தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக் குழுவும், மதுரை "சோக்கோ' அறக்கட்டளையும் இணைந்து, 18.7.2009 அன்று மாநில அளவிலான கருத்துக் கேட்பு நிகழ்வை நடத்தியது. இது "தலித்துகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் ஏழைகளுக்கான சட்ட உதவி' என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வின் ஓர் அமர்வு "தலித்துகளுக்கான சட்ட உதவி' என்ற தலைப்பில் அமைந்தது. இந்த அமர்வை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. தனபாலன் தலைமையேற்று நடத்தினார். கருத்துரையாளர்களாக வழக்குரைஞர் பொ. ரத்தினமும், சு.சத்தியச்சந்திரனும் பங்கேற்றனர். அந்த அமர்வில் சு. சத்தியச்சந்திரன் அளித்த கருத்துரையின் தமிழாக்கமே இக்கட்டுரை.

சமூகத்தில் நலிவுற்ற மக்கள் சமமான நீதி பெறுவதை உறுதி செய்யும் வகையில் "சட்ட உதவி' என்ற கொள்கையை, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நான்காவது பகுதியாக அமைந்துள்ள "அரசு வழிகாட்டு நெறிகள்' தலைப்பின் கீழ் பிரிவு 39 சேர்க்கப்பட்டது என்பதை நாம் அறிவோம். அரசமைப்புச் சட்டத்தின் பகுதி நான்கின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகள், நீதிமன்றத்தை அணுகி நிறைவேற்றிக் கொள்ளக் கூடியவை அல்ல. இருப்பினும். 1990 ஆண்டில் இந்தியத் தலைமை நீதிமன்றம் கிஷோர்-எதிர்-இமாச்சலப் பிரதேச அரசு (AIR 1990 SC 2140) என்ற வழக்கில், “சட்ட உதவி என்பது அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 21இன் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மற்றும் நீதிமன்றத்தை அணுகி நிறைவேற்றிக் கொள்ளத்தக்க ஒன்றாகக் கருதப்பட வேண்டும்'' என்று கூறியது.

சுக்தாஸ்-எதிர்-அருணாசல யூனியன் பிரதேசம் (AIR 1990 SC 2140) என்ற வழக்கில், “சட்ட உதவி என்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை போன்று கருதப்பட வேண்டும்'' என உச்சநீதிமன்றம் பொருள் விளக்கம் அளித்தது. மேலும், அதிக பட்ச தண்டனைகளான ஆயுள் மற்றும் மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச்சாட்டுகள் ஒரு நபர் மீது சுமத்தப்பட்டிருந்து, அந்த நபர் தன் தரப்பு வாதங்களை எடுத்துச் சொல்வதற்கு ஒரு வழக்குரைஞரை தனது ஏழ்மை காரணமாக நியமிக்க முடியவில்லையெனில், அவருக்கு சட்ட உதவியினைக் கட்டாயம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அத்தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், நமது அன்றாட நடைமுறையில் சட்ட உதவி என்ற உரிமைக்கு நாம் உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை. அதன் காரணமாக சட்ட உதவி என்ற உரிமையானது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 39 A ஆக சேர்க்கப்பட்டு, சுமார் 33 ஆண்டுகளுக்குப் பின்பும் இந்தியாவில் மற்றொரு சட்டப்புனைவாகவே (Legal Fiction) நடைமுறையில் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் சட்ட உதவிக்கான இயக்கம் : இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சட்ட உதவிக்கு வகை செய்கின்ற பிரிவு 39அ சேர்க்கப்படுவதற்கு முன்னரே தமிழகத்தில் நாம் பெருமை கொள்ளும் வகையில், சட்டஉதவிக்கான இயக்கம் ஒரு முன்னோடி இயக்கமாக உருவானது. 19.11.1976 அன்று "தமிழ்நாடு சட்ட உதவி மற்றும் ஆலோசனைக் கழகம்' தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

