19 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் பிரான்ஸ் நாட்டில் ரொமாண்டிக் வகை ஓவியங்களின் பிதாமகராய் விளங்கியவர் டெலாக்ராய்க். இவரைப் பற்றி பரபரப்பான வதந்தி ஒன்று இவரது காலம் தொட்டு இப்போதும் நிலவுகிறது. இவரது அம்மாவுக்கும் பிரான்ஸ் அமைச்சரவை உறுப்பினர் ஒருவருக்கும் மறைமுக உறவு இருந்தது, அந்த உறவின் மூலம் பிறந்தவர்தான் டெலாக்ராய்க் என்றும், அதனாலேயே இளவயதில் அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய உதவிகளை இவரால் பெற முடிந்தது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், டெலாக்ராய்க்கின் ஓவியங்கள் அவரைப் பற்றிய வதந்திகளைப் பரப்பியவர்களாலும் மறுக்க முடியாதவை. சமரசம் ஏதுமின்றி இவர் வரைந்த ஓவியங்கள் விமர்சகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கின; ஆனால் அவற்றில் பெரும்பான்மையானவை அரசாங்கத்தால் வாங்கப்பட்டன.
1. ஓவியர் யூஜின் டெலாக்ராய்க் பிரெஞ்சு ரொமாண்டிக் இயக்கத்தின் தலைமகன். மிகப் பெரும் காண்வாஸ்களில் பெரும் ஓவியங்களாக கண்காட்சிகளுக்காகத் தீட்டப்பட்டவை இவரது படங்கள். எந்த சமரசமும் இல்லாத, செய்து கொள்ளாத இவரது ஓவியக் கருவும், அமைப்பும் பல நேரங்களில் விமர்சகளை அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும், பெரும்பான்மையான ஓவியங்கள் அரசாங்கத்தால் வாங்கப்பட்டன. வாழ்வின் கடைசி முப்பது ஆண்டுகள் நிகழ்வுகளைக் குறிக்கும் பெரிய அளவிலான சுவர் ஓவியங்களை மதம் சம்பந்தப்பட்ட கட்டிடங்களில் வரைவதிலேயே செலவாகியது. தானே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு அயராது ஓவியங்கள் தீட்டுவதிலேயே காலத்தை செலவு செய்து தனது 65வது வயதில் மறைந்தார். |
தன்னைக் கொண்டாடும் கனவான்களுக்கு மத்தியிலே ஒரு புலியைப் போல அச்சமூட்டக்கூடியவராக வாழ்ந்தவர் டெலாக்ராய்க். இவரது இறுதிக்காலம் இவரே விரும்பி ஏற்படுத்திக் கொண்ட தனிமையிலானது. பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு புதிரான மனிதனாகவே வாழ்ந்தவர் டெலாக்ராய்க்.
இவரது தந்தை சார்லஸ் டெலாக்ராய்க், 1793 புரட்சிக்குப் பின் ஏற்பட்ட புதிய அரசில் அங்கம் வகித்தவர். அப்போது மன்னர் பதினாறாம் லூயிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர். தொடக்கத்தில் பிரான்சின் வெளியுறவுத் துறை அமைச்சராக சார்லஸ் பதவி வகித்தார். பின்னர் ஹாலந்துக்கான பிரான்சின் வெளியுறவுத் துறை அதிகாரியாக பதவியிறக்கம் பெற்றார். அவருக்குப் பதிலாக அமைச்சர் பதவியைப் பிடித்தவர்தான் டாலிரண்ட். இவர் சார்லசின் பதவியை மட்டும் கைப்பற்றவில்லை, சில காலம் அவரது மனைவியையும் கைப்பற்றியிருந்தார் என்று இன்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். சார்லஸ் ஹாலந்தில் இருந்தபோதுதான் யூஜின் டெலாக்ராய்க் (ஏப்ரல் 26, 1798) பிறந்தார்.
