கடந்த 26.04.2017 அன்று மாலை 5.45 மணி அளவில், கேரளா மாநிலம் கொச்சி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் பொதுவெளியில் செல்போனில் பேசியபடி மோட்டார் வாகனம் இயக்கினார் என்பதற்காக அவர் மீது, கேரள காவல் சட்டத்தின் பிரிவு 118 (இ) மற்றும் மோட்டார் வாகனங்கள் சட்டம்,1988 ன் பிரிவு 184ன் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கினை இரத்து செய்யக்கோரி சந்தோஷ் கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கினை விசாரித்த தனி நீதிபதி, கேரள காவல் சட்டத்தின் பிரிவு 118 (இ) இது போன்ற வழக்குகளில் பொருந்துமா என்பது தொடர்பாக விசாரித்திட வேண்டி இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு முன்பாக அதனை அனுப்பினார்.

cellphone drivingகடந்த 16.05.2018 அன்று, அந்த வழக்கில் இரு நீதிபதிகள் அடங்கிய ஆயம், “கேரள காவல் சட்டத்தில், செல்போனில் பேசியபடி மோட்டார் வாகனம் இயக்குதல் தடை செய்யப்படவில்லை. ஆகவே, அப்படி வாகனம் இயக்குதல் பொதுமக்களுக்கு அபாயம் விளைவிக்கும் செயல் என்று கருத முடியாது. அவ்வாறு வாகனம் இயக்குவது அபாயம் விளைவிக்கும் செயல் என்று நீதிமன்றம் விதிகளை இயற்றிட முடியாது. சட்டமன்றத்தின் வாயிலாக அது ஒரு குற்றச் செயல் என கேரள காவல் சட்டத்தில் சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும். அதன் பிறகுதான் அது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய முடியும்” என்று கூறி அந்த குற்ற வழக்கினை இரத்து செய்து தீர்ப்பிட்டது. மேலும், அதுபோன்று நிலுவையிலுள்ள வழக்குளை இரத்து செய்ய கோரி சம்பந்தப்பட்டவர்கள் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களை அணுகலாம் என்று கூறியது. இந்த தீர்ப்பின் வாயிலாக, சாலையில் செல்போனில் பேசியபடி மோட்டார் வாகனம் இயக்குதல் குற்றமல்ல என்ற கருத்து ஊடகங்களிலும், பொதுமக்களிடமும் பரவலாக சென்றடைந்தது.

மேற்கண்ட வழக்கு இரு குற்றப்பிரிவுகளின் பதிவு செய்யப்பட்டது. கேரள காவல் சட்டத்தின் பிரிவு 118 (இ), “பொதுமக்களுக்கு அபாயம் விளைவிக்கும் செயலை அல்லது பொதுமக்கள் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயலை தெரிந்தே செய்யும் எவரொருவரும் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூபாய் 10,000/- வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்” என்று கூறுகிறது. மோட்டார் வாகனங்கள் சட்டம்,1988ன் பிரிவு 184 “மோட்டார் வாகனத்தை பொதுமக்களுக்கு அபாயம் தரக்கூடிய வகையில் இயக்கினால் முதல் முறை குற்றத்திற்கு ஆறு மாத சிறை தண்டனையும் ரூபாய் 1000/- அபராதமும், இரண்டாம் முறை அதே குற்றத்தை செய்தால், இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய்.2000/- அபராதமும் விதிக்கப்படும்” என்று கூறுகிறது.