மேலும், இது சுதந்திர இந்தியாவின் தலைசிறந்த நீதிபதிகளில் ஒருவரான திரு. வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களால் கருத்தாக்கம் செய்யப்பட்டு, சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. வி.ஆர். கிருஷ்ணய்யரின் முழு முயற்சியாலும், தீவிர ஈடுபாட்டாலும் தமிழ் நாடு சட்ட உதவி மற்றும் ஆலோசனைக் கழகத்திற்கான குறிக்கோள்களும், நோக்கங்களும் மிகுந்த கவனத்துடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் வடிவமைக்கப்பட்டன. ஏழைகளுக்கும், தகுதியானவர்களுக்கும் சட்ட உதவி வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக, பல்வேறு சட்டங்களின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடிமையியல் உரிமைகள் (Civil Rights) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்கள் தொடர்புடைய சட்டங்கள் குறித்து கருத்துப் பரவல் நிகழ்த்த ஏற்பாடு செய்தல், குறிப்பாக, விவசாய சீர்திருத்தங்கள், குறைந்தபட்சக் கூலி, தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள், விவசாயிகள், கொத்தடிமைத் தொழிலாளர்கள், கடன்பட்டோர் ஆகியோரின் நலனில் சிறப்புக்கவனம் செலுத்துதல்; அவர்களுக்குத் தேவைப்படும் நேரங்களில் சட்ட உதவிகள் வழங்குதல்; அறிவார்ந்த வழக்குரைஞர்கள், சட்ட மாணவர்கள் கொண்ட தன்னார்வ அமைப்புகளுக்கு நிதியுதவி செய்து, சமூகத்தின் நலிந்த பிரிவு மக்களுக்கு சட்ட உதவிகள் வழங்க ஊக்குவித்தல்; சட்டங்கள் மற்றும் நடைமுறைச் சட்டங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டு, சட்டம் தொடர்பான அறிவினைப் பரப்புதல் போன்றவை அவற்றில் ஒரு சில (தமிழ் நாடு சட்ட உதவி மற்றும் ஆலோசனைக் கழகத்தின் துணை விதி-3).

2. மேற்சொல்லப்பட்ட செய்திகளைப் பார்க்கும்போது, சமூகத்தில் பின்தங்கிய மக்கள் மீதான முழுமையான வலியுறுத்தல் இவற்றில் உள்ளதைக் காணலாம்.

3. சட்ட உதவி வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட தமிழ் நாடு சட்ட உதவி மற்றும் ஆலோசனைக் கழகம் இருந்த காலகட்டத்தில், அதன் குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்கள் ஆகியவற்றில் உண்மையான அக்கறை கொண்ட சட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் உறுப்பினராவதற்கு ஊக்கப்படுத்தப்பட்டதால், எங்களைப் போன்ற பலர் பதிவு செய்யப்பட்ட சங்கமான அக்கழகத்தில் உரிய சந்தா செலுத்தி ஆயுட்கால உறுப்பினர்களானோம்.

4. இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 39 A சேர்க்கப்பட்டது, தமிழகத்தில் தமிழ் நாடு சட்ட உதவி மற்றும் ஆலோசனைக் கழகத்தின் சட்ட உதவிக் கொள்கைக்கும் இயக்கத்திற்கும் தூண்டுதலாக அமைந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த அலுவலராகப் பணிபுரிந்து வந்த திரு. மீ. ராஜா, அக்கழகத்தின் செயலாளராக பின்னர் நியமிக்கப்பட்டார். அவர் தமிழகத்தில் சட்ட உதவி இயக்கத்தின் மறுபெயரானார். அவருடைய பணிக்காலத்தில் அக்கழகத்தின் குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்களுக்கு முழு அளவில் செயல்வடிவம் கொடுக்கப்பட்டது. அக்கழகத்தின் வழக்குரைஞர் குழுவில் இருந்த வழக்குரைஞர்களை பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்துவது என்பது மட்டுமின்றி, சமூகத்தின் பின்தங்கிய மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தகவல்களை சேகரித்து, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சட்ட நடவடிக்கைகளில் உதவிடவும் ஊக்குவித்தார். அதனால், அக்கழகமே மனுதாரராக இருந்து பல பொது நல வழக்குகளை சமூகத்தின் பின்தங்கிய மக்களுக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தது. கொத்தடிமைத் தொழிலாளர்களை விடுவித்தல், சிறை மற்றும் காவல் பாதுகாப்பு ஆகியவற்றில் நடைபெற்ற வன்முறைகளில் பாதிக்கப்பட்டோருக்கு நீதியைப் பெறுவதற்கு உதவியதும் அவற்றில் ஒரு சிலவாகும்.