ஹாலந்தில் இருந்து திரும்பிய சார்லஸ் குடும்பத்துடன் போர்டேக்ஸ் நகரில் குடியேறினார். பாரீசுடன் ஓப்பிட முடியாவிட்டாலும், வசதிகளுக்கு குறைவில்லாத நகர்தான் இது. இங்குதான் டெலாக்ராய்க்கின் இளமைக்காலம் கழிந்தது. அது ஒன்றும் அவ்வளவு மகிழ்ச்சியானதாக இல்லை. பலமுறை குழந்தை டெலாக்ராய்க் சாவின் விளிம்புக்குச் சென்று காப்பாற்றப்பட்டார். ஒரு முறை குதிரையைக் கட்ட பயன்படுத்தப்படும் கயிறு எதிர்பாராதவிதமாக டெலாக்ராய்க்கின் கழுத்தில் சுருக்கிட்டது. அதிர்ஷ்டவசமாக டெலாக்ராய்க் காப்பாற்றப்பட்டார். அடுத்த சில நாட்களில் டெலாக்ராய்க் கட்டிலில் கொசுவர்த்தி வலை தீப்பிடித்து எரிந்தது. அதிலும் குழந்தை தப்பியது. பிறிதொரு முறை குழந்தையைப் பார்த்துக் கொள்ள நியமிக்கப்பட்டிருந்த வேலைக்காரப் பெண்ணின் கைகளில் இருந்து டெலாக்ராய்க் தவறுதலாக தண்ணீரில் விழுந்தார். மற்றொரு முறை நச்சுத் தன்மை வாய்ந்த பொருள் ஒன்றை சாப்பிட்டு விட்டார். ஒரு நாள் திராட்சை ஒன்றை விழுங்கி அது தொண்டையில் சிக்கி, பெரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இவை அத்தனையிலும் டெலாக்ராய்க் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
2. டெலாக்ராய்க் பாரீஸ் மிருகக்காட்சி சாலைக்கு தொடர்ந்து செல்வதுடன் அவற்றைப் பற்றிய குறிப்புகளை எழுதியுள்ளார். அம்மிருகங்கள் அவர் ஓவியங்களுக்குத் தூண்டுகோலாகவும், அவற்றில் பெரும் அங்கமாகவும் இருந்தன. அவருடைய 34வது வயதில் மொராக்கோவுக்கும், அல்ஜீரியாவிற்கும் 6 மாதப் பயணமாக சென்றபோது கண்டவையும், அவருடைய அனுபவமும்தான் பின் 30 ஆண்டு வாழ்வில் அவர் தீட்டிய பெரும்பாலான ஓவியங்களில் காணக் கிடைப்பவை. இசைமேதை சோப்பினும், அவருடைய காதலியும், இலக்கியவாதியுமான ஜார்ஜ் சாண்டும் டெலாக்ராய்க்கின் பெரும் நட்பைப் பெற்றவர்கள். சோப்பின் மரணம் ஓவியரை பெரும் துயரில் ஆழ்த்தியது. |
பள்ளிப் பருவமும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக டெலாக்ராய்க்கு வாய்க்கவில்லை. இசை மேதை மொஸார்ட்டுக்கு பரிச்சயமான ஒருவரிடம் இசையைக் கற்றுக் கொள்ள டெலாக்ராய்க்கை அவரது பெற்றோர்கள் அனுப்பினார்கள். சில நாட்களில் சார்லஸ் இறந்து விட, டெலாக்ராய்க்கின் குடும்பம் மீண்டும் பாரிசுக்குத் திரும்பியது. அதோடு அவரது இசைப் பயிற்சியும் முடிந்தது. அப்போது டெலாக்ராய்க்கு வயது ஏழு. பாரீஸ் வாழ்க்கை ஓரளவு மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இலக்கியத்தில் ஆர்வம் காட்டினார். பள்ளி விடுமுறை நாட்களை நார்மாண்டியில் உறவினர் வீட்டில் கழித்தார். நார்மாண்டியின் அழகு டெலாக்ராய்க்கை ஓவியம் வரையத் தூண்டியது. ஓவியராக இருந்த உறவினர் ஒருவர் அவரை உற்சாகப்படுத்தினார். இருவரும், ஓவியம் கற்றுக் கொடுப்பதில் அப்போது புகழ் பெற்று விளங்கிய கேரென் என்பவரது ஓவியக் கூடத்திற்கு அடிக்கடி சென்று வந்தனர்.
பதினாறாவது வயதில் டெலாக்ராய்க் தனது தாயையும் இழந்தார். தாயின் மரணம் தாளமுடியாத சோகத்தையும் தவிர்க்க முடியாத வறுமையையும் தந்தது. அதிலிருந்து மீண்டு, ஒரு வருடம் கழித்து, கேரெனிடம் டெலாக்ராய்க் ஒரு வருடம் ஓவியப் பயிற்சி பெற்றார். பின்னர் நியோ கிளாசிக் ஓவியர்களிடம் கிரேக்க மற்றும் ரோமானிய சிற்பங்களைப் பார்த்து அவற்றை ஓவியமாக பிரதியெடுப்பதையும், மாடலிங் பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்து ஓவியங்கள் வரைவதையும் கற்றுக் கொண்டார். வரலாற்றுச் சின்னங்களை பிரதியெடுப்பதுதான் பயிற்சியின் முக்கிய பாடமாக இருந்தது.
