழிலகம் இயங்கியதோடு விதிகளை மீறி இங்கேயே இந்தப் புலம் பெயர் தொழிலாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான உண்மைகளை அறிய மனித உரிமை அமைப்புகளுக்கான தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அ.மார்க்ஸ் தலைமையில் அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழுவில் ஜனநாயக தொழிற்சங்க மையத் தோழர்கள் ரமணி, மணிகண்டன், மக்கள் விடுதலை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த பேரா.திருமாவளவன், இளந்தமிழகம் இயக்கத் தோழர் நாசர், வழக்குரைஞர் கி.நடராசன், சுற்றுச்சூழல் ஆர்வலர் சீனிவாசன், பி.எஃ.ஐ. தோழர் ஃபையாஸ் ஆகியோர் பங்குபெற்றனர். பிப்ரவரி 7 அன்று ராணிப்பேட்டை சிட்கோ தொழிற்பேட்டையில் இக்குழு ஆய்வு செய்தது. ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையின் சுருக்கம்:

பின்னணி

தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கடும் பிசுபிசுப்பு மிக்க கழிவுப் பொருள் குரோமிக் அமிலம் உட்பட பல கொடும் விஷங்களைக் கொண்டது. இதன் 1.விஷத் தன்மையை நீக்கி, 2.அதன் திரவத் தன்மையையும் முற்றிலுமாக நீக்கி (Zero Liquid Discharge), 3. அதிக விஷத் தன்மையற்ற உலர்ந்த திடக்கழிவுகளாக மாற்றி புவி நீர்மட்டத்திலிருந்து சுமார் 10 மீட்டர் உயரத்தில் உள்ள கான்க்ரீட் தொட்டியில் (Secure Land Fill-SLF) சேமித்துப் பின் அதைப் பாதுகாப்பான இடங்களுக்கு அகற்ற வேண்டும். ராணிப்பேட்டையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோல் பதனீட்டுத் தொழிலகங்களில் பல தொழிலகங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து "பொது கழிவுத் திருத்த நிலையங்களை" (Common Effluent Treatment Plant - CETP) அமைத்துத் தம் தொழிலகங்களிலிருந்து வரும் கழிவுகளைச் சுத்திகரிக்கின்றன. ராணிப்பேட்டை சிட்கோவில் மட்டும் இது போன்ற 8 பொதுக் கழிவு நீர்த் திருத்த நிலையங்களும், இது தவிர தனியாக ஒவ்வொரு தொழிலகமும் அமைத்துக் கொண்ட 226 சுத்திகரிப்பு நிலையங்களும் (Independant Effluent Treatment Plant - IETP) உள்ளன.

விபத்திற்கு ஆளான இந்தப் பொதுச் சுத்திகரிப்பு நிலையத்தை "சிட்கோ செம்மைப்படுத்தப்பட்ட தோல் கழிவுத் திருத்த தொழிலக லிமிடெட்" (SIDCO Finished Leather Effluent Treatment Company Limited) எனும் நிறுவனம் அமைத்து நிர்வகிக்கிறது. அருகருகே உள்ள 89 தோல் பதனீட்டுத் தொழிலகங்கள் சேர்ந்து இதை அமைத்துள்ளன. இதில் தற்போது செயலிழந்துள்ள 9 தொழிலகங்கள் தவிர மீதமுள்ள 80 தொழிலகங்கள் தம் கழிவுகளை அனுப்புகின்றன. 1995ல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் ஒவ்வொரு தோல் பதனீட்டுத் தொழிலகத்திலிருந்தும் ஒரு பிரதிநிதி இதன் நிர்வாகப் பொதுக்குழுவில் இருப்பர். இவர்கள் 9 நிர்வாக இயக்குநர்களைத் தேர்வு செய்வர். இந்தப் பதவிகளை அடைவதில் கடும்போட்டி நிலவுகிறது.

ஒவ்வொரு தொழிலகமும் அனுப்பும் கழிவுகள் மீட்டர் கருவி ஒன்றால் அளக்கப்பட்டு லிட்டருக்கு இவ்வளவு என அதற்குக் கூலி பெறப்படுகிறது. இவ்வாறு வந்தடையும் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் அப்படியே காயவிட்டு அகற்றினால் இந்தச் சுத்திகரிப்பிற்கு ஆகும் செலவு அப்படியே நிர்வாகத்தின் கைக்குப் போய்விடும். அதனால்தான் இந்தப் பதவிக்கு இத்தனை போட்டி. தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிர்வாக இயக்குனர் அமிர்தகடேசன் மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு நபர். இந்த சுத்திகரிப்பு நிலையங்களுக்கான வடிவமைப்பு முதலிய தொழில்நுட்பங்களை அமைத்துத் தருவது 'செம்காட்' எனப்படும் "தோல் பதனிடுவோரின் சென்னை சுற்றுச் சூழல் நிர்வாக நிறுவனம்" (Chennai Environmental Management Company of Tannes -CEMCOT). இந்த நிறுவனமும் தோல் பதனிடும் தொழிலகங்களால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இப்போது உரிய வலுவுடன் கட்டப்படாமல் உடைந்து "ஒரு சுனாமி போல" உள்ளிருக்கும் பிசுபிசுப்பான விஷக் கழிவுப் பொருட்கள் வெளிவந்து 10 தொழிலாளிகளைத் தழுவிக் கொன்ற இந்த சுத்திகரிக்கும் நிலையத்தை வடிவமைத்ததும் இந்த நிறுவனமே.

