எந்த ஒரு குற்றமும் சமூகத்திற்கு எதிராகவே நிகழ்த்தப்படுவதாகவும், ஆகையால் குற்றத்தைத் தடுக்க வேண்டிய கடமையும், குற்றத்தை நிகழ்த்தியவருக்கு தண்டனை வழங்க வேண்டிய பொறுப்பும் – சமூகத்தின் சார்பாக அரசுக்கு இருப்பதாக சட்டம் கூறுகிறது. எனவேதான் குற்றவியல் வழக்குகளை நடத்தும் பொறுப்பை அரசே ஏற்கிறது. குற்ற நிகழ்வைப் பதிவு செய்வது தொடங்கி, வழக்கினை புலன் விசாரணை செய்வது, குற்றம் புரிந்தவரெனக் கருதப்படும் நபரைக் காவல்படுத்தி சிறையில் வைத்துப் பராமரிப்பது, வழக்கின் ஆவணங்களைத் தயாரிப்பது, நீதிமன்ற விசாரணையின் போது சாட்சிகளை அழைத்து வருவது என வழக்கின் அனைத்து செலவினங்களையும் ஏற்பது, குற்றம் சாட்டப்பட்ட நபர், "தனக்கு எதிரான குற்றச்சாட்டு பொய்யானது' என மறுத்து வாதிட வழக்குரைஞரை அமர்த்திக் கொள்ள – பொருளாதார வசதி வாய்ப்பில்லாத நேர்வுகளில் அவ்வழக்குரைஞருக்குரிய கட்டணத்தை ஏற்றுக் கொள்வது ஆகியவை உட்பட அரசின் கடமைகளாக சட்டம் சொல்கிறது.
ஒரு குற்ற நிகழ்வை புலன் விசாரணை செய்யும் காவல் துறை அதிகாரி, அவ்வழக்கைப் பதிவு செய்வது முதல், வழக்கின் தீர்ப்பின் பேரில் மேல்முறையீடு செய்வது வரையிலான விஷயங்களுக்கு சட்ட ஆலோசனை மற்றும் உதவியைப் பெற, அரசு குற்றவியல் வழக்குரைஞர்களை நியமிக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 24, குற்றத் துறை வழக்குரைஞர் நியமனம் குறித்த அரசின் அதிகாரம் பற்றி விரிவாகப் பேசுகிறது. அதேபோல் பிரிவு 25, அரசு குற்றத்துறை உதவி வழக்குரைஞர் நியமனம் குறித்துப் பேசுகிறது. இவை வழக்கமான இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பிற குற்றவியல் சட்டங்களின் கீழ் வரும் வழக்குகளைப் பொருத்தமட்டில்தான். இது தவிர, மனித உரிமைகள், போதை பொருள் கடத்துதல், தடா, பொடா ஆகிய சட்டங்களின்படியான வழக்குகள் அந்தந்த சிறப்புச் சட்டங்களின்படி நடத்தப்பட வேண்டும். எனவே, அவ்வகையான சிறப்பு வழக்குகளை அரசுத் தரப்பில் நடத்த அந்தந்த சிறப்புப் பிரிவுச் சட்டங்களில் தகுதியும் தேர்ச்சியும் வாய்ந்த வழக்குரைஞர்களை நியமிக்க, அச்சிறப்புச் சட்டங்கள் வழிவகை செய்துள்ளன.