ஆனால் அங்கு பயின்ற மாணவர்களில் ஒருவரான தியோடர் கேரிகால்ட் பிரதியெடுக்கும் பாணியிலிருந்த வேறுபட்டு, தனித்துவமான பெரிய ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தார். அவர் ஓவியம் வரைவதைக் கவனிப்பது டெலாக்ராய்க்கின் முக்கிய பொழுதுபோக்காக அமைந்தது. டெலாக்ராய்க் பாணி ஓவியங்கள் இவரிடமிருந்தே தொடங்குகின்றன என்று சொல்லலாம்.
3. பிரமிப்பூட்டும் காட்சி அமைப்புகளைக் கொண்டவை இவரின் ஓவியங்கள். ‘The Massacre of Chios’ என்ற தலைப்புடைய இவ்ஓவியம் 1824ல் வரையப்பட்டது. துருக்கியர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் இடையே மூண்ட போரைக் குறிக்கும் இவ்ஓவியத்தில் பெரும் நிலப்பரப்பில் கடற்கரையின் வழி நுழையும் துருக்கியரையும், பாதிப்புடைய கிரேக்கர்களை ஓவியத்தின் முன்பகுதியிலும் அமையும்படி தீட்டப்பட்டிருக்கிறது. அதிர்ச்சியையும், பல விமர்சனங்களையும் கிளப்பிய இப்படம் பிரெஞ்சு அரசால் வாங்கப்பட்டது. |
தனது 24ம் வயதில் டெலாக்ராய்க் தனது முதல் ஓவியத்தை மக்களின் பார்வைக்கு வைத்தார். கிரேக்க வீரர்களை ஓவியமாக வரையும் பாணியிலிருந்து வேறுபட்டு, பெரிய வடிவில் வரையப்பட்ட ஓவியம் அது. ஓவியத்தைப் பார்த்து, நெப்போலியனுக்குப் பிடித்த ஓவியர்களில் ஒருவரான பாரன் கிராஸ் தனது சொந்த செலவில் அதற்கு சட்டகம் அமைத்துத் தந்தார். பின்னர் அரசாங்கம் அதை விலைக்கு வாங்கி லக்ஸம்பர்க் மாளிகையில் மாட்டியது.
தனது ஓவியங்களுக்கான கருவைத் தேடுவதில் டெலாக்ராய்க் சிரத்தையுடன் இருந்தார். மற்றவர்களிடம் இருந்து தனது ஓவியங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவதில் முனைப்புடன் இருந்தார். டெலாக்ராய்க்கின் இரண்டாவது பெரிய ஓவியம், அந்தக் காலகட்டத்தில் துருக்கிக்கும் கிரேக்கத்திற்கும் இடையே நடைபெற்ற போரை மையமாக வைத்து வரையப்பட்டிருந்தது. இந்த முறை பாரன் கிராஸ் டெலாக்ராய்க்கின் ஓவியத்தை கடுமையாக விமர்சித்தார். ‘ஓவியப் படுகொலை’ என்று வர்ணித்தார். ஆனால் டெலாக்ராய்க்கு இளைய தலைமுறை ஓவியர்களிடம் பெரும் ஆதரவை இந்த ஓவியம் பெற்றுத் தந்தது.
4. ‘The Death of Sandanapalus’, கவிஞர் பெயரன் நாடகத்தின் பாதிப்பில் 1827ல் தீட்டப்பட்ட ஓவியம். டெலாக்ராய்க் சிறிது மாற்றி மன்னன் Sandanapalus தன்னோடு எல்லாமும் மறைந்துவிட வேண்டும் என்று அந்தப்புற அழகிகளில் இருந்து குதிரை வரை வெட்டுவதுபோல் மன்னனின் வீரமிகு தற்கொலையை பின்னணிப் புகைமூட்டத்திற்கு நடுவில் நடக்கும்படி தீட்டப்பட்ட மாபெரும் ஓவியப் படைப்பு. |
அடுத்து வந்த ஆண்டுகளில் ரொமாண்டிக் வகை ஓவியங்களை வரைவதில் டெலாக்ராய்க் முழு கவனம் செலுத்தினார். ரொமாண்டிக் பாணி ஓவியர்களில் முன்னணி ஓவியராக அவர் அடையாளம் காணப்பட்டார். அதே நேரத்தில் அவ்வகை ஓவியப் பள்ளிக்கு தலைமையேற்கும்படி வந்த அழைப்பை நிராகரித்தார். இலக்கியத்தில் அதிக ஆர்வம் செலுத்தினார். பைரோனின் கவிதைகளை விரும்பிப் படித்தார். பாரிஸில் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் நடைபெற்றபோது ஆர்வத்துடன் கண்டு களித்தார். அவ்வாறு நாடகம் பார்க்கையில் புகழ்பெற்ற நாவலாசிரியர் விக்டர் ஹியூகோவின் நட்பு கிடைத்தது. இந்த நட்பின் அடிப்படையில் ஹியூகோவின் நாடகம் ஒன்றுக்கு டெலாக்ராய்க் ஆடை வடிவமைப்பு செய்து கொடுத்தார். ஆனால் இருவருக்கு இடையேயான நட்பு சில வருடங்கள் மட்டுமே நீடித்தது.
