இயற்கை வழிக்குத் திரும்பு - Back to nature, கிராமத்திற்குப் போ – Back to Village, குடிசைத் தொழிலை ஆதரி – Support village industries என்கிற பல்லவிகளை தேச பக்தர்களில் பலர் இப்போது பாடி வருகிறார்கள். பி.ஏ., எம்.ஏ. பட்டதாரிகளுக்கெல்லாம் கிராமத்துக்குப் போய் எளிய வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளும்படி உபதேசம் செய்யப்படுகிறது. 
 
படித்தவர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதற்கும் பாமரரின் தரித்திரத்தைப் போக்குவதற்கும் எல்லோரும் கிராமத்துக்குப் போய் எளிய வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதுதான் சிறந்த மார்க்கம் என்று சொல்லப்பட்டு வருகிறது. கிராமப் புனருத்தராணஞ் செய்வதற்காக தோழர் காந்தியார் அகில இந்திய கிராமக் கைத்தொழிற் சங்கம் என்பதாக ஒரு சங்கத்தைத் தோற்றுவித்திருக்கிறார். கவர்ன்மெண்டாரும் இந்த வேலையைச் செய்வதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி வைத்திருக்கின்றனர்.
 
ஆனால் நாம் இந்த சந்தர்ப்பத்தில் இயற்கை வழிக்குத் திரும்புவதும் கிராமத்திற்குப் போவதும் எளிய வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதும் நாட்டு மக்களுக்கு நலந்தரக் கூடிய காரியங்களா? நடக்கக் கூடிய காரியங்களா? கிராமத்திலா நமது கதி மோட்சம்? என்கிற விஷயங்களைச் சிறிது ஆராய்ந்து பார்ப்போம்.
 
கிராமந்தோறும் மின்சார சக்திகளையும் ரேடியோ நிலையங்களையும் நாடு முழுதும் ஆகாய விமானப் போக்குவரத்து மார்க்கங்களையும் ஏற்படுத்த முயற்சிக்கும் "சாத்தான்' அரசாங்கத்தின் கிராம புனருத்தாரண நோக்கத்திற்கும், முறைக்கும் ஒவ்வொருவனும் அவனவனுக்கு வேண்டிய உணவையும் உடையையும் அவனவனே தயார் செய்து கொள்ள வேண்டும் என்கிற "மகாத்மா' காந்தியாரின் கிராமப்புனருத்தாரண நோக்கத்திற்கும் முறைக்கும் யாதொரு சம்பந்தமும் இருக்க முடியாது. இருவர் கொள்கைகளுக்கும் அடிப்படைத் தத்துவங்களிலேயே மலைக்கும் மடுவுக்கும் உள்ளது போன்ற வித்தியாசங்கள் இருக்கின்றன. 
 
அரசாங்கத்தின் கிராமப் புனருத்தாரண வேலையைப் பற்றி நாம் கவனிக்கத் தேவையில்லை. நாம் விரும்பினாலும் வெறுத்தாலும் இன்றைய நிலையில், அரசாங்கம் இது விஷயத்தில் நம் அபிப்ராயத்தை மதிக்கப் போவதில்லை. ஆகையால் இங்கே நாம் ஆராய எடுத்துக்கொண்டது தேசபக்தர் என்பவர்களின் (காந்தியாரின்) கிராமப் புனருத்தாரண கிராம சேவையைப் பற்றியேயாகும். காந்தியாரின் கொள்கைப்படி பட்டண வாசமும் நாகரிக வாழ்க்கையும் இயற்கைக்கு விரோதமானவை; மனிதனுக்கு கெடுதி செய்பவை; கிராம வாசமும் எளிய வாழ்க்கையும் இயற்கையோடு ஒன்றுபட்டவை; மனிதனுக்கு நன்மை செய்பவை; ஆகையால் எல்லோரும் கிராமங்களுக்குப் போனால் ஷேமம் அடையலாம் என்பது கருத்தாகும். கிராமவாசம் பட்டினவாசம் இரண்டில் எது சிறந்தது என்பதைக் கவனிப்பதற்கு முன் கிராம வாழ்க்கையின் மேன்மைக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படும் அதன் தத்துவப் பீடமான இயற்கை வாழ்க்கையைப் பற்றி முதலில் ஆராய்வோம்.
 
இயற்கை வாழ்க்கை, இயற்கை வழி, இயற்கைச் சக்தி, இயற்கைச் சட்டம் என்று தாராளமாய்ச் சொல்லப்படும் போது, இயற்கை என்ற வார்த்தையின் தெளிவான அர்த்தம் என்ன என்பது கவனிக்கப்படுவதில்லை. ஆனால், அதன் அர்த்தத்தைத் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்த வேண்டியது இயற்கை வாழ்க்கையைப் பற்றிய இந்த ஆராய்ச்சிக்கு மிகவும் அவசியமாகும். “இயற்கையைப் பின்பற்றி வாழ்க்கை நடத்து'' என்று சொல்லும்போது சாதாரணமாய்க் கவனிக்கப்படாத அர்த்தத்தை முதலில் கவனிப்போம்.
 
ஒரு பொருளின் தோற்றம், குணம் அல்லது சக்தி, செய்கை ஆகியவை எல்லாம் சேர்ந்த அதன் முழுத்தன்மையை அப்பொருளின் இயற்கையென்று பொதுப்படச் சொல்லலாம். தீயின் இயற்கை சுடுதல், எரிதல், புகைதல், ஒளிவிடுதல் முதலியன. நீரின் இயற்கை பள்ளம் நோக்கிப் பாய்தல், தன் சமநிலைக்குப் பரவுதல் முதலியன. இம்மாதிரியே எல்லாப் பொருள்களுக்கும் அவைகளுக்குள்ள சக்திகளின் (மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்படாததும்) தொகுதியை அப்பொருள்களின் இயற்கை எனலாம். ஒவ்வொரு பொருளுக்கும் வேறு வேறான இயற்கை இருப்பினும், அவ்வப்பொருளின் இயற்கையானது கால தேச வேறுபாட்டால் மாறுபாடடையாமல், எவ்விடத்தும் எக்காலத்தும் ஒரே தன்மைத்தாய் இருக்கிறது. பொருள்களுக்குள்ள இயற்கைச் சக்திகள் வெளிப்பட்டு இயங்கும் முறையை அதனதன் சுபாவத்தை இயற்கை விதி அல்லது சட்டம் என்று சொல்லலாம். சூடு விரியச் செய்கிறது. குளிர் இறுகச் செய்கிறது. இதுபோன்ற இயற்கை விதிகளும் காலதேச வேறுபாட்டால் மாறுபாடடையாமல், எங்கும் எப்போதும் ஒரே மாதிரி நிகழக் கூடியவை.
 
– தொடரும்
 
"பகுத்தறிவு' மாத இதழ், மே 1936
Pin It