இந்த இரு சட்ட பிரிவுகளிலும் செல்போன் என்ற வார்த்தை இல்லை. அந்த இரு சட்டங்களும் இயற்றப்படும் போது செல்போன் கண்டுபிடிக்கப்படவே இல்லை. இருப்பினும், செல்போனில் பேசியபடி வாகனம் இயக்கி அதன் காரணமாக சாலை விபத்துகள் அதிகரித்து வருவதன் காரணமாக, அது பொதுமக்களுக்கு அபாயம் விளைவிக்கத்தக்க ஒரு செயல் என்பது எளிதில் புலனாகும். ஆகவே, செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் இயக்கினால் மேற்கண்ட இரு சட்டபிரிவுகளும் பொருந்தும். ஆகவே, கேரளா மாநில அரசு விரைவாக அந்த தீர்ப்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் அல்லது அந்த தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், மேலும், அதிகப்படியான சாலை விபத்துகளை கேரள மாநிலம் சந்திக்க அது ஏதுவாக அமையும்.

மேற்கண்ட தீர்ப்பிற்கு ஒரு மாதகாலம் முன்பாக, “மீண்டும் மீண்டும் செல்போனில் பேசியபடி மோட்டார் வாகனம் இயக்குபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை, மாநில அரசு இரத்து செய்திட வேண்டும் எனவும், வாகனம் இயக்கியவர்களிடம் அது தொடர்பாக விளக்கம் கேட்டு, இரத்து செய்வது தொடர்பான நடவடிக்கைகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும்” எனவும் இராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத்தின் இரு நபர் அடங்கிய ஆயம் 27.04.2018 அன்று உத்தரவிட்டுள்ளது.

கவனக்குறைவாக, சட்ட விதிகளுக்குப் புறம்பாக, மது அருந்தியபடி, கட்டுபாடற்ற வேகம், தூக்க கலக்கத்துடன் மற்றும் செல்போனில் பேசிய படி மோட்டார் வாகனங்களை இயக்குவதாலும், தவறான பாதையில் செல்வது, பழுதடைந்த சாலைகளில் பயணிப்பதாலும் வாகன விபத்துகள் அதிகரித்த வகையில் உள்ளன. ஆகவே, “செல்போனில் பேசியபடி மோட்டார் வாகனம் இயக்குதல் உள்ளிட்ட மோட்டார் வாகனம் இயக்குதல் தொடர்பான ஐந்து குற்றங்களுக்கு மூன்று மாதங்கள் வரையிலும் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக இரத்து செய்யலாம்” என சாலை பாதுகாப்பு தொடர்பான உச்சநீதிமன்ற குழு, நடுவண் மற்றும் மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது.

மனித உயிரை அபாயப்படுத்தும் விதமாக, பொதுவெளியில் அஜாக்கிரதையாகவோ அல்லது கவனக்குறைவாகவோ வாகனம் இயக்குவது மூன்று மாதம் சிறை தண்டனையோ அல்லது ரூ.1000/- அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கத்தக்க குற்றம் என இந்திய தண்டனை சட்டம் பிரிவு 279 கூறுகிறது.

அதுபோல, மனித உயிரை அபாயப்படுத்தும் விதமாக, பொதுவெளியில் அஜாக்கிரதையாகவோ அல்லது கவனக்குறைவாகவோ வாகனம் இயக்கி எவருக்கும் காயம் ஏற்படுத்தினால் அது ஆறு மாதம் சிறை தண்டனையோ அல்லது ரூ.5௦௦/- அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கத்தக்க குற்றம் என பிரிவு 337ம், அவ்வாறு வாகனம் இயக்கி எவருக்கும் கொடுங்காயம் ஏற்படுத்தினால் அது இரண்டு சிறை தண்டனையோ அல்லது ரூ.1,000/- அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கத்தக்க குற்றம் என இந்திய தண்டனை சட்டம் பிரிவு 338ம் கூறுகிறது.

அஜாக்கிரதையாகவோ அல்லது கவனக்குறைவாகவோ செயல்பட்டு, எவரையும் மரணம் விளைவிக்கும் நோக்கமல்லாத வகையில் உயிரிழப்பு செய்தால் அது இரண்டு வருட சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கத்தக்க வகையிலான குற்றம் என இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304-A வும் கூறுகிறது.