டெலாக்ராய்க் பற்றி ஹியூகோ பின்னர் இப்படி குறிப்பிட்டார்: ‘கண்காட்சியில் அவர் ஒரு புரட்சியாளராகவும், ஓவியக் கூடத்தில் பழமைவாதியாகவும் விளங்கினார்’
இருவேறு எதிரெதிர் குணங்களின் கலவையாகவே டெலாக்ராய்க் இறுதிவரை வாழ்ந்தார். அபாரமான நகைச்சுவையுணர்வும், எளிதாக மனிதர்களுடன் கலந்து விடும் குணமுள்ளவராகவும் விளங்கினார். ஓவியக் கண்காட்சி அரங்குகளில் இவரது நகைச்சுவை ததும்பும் பேச்சுக்காக எப்போதும் ஒரு கூட்டம் இவரைச் சுற்றி இருக்கும். சாதாரணமாக ‘வணக்கம்’ என்று சொல்வதையே 20 விதமாக சொல்லி அசத்தக்கூடியவராக இருந்தார். அதே நேரத்தில், பெரும் கோபமுடையவராகவும் அனல் பறக்கும் விவாதங்கள் நடத்தக் கூடியவராகவும் திகழ்ந்தார். இதனால் விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலேயே இவருக்கு நண்பர்கள் இருந்தனர்.
5. ‘Liberty leading the people’ என்ற இந்த ஓவியம் 1830ல் தீட்டப்பட்ட டெலாக்ராய்க்கின் மிகவும் புகழ்மிக்க ஓவியம். 1830ல் நடந்த ஜூலைப் புரட்சியை காண்பிக்கும் இப்படம் தன் நாட்டிற்காக வரைந்ததாக அறிவித்தார். அப்புரட்சியில் நேரடியாக அவர் கலந்துகொள்ளவில்லை என்றாலும் பிரெஞ்சுக் கொடி ஓவியத்தின் மையத்தை ஆட்கொண்டதுபோல கட்டமைத்தார். |
பிரிட்டீஷ் இலக்கியங்கள் மீதும், ஓவியங்கள் மீதும் டெலாக்ராய்க் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். ஆங்கிலேய ஓவியர் ரிச்சர்ட் பார்க்ஸ் பானிங்டனை தனது மானசீகக் குருவாகவே கருதினார். ஆங்கில எழுத்தாளர் சர் வால்ட்டர் ஸ்காட்தான் இவருக்குப் பிடித்த எழுத்தாளர். இந்த ஆர்வம் காரணமாகவே 1825ல் இங்கிலாந்து சென்று அங்கு சில மாதங்கள் செலவிட்டார். தனக்குப் பிடித்தமான ஓவியர்களை சந்திப்பதும், ஓவியக் கூடங்களுக்கு செல்வதுமாக அந்த நாட்களைக் கழித்தார்.
அடுத்த இரண்டாண்டுகளில் மூன்றாவது பெரிய ஓவியத்தை டெலாக்ராய்க் வரைந்தார். பைரோன் கவிதை ஒன்றைக் கருப்பொருளாகக் கொண்டு வரையப்பட்ட இந்த ஓவியம் விமர்சகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஓவியத்தில் வன்முறையும் ஆபாசமும் மிதமிஞ்சிக் காணப்படுவதாக விமர்சனம் கூறப்பட்டது. ஆனால் அவரைப் பின்பற்றுவோர்களின் எண்ணிக்கை இதன்பிறகு அதிகரிக்கவே செய்தது.
