periyar 450 copy copyதானாக, மனித சம்பந்தமில்லாமல் இயங்குகின்ற நிலைமையில் இயற்கை என்பது மனிதனால் பின்பற்றுவதற்கு தகாதது, யோக்கியதையற்றது. மனிதனால் அடக்கப்பட்டு மாற்றிக் கொள்ளப்படவே தகுதியுள்ளது என்று இதுவரை கூறியவற்றால் ஏற்படுகிறது. முதலில் எடுத்துக்கொண்ட விரிந்த அர்த்தத்தில் இயற்கையைப் பின்பற்றுவது அர்த்தமற்றது என்பதை மேலே விளக்கிக் காட்டினோம்.

மனிதன் இயற்கைப் பொருள்களையேயன்றி தன்னுடைய இயற்கை இச்சைகளையும் உணர்ச்சிகளையும் கூட பின்பற்றக்கூடாது, அவற்றைத் தன் அறிவைக் கொண்டு அடக்க வேண்டுமென்றும், அறிவு கற்பிக்கும் நெறியே, ஞான நெறியே பின்பற்றத் தகுதி வாய்ந்தது என்றும் கண்டோம். இனி, இயற்கை வழியிலிருந்தும் அதிகம் மாறுபடாத கிராம வாழ்க்கைக்குப் போய் எளிய வாழ்க்கையை ஏற்றுக் கொள்வது நலம் தரும் என்று சொல்வதைக் கவனிப்போம்.

உடம்பெல்லாம் வாயாகவும், வயிறெல்லாம் பல்லாகவும் அமைந்து, உண்பதும் உறங்குவதும் தவிர்த்து வேறு தொழிலையறியாத ஓரறிவு, ஈரறிவுப் பிராணிகள் கூட தனித்து வாழ்வதில்லை.

தன் இனத்துடன் சேர்ந்து கும்பலாகவே வாழ்கின்றன. மூன்றறிவு, நான்கறிவு, அய்ந்தறிவுகளையுடைய மிருகங்கள், பறவைகள் முதலான பிராணிகளும் தனித்து வாழ்வதில்லை; கூட்டு வாழ்க்கையையே விரும்பி நடத்துகின்றன.

மனிதரிலும் தலை சிறுத்து, உடல் பெருத்துப் புலன் உணர்ச்சியின்றிப் போதிய உணர்வில்லாத அஞ்ஞானச் செல்வங்கள் கூட தனித்து வாழப் பிரியப்படுவதில்லை. அறிவுள்ள மனிதனோ என்றும் தன் இனத்தின் கூட்டுறவையும் சங்க வாழ்க்கையையுமே விரும்புகிறான்."இனிது இனிது ஏகாந்தம் இனிது' என்ற அபிப்பிராயத்தை நாம் ஒப்புக்கொள்ள முடியவில்லை.அன்பின் வழியது உயிர் நிலையாகையால் மனிதன் எப்பொழுதும் பிறர்க்கு அன்பு காட்டவும் பிறர் அன்பைப் பெறவும் ஆசைப்படுகிறான்.

பிராணிகள் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாது வேண்டியவை 1. காற்று 2.தண்ணீர் 3. சாப்பாடு. இவற்றுள் காற்றில்லாமல் சில நிமிஷங்கள் கூட வாழ முடியாது. தண்ணீரில்லாமல் சில நாட்களுக்கு மேல் உயிரோடிருக்க முடியாது. இவ்விரண்டின் இன்றியமையாத் தன்மைக்குத் தக்கபடி, இவ்விரண்டு பொருட்களும் (காற்றும் நீரும்) எல்லாருக்கும் எளிதில் கிடைக்கக் கூடிய விதத்தில், யாவர்க்கும் பொது உடைமையாய், எந்தப் பலவானாலும் தன்னுடைய தனி உடைமையாக்கிக் கொள்ள முடியாத வகையில் உலகமெங்கும் இயற்கையாய் அமைந்துள்ளன. மூன்றாவதான, "உணவு' முதல் இரண்டைப் போலப் பொது உடைமையாயில்லாமல், மண்ணாசை கொண்ட மன்னராலும், பொன்னாசை கொண்ட மக்களாலும், ஆதியிலிருந்தே தனியுடைமையாக்கிக் கொள்ளப் பட்டிருக்கிறது.

உணவையும் பொது உடைமையாக்கி எல்லார்க்கும் எளிதில் கிடைக்கும்படி செய்யவேண்டுமென்பது, அன்பின் வழிவந்த அறிவாளர் ஒவ்வொருவரும் ஆதி காலந் தொட்டுக் கொண்டுள்ள ஆசை கண்டு வந்த கனா. "இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின், பரந்து கெடுக உலகியற்றியான்' என்று வள்ளுவர் கூறிப் போந்தார். "தனி ஒருவனுக்குணவில்லையெனில் ஜகத்தினை அழிப்போம்' என்றார் பாரதி. கனவை நனவாக்கி, உணவையும் பொதுவுடைமையாக்கிப் பசியையொழித்து, மக்களுக்குள் ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் பகையையும் ஒழித்து ருஷ்யாவை நாடாகச் செய்தார் லெனின்.

ஓரிடத்திலிருந்து உழுது பயிர் செய்து தனக்கு வேண்டிய உணவுப் பொருள்களை உண்டாக்கிக் கொள்ளத் தெரியாத காலத்தில் மனிதன் எதைத்தின்று எப்படி வாழ்ந்தான்? காடுகள் இருந்த இடங்களில் காய்கனிகளைத் தின்று மரப் பொந்துகளிலும் மலைக்குகைகளிலும் வாழ்ந்து வந்தான். காய்கனி கிடையாத போது, காட்டில் உள்ள மிருகங்களையும் பட்சிகளையும் வேட்டையாடிப் பிடித்துத் தின்றிருந்தான். இவைகளுக்காக காடு காடாக வனம் வனமாக அலைந்து திரிந்தான்.நீர் நிலைகளையடுத்துத் தங்கி வந்தான்.

இவையொன்றுங் கிடைக்காத இடங்களில் நரமாமிசப் பட்சிணியாகவும் இருந்தான். மிருகங்களைப் பிடித்துக் கொன்று தின்றவன், நாளடைவில் அம்மிருகங்களைப் பழக்கி வளர்த்து அவற்றைக் கொல்லாமல், அவற்றின் பொருள்களிலிருந்து உணவையும், உடையையும் பெற்றுக் கொள்ளத் தெரிந்தான். அக்காலத்தில் அவனுக்கு உணவையும், உடையையும் அளித்த மிருகங்களை வளர்க்க வேண்டி, மேய்ச்சல் காடுகளைத் தேடியலைந்து ஓரிடத்திலும் நிலைத்து வாழாமல் நாடோடி வாழ்க்கை நடத்தினான்.

(பகுத்தறிவு மாத இதழ், மே 1936)

Pin It