‘தலித் முரசு' தொடங்கப்பட்டு (13 பிப்ரவரி, 1997) இந்த இதழுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதைக் குறிக்கும் வகையில், இதுவரை வெளிவந்த ஒவ்வொரு இதழிலிருந்தும் சில முக்கியக் கட்டுரைகளிலிருந்து ஓரிரு பத்திகள் வெளியிடப்பட்டுள்ளன; தலித் முரசின் நேர்காணல்களிலிருந்தும் சில வரிகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன (ஒவ்வொரு பக்கத்திலும் சில குறிப்பிடத்தக்க கட்டுரைகளின் தலைப்பும், அதை எழுதியவர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளன). இவ்விதழ் 1997 முதல் 2003 வரையிலான தொகுப்பாகவும்; அடுத்த இதழ் 2004 முதல் 2011 வரையிலான தொகுப்பாகவும் அமைந்திருக்கின்றன. தலித் கருத்தியல் தளத்தில் இருந்து சமூக, அரசியல், பண்பாட்டுப் பிரச்சனைகளை நாம் எவ்வாறு அணுகியிருக்கிறோம் என்பதைப் பழைய / புதிய வாசகர்கள் அறிந்து கொள்ள இது வழிவகுக்கும்.

முதல் இதழைக் கொண்டு வருவதில் எத்தகைய சிரமங்களை அனுபவித்தோமோ, அவை அனைத்தையும் தற்பொழுதும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நவீன வசதிகளுடன் உடனுக்குடன் வெளிவரும் வணிக இதழ்கள் முன்னிறுத்தும் கருத்துகளைக் காலங்காலமாகப் படித்து பழக்கப்பட்டுவிட்ட வாசகர்களிடம் அதற்கு நேர் எதிரான கருத்துகளை நாம் முன்வைக்கிறோம். வணிக இதழ்களின் மலிவான செய்திகளுக்கு இரையாகிவிட்டவர்களுக்கு சற்று ஆழமாகப் படிப்பதில் ஆர்வம் இல்லை. மேலும், அரசியல், திரைப்படம், ஆன்மிகம், விளையாட்டு எனப் பல்சுவையை அசைபோடுகின்றவர்களுக்கு சமூக சிந்தனையே வேம்பாய் கசக்கிறது.

இதன் விளைவு, கருத்தியல் அடர்த்தியுடன் வெளிவரும் இதழ்கள் சிற்றிதழ்கள் என்ற அளவில் சுருக்கப்பட்டு விடுகின்றன. கூடுதலாக, தலித் அடையாளத்துடன் வெளிவரும் போது கடைகளில் எப்படி ஜாதியப் பார்வையுடன் ‘தலித் முரசு' புறக்கணிக்கப்படுகிறதோ, அதே போன்ற பார்வையுடன் இவ்விதழைப் பொதுச் சமூகமும் புறக்கணிக்கிறது. மாற்றிதழ்களுக்கான வெளியில்கூட தலித் இதழ்களுக்கான இடமும் ஆதரவும் அரிதாகவே தென்படுகின்றன. நம்முடைய தலித் பார்வை என்பது சாதி, மத எல்லைகளைக் கடந்தது; எனினும் நமக்கான இயங்குதளம் குறுகியதாகவே இருக்கிற முரண்பாட்டை என்னவென்று சொல்ல? மாற்றுத் தளங்களில் அம்பேத்கரியலுக்கு கிடைக்கும் ஆதரவுகூட மிக அரிதே!

டாக்டர் அம்பேத்கர் வழமையான ‘தலித் பார்வை'யைக் கொண்டவரல்லர். சமூக மாற்றத்தை முதன்மைப்படுத்தி, அச்சமூக அமைப்பின் அடிநிலையில் தள்ளப்பட்ட தலித் மக்களுக்கு முன்னுரிமை அளித்தவர். அவருடைய போராட்டம், சாதிய சமூகத்தில் பெரும்பான்மையினரின் பிரதிநிதித்துவத்திற்கானது. மநுதர்மம் கோலோச்சிய நாட்டில் சமூக ஜனநாயகத்தின் அடிப்படையில் அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர் அவர். இருப்பினும், அவர் தலித்தாகப் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக அவரை தேசியத் தலைவராக இச்சமூகம் ஏற்க மறுக்கிறது. இடதுசாரிப் பார்வைகூட ஜாதி கடந்ததாக இல்லை.

பாபாசாகேப் அம்பேத்கர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களுக்குப் பிறகு அவருடைய நூல்கள் அறிமுகமாகி 20 ஆண்டுகள் கடந்தும் அவை மக்களைச் சென்றடையவில்லை. அவருடைய அறிவாயுதங்கள் (நூல்கள்) சமூகப் புரட்சிக்கான வித்துகளைக் கொண்டிருந்தாலும் அவை ஒரு சில ஆயிரங்கள்தான் விற்பனையாகின்றன. தலித் மக்களும் அவரைத் தமக்கு மட்டுமேயான தலைவராகக் கருதி, அவர் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தின் அடிப்படையிலான சமூகத்தைக் காண பரந்துபட்டு சிந்தித்ததை உள்வாங்கிக் கொள்ளவில்லை. அதனால்தான் அம்பேத்கரின் திருவுருவச்சிலை பரவியுள்ள அளவிற்கு அவருடைய சிந்தனை திக்கெட்டும் பற்றிப்பரவவில்லை.

அம்பேத்கரியலை தழுவிக்கொண்ட ‘தலித் முரசு'ம் இதே சிக்கலைத்தான் சந்திக்கிறது. ஜாதியை அழித்தொழித்து சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் இது. அரசியல், அதிகாரம், வர்க்கம், புரட்சி, வளர்ச்சி எனப் பயணமாகின்றவர்களுக்கு இருக்கும் அங்கீகாரமும் அரவணைப்பும் ‘ஜாதி ஒழிப்பே புரட்சி' என்று முழங்கும் நமக்கு கிட்டவில்லை. இச்சமூக அமைப்பால் அல்லலுறும் தலித்துகள் கூட இந்து சமூக அரசியல் அமைப்பில் சில உரிமைகள் கிடைத்தால் போதும் என்றளவில்தான் சிந்திக்கிறார்கள். ஆனால், இந்து சகதிக்குள் இருந்து வெளியேறுவது எனும் விடுதலைக் கருத்தியலை அவர்கள் ஏற்கத் தயாரில்லை.

இச்சூழலில் வெகுசில தோழமை சக்திகளுடன், முதல் இதழில் நாம் வரையறுத்துக் கொண்ட இலக்கை நோக்கி நெருப்பாற்றில் நீந்துகிறோம். இதழ் தாமதமாவதும் இதனால்தான். ‘தலித் முரசு' இல்லாமலே போய்விடுவதற்கான சாத்தியக்கூறுகளும் நம்மை நெருங்குகின்றன. இருப்பினும் சற்றும் தளராமல் உறுதியுடன் போராடுகிறோம்.

Pin It