டெலாக்ராய்க்கின் ஓவியங்களில் காணப்படும் சிருங்காரக் கூறுகள் அனைத்தும் அவரது சொந்த அனுபவத்திலிருந்து பெறப்பட்டவையே. வாலிப வயதில் ஏராளமான காதலிகள் உடையவராக அவர் இருந்தார். குறிப்பாக அவரது சகோதரியைப் பார்த்துக் கொள்ள நியமிக்கப்பட்ட ஆங்கிலப் பெண்ணுடன் நெருகிய உறவு வைத்திருந்தார். உறவுக்கார பெண்ணான ஜோசப்பைன் என்பவருடன் சுமார் 30 வருடங்கள் காதல் உறவு வைத்திருந்தார். ஆனால் வயதாக ஆக, பெண்களுடனான அவரது தொடர்பு நட்பு அடிப்படையிலேயே அமைந்திருந்தது.
6. 1832ல் தாஸ்கீரில் இருக்குபோது யூதர்களின் திருமணத்தைப் பார்த்து ஸ்கெட்ச் செய்தார். பிற்காலத்தில் 1873-41ல் அவற்றை ஓவியமாகத் தீட்டினார். |
வாழ்வின் பின்பாதியில் ஓவியம் வரைவதிலேயே முழுவதுமாகத் தன்னைக் கரைத்துக் கொண்டார். இந்தக் காலகட்டதில் உடல் நலக் குறைவு அவருக்குப் பெரும் பிரச்சினையாக இருந்தது. அடிக்கடி நோய்வாய்ப்பட்டார். அதே நேரத்தில், ஓவியங்கள் அடுத்தடுத்து பெரும் புகழையும், பணத்தையும் பெற்றுத் தந்த வண்ணம் இருந்தன. 1832ல் மொராக்கோ, ஸ்பெயின், அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப் பயணம் குறித்து, ‘பாரிசில் இதுவரை பெற்ற அனுபவத்தை விட 20 மடங்கு அனுபவத்தைப் பெற்றதாக’ டெலாக்ராய்க் பின்னர் குறிப்பிட்டார். இதன் தாக்கம் அடுத்து வரைந்த ஓவியங்களில் பிரதிபலித்தது.
வெளிநாட்டில் இருந்து டெலாக்ராய்க் திரும்பியபோது, அவருக்காக பெரும் பணி ஒன்று காத்திருந்தது. அரசுக் கட்டடங்களை ஓவியங்களால் அலங்கரிக்கும், மதிப்பு வாய்ந்த பணி அவருக்குத் தரப்பட்டது. 1833 முதல் 1861 வரையிலான அவரது ஓவிய வாழ்க்கையை அரசு மாளிகை சுவர்களில் மிகப் பெரிய ஓவியங்களை வரையும் பணியிலேயே செலவழித்தார். தானே ஏற்படுத்திக் கொண்ட தனிமையில் கடுமையாக உழைத்தார். இடையிடையே ஏற்பட்ட உடல் நலக்குறைவும் அவருக்குத் தொந்தரவாக அமைந்தது. இருப்பினும் வரைவதை மட்டும் அவர் நிறுத்தவில்லை.
வெளியுலகில் அரிதாகவே தென்பட்டார். நகருக்கு வெளியே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, ஓவிய அரங்குக்கு மட்டுமே சென்று கொண்டிருந்தார். 1855ல் டெலாக்ராய்க் நடத்திய ஓவியக் கண்காட்சி பெரும் செல்வத்தை ஈட்டியது. பின்னர் வந்த ஆண்டுகளில் அரசின் உயரிய விருதுகள் அனைத்தும் அவருக்கு வழங்கப்பட்டன.
7. பாரீஸில் டிராட்ஸ்கி மருது டெலாக்ராய்க்கின் கல்லறை அருகில். |
15 வருடங்கள் நகருக்கு வெளியே குடியிருந்தவர் தனது அறுபதாவது வயதில் பாரிசில் மீண்டும் குடியேறினார். சில மாதங்களில் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இறுதியில் 1863 ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி அவரை மரணம் தழுவியது.
இறப்பிற்குப் பின் டெலாக்ராய்க்கின் ஓவிய அரங்குக்கு சென்றவர்களை அவரது கடும் உழைப்பு மலைக்க வைத்தது. அங்கு சுமார் 9140 ஓவியங்கள் இருந்தன. அதில் 853 ஓவியங்களும், 1525 பாஸ்டல்களும் (pastel), 6629 கோட்டுச் சித்திரங்களும் அடக்கம்
.
(நன்றி : புது விசை ஏப்ரல் - ஜுன் 2006)