இதேபோல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும், இச்சட்டத்தின் கீழ்வரும் வன்கொடுமைகள் மிகவும் தனித்துவத் தன்மை வாய்ந்த குற்றங்கள் எனக் குறிப்பிடுவதுடன், இச்சட்டத்தின் கீழ் தொடரப்படும் குற்றச்சாட்டுகளை திறம்பட நிரூபித்து, குற்றம் புரிந்த நபருக்கு சட்டம் பரிந்துரைத்துள்ள தண்டனையைப் பெற்றுத் தர, இச்சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்களில் பணியாற்ற, சிறப்பு அரசு குற்றத்துறை வழக்குரைஞர் நியமிக்கப்பட வேண்டும் என்று, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 15 கூறுகிறது. ஏற்கனவே அரசு குற்றத்துறை வழக்குரைஞராக உள்ள நபரையோ அல்லது ஏழு ஆண்டுகளுக்குக் குறையாத அனுபவம் வாய்ந்த வழக்குரைஞரையோ அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டு, வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்த, சிறப்பு அரசு குற்றத்துறை வழக்குரைஞராக நியமிக்கலாம் என்று இப்பிரிவு விவரிக்கிறது.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை சிறப்பான வகையில் நடைமுறைப்படுத்த இயற்றப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டவிதிகளில் 4 ஆம் விதி, இச்சட்டத்தின் கீழ் எழும் வழக்குகளை அரசுத் தரப்பில் நடத்திடவும், மேற்பார்வை செய்யவும் சில விதிமுறைகளைப் பற்றி சொல்கிறது. இதன்படி, மாவட்ட நடுவரின் (மாவட்ட ஆட்சியர்) பரிந்துரையின் பேரில் மாநில அரசு வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்த ஏதுவாக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏழு ஆண்டுகளுக்கு குறையாத அனுபவம் பெற்ற புகழ் வாய்ந்த மூத்த வழக்குரைஞர்கள் அடங்கிய ஒரு பட்டியலைத் தயாரிக்க வேண்டும். அதேபோல், மாநில அரசு தனது குற்றத்துறை இயக்குநருடன் கலந்தாய்வு செய்து, குற்றத்துறை வழக்குரைஞர் பட்டியலைத் தயாரிக்க வேண்டும். இவ்விரு பட்டியல்களும் மாநில அரசிதழில் வெளியிடப்பட வேண்டும். இப்பட்டியல்கள் மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
இவ்விதியின் துணைவிதிகள் (3) மற்றும் (4) ஆகியவற்றில், இவ்வாறாக நியமிக்கப்பட்டு வன்கொடுமை வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்களில் நடத்தும் அரசு குற்றத்துறை வழக்குரைஞர்களின் செயல்பாடு குறித்து ஆண்டிற்கு இரு முறை சனவரி மற்றும் சூலை ஆகிய மாதங்களில் – மாவட்ட நடுவரும் குற்றத்துறை இயக்குநரோ அல்லது அப்பொறுப்பை வகிக்கும் நபரோ அறிக்கை தயாரித்து, மாநில அரசுக்கு அளிக்க வேண்டும். அவ்வாறான அறிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட அரசு குற்றத்துறை வழக்குரைஞர் ஒருவர் தனது முழுத்திறனை செலுத்தாமலும், வன்கொடுமை வழக்கைப் போதிய அக்கறை யுடனும் கவனத்துடனும் நடத்தவில்லை என்று மாநில அரசின் கருத்தில் தோன்றும்போது, அக்குறிப்பிட்ட அரசு சிறப்பு குற்றத் துறை வழக்குரைஞரை அப்பட்டியல்களிலிருந்து நீக்கலாம் என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்விதிகள் சரிவர கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பது பெரிய கேள்விக்குறியே. இவ்விதிகளில் குறிப் பிடப்பட்டுள்ளதுபோல் இரு பட்டியல்கள் தயாரிக்கப்படுவதாகவோ, வன்கொடுமை வழக்குகளை நடத்தும் அரசு சிறப்பு குற்றத்துறை வழக்குரைஞரின் செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ தகவல்கள் இல்லை.
பொதுவாகவே அவ்வப்போது ஆட்சிப் பீடத்திலிருக்கும் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது அதன் தீவிர அனுதாபிகளாகவோ இருப்பவர்களைத்தான் அரசு குற்றத்துறை வழக்குரைஞர்களாக நியமிப்பது நடைமுறையாக உள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, அந்த அரசு குற்றத்துறை வழக்குரைஞர்கள் தமது பதவியிலிருந்து விலகிக் கொள்கின்றனர். புதிய ஆட்சி அமைக்கும் அரசியல் கட்சியின் கூட்டணி ஆட்சி ஏற்படும்போது, அத்தகைய கூட்டணிக் கட்சிகளின் தீவிர விசுவாசிகளே அப்பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர்.
அரசு குற்றத்துறை வழக்குரைஞர் பதவியைப் போலவே, உயர் நீதிமன்றங்களிலும் பல்வேறு அரசுத் துறைகளின் வழக்குகளை நடத்த நியமிக்கப்படும் அரசுத் தரப்பு வழக்குரைஞர்களும்கூட, இதேபோல் அன்றன்றைய ஆளும் கட்சி சார்புடையவர்களாகவே அமைகின்றனர். இதன் காரணமாக, அரசுத் தரப்பு வழக்கு ஆளும் கட்சி சார்புடன் நீதிமன்றங்களில் நடத்தப்படுகின்றன. அரசின் முடிவுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும்போது சட்டப் பிரச்சினை என்பதைவிட, ஆளுக்கட்சியின் தனிப்பட்ட பிரச்சினை என்பது போல அரசு வழக்குரைஞர்கள் சட்டத்திற்குப் புறம்பான அரசியல் வாதங்களை முன்வைத்து எதிர் வாதிடவே வாய்ப்பாக அமைகிறது.
