திராவிடர் கழகம் யாருக்காக இருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்த்தால் தெரியும். அதன் கொள்கை வெற்றி பெற்றால் 100க்கு 95 பேர் எவ்வளவு நலமுடன் வாழ்வார்கள் என்பது விளங்கும். தவிர, நாங்கள் சுயராஜ்யத்திற்காகப் பாடுபடவில்லைஎன்று காங்கிரசார் கூறலாம். இது முட்டாள்தனம். நாங்கள் சுயராஜ்யத்திற்கு விரோதிகளல்லர். ஆனால், சுயராஜ்யத்தில் சூத்திரன், பஞ்சமன்; முகத்தில் பிறந்தவன், காலில் பிறந்தவன் இருக்க மாட்டான்; மனிதன் தான் இருப்பான் என்றால் நாங்கள் உடனே ஒப்புக்கொண்டு வணக்கம் செலுத்துகிறோம். "அது வேறு சங்கதி; இருக்கட்டும்' என்று கூறினால், "அந்த சங்கதியை எங்களிடமே விட்டு விடுங்கள் சுநாங்கள் தீர்த்துவிடுகிறோம்' என்பதாகத்தானே பாடுபடுகிறோம்.

சுயராஜ்யம் வந்து ஒன்றரை ஆண்டாகிறது என்று சொல்லப்படுகிறது. இன்னும் மைசூர் ராஜா சூத்திரர்தானே! ராஜா சர். முத்தையா முதல் ஓமந்தூரார், காமராசர்வரை சூத்திரர்தானே! இல்லையென்று கூறமுடியுமா? நானாவது நாத்திகன்; கடவுளை நம்பாதவன் என்பீர்கள். மகா மகா பக்திமானாகிய சிறீலசிறீ பண்டார சந்நிதியைக் கோயிலில் மணியடித்து, பணத்தை இடுப்பில் செருக விடுவார்களா? விடப்படுகிறதா? அவரும் சூத்திரர்தானே! இதை ஒழிப்பதற்கு இனி வரப்போகும் "அரசியல் நிர்ணய சபை சுயராஜ்யத்தி'லும் ஒரு வரிகூட இல்லையே! இவைகளையெல்லாம் சிந்தித்துப் பார்க்காமல் போடும் சுயராஜ்யக் கூச்சலினால் கண்ட பலன் என்ன?

வெள்ளையன் ஆட்சியிலும் பார்ப்பனர் முன் நின்றார்கள். இப்போதுள்ள சுயராஜ்ய ஆட்சியிலும் பார்ப்பனர் தாங்களே முன் நின்று ராஜாவாகிறார்கள் பார்ப்பன தர்மப்படி. ஆகவேதான், சூத்திரப் பட்டத்தை ஒழித்து எல்லோரையும் மனிதர்களாக்கும் சுயராஜ்யத்திற்காக நாங்கள் பாடுபடுகிறோம்.

சிலர் கூறலாம், "இதெல்லாம் முட்டாள்தனம். பொருளாதாரம் வந்தால் எல்லாம் சரியாகிவிடும்' என்று. மற்றும் சிலர் சொல்லலாம் "படிப்பு வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்' என்று. நான் முன்பு கூறியதுபோல செல்வத்திலும், கல்வியிலும் முன்னிலையில் நிற்கும் ராஜா சர். முத்தையா செட்டியார், சர். ராமசாமி முதலியார், சண்முகஞ்செட்டியார், மறைமலை அடிகள், "சீப்ஜட்ஜ்' ராஜமன்னார், "சீப்மினிஸ்டர்' ராமசாமி ரெட்டியார், பாரிஸ்டர் எத்திராஜ் போன்றவர்கள் சூத்திரர்கள் அல்லவா? எனவே கல்வி, பொருளாதார உயர்வு, அறிவு, ஆராய்ச்சி, திறமை ஆகிய எதுவுமே சூத்திரப் பட்டத்தை சமுதாய இழிவை ஒழிக்கவில்லையே! ஆதலால், சமுதாய அமைப்பை அறவே ஒழித்தால்தான் மக்கள் அனைவரும் சரிநிகர் சமானமாக சம சந்தர்ப்பத்துடன் வாழ முடியும் என்றே திராவிடர் கழகம் கூறுகின்றது.

இந்த முயற்சிக்காகத்தான் திராவிடர் கழகம் பாடுபடுகிறது. இவ்விதம் தொண்டாற்றி வரும் எங்கள்மீது கம்யூனிஸ்டுகள், காங்கிரசார், சோஷலிஸ்டுகள், "புரொக்கரஸிவ் பார்ட்டி', "நேஷனல் பார்ட்டி', இந்து மகா சபை, ஆர்.எஸ்.எஸ். ஆகியோர் சீறி விழுவதா? இவர்கள் பிழைப்பில் இடைமறித்தோமா? அல்லது இதன் மூலம் பிழைக்கிறோமா? இதன்மூலம் பொருள் தேடுகிறோமா? எங்கள் வீட்டுச் சோற்றைதின்றுவிட்டுத்தானே தொண்டாற்றுகிறோம்? இவர்கள் யாரிடமும் நாங்கள் ஒரு காசுகூடப் பெறவில்லையே?

கடவுளிடம்தான் எங்களுக்கு என்ன தொல்லை இருக்கிறது? எங்களுக்குப் பிடிக்காத எங்களைச் சூத்திரனாக்கிய கடவுளைக் குறைகூறுகிறோம். கடவுளிடம் தினசரி பேசுகிறவர்களையே கேட்கிறேன் கடவுள் என்பவர் உழைப்பவனை, நாட்டுக்கு உரிமை உடையவனைக் கீழ்ச்சாதியாகவும்; உழைக்காதவனை நகத்தில் அழுக்குக்கூட சேராமல், எதைப்பற்றியும் கவலை இல்லாமல் இருப்பவனை மேல் சாதியாகவும் வைத்திருப்பாரா? அல்லது எங்கும் நிறைந்தவர் சாதியை அழித்துவிடத்தான் முடியாதா? எனவே, கடவுள் பித்தலாட்டங்களையும் அதற்காகக் கற்பிக்கப்பட்ட மூடப் பழக்க வழக்கங்களையும், அவை பற்றிய புராண இதிகாசமென்னும் குப்பைகளையும் நாங்கள் குறைகூறுகிறோமே யல்லாது வேறு என்ன செய்கிறோம்?

"நான் ஏன் சூத்திரன்?' என்று கேட்டால், "அது பகவான் செயல்' என்று கூறப்படுகிறது. அப்போதுதான் நாங்களும் கூறவேண்டியிருக்கிறது "கொடு, அந்த பகவானுக்கு இரண்டு உதை; எல்லாம் சரியாகி விடுகிறது' என்று. அரசாங்கத்தின் பேரால்தான் பித்தலாட்டம் நடக்கிறது. பகவான் பேராலாவது அறிவுரை இருத்தல் வேண்டாமா? பகவான் பேரிலுமா இன்னும் பித்தலாட்டங்கள் என்று கேட்கிறேன்.

– தொடரும்

(சென்னை பெத்துநாயக்கன் பேட்டையில் சொற்பொழிவு "விடுதலை' 14.11.1948)

Pin It