5. மோட்டார் வாகன விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகள், வழக்கு நடத்திய வழக்குரைஞரின் பெயரிலேயே வழங்கப்பட்டு வந்தன. இது, மோசடிகள் நடைபெறத் தூண்டும் வகையில் அமைந்திருந்தது. தமிழ் நாடு சட்ட உதவி மற்றும் ஆலோசனைக் கழகத்தின் முயற்சியால், இழப்பீட்டுத் தொகை காசோலை மூலம் பாதிக்கப்பட்டவர்களின் பெயரிலேயே வழங்கப்பட்டது. இந்த ஒரு தனி முயற்சி எண்ணிலடங்காத பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப் பெரிய பலன் அளிப்பதாக இன்றளவும் அமைந்துள்ளது.

6. அக்கழகத்தின் செயலாளராக செயல்பட்டு வந்த திரு. ராஜா, தொடர்ச்சியாக தனக்குக் கீழ் அமைந்திருந்த மாவட்ட மற்றும் வட்ட அளவிலான சட்ட உதவி மய்யங்களுக்கு கடிதங்கள், சுற்றறிக்கைகள் அனுப்பி, அவற்றில் நலிவடைந்துள்ள மக்களின் நலன்கள் தொடர்பான புதிய சட்டம் அல்லது தீர்ப்பு ஆகியவை குறித்து அம்மய்யங்களின் கவனத்திற்கு கொணர்வதுடன்-அவ்வகையிலான சட்டம் அல்லது தீர்ப்பை பின்தங்கிய மக்களுக்கு பலனளிக்கும் வகையில்-எவ்விதம் நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பான வழிகாட்டுதல்களையும் நடவடிக்கைகளையும் தெளிவுபடுத்தினார். அத்தகைய சுற்றறிக்கைகளையும், கடிதங்களையும் மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் மிகுந்த கவனத்துடனும் அவர் வடித்தார்.

7. சமூகத்தில் நலிவடைந்த மக்களுக்கு பயன்படத்தக்க சட்டங்களை, தமிழ் நாடு சட்ட உதவி மற்றும் ஆலோசனைக் கழகம் அவ்வப்போது வெளியீடுகளாகக் கொணர்ந்தது. பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், பிறப்பைப் பதிவு செய்தல், பட்டா பெறுதல் போன்ற விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ள அரசின் அரசாணைகள், நடைமுறை விதிகளைத் தொகுத்து புத்தகமாக அக்கழகம் வெளியிட்டது.

8. தலித் மக்களுக்கான சட்ட உதவி உரிமை என்ற வகையில் பார்க்கும்போது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) விதிகள் 1995, அய் இந்திய அரசு அரசிதழில் வெளியிட்ட உடனே அக்கழகம் அதை சிறிய புத்தகமாக வெளியிட்டது. இந்த துணிச்சலான முயற்சியை அரசோ அல்லது எந்த ஒரு தனியார் வெளியீட்டு நிறுவனமோ செய்வதற்கு முன்பே அக்கழகம் வெளியிட்டது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். நாட்டில் தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமைகள் அதிகரிக்கத் தொடங்கிய அக்காலகட்டத்தில் அந்த வெளியீடு, தலித் உரிமைகள் குறித்த ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

9. பொது மக்கள் சட்ட உதவிகளை கேட்டு அணுகும்போது, அவர்கள் விரும்பும், அவர்கள் பிரச்சனை தொடர்பான சட்டத்துறையில் அனுபவம் வாய்ந்த வழக்குரைஞரை தேர்வு செய்து கொள்ள, தமிழ்நாடு சட்டஉதவி மற்றும் ஆலோசனைக் கழகம் வாய்ப்பளித்தது. இந்தக் குழுவின் வழக்குரைஞர் (கஞுணச்டூ Penal Advocate) என்ற முறையில் சமூகத்தில் மிகவும் அடித்தளத்தில் உள்ள அதிக அளவிலான ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் தலித் மக்களுக்கு சட்ட உதவிகளை நானும் வழங்கி இருக்கிறேன்.

