சனவரி

பள்ளர்களின் ஜாதிவெறி!

தலித் அரசியலுக்கும், போராட்டத்திற்கும், ஒற்றுமைக்கும் மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் உட்சாதி மோதல் குறித்து விவாதிக்க இன்றுவரை யாரும் தயாராக இல்லை. சாதி என்ற சமமற்ற சமூக அமைப்பின்மீது கட்டப்படும் செயல் திட்டங்களும், ஒற்றுமையும் ஒருபோதும் நிலைத்து நிற்காது. அது, சாணிக் குவியலின் மீது கட்டப்படுவதற்கு ஒப்பானது. ஆம், இது உட்சாதிக்கும் அப்படியே பொருந்தி வருகிறது. இத்தகைய சாதிக் கொடுமைகள் நடைபெறும்போது, அதை மறைக்காமல் அதற்கு எதிராக உரத்துக் குரல் எழுப்புவதும், பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பதும்தான் சரியான தலித் பார்வையாக இருக்க முடியும்.

"சாதி நீடிக்கும்வரை இந்தியா ஒரு தேசமாக முடியாது' என்றார் அம்பேத்கர். இது, உட்சாதி அரசியலுக்கும் அப்படியே பொருத்தி வருகிறது. உட்சாதி எண்ணங்கள் நீடிக்கும்வரை, நாம் ஒற்றுமை குறித்து எப்படிப் பேசமுடியும்? தீண்டத்தகாத சமூகங்கள் ஒன்றிணைய முடியாது என்று விவாதிப்பதன் மூலம், நமது உரிமைகளையும் விடுதலையையும் தள்ளிப்போடலாமே தவிர வேறு எதையும் சாதிக்க முடியாது.

– தலையங்கம்

பறிபோகும் பச்சை பூமி

உச்சிமலைத் தேனும் உழைப்பில் விளைந்த திணையும் அவர்கள் உயிர் வாழப் போதுமானதாக இருந்தது. வெயில், மழை, குளிரிலிருந்து இழுத்துப் போர்த்தின மூங்கில் குடில்களே மகிழ்ச்சியின் மாளிகைகள். மெல்லுயிர்கள் அவர்களைக் கண்டு ஒதுங்கி ஒளிய, வல்லுயிர்களைக் கண்டு அவர்கள் பதுங்கினர். இந்த விளையாட்டே வாழ்வதற்கான ஆதாரமாக இருந்தது.

புதர் மண்டிக்கிடந்த நிலங்களை கைகளாலேயே செப்பனிட்டுப் பயிர் வளர்த்தனர். மனசாரத் தூவிய விதையெல்லாம் மண்மேல் செழித்து உயிர் வளர்த்து கண்முன்னே கைக்கெட்டிய தூரத்தில் நிறைந்து கிடந்தாலும் இயற்கையின் எந்த வளத்தையும் படைப்பையும் அவர்கள் சுரண்டத் துணியவில்லை. உணவு, உடை, உறைவிடம், இசை, மருத்துவம்... என எல்லா தேவைகளையும் நம்பிக்கைகளையும் உருவாக்கித் தந்தது இந்தக் காடுதான். உழைப்பு, நேர்மை, அன்பு மூன்றையும் வாழ்க்கைத் தத்துவமாகக் கற்றுத் தந்த கானகத்தைக் காணவில்லை. எஞ்சியிருப்பதும் அவர்களுக்கானதாக இல்லை. வனத்தின் அடையாளங்களை இழந்து அவர்கள் தவிப்பதைப் போலவே, வனமும் நிச்சயம் அவர்களின்றி திணறுகிறது.

– ஜெனிபர்

பிப்ரவரி

சுனாமியும் அழிக்கவில்லை ஜாதியை

லட்சக்கணக்கானோரைக் கொன்று குவித்திருக்கிறது கடல். அலை மடியில் விளையாடிக் கிடந்தவர்களின் பிணங்களைக் கூட காணவில்லை. வயிற்றுக்கு வாரி வாரித் தந்த இயற்கை ஒரேயடியாய் வயிற்றிலடித்தது சுனாமி உருவில்.

