தலித் முரசின் 15 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை ஒரு மாதம் கூட இதழ் வெளிவராமல் இருந்ததில்லை. ஆனால், தற்பொழுது மூன்று மாதங்களாக இதழ் வெளிவருவது தடைபட்டுவிட்டது. இதற்கு கடும் நிதி நெருக்கடிதான் காரணம்; எனினும் இதற்கான வருத்தத்தை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். இதழ் நின்றுவிடும் ஆபத்து பற்றி நாம் இடையறாது சுட்டிக்காட்டியும் நிதி திரட்டுவதற்கான ஆதரவைப் போதிய அளவு பெற இயலவில்லை. இருப்பினும் இதழ் தொடர்ந்து வெளிவர வேண்டிய அவசியத்தை கடந்த மூன்று மாதங்களாக நாள்தோறும் தொலைபேசி வாயிலாகவும் நேரிலும் வலியுறுத்தி, அதற்கான உத்வேகத்தை அளித்து வந்த வாசகர்களுக்கு நன்றி. தற்பொழுது பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் 2012 இதழ்களை (2004 முதல் 2010 வரையிலான தொகுப்பு) ஒரே நேரத்தில் வெளியிடுகிறோம். இனிவரும் காலங்களில் இதழ் வெளிவருவது தாமதமானாலும் ஓரிதழ்கூட நின்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். வாசகர்கள் தங்களின் ஆதரவை தொடர்ந்து அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

"தலித் முரசு' வெளிவராதது குறித்து வாசகர்களைத் தவிர தலித் இயக்கங்களோ, கட்சிகளோ, தலித் (எஸ்.சி. எஸ்.டி.) நலச்சங்கங்களோ கவலை கொள்ளவில்லை. அவர்களுடைய நோக்கங்களை இதழ் நிறைவு செய்யவில்லை என்பதுதான் இதற்கான முக்கியக் காரணம். கட்சி, இயக்கம் மற்றும் சங்கங்களைச் சார்ந்து வெளிவந்தால் இதழை நிதி நெருக்கடியின்றி வெளியிட முடியும் என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் அவற்றின் நோக்கங்களும் செயல்திட்டங்களும் வேறாக இருக்கின்றன. இன்றைய தேர்தல் அரசியல் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றி, தலித் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்துவிட முடியும் என்று அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

அறுபது ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் பெறப்பட்ட (சட்டமன்ற / நாடாளுமன்ற) தலித் அதிகாரம், தன்னளவில் இம்மக்களை அதிகாரப்படுத்திவிடவில்லை. தலித் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களால் இதுவரை இம்மக்களின் இன்னல்களும் இழிவுகளும் துடைத்தெறியப்பட்டுள்ளனவா? கோரிக்கைகளை வலியுறுத்துவதற்கும் குறைகளை சற்று நேரம் முறையிடுவதற்குமான ஏற்பாடேயன்றி வேறென்ன? அந்தந்த கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு அந்த அதிகாரமும் கிடையாது. மேலும், அரசியல் அதிகாரம் மத – ஜாதிய அதிகாரத்தின் முன்பு கூனிக் குறுகி நிற்பதோடு, அது ஊழலுக்கும் சுயநலத்திற்கும் வழி வகுப்பதை யார் மறுக்க முடியும்?

எனவேதான், சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதை நாம் இலக்காகக் கொண்டிருக்கிறோம். ஜனநாயகமிக்க சமூகத்தை உருவாக்க விழைகிறோம்; அதிகாரமிக்க சமூகத்தை அல்ல. சமூக, மத, பண்பாட்டுத் தளங்களில் நம்மை அதிகாரமற்றவர்களாக வைத்திருக்கும் இந்து மதக் கருத்தியலையும் சாதிய சமூக அமைப்பையும் கேள்வி கேட்காமல், அரசியல் அதிகாரத்தை மட்டும் எப்படி கைப்பற்ற முடியும்? நம் துன்பங்களுக்குக் காரணமான சாதிய சமூக அமைப்பை அழித்தெõழிக்காமல், அதிகாரத்தை பெறப் போராடுவது முரண்பாடானது.

டாக்டர் அம்பேத்கர் தமது இறுதிச் செய்தியில், “என் மக்கள் பயணிக்கும் இச்சமூகத் தேரை மிகுந்த இன்னல்களுக்கிடையே தற்பொழுது இருக்கும் இடத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறேன். வழியில் வரும் தடைகளையும் மேடு பள்ளங்களையும் சிரமங்களையும் பொருட்படுத்தாமல் இச்சமூகத் தேர் முன்னேறிச் செல்லட்டும். என் மக்களும் என் இயக்கத்தினரும் இச்சமூகத் தேரை இழுத்துச் செல்ல முடியாது போனால், அது தற்பொழுது எங்கே நிற்கிறதோ, அங்கேயே விட்டுவிட்டுச் செல்லட்டும். ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் அந்த சமூகத் தேரை பின்னோக்கித் தள்ளிவிடாதீர்கள்'' என்று குறிப்பிட்டார்.

அம்பேத்கர் பெருஞ்சிரமங்களுக்கிடையில் இழுத்து வந்த இச்சமூகத்தேர் பற்றி எத்தனைப் பேருக்கு தெரியும்? இது குறித்த விவாதங்களை கட்சிகளோ, இயக்கங்களோ, அமைப்புகளோ மேற்கொள்கின்றனவா? அம்பேத்கரின் கொள்கைகளை விவாதிக்கவும் அதன் அடிப்படையில் செயல்திட்டங்களை வகுக்கவுமே "தலித் முரசு' செயலாற்றுகிறது. ஜாதிகளாலான சமூகத்தை தகர்த்து சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தின் அடிப்படையிலான சமூகத்தை உருவாக்கும் பணியை எந்த எதிர்பார்ப்புமின்றி செய்கிறோம். இன்று அம்பேத்கரின் லட்சியத் தேர், அவர் விருப்பத்திற்கு மாறாக பின்னோக்கி இழுக்கப்பட்டு வருகிறது. முன்னோக்கிச் செல்லாவிட்டாலும் குறைந்தளவு அந்த இடத்திலேயே அதை நிற்க வைக்கும் கருத்தியல் போராட்டத்தையே நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த உன்னதப் பணிக்கு யார் சார்பாக இருக்கிறார்கள் என்பதுதான் கேள்வியே தவிர, இதைச் செய்யாதவர்களை நாம் எப்படி சார்ந்திருக்க முடியும்?

Pin It