ஆக சுத்திகரிக்கும் நிலையத்தை வடிவமைப்பவர்கள், செயல்படுத்துபவர்கள் எல்லாம் தோல் பதனிடும் தொழிலகங்களின் உரிமையாளர்களே. திருடன் கையில் சாவியைக் கொடுப்பது என்பார்களே அதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இவர்களின் நோக்கம் "சுத்திகரிப்பின்" பெயரிலும் உச்சபட்சமான லாபம் சம்பாதிப்பதே. பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மாசுபடாமல் காப்பது என்பதெல்லாம் இவர்களுக்குப் பொருட்டல்ல.

இவற்றை மேற்பார்வையிட்டுக் கண்காணிக்க வேண்டிய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (TNPCB) உள்ளூர் அதிகாரிகள் யாரை அவர்கள் கண்காணிக்க வேண்டுமோ அவர்களோடு நெருக்கமாக இருந்து அவர்களது விதி மீறல்கள் அனைத்தையும் அனுமதித்து வந்துள்ளனர்.

இப்போது இடிந்து விழுந்து பத்து தொழிலாளரின் இறப்பிற்குக் காரணமான இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இரண்டு SLF கான்க்ரீட் தொட்டிகள் உள்ளன. ஒரு தொட்டி திறந்த பிறகு அதைச் சுற்றி உரிய தரமற்ற கான்க்ரீட் சுவர்களை எழுப்பி இரண்டாவது தொட்டியை உருவாக்கியுள்ளது சுத்திகரிப்பு நிலைய (CEPT) நிர்வாகம், இது அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ளதாக இப்போது மாசு கட்டுப்பாட்டு நிறுவனம் ஒத்துக் கொண்டுள்ளது. உரிய வலுவுடன் கட்டப்பட்டிருந்தாலும் கூட இந்த தொட்டிகள் திரவங்கள் நீக்கப்பட்டுத் திட வடிவம் அடைந்த கழிவுகளை மட்டுமே தாங்க வல்லது. அதற்குள் கடந்த ஆறு மாத காலத்திற்கும் மேலாக சுத்திகரிக்கப்படாத பிசுபிசுப்பு மிக்க திரவ வடிவிலான கழிவுகளைச் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகம் நிரப்பி வைத்துள்ளது. இப்போது விபத்திற்குப் பின் 800 டன் கழிவுப் பொருள் உள்ளே இருந்ததாக நிர்வாகத் தரப்பில் சொல்லப்பட்டாலும் இதைக் காட்டிலும் இரண்டு மடங்கு கழிவுகள் உள்ளே தேக்கி வைக்கப்பட்டிருந்ததாக நாங்கள் மதிப்பிடுகிறோம்.

இந்த திரவக் கழிவுகளின் அழுத்தம் தாங்க இயலாததால்தான் இடையிடையே கான்க்ரீட் தூண்கள் இல்லாமல் கட்டப்பட்ட அந்த இரண்டாம் தொட்டி ஜனவரி 31 இரவு 1 மணி அளவில் உடைந்து விழுந்து 10 தொழிலாளர்கள் சாவதற்குக் காரணமாக இருந்துள்ளது.