உறவுகளைப் பறிகொடுத்து, உடைமைகளை இழந்து தவிப்பவர்களில் பாரபட்சம் காட்ட என்ன இருக்கிறது? எல்லோர் சிந்தியதும் சிவப்பு ரத்தம். எல்லோர் விழிகளிலும் உப்புக் கண்ணீர். ஆனால், அங்கும் தலைவிரித்தாடுகிறது ஜாதி. பாதிக்கப்பட்ட மீனவ சமூகத்தினர், பாதிக்கப்பட்ட தலித் மக்களை சேர்த்துக் கொள்ளாமல் ஓட ஓட விரட்டுகின்றனர். நிவாரணம் எதுவும் தலித் மக்கள் கைகளில் கிடைத்துவிடாதபடி தடுக்கின்றனர். இந்தக் கொடுமைகளை நேரடியாகப் பார்த்தபோது, சுனாமியால் கூட அழிக்க முடியாத ஜாதியின் கொடூரத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.

- பூவிழியன்

நம்முடைய செயற்கைக் கோள் ஆய்வுகள் சொல்லியிருப்பது என்னவென்றால், அடர்ந்த வனங்கள் என்பதே 8 சதவிகிதம்தான் இருக்கிறது. 33 சதவிகிதம் வனங்கள் இருந்தால்தான் இயற்கைச் சூழல் பாதுகாக்கப்படும். அடர்ந்த வனங்கள் என்பது 8 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. காட்டில் வாழ்வது பழங்குடி மக்கள்தான். வனத்தை அவர்களிடம் ஒப்படைத்தால்தான் அந்த வனத்தைப் பாதுகாக்க முடியும். இல்லை என்றால் காடுகள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். – வி.பி. குணசேகரன்: "பழங்குடியினரின் வாழ்க்கையை ஆய்வுக்கு உட்படுத்துங்கள்'

ஏப்ரல்

தலித்தியம்: தமிழ்த் தேசியத்தின் துணைத் தேசியம்

மராட்டியத்தில் தலித் உணர்வு என்பது, ஆதிக்க சாதிப் பார்ப்பனியத்தின் எதிர்வினையாக எழுந்தது. தமிழ்நாட்டில் தலித் உணர்வு, நடுச்சாதிகளின் பார்ப்பனியத்திற்கு எதிர்வினையாகக் கிளர்ந்திருக்கிறது. ஒன்றரை கோடி தலித்துகளை ஒதுக்கிவிட்டு, ஒடுக்கிவிட்டு, எஞ்சிய தமிழர்களைக் கொண்டு தமிழ்த் தேசிய இன உருவாக்கம் காண்பது,

எத்தனை நூறாண்டானாலும் இயலாது. தொல்குடி மக்களான ஆதித்தமிழர்கள்தாம் தமிழ்த்தேசக் கட்டுமானத்தின் அஸ்திவாரமாக இருக்க முடியும். அவர்களை விலக்கிவிட்டுத் தமிழ்த் தேசமுமில்லை; தமிழ்த் தேசியமுமில்லை.

 – தணிகைச் செல்வன்

மும்பையை "அழகுபடுத்த' துரத்தப்படும் சேரி மக்கள்

நூறாண்டுகளுக்கு ஒரு முறை தாக்கக் கூடிய அல்லது தாக்காமலேயே இருந்து விடக்கூடிய இயற்கைச் சீற்றங்களை சமாளிக்க வல்ல சமுதாயத்தை உருவாக்க இந்திய மேல்தட்டு மக்கள் விரும்புகின்றனர். ஆனால், இயற்கைச் சீரழிவுகளின்றி, வேறு காரணங்களால் ஏற்படும் துன்பங்களைப் போக்க யாரும் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. மனிதனின் கொள்கைகளாலும், செயல்பாடுகளினாலும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருவதைக் குறித்து யாரும் கவலைப்படவில்லை. நீங்கள் ஆப்பிரிக்க – அமெரிக்கராக இருந்தால், பெரும்பாலும் சிறைக்குச் செல்ல நேரிடும்; வாக்குரிமையை இழக்க நேரிடும். ஆப்பிரிக்க – அமெரிக்கர் என்ற இடத்தில் ஏழை என்ற சொல்லை மாற்றீடு செய்யுங்கள். இந்தியாவின் மேல்தட்டு மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள்.

– பி. சாய்