செயலுரிமை என்பது குறித்தவற்றைச் செய்வதற்குரிய பயனுள்ள அதிகாரத்தைக் குறிக்கிறது. பயன்படுத்தும் நடைமுறைகள் இல்லாத சுதந்திரம் என ஒன்று இருக்க முடியாது. சுரண்டல் ஒழிக்கப்பட்ட இடத்தில்தான்; ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கியாள முடியாத இடத்தில்தான்; வறுமையும் வேலையின்மையும் இல்லாத இடத்தில்தான், தான் விரும்பிய செயலின் விளைவால், தன்வேலை, வீடு, உணவு ஆகியவற்றை இழந்து விடுவோமோ என்னும் அச்சம் இல்லாத இடத்தில்தான் உண்மையான செயலுரிமை இருக்க முடியும்.

அரசியல் சுதந்திரம் என்பது சட்டமியற்றுவதில் பங்கு கொள்வதற்கும், அரசாங்கத்தை மாற்றுவதற்கும் உருவாக்குவதற்கும் தனி மனிதருக்குள்ள சுதந்திரமாகும். வாழ்வுரிமை, சுதந்திரம், இன்பநாட்ட முயற்சி போன்ற மாற்ற முடியாத உரிமைகளைத் தனிமனிதனுக்கு அளிப்பதற்காகவே அரசாங்கம் அமைக்கப்படுகிறது. எவருடைய உரிமைகளைக் காப்பதற்காக என்று அரசு அமைக்கப்பட்டிருக்கிறதோ, அவர்களிடமிருந்துதான் அரசு அதிகாரம் பெறுகிறது. எனவே, ஆளப்படுபவரின் ஒப்புதலின் பேரிலேயே அரசு அதிகாரியின் எல்லையும் இருப்பும் இயங்க வேண்டும் என்பதாகிறது.

மனித ஆளுமை, சமத்துவம் ஆகிய கோட்பாடுகளிலிருந்து பெறப்படுவதுதான் அரசியல் சுதந்திரம். அனைத்து அரசியலதிகாரமும் மக்களிடமிருந்தே பெறப்படுகிறது என்பதே இதன் பொருள். மேலும் பொதுவாழ்வையும், தனி வாழ்க்கையையும் மற்றவராலன்றித் தமக்குத் தாமே நிர்ணயித்துக் கொள்ளும் ஆற்றல் மக்களுக்கு உண்டு என்பதே இதன் பொருள். சுதந்திர சமூக அமைப்பின் இவ்விரு கோட்பாடுகளும் ஒன்றோடொன்று முழுமையான தொடர்புடையவை. முதற்கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டாலே இரண்டாவது கோட்பாடும் தானே பெறப்படுகிறது. மானுட ஆளுமையின் புனிதத்தன்மை ஏற்கப்படும்போதே, ஆளுமை வளர்ச்சிக்கு ஏற்ற சூழ்நிலைக்கு சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் தேவையும் ஏற்கப்பட வேண்டும்.

இந்தக் கோட்பாடுகளை இந்து சமூக அமைப்பு எவ்வளவு தூரம் ஏற்கிறது? இவ்விசாரணை அவசியமானதே. இக்கோட்பாடுகளை எந்த அளவுக்கு அது ஏற்கிறதோ, அந்த அளவுக்குதான் சுதந்திர சமூக அமைப்பு என்பதற்குரிய சிறப்புப் பெயரைப் பெற முடியும். இந்து சமூக அமைப்பு தனிமனிதனை ஏற்கிறதா? தனி மனிதனின் தனித்தன்மையையும், தார்மிகப் பொறுப்பையும் ஏற்கிறதா? தனக்குத்தானே வரம்பானவன், சட்டப்படியான தடைகள் எதுவுமின்றி அரசிற்கு எதிராகவும் உரிமைகளை உடையவன் என்பதை ஏற்கிறதா? இவ்விவாதத்தின் தொடக்கமாக வெளியேறிச் செல்லுமுன், ஜெகோவா எசேக்கியேலுக்கு கூறிய உரைகளைக் குறிப்பிடலாம்:

“அனைத்து ஆன்மாக்களும் என்னவை. பிதாவின் ஆன்மாவும் மகனின் ஆன்மாவும் ஒன்றே, பாவம் செய்யும் ஆன்மா மரிக்கிறது. தந்தையின் பாவத்திற்கு மகன் பொறுப்பல்ல; மகனின் பாவத்திற்கு தந்தை பொறுப்பல்ல; நேர்மையாளனின் நேர்மை அவனுக்கே உரியது – கெட்டவனின் கேடும் அவ்வாறே.''

இங்கு தனிமனிதனின் தனித்தன்மையும் அவனுக்குரிய தார்மிகப் பொறுப்பும் வலியுறுத்தப்படுகிறது. சமூக நோக்கத்திற்கு தனிமனிதனை மய்யப்படுத்தும் முறை இந்து சமூக அமைப்பில் இல்லை. இந்து சமூக அமைப்பு தனி மனிதர்களால் அல்லாமல் வர்க்கம் அல்லது வர்ணத்தின் அடிப்படையில் அமைந்தது. முதலில் இந்து சமூக அமைப்பு நான்கு வர்க்கங்களை அங்கீகரித்தது : 1. பிராமணர் 2. சத்திரியர் 3. வைசியர் 4. சூத்திரர். இன்று அய்ந்து வர்க்கங்கள் உள்ளன. அந்த அய்ந்தாவது வர்க்கத்தினர் பஞ்சமர் அல்லது தீண்டத்தகாதவர் என்று அழைக்கப்படுகின்றனர். இந்து சமூகத்தின் உறுப்பினர் தனி பிராமணரோ, தனி சத்திரியரோ, தனி வைசியரோ, தனி சூத்திரரோ, தனிப் பஞ்சமரோ அல்லர்.

திருமணத்திற்கும், வாரிசுரிமைக்கும் தவிர, ஏனையவற்றிற்கு குடும்பம் கூட, சமூகத்தின் அலகாகக் கருதப்படுவதில்லை. வர்க்கம் அல்லது இந்து சமூகத்தின் வர்க்கத்தைக் குறிப்பிடப் பயன்படும் கலைச் சொல்லாகிய வர்ணமே சமூக அமைப்பின் அடிப்படை அலகாக உள்ளது. இந்து சமூக அமைப்பில் தனிமனிதனின் திறமைக்கு இடமில்லை. தனி மனித நீதிக்கும் இடமில்லை. தனிமனிதனுக்கும் ஏதேனும் உரிமை இருக்குமாயின், அது தனிமனிதர் என்ற முறையில் வந்ததன்று, அவன் சார்ந்துள்ள வர்க்கத்தின் அடிப்படையில் ஏற்பட்டதுதான். தனிமனிதன் ஓர் உரிமையை அனுபவிப்பது அந்தத் தனிவர்க்கத்திற்குரியவன் என்பதால்தான். இதற்கு மாறாக, தனிமனிதன் தவறுபுரிந்து அதனால் துன்புற நேர்ந்தாலும் அது அவனது தனிப்பட்ட நடத்தையால் ஏற்பட்டதன்று. அவன் சார்ந்ததுள்ள வர்க்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள இயலாமையே. அந்த இயலாமையின் காரணமாக ஏதாவது துன்புற நேர்தால் அது அந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான்.

– தொடரும் 

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 3, பக்கம் : 96

Pin It