விபத்துக்குப் பின்

பல மணி நேரம் போராடிக் காலையில்தான் உயிருடன் சமாதியான இந்தப் 10 தொழிலாளர்களின் உடலையும் தீயணைப்புப் படையினர் வெளியே எடுத்துள்ளனர். இப்போது மே.வங்கத்தைச் சேர்ந்த 9 தொழிலாளிகளின் உடல்களும் மே.வங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. சம்பத்தின் உடல் அவரது கிராமத்திற்கு அனுப்பப்பட்டது.தமிழக அரசு இறந்த ஒவ்வொருவருக்கும் 3 இலட்ச ரூபாயும் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகம் ஒவ்வொருவருக்கும் ஏழரை இலட்ச ரூபாயும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளன. இது தவிர இறந்து போன மே.வங்கத்தவர் ஒவ்வொருவருக்கும் அம்மாநில அரசு 2 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னகக் கிளையின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியும் அடங்கிய ஆய்வுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விபத்துக்கான காரணங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. உடைந்த இரண்டாவது SLF தொட்டி அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ளது என இந்தக் குழு கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து வேலூர் மாசுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணியாற்றிய மூன்று சுற்றுச் சூழல் பொறியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையின் பேரில் இன்று விபத்துக்குள்ளான சுத்திகரிப்பு நிலையத்தைப் பயன்படுத்திய 80 தோல் பதனிடும் தொழிலகங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த சுமார் 15,000 தொழிலாளிகள் வேலை இழந்துள்ளனர். விபத்து ஏற்பட்டவுடன் சுத்திகரிப்பு நிலைய இயக்குனர்களில் முக்கியமானவர்கள் தலைமறைவாயினர். இது தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி துறைக்கு மாற்றப்படும்வரை உள்ளுர் காவல்துறை அவர்கள் யாரையும் தேடிக் கைது செய்ய முயற்சிக்கவில்லை. பிறகு பிப்ரவரி 19 அன்று சி.பி.சிஐ.டி போலீசார் நிர்வாக இயக்குநர் ஆர். அமிர்த கடேசன், தொழில்நுட்ப இயக்குநர் வி. ஜயசந்திரன், நிதி இயக்குநர் கே.சுப்பிரமணியன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது இ.த.ச 337, 285, 304 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கைது செய்யப்படுவார்களா? என சி.பி.சி.ஐ.டி விசாரணை அதிகாரி உதயக்குமாரைக் கேட்டபோது அவர்களை வரச் சொல்லியுள்ளோம். விசாரித்த பின்பே முடிவெடுக்கப்படும் என்றார்.

இறந்து போன சம்பத்தின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளையும் கண்ணமங்கலத்தில் சென்று சந்தித்தபோது இதுவரை ஒரு அதிகாரி கூட தங்களை வந்து பார்க்கவில்லை எனக் கூறினர். ஒரு பெண் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் நந்தகோபாலைத் தொடர்பு கொண்டு இது தொடர்பாக விசாரித்தபோது மே.வங்கத்தைச் சேர்ந்த 9 பேர்களின் சரியான முகவரி கிடைத்தபின்புதான் 10 பேர்களுக்கும் அரசு அறிவித்துள்ள இழப்பீடு அளிக்கப்படும் என்றார். இழப்பீடுகளுக்கு அப்பால் இது போன்ற விபத்துக்களைத் தடுக்கவும் புலம் பெயர்ந்த தொழிலாளிகளின் பாதுகாப்பு நோக்கிலும் மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது எனக் கேட்டபோது இது தொடர்பான குழுக்களின் ஆய்வறிக்கைகள் வந்தபின்புதான் அது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

தொழிலாளர் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் உரிய முறையில் இந்தத் தொழிலகங்களில் வேலை செய்கிறவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றனவா, இங்கு வேலை செய்பவர்கள் கட்டாயமாகவோ, வேறு வழியின்றியோ வாழத் தகுதியற்ற இந்தத் தொழிற்சாலைகளிலேயே விதிகளை மீறித் தங்க வைக்கப்படுகின்றனரா என்றெல்லாம் எந்த ஆய்வுகளையும் செய்வதில்லை. எந்தப் பதிவும் இல்லாமல், பாதுகாப்பும் இல்லாமல் இப்படி ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளிகள் ராணிப்பேட்டைப் பகுதியில் உள்ளனர். மௌலிவாக்கம் விபத்திற்குப் பின் இவர்களைப் பதிவு செய்து அடையாள அட்டைகள் தருவதாகவும், பணிடங்களில் தற்காலிக ஆரம்ப மருத்துவமனை, 'க்ரெச்(குழந்தைகள் காப்பக அறை' முதலான வசதிகள் செய்யப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

தற்போது இந்த விபத்திற்குப் பின் இந்தப் புலம் பெயர் தொழிலாளிகள் குறித்து இரு 'சர்வே' செய்யப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். பதிவு செய்வது என்பதை விட்டுவிட்டு ஏன் சர்வே செய்வது என்கிற நிலையை எடுக்கின்றனர் எனத் தெரியவில்லை.

