சென்னையிலிருந்து ரயிலில் வடக்கு நோக்கிச் செல்லும் வழியில் ஆந்திராவை கடக்கும்போது, சில ரயில் நிலையங்களில் கைநிறைய தடித்த வளையல்களுடனும், தனித்துவமான உடையுடனும், புரியாத மொழியில் பேசிச் செல்லும் லம்பாடிப் பெண்களைப் பலரும் கவனித்திருக்கலாம். "லம்பாடி உடுத்துவது போல் இருக்கிறது' என்று கேலி செய்வதைக் கேட்டிருக்கலாம். இந்த லம்பாடி இன மக்கள், தமிழ் நாட்டிலும் வாழ்கிறார்கள் என்பதே பலரும் அறியாத செய்தியாக இருக்கிறது.
மேட்டூரிலிருந்து மேற்கே சுமார் 24 கி.மீ. தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் கிராமம் "பெரிய தண்டா'. அங்கு பெரும்பான்மையாக லம்பாடி இன மக்களே வாழ்கின்றனர். "தண்டா' என்றால் லம்பாடி மொழியில் "ஊர்' என்று பொருள். பெரிய தண்டாவிற்கு அருகிலேயே இருக்கும் சின்ன தண்டா, ஊர் நாயக்கன் தண்டா உட்பட, அந்த மலைப்பகுதியில் மட்டும் 1000 லம்பாடி குடும்பங்கள் உள்ளன. தமிழ் நாட்டில் சுமார் இரண்டு லட்சம் லம்பாடி மக்கள் ஈரோடு, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையோரமாகவே வாழ்கின்றனர். வண்ணங்கள் நிறைந்த அவர்களின் வாழ்க்கை, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித வளர்ச்சியுமின்றி தேக்க நிலையிலேயே உள்ளது.
ஏறக்குறைய ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக அவர்கள் தமிழ் நாட்டிலேயே குடியேறி வாழ்ந்து வந்த போதும், அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகள் அவர்களைச் சென்றடையவில்லை. லம்பாடிகள், தமிழக அரசு ஆவணத்தில் பட்டியலினப் பழங்குடியினராக அங்கீகரிக்கப்படாமல் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வைக்கப்பட்டிருப்பதே இதற்கான முக்கிய காரணமாகும். அன்றாட வருமானத்திற்கான வழிகள் அதிகம் இல்லாத நிலையில், இவர்கள் அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளையே எதிர்நோக்கி இருக்கின்றனர்.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகத்தில், அவர்கள் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ளனர்; ஆந்திராவில் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். ஆனால், தமிழ் நாட்டில் 260 பிற்படுத்தப்பட்ட சாதியினரோடு, கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இவர்கள் போட்டியிட வேண்டியிருக்கிறது. இதுவரை தமிழ் நாட்டில் லம்பாடிகள் சமூகத்திலிருந்து படித்து அரசு வேலைக்குச் சென்றவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்த இனத்தில் பட்டப்படிப்பு படித்தவர்கள் மொத்தமே நான்கு பேர்தான். அதில் ஈரோடு மாவட்டம் குமராயனூரைச் சேர்ந்த ஒரு பெண், இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்து திருமணமாகி ஆந்திர மாநிலத்திற்குச் சென்று விட்டார். அங்கு இவர்கள் பழங்குடியினர் பட்டியலில் இருப்பதால், அவருக்கு ஆசிரியராக அரசுப் பணி கிடைத்திருக்கிறது.
இதைவிட விநோதம், பாப்பாத்தி என்பவர் குடும்பத்தில் நடந்ததுதான். அவரது தாய் வீடு கர்நாடகத்தில் உள்ளது; கணவர் வீடு தமிழகத்தில் உள்ளது. அவரது தலை மகன் தாய் வீடான கர்நாடகத்தில் பிறந்ததால், அவருக்கு தாழ்த்தப்பட்டோர் சான்றிதழை வழங்கியிருக்கின்றனர். அடுத்த மகன் இங்கு பிறந்ததால், அவர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளார்.
கர்நாடகத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவர், தமிழ் நாட்டில் செங்கம்பாடியைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். அவர்களின் மகன் ஜமீன் என்பவரை அங்கு படிக்க வைத்க வசதி இல்லாததால், தமிழ் நாட்டிலுள்ள தனது மாமியார் வீட்டில் படிக்க அனுப்பியுள்ளார். ஜமீன் பிறந்தது கர்நாடகத்தில். அவரது தந்தையின் பூர்வீகம் கர்நாடகம்தான். இருப்பினும், அவரது பாதுகாவலரான பாட்டி தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால், அவர் பாட்டியின் முகவரியின் அடிப்படையில் அவரது கர்நாடக பூர்வீகச் சான்றிதழ் செல்லாது என தமிழக அரசு அதிகாரிகள் சொல்லிவிட்டனர். இதனால் அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழே வழங்கப்பட்டுள்ளது.