மேற்கண்ட பிரிவு 304-A வில் வாகனம் இயக்கி அதன் மூலமாக மரணம் விளைவித்தல் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் இன்றளவும் மோட்டார் வாகனம் மூலமான இறப்புகளுக்கு அந்த பிரிவின் கீழ்தான் வழக்குபதிவு செய்யப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி பார்த்தால், மேற்கண்ட கேரளா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பானது ஏற்புடைய ஒன்றல்ல என்பது சாதரணமாக புலப்படும்.

இப்படியாக, 1860ம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டத்தின் மேற்கண்ட பிரிவுகளின் கீழ், செல்போன் பேசியபடி வாகனம் இயக்கும் நபர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து சிறை தண்டனை வழங்கிட வாய்ப்புள்ளது.

மோட்டார் வாகனம் இயக்கும்போது, செல்போன் உபயோகிக்கும் காரணத்தால் நாளொன்றுக்கு 26பேர் வீதம் மரணமடைந்து வருவதாக நடுவண் போக்குவரத்துத் துறை அமைச்சகம் கடந்த 2017ல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையில் இருசக்கர மோட்டார் வாகனத்தில் கடக்கும் போது, செல்ஃபி எடுத்துக் கொள்வது, செல்போனில் பேசியபடி செல்வது மற்றும் நான்கு சக்கர வாகனத்தை இயக்கம் பொழுது, செல்போனில் பேசியபடியும், செல்போன் வாயிலாக செய்திகளை பரிமாறிக் கொள்வதும் அந்த வாகனங்களை இயக்கும் நபர்களுக்கும், மற்றவர்களுக்கும் பெரும் சிக்கல்களை விளைவிப்பதாக கடந்த 2௦17ல் நடுவண் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

காதில் செல்போன் இணைப்பு வயர்களை மாட்டிக்கொண்டும், செல்போனில் பேசிக்கொண்டும், ஹெல்மெட்டுக்குள் செல்போன் பொறுத்தியபடியும், புளூடூத் வசதிகளுடைய நான்கு சக்கர வாகனங்களில் செல்போனில் பேசிய படியும் வாகனங்களை இயக்குவது தற்போது சாதாரண ஒன்றாகிவிட்டது. பெற்றோர் உள்ளிட்ட பெரியவர்வர்கள் வாகனம் இயக்கும் போது அவ்வாறு செய்வதால், எவ்விதமான குற்ற எண்ணமும், சங்கடமும் இல்லாமல் அவர்களைப் பார்த்து இளைஞர்/ இளைஞிகளும் அவ்விதமே பின்பற்றி வருகின்றனர்.

சாலைகளில் செல்லும் பாதசாரிகளும், சாலையைக் கடக்கும் போது, வாகனங்களைக் கவனிக்காமல் செல்போனில் பேசியபடியே செல்பவர்களின் எண்ணிக்கையும் வயது வேறுபாடு இல்லாமல் அதிகரித்து வருகிறது.

இவ்வாறான சாலை விபத்துகளுக்கு, வாகனம் இயக்கும்போது செல்போன் உபயோகிப்பது தொடர்பாக நடப்பில் இருக்கும் சட்டப் பிரிவுகளை அமலாக்குவது அல்லது புதிய விதிகளை கொண்டுவருவது மட்டுமே தீர்வாக இருக்க முடியாது. இன்று ஆறாம் விரலாய் மாறிப்போன செல்போன் மனித சமூகத்திற்கு தவிர்க்க முடியாத ஒரு சாதனமாக மாறிவிட்டது. ஆனால், சாலைகளில் செல்லும் போது அதனைக் கவனக்குறைவாக பயன்படுத்தி, நமது மற்றும் சாலையில் செல்லும் மூன்றாம் நபர்களின் உயிர்களைப் பறிக்கும் ஒரு கருவியாக மாற்றாமல் இருப்பது செல்போன் பயன்படுத்தும் ஒவ்வொரு தனிநபர்களின் கைகளில்தான் உள்ளது.

- ராபர்ட்

Pin It