எமது பரிந்துரைகள்

1. நடந்து முடிந்தது வெறும் தற்செயலான விபத்தல்ல. முதலாளிகளின் இலாப வேட்டையும், அதிகாரிகளின் ஊழல் வேட்கையும் இணைந்து செய்த படுகொலை. வெறும் இழப்பீடு மட்டும் கொடுத்து இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர இயலாது. நிரந்தரத் தீர்வு வேண்டும், இந்த நோக்கில் இத்தகைய விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கவும், மாநிலம் விட்டு இடம் பெயர்ந்து தொழில் செய்யும் தொழிலாளிகளை உரிய முறையில் பதிவு செய்து, அவர்களின் உரிமைகளைப் பாதுக்காக்கவும் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்யவும் தகுந்த தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியுடன் அமைந்த ஒரு நீதித்துறை விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

2. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு நிறுவனத் தலைவர் எஸ்.ஸ்கந்தனின் கூற்றுப்படி சென்ற ஜனவரி 9ம் தேதியே இத்தகைய இரண்டாவது SLF தொட்டி இங்கு இயங்குவதும், அதில் திரவக் கழிவுகள் சேமிக்கப்பட்டுள்ளதும் தெரிந்துள்ளது. அப்போதே உரிய நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இந்த விபத்து தடுக்கப்பட்டிருக்கும். எனவே ஸ்கந்தனும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட வேண்டும். வேலூர் மாசுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணியாற்றி தற்போது தற்காலிகப் பணி நீக்கத்தில் உள்ள மூன்று சுற்றுச் சூழல் பொறியாளர்களும் இந்தக் குற்றச் செயலில் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்களும் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட வேண்டும்.

3. விதிகளை மீறி இந்தப் புலம்பெயர் தொழிலாளிகள் இந்தத் தொட்டிக்கு அருகில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாலேயே அவர்கள் இன்று சாக நேர்ந்துள்ளது. உரிய முறையில் இவற்றைக் கண்காணிக்காத வேலூர் பகுதி தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் நலத்துறை துணை இயக்குனரும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். இறந்தவர்கள் குறித்த படிவம் 25 இறந்த பின்பே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அது குறித்தும் புலனாய்வு செய்ய வேண்டும்.

4. சம்பத்தின் வீட்டாரை உடனடியாக அமைச்சர்களும் அதிகாரிகளும் சென்று பார்ப்பார்கள் என அரசுத் தரப்பில் சொல்லப்பட்டும் யாரும் சென்று பார்க்கவில்லை. மாவட்ட அட்சியரிடம் இது குறித்து நாங்கள் பேசிய பின்னும் எதுவும் நடக்கவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் மீது அரசு நடவடிக்கை எடுப்பதோடு அறிவிக்கப்பட்ட இழப்பீடுகளை அந்தக் குடும்பத்திற்கு உடனடியாக அரசு வழங்க வேண்டும். சம்பத்தின் மனைவிக்கு அரசு வேலை அளிக்க வேண்டும். மூன்று குழந்தைகளின் கல்விச் செலவையும் அரசு ஏற்க வேண்டும்.

5. விபத்து நடந்தவுடன் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகம் இறந்த ஒவ்வொருவருக்கும் 7..5 லட்ச ரூ இழப்பீடு அளிப்பதாக வாக்களித்தது. இப்போது தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்பகுதிக் கிளை இறந்த ஒவ்வொரு தொழிலாளிக்கும் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகம் 2.5 லட்சம் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. இது தற்காலிக நிவாரணமாகக் கருதப்பட்டு இத்துடன் நிர்வாகம் முன்பு வாக்களித்த தொகையையும் இறந்தவர்களுக்கு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. கழிவு நீர்த் தொட்டி சுத்திகரிப்பு நிலையம், இவற்றை வடிவமைக்கும் நிறுவனம் ஆகியவற்றை தோல் பதனீட்டுத் தொழில் முதலாளிகளின் கையில் அளிக்காமல் அரசே அதை ஏற்று நடத்த வேண்டும்.

7. தமிழகமெங்கும் உள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாநிலம்விட்டு இடம் பெய்ர்ந்து தொழில் செய்யும் தொழிலாளிகளை தொழிலாளர் நலத் துறை உடனடியாகப் பதிவு செய்து அடையாள அட்டை வழங்க வேண்டும். அவர்களுக்குக் குறைந்தபட்சக் கூலி, தொழிலிடப் பாதுகாப்பு முதலியன உத்தரவாதம் செய்யப்பட வேண்டும். இடைத் தரகர், ஒப்பந்தக்காரர்களின் சுரண்டல்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8. தற்போது விபத்துக்குள்ளான சுத்திகரிப்பு நிலையத்தைப் பயன்படுத்திய 80 தோல் பதனீட்டுத் தொழிலகங்களும் மூடப்பட்டுள்ளதால் 15,000 பேர் வேலை இழந்துள்ளனர். மீண்டும் இந்தத் தொழிலகங்கள் திறக்கப்பட்டு விதி மீறல்கள் ஏதும் இன்றி செயல்படுவதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் . அதுவரை வேலை இழந்த தொழிலாளிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

உண்மையறியும் குழு

அ.மார்க்ஸ்

சென்னை 

Pin It