அவற்றில், ஒரு வழக்கில் 1999இல் காவல் நிலையத்தில் மரணம் அடைந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அண்மையில், (நவம்பர் 2008) இழப்பீடாக அய்ந்து லட்சம் ரூபாய் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வழக்கின் தீர்ப்பில் நீதிபதி கே. சந்துரு, “சட்ட உதவிக் கழகம் இந்த வழக்கை பொது நலனில் அக்கறை உள்ள வழக்குரைஞரிடம் ஒப்படைத்துள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார். இது, அக்கழகம் அவ்வகை வழக்குகளில் எவ்வாறு சிறப்புக் கவனம் கொண்டது என்பதைக் குறிப்பதாகவே உள்ளது.

10. இவை மட்டுமின்றி, மனித உரிமைகள் மீறப்படுவதால் பாதிக்கப்படும் மக்கள் தங்களுக்கு உரிய நிவாரணத்தைப் பெறும் வகையில், அக்கழகத்தின் பட்டியலில் இருந்த வழக்குரைஞர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களைத் தேடிச் சென்று அவர்கள் குறைகளுக்கு நிவாரணம் பெற உதவி புரிவதை அக்கழகம் ஊக்குவித்தது. இதுபோன்ற நேர்வுகளில், குறிப்பிட்ட வழக்குரைஞர் சட்ட உதவிக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டவர் என்பதை தெளிவுபடுத்தும் வகையில், சான்றளிக்கப்பட்ட மற்றும் ஏற்பளிப்புக் கடிதங்கள் குழுவில் இருந்த வழக்குரைஞர்களுக்கு வழங்கப்பட்டன. தொடர்புடைய வழக்கின் ஆவணங்களை பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாகப் பெறுவதில் இத்தகைய கடிதங்கள் பெரிதும் உதவியாக அமைந்தன. தகவல் உரிமைச் சட்டம் போன்ற சட்டங்கள் இல்லாத அக்காலகட்டத்தில் இதுபோன்ற கடிதங்கள் வழக்குகளுக்காக ஆவணங்களைப் பெறுவதில் மிகவும் உதவியாக அமைந்தன.

சட்டப்பணிகள் ஆணைக் குழு சட்டத்தின் வருகைக்குப் பின்பு : 1. சட்டப்பணிகள் ஆணைக் குழுக்கள் சட்டம் (Legal Services Authority Act) நாடாளுமன்றத்தில் 1987இல் சட்டமாக இயற்றப்பட்டது. இருப்பினும், பரவலான அறிவுரைகளையும் கருத்துக்களையும் கேட்டறிந்த பின்பு 9.11.1995 அன்றுதான் அச்சட்டத்தின் மூன்றாம் பகுதி (மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு தொடர்பானவை) தவிர மற்ற சட்டப் பிரிவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. 6.3.1997 அன்று மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு தொடர்பான சட்டப்பிரிவுகள் நடைமுறைக்கு கொணரப்பட்டன.

2. இச்சட்டத்தின் நோக்கமாக, “பொருளாதார அல்லது பிற இயலாமையின் காரணமாக எந்த ஒரு குடிமகனுக்கும் நீதியை பெறும் வாய்ப்பு மறுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்து, சமூகத்தின் நலிவடைந்த பிரிவு மக்களுக்கு இலவச மற்றும் தரமான சட்டப்பணிகள் வழங்கிட சட்டப்பணிகள் அமைப்புகளை உருவாக்கவும், நீதி பெறுவதற்கான சமவாய்ப்பு என்பதன் அடிப்படையில் சட்ட அமைப்பின் செயல்பாட்டை உறுதி செய்ய மக்கள் நீதிமன்றங்களை ஒழுங்குபடுத்தவும்'' என்று அதன் முகவுரையில் கூறப்பட்டுள்ளது.