இந்த குழப்பங்கள் ஒரு புறம் இருக்க, பெரிய தண்டா மற்றும் அதனைச் சுற்றியுள்ள தண்டாக்களுக்கு பொதுவாக ஒரே ஒரு தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. அதற்கு மேல் படிக்க வேண்டுமெனில், 5 கி.மீ. தொலைவில் உள்ள ராமகிருஷ்ணா குருகுலப் பள்ளியில்தான் படிக்க வேண்டும்; அல்லது 12 கி.மீ. தொலைவில் உள்ள கொளத்தூருக்குச் செல்ல வேண்டும். செலவு செய்து படிக்க வைத்தாலும் வேலைவாய்ப்பில் மற்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரோடு போட்டிப் போட முடியாது என்பதால், லம்பாடிகள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. ஆண்கள் அதிகபட்சமாக பத்தாவது முதல் பனிரெண்டாவது வரையும், பெண்கள் எட்டாவது முதல் பத்தாவது வரையும் மட்டுமே படிக்க வைக்கப்படுகின்றனர்.
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, பரந்து விரிந்து கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக் காட்டை நம்பியே அவர்கள் வாழ்க்கை இருந்தது. மொத்தமுள்ள 1000 குடும்பங்களில் 120 குடும்பங்களுக்கு மட்டுமே மிகக் குறைந்தளவு நிலம் இருக்கிறது. மலையில் விளையும் நெல்லிக்காய், கிளாப்பழம், எலந்தபழம், நாகப்பழம், தேன் போன்றவற்றை சேகரித்து அதை விற்று வரும் வருமானத்தில் அவர்கள் வாழ்ந்து வந்தனர். அதோடு வனக் குத்தகைக்காரர்களிடம் கூலிக்கு மரம் வெட்டவும், மூங்கில் வெட்டவும் அவர்கள் செல்வதுண்டு.
ஆனால், வீரப்பனைப் பிடிக்க வந்த அதிரடிப்படையினர், இந்த லம்பாடி மக்கள் உட்பட மலையை நம்பி வாழ்ந்த பழங்குடி மக்கள் யாரையும் காட்டிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. அதையும் மீறி வயிற்றுப் பிழைப்பிற்காக காட்டிற்குள் சென்றவர்கள், கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக வேண்டியிருந்தது. அதிரடிப்படையினரின் அட்டூழியங்களிலிருந்து லம்பாடி இன மக்களும் தப்பிக்க இயலவில்லை. அதிரடிப்படையினரால் அம்மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
பெரிய தண்டாவைச் சேர்ந்த முருகன், சுப்பன் ஆகிய அண்ணன் தம்பிகள் உட்பட ராஜா, கரியன், பத்தியான் என அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட லம்பாடி மக்கள் அனேகம் பேர். அதிலும் முருகன் 1992 ஆம் ஆண்டு, தனது 24 ஆவது வயதில் திருமணமான ஏழாவது நாளிலேயே விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அதைப் போலவே சுப்பன், அதிரடிப்படையினரால் அடித்தே கொல்லப்பட்டு, தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டார்.
வீரப்பன் கூட்டாளிகள் என மலைக் கிராம மக்கள் 127 பேர் மீது மைசூர் நீதிமன்றத்தில் போடப்பட்ட "தடா' வழக்கிலும் லம்பாடிகள் சிக்கிச் சீரழிந்தனர். எட்டு ஆண்டு காலம் சிறைக் கொடுமையை அனுபவித்த பின்னர், நீதிமன்றம் அவர்களைக் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்தது. கிட்டத்தட்ட பதினோரு ஆண்டுகளுக்கு முன் வீரப்பனுக்கு உதவி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், தமிழக அரசு தொடர்ந்த வழக்கிலும் லம்பாடி இனத்தைச் சேர்ந்தவர்களான ஊர் நாயக்கன் தண்டாவைச் சேர்ந்த மணி என்ற பெண்ணையும், அவரது கணவர் வண்டு சக்கரையானையும் சேர்த்து சிறையில் அடைத்து விட்டனர். அப்போது பனிரெண்டு வயது சிறுவனாக இருந்த அவரது ஒரே மகன், யாருமற்றவனாக தெருவில் அலைந்ததை மணி விவரிக்கும் போதே அவர்கள் பட்ட துயரத்தின் ஆழம் வெளிப்படுகிறது.