இதனால், அரசுத் தரப்பு வழக்குரைஞர்களின் ஆளும் கட்சி சார்புத்தன்மை காரணமாக, நீதிமன்றங்கள் நீதியிலிருந்து திசை திருப்பப்படுகின்றன. அரசு வழக்குரைஞர் என்பவர் நீதிமன்றத்திற்கு நீதியை நிலைநாட்ட உதவிட வேண்டிய நீதிமன்ற அலுவலர் என்ற நிலை யிலிருந்து ஆளுங்கட்சியின் அனைத்து அடாவடி நடவடிக்கைகளுக்கும் "வக்காலத்து' வாங்கும் நபர் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் சார்பற்ற தன்மை வாய்ந்தவர்களாக அமைய வேண்டுமெனில், இப்பதவிக்கு வழக்குரைஞர்களிடையே போட்டித் தேர்வு நடத்தி நியமனம் செய்யப்பட வேண்டும். இதன் மூலம் தகுதியான, திறமை வாய்ந்த நபர்களை நியமனம் செய்ய முடியும். இம்முறை ஏற்கனவே மய்ய அரசின் சில துறைகளில், குறிப்பாக நடுவண் புலனாய்வுத் துறை போன்ற அமைப்புகளில் நடைமுறையில் உள்ளது. இதை ஒவ்வொரு மாநில அரசும் பின்பற்றி, சமூக அக்கறை கொண்ட வழக்குரைஞர்கள்/செயல்பாட்டாளர்கள் அரசை வலியுறுத்த வேண்டும்.
அரசு குற்றத்துறை உதவி வழக்குரைஞர்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 25இன் கீழ் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளை அரசுத் தரப்பில் நடத்துவர். தமிழகத்தைப் பொருத்தவரை, இப்பதவிக்கு தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதே முறையை மற்ற அரசு குற்றத்துறை வழக்குரைஞர் பதவிக்கும் கடைப்பிடிப்பதன் மூலம் அரசியல் சார்புத் தன்மையைத் தவிர்க்கலாம். வன்கொடுமை நிகழ்வுகளை நாம் உன்னிப்பாகக் கவனித்தோமானால், வன்கொடுமை இழைப்பவர்கள் பெரும்பாலும் அதிகார மய்யமாகக் கருதப்படும், செயல்படும் அவ்வப்போதைய ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாகவோ, ஏதாவது ஒரு முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாகவோ இருப்பார்கள். இவர்கள் எவ்வகையிலாவது தங்கள் அரசியல் பலத்தைக் காட்டி அரசு குற்றத்துறை வழக்குரைஞரை அணுகி தங்களுக்கு ஆதாயம் பெற முயல்வர். அந்நிலையில் பாதிக்கப்பட்டோர் சார்பாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகவும் செய்ய வேண்டிய தனது பணியில் அரசு குற்றத்துறை வழக்குரைஞர் சுணக்கம் காட்டி, எதிர்த்தரப்பினருக்கு சாதகமாக நடந்து கொள்ள பெரும் வாய்ப்பு ஏற்படுகிறது. இந்தச் சூழ்நிலை காரணமாகத்தான் அரசு குற்றத்துறை வழக்குரைஞர் பதவி என்பது, அரசியல் கட்சி சாராத நபர்களால் நிரப்பப்பட வேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சட்ட நடைமுறைச் சிக்கல்களையும் மீறி ஒரு வன்கொடுமை வழக்கை பாதிக்கப்பட்டோர் சார்பாக நடத்தி, வன்கொடுமையாளர்களுக்கு சட்டப்படியான தண்டனை பெற்றுத் தருவது என்பது, தலித் உரிமையில் அக்கறை கொண்ட வழக்குரைஞர்களுக்கும் செயல்பாட்டாளர்களுக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது எனில், அது மிகையல்ல.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்களில், அரசு சிறப்பு குற்றத்துறை வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், இவர்களும் மேற்குறிப்பிட்டபடி அரசியல் பின்னணியிலிருந்தே வருபவர்களாக பெரும்பாலும் அமைகின்றனர். இவர்களின் செயல்பாடு மேற்குறிப்பிட்ட விதிகளின்படி கண்காணிக்கப்படுவதாகவோ, கணிக்கப்படுவதாகவோ தெரியவில்லை. ஏனெனில், மிகப் பெரும்பான்மையான வன்கொடுமை வழக்குகளில் நீதிமன்றங்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்து தீர்ப்பளிக்கின்றன. அதற்கு அரசுத் தரப்பு, வன்கொடுமை வழக்கை போதிய கவனத்துடனும் அக்கறையுடனும் நடத்தாததே காரணம் என்பது, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டவிதிகளில் உள்ள 4 ஆவது விதியின் 5 ஆம் துணை விதி, ஒரு முக்கியமான உரிமையை வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்குகிறது. ஏற்கனவே நாம் பார்த்ததுபோல், மாவட்ட