3. இச்சட்டத்தின் பிரிவு 4இன் கீழ் சில பாராட்டத்தக்க நோக்கங்கள் இச்சட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட, மத்திய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயல்பாடுகள் என்று தலைப்பில் முன்வைக்கப்பட்டாலும் கூட-மாநில, மாவட்ட மற்றும் வட்ட அளவிலான சட்டப் பணிகள் ஆணைக் குழுக்களுக்கு இந்த அடுக்கமைவு முறையில் (hierarchy) அச்செயல்பாடுகள் பொருந்தத்தக்கவை என்ற போதிலும் சட்ட உதவி என்ற கொள்கை, அதன் சாரத்தில் இப்புதிய அமைப்பில் நமக்கு மிகுந்த ஏமாற்றமளிப்பதாகவே அமைந்துள்ளது.

4. ஏற்கனவே எண்ணற்ற வேலைகளையும் பொறுப்புகளையும் நீதிபதிகள் நிறைவேற்றி வரும் சூழலில் சட்ட உதவிகள் இயக்கத்தை கொண்டு செல்வதில் ஏற்படும் சவால்களை சமாளிப்பது அவர்களுக்கு கடினமான பணியாக உள்ளது. இதன் காரணமாக, சட்ட உதவிகள் இயக்கமானது மெதுவாகவும், படிப்படியாகவும், பல்வேறு நீதிமன்றங்களின் முன்பு நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்த்து முடிப்பதற்கான மக்கள் நீதிமன்றங்களாக (Lok Adalats) மாற்றமடைந்துள்ளன.

5. அதிக அளவிலான எண்ணிக்கையில் வழக்குகள் தொடரப்படுவதால், நீதித்துறையின் முதுகில் மலைபோல் குவிந்து கிடக்கும் வழக்குகளைக் குறைக்கவும், ஏற்கனவே நிலுவையிலுள்ள வழக்குகளைக் குறைக்க இசைவுத் தீர்ப்பாய முறை கண்டுபிடிக்கப்பட்டதாலும், 2002ஆம் ஆண்டில் சட்டப் பணிகள் ஆணைக் குழுக்கள் சட்டத்தில் பகுதி V-A சேர்க்கப்பட்டு, பிரிவு 22-B இன்படி நீதிமன்றத்தில் வழக்கிடுவதற்கு முன்பே சமரசம் மூலம் தீர்த்துக் கொள்வதற்கான நிரந்தர மக்கள் நீதிமன்றங்களை (Permanent Lok Adalats) ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டது. இதனால் சட்ட உதவிகள் இயக்கமானது, வெறுமனே வழக்குகளை முடிக்கும் ஒரு எந்திர அமைப்புச் சாதனமாக (Case Disposal Mechanism) மக்கள் நீதிமன்றம் என்ற பெயரில் உயர் நீதிமன்ற அளவிலும் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. சட்டப் பணிகள் ஆணைக்குழு சட்டத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள குறிக்கோள்கள் கைவிடப்பட்டன.

6. இதன்பிறகு, சட்டப்பணிகள் ஆணைக் குழுக்கள் பார்வையை பின்னோக்கி செலுத்தவில்லை. அவை மூன்று முக்கிய செயல்பாடுகளை செய்யத் தொடங்கின. அவை: 1. மக்கள் நீதிமன்றங்களை நடத்துதல் 2. பெரிய மக்கள் நீதிமன்றங்களை நடத்துதல் 3. கேளிக்கை, கொண்டாட்ட நிகழ்ச்சிகளைப் போல் மக்கள் நீதிமன்றங்களை நடத்துதல். சட்டப் பணி குழுக்கள், சட்டம் எதிர்நோக்கிய சட்டப் பணிகள் வழங்குவது என்ற கோட்பாடு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

7. அன்றாட நீதிமன்றப் பணிகளில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முடிக்க வேண்டும் என்ற பணியழுத்தம் காரணமாக, மக்கள் நீதிமன்றத்திற்கு வழக்குகள் மாற்றப்படுகின்றன. உயர் நீதிமன்ற அளவிலும் மக்கள் நீதிமன்றங்கள் படோபடமாக நிகழ்த்தப்படுகின்றன.

8. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தின் நிறைவின்போது பேசிய நீதிபதி திரு. பி.டி. தினகரன் பின்வருமாறு கூறினார் : “ஒரு வழக்காடி (Litigantt) அளித்த புகார் 3 மணி நேரத்திற்குள் வழக்காகப் பதிவு செய்யப்பட்டது மக்கள் நீதிமன்றத்தின் வெற்றி'' என்று குறிப்பிட்டார்.

9. குற்ற நிகழ்வு தொடர்பான புகார்களை காவல் துறையினர் குற்ற வழக்குகளாகப் பதிவு செய்வதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 482 இன் கீழ் உயர் நீதிமன்றத்தின் உள்ளியல் அதிகாரத்தை (Inherent Power) பயன்படுத்தக்கோரி, ஒவ்வொரு வேலை நாளிலும் சுமார் 20 வழக்குகள் குற்றவியல் அசல் மனுக்களாகத் தாக்கல் செய்யப்படுகின்ற சூழலில் தான் மேற்கூறியவாறு நிகழ்ந்தது. இன்றுவரை இந்த எண்ணிக்கை குறையவே இல்லை, கூடியபடியே உள்ளது.

10. சுனாமி பேரழிவுக்குப் பிறகு, உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ள நானும் மற்றும் சில வழக்குரைஞர்களும் பழவேற்காடு (திருவள்ளூர் மாவட்டம்), பட்டினப்பாக்கம் (சென்னை) மற்றும் கல்பாக்கம் (காஞ்சிபுரம்) ஆகிய பகுதிகளில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகள் செய்ய ஒரு குழுவாக முன் வந்தோம். இதற்காக, அரசு மற்றும் பிற அலுவலர்களை அணுகி உரிய உதவிகளை சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாகச் செய்ய ஏற்பளிப்புக் கடிதம் (Accredition Letter) வழங்கக் கோரி தமிழக மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவிற்கு வேண்டுகோள் விடுத்தோம். அப்போது மாவட்ட நீதிபதி தகுதியில் அவ்வாணைக் குழுவிற்கு உறுப்பினர்-செயலாளராக நீதிபதி திரு. எம். ஜெயபால் இருந்தார். எங்களிடம் எவ்விதத் தெளிவையும் கோராமலேயே, கல்பாக்கம், செங்கல்பட்டு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அதிகார வரம்பிற்குள் வருவதால், நாங்கள் நம்பிக்கைக்குரிய நபர்கள்தானா என்பதை பரிசோதித்து, அதன்பின்பு தேவைப்பட்டால் அவ்வாறான கடிதத்தை அம்மாவட்ட ஆணைக்குழு வழங்கும் என்று கூறி, எங்கள் கோரிக்கையை நிராகரித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணிபுரிந்து வருபவர்களான எங்களின் நம்பகத் தன்மையை, செங்கல்பட்டு சட்டப் பணிகள் ஆணைக்குழு எவ்வாறு பரிசீலிக்க முடியும் என்பது குறித்து நாங்கள் வியப்புற்றோம். இத்தகைய அணுகுமுறை குறித்து எந்தக் கருத்தும் சொல்லாமலிருப்பதே நல்லது.

11. மக்கள் நீதிமன்றங்கள் மற்றும் நிரந்தர மக்கள் நீதிமன்றங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளால் பயனடைபவர்கள், வணிக நிறுவனங்களும், வசதி கொண்டோரும், வழக்குரைஞர்களும் நீதிபதிகளும் மட்டுமே. தீர்க்கப்படவேண்டிய நியாயமான குறைகளுடன் வழக்கினை கொண்டு செல்பவர் தனது எதிர்பார்ப்பினை வெளியிட முடியாமல் ஊமையாக்கப்படுகிறார்.