அதிரடிப்படையினரின் அத்துமீறலால், வீரப்பன் கொல்லப்பட்ட பிறகும் இன்னமும் காட்டிற்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் விவசாயக் கூலிகளாகவும், அரசு கட்டுமான வேலைகளில் கூலி வேலை செய்தும் வாழ வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. விவசாயக் கூலிகளாகச் சென்றவர்கள், நிலவுடைமையாளர்களான ஆதிக்கச் சாதி கவுண்டர்களால் கிட்டத்தட்ட அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். ஆடு, மாடு, கோழிகளை வளர்ப்பதும் லம்பாடி மக்களுக்கு வருமானத்திற்கான ஒரு வழியாக இருந்தது.
இப்படி சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கல்வி அடிப்படையிலும் அவர்கள் மிகவும் தாழ்வுற்ற நிலையில் இருந்தாலும், அரசு அவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலேயே இன்னமும் வைத்திருக்கிறது. இந்நிலையில் வளர்ச்சி என்பதே இச்சமூக மக்களுக்கு எட்டாத ஒன்றாக இருக்கிறது. தங்கள் பாரம்பரிய வாழ்க்கை முறையையும், தொழிலையும் இழந்து, பின்பு காட்டை நம்பி வாழ்ந்த வாழ்க்கையையும் இழந்து, மய்ய நீரோட்டத்தில் கலந்து முன்னேறவும் வழியில்லாத காரணத்தினாலேயே தமிழ் நாட்டு லம்பாடி மக்களின் வாழ்க்கை தேக்க நிலையிலேயே இருக்கிறது.
லம்பாடிகள் பழங்குடியினராக அங்கீகரிக்கப்பட்டு, சாதிச் சான்று வழங்கப்படாததால், பழங்குடியினருக்கான சிறப்புக்கூறு திட்டத்தின் அடிப்படையிலான பயன் எதுவும் அம்மக்களைச் சென்றடையவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மத்திய வரவு செலவு திட்டத்தில் பழங்குடியினருக்கென கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. பழங்குடியினருக்காக ஒதுக்கப்படும் திட்டப் பயன்கள் அம்மக்களுக்கு முறையாக சென்றடைவதில்லை என்ற புகார் ஒரு பக்கம் இருந்தாலும், பழங்குடியினராக இருந்தும் அங்கீகாரம் இல்லாததால், அப்பயனைப் பெற இயலாத லம்பாடிகளின் நிலை அதைவிட மோசமாகவே உள்ளது.
இப்பகுதியில் உள்ள லம்பாடி மக்களின் பிரச்சனைகளுக்காகவும், லம்பாடி இன மக்களைப் பழங்குடியினராக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவும் ஊர் நாயக்கன் தண்டாவை சேர்ந்த மாது நாயக்கும், பெரிய தண்டா லக்கம்பட்டி பஞ்சாயத்துத் தலைவரான அண்ணாதுரையும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். மாதுநாயக், கொளத்தூரில் கேழ்வரகு களி கடை வைத்திருக்கிறார். கடந்த முப்பது ஆண்டுகளாக இக்கோரிக்கையை வலியுறுத்தி, அவர் மனு அனுப்பாத தலைவர்களே இந்தியாவில் இல்லை எனலாம். எனினும், எந்த ஒரு அரசியல் கட்சியின் வெளிப்படையான ஆதரவையும் அவர்களால் பெற முடியவில்லை.
“கர்நாடகத்தில் நாற்பது லட்சம் பேரும், ஆந்திராவில் அய்ம்பது லட்சம் பேரும் இருக்கிறதால குறைந்த பட்சம் ஓட்டுக்காகவாவது அவங்க கோரிக்கையை அரசாங்கம் நிறைவேத்திருச்சு. ஆனா, இங்க தமிழ் நாட்டுல நாங்க இரண்டு லட்சம் பேருதான் இருக்கோம். அதிலேயும் ஒரே இடமா இல்லாமல் பரவலா இருக்கோம். அதனால எந்தத் தலைவருக்கும் அரசாங்கத்துக்கும் நாங்க முக்கியமா படல. எங்க கோரிக்கைய கிடப்புல போட்டுடறாங்க. எங்க மக்களோட வாழ்வும் இப்படியே வீணாகிட்டு இருக்கு. கூலி வேலைகளும் எல்லாருக்கும் கிடைக்கிறதில்ல'' என்று வேதனையுடன் கூறுகிறார் மாது நாயக்.
ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட வாழ்க்கைச் சூழலிலிருந்து விடுபட்டு சமூகத்தோடு கலந்து முன்னேறி அடுத்த கட்டத்திற்குப் போக, அம்மக்களுக்கு இருக்கும் தடைகளை எதிர்கொள்ள அவர்களுக்கு ஊன்றுகோலாக இருப்பது இடஒதுக்கீடே. ஆனால், அந்த இடஒதுக்கீட்டின் பலனைப் பெற முடியாததால் இன்றளவும் லம்பாடி இன மக்கள் ஒதுக்கப்படுபவர்களாகவும், ஒடுக்கப்படுபவர்களாகவுமே வாழ்கின்றனர்.