நடுவர் மற்றும் அரசு குற்றத்துறை இயக்குநர் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் தயாரிக்கப்படும். வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளை நடத்திடக் கூடிய வழக்குரைஞர்களின் இரு பட்டியல்களில் இடம் பெறாத, ஆனால் திறமை வாய்ந்த மூத்த வழக்குரைஞரை மாவட்ட நடுவர்/மாவட்ட துணை நடுவர், ஒரு குறிப்பிட்ட வன்கொடுமை வழக்கை நடத்த தேவை என்று கருதும் போதோ அல்லது வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர் விரும்பும் போதோ – வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றங்களில் வழக்கு நடத்த நியமிக்கலாம். அவருக்குரிய வழக்குரைஞர் கட்டணத்தை மாவட்ட நடுவர்/மாவட்ட துணை நடுவர் நிர்ணயித்து வழங்க வேண்டும் என்று இத்துணை விதி கூறுகிறது. குறிப்பாக துணைவிதி 6, வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளை நடத்தும் அரசு சிறப்பு குற்றத்துறை வழக்குரைஞர்களுக்கு மற்ற அரசு வழக்குரைஞர்களைவிட கூடுதலாக வழக்குரை கட்டணம் வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.
வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளில் இவ்வாறான ஓர் உரிமை வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்கப்பட்டிருந்தாலும், இது குறித்த விழிப்புணர்வு தலித் செயல்பாட்டாளர்களுக்கும் அவர்களுடன் பணியாற்றும் வழக்குரைஞர்களுக்குமேகூட இல்லை என்பது வேதனையான உண்மை. இந்த விழிப்புணர்வு ஏற்பட்டால்தான் மேற்கூறிய விதிகளின்படியான தனித்த உரிமையை நடைமுறைப்படுத்த நாம் தக்க நடவடிக்கை எடுக்க முடியும்.
இதனை நடைமுறைப்படுத்த வேண்டுமெனில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பாக சிறப்பு கவனமும் அக்கறையும் செலுத்துவதுடன், வழக்கை நடத்துவதற்கான தகுதியும் திறமையும் உடைய ஒரு மூத்த வழக்குரைஞரை அடையாளம் காண வேண்டும். மேற்குறிப்பிட்ட துணை விதி "மூத்த வழக்குரைஞர்' என்பவர் யார் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. 7 ஆண்டுகளுக்கு குறையாத அனுபவம் வாய்ந்தவரே அரசு சிறப்பு குற்றத்துறை வழக்குரைஞராக நியமனம் பெறத் தகுதியுடையவர் என்று வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 15இல் குறிப்பிடப்பட்டுள்ளதால், மூத்த வழக்குரைஞர் என்பவர் அதற்கும் கூடுதலான ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ள நபராக இருக்க வேண்டும் என்றும் இத்துணை விதியைப் பொருள் கொள்ளலாம்.
மூத்த வழக்குரைஞர் தகுதி என்பது, ஒரு நபர் வழக்குரைஞராக ஆற்றிய பணி அல்லது சட்டத்தில் சிறப்பு அறிவு அல்லது தனிச் சிறப்பு அனுபவம் உள்ளவர் என்று உச்ச நீதிமன்றத்தாலோ அல்லது உயர் நீதிமன்றம் ஒன்றினாலோ அடையாளம் காணப்பட்டு அளிக்கப்படும் ஒரு தனிச் சிறப்பாகும். இத்தனிச் சிறப்பு, வழக்குரைஞர்கள் சட்டத்தின் பிரிவு 16(3)இன்படி வழங்கப்படுகிறது. உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றங்களும் இது குறித்து சில வரைமுறைகளை வகுத்துள்ளன. சென்னை உயர் நீதிமன்றம் வகுத்துள்ள வரைமுறைகளின்படி, மூத்த வழக்குரைஞராக சிறப்பு பெற குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணிபுரிந்திருக்க வேண்டும். இந்த அளவுகோலின்படி, ஒருவரை மூத்த வழக்குரைஞர் என்று குறிப்பிட வேண்டுமெனில், 15 ஆண்டுகளுக்கு மேல் வழக்குரைஞர் தொழிலில் பணிபுரிபவர் எனக் கொள்ளலாம். எனவே, வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி பாதிக்கப்பட்ட நபர் நியமனம் கோரும் வழக்குரைஞர், இந்த அடிப்படைத் தகுதியைப் பெற்றவராக இருத்தல் வேண்டும். இது தவிர, அமர்வு நீதிமன்ற அளவில் குற்றவியல் வழக்குகளை நடத்திய அனுபவமும், திறனும் பெற்றவராகவும் உள்ள வழக்குரைஞரை தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.
தமிழக அளவில் என்று எடுத்துக் கொண்டால், சாதிய மேலாதிக்கத்தை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வென்ற காரணத்தால், மதுரை மேலூரில் உள்ள மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட அறுவர் 30.6.1997 அன்று படுகொலை செய்யப்பட்ட வழக்கை நடத்திட, பாதிக்கப்பட்டோர் சார்பாக அவர்கள் விரும்பும் வழக்குரைஞரை நியமித்திடக் கோரி வழக்குரைஞர் பொ. ரத்தினமும் இக்கட்டுரையாளரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை முருகேசனின் சகோதரர் கருப்பையா சார்பில் தாக்கல் செய்தனர். அம்மனு சிறிது காலம் விசாரணைக்காக நிலுவையிலிருந்தது. பின்னர், இவ்வாறான நியமனம் கோரி மனுதாரர் மாவட்ட நடுவரிடம் (மாவட்ட ஆட்சியர்) வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், எனவே மனுதாரர் அவ்வாறு மனு சமர்ப்பித்து அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மட்டுமே உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் கூறி இம்மனு நிராகரிக்கப்பட்டது.
பின்னர், உயர் நீதிமன்றம் வலியுறுத்தியபடி கருப்பையா சார்பில் தமிழக உள்துறைச் செயலருக்கும், மதுரை மாவட்ட நடுவருக்கும் மனு அளிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டோர் சார்பாக வழக்கை நடத்த ஈரோட்டைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் பி. திருமலைராஜன் அவர்களை நியமிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. அம்மனுவின் மீது தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்காமல் தாமதப்படுத்தியது. பாதிக்கப்பட்டோரின் கோரிக்கையை ஏற்று மேலவளவு வழக்கின் விசாரணையை சேலம் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோது, மீண்டும் ஒருமுறை உயர் நீதிமன்றத்தில் திருமலைராஜனை சிறப்பு குற்றத்துறை வழக்குரைஞராக வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி நியமிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனு விசாரணைக்கு எடுத்துக் கொள் ளப்பட்டு, பாதிக்கப்பட்ட நபர்களின் சார்பான இந்தக் கோரிக்கையை வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி அரசு ஏற்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அரசுத் தரப்பிற்கு அறிவுறுத்தினர். அதன்படி, தமிழக அரசும் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று அரசாணை பிறப்பித்தது. அதன் பின்னர், திருமலைராஜனும் ப.பா. மோகனும் மேலவளவு வழக்கு விசாரணையை மிகத் திறம்பட நடத்தி, வன்கொடுமை புரிந்த நபர்களில் முக்கியமானவர்களுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தந்தது, பலமுறை பதிவு செய்யப்பட்ட அனைவரும் அறிந்த செய்தியே.
இதேபோல், திண்ணியம், சென்னகரம்பட்டி ஆகிய வன்கொடுமை நிகழ்வு களிலும் பாதிக்கப்பட்டோர் விரும்பிய வழக்குரைஞரையே – மூத்த வழக்குரைஞர் ப.பா. மோகன் அவர்களையே – அரசு சிறப்பு குற்றத்துறை வழக்குரைஞராக நியமித்து வழக்குகள் திறம்பட நடத்தப்பட்டன. இந்த முறை பரவலாகக் கையாளப்பட்டால், வன்கொடுமை வழக்குகள் தனிச் சிறப்பு கவனத்துடனும், அக்கறையுடனும் நடத்தப்படவும், வன்கொடுமைத் தடுப்புச் சட்த்தையும் அதன் நோக்கங்களையும் நடைமுறைப்படுத்த ஒளிமயமான வாய்ப்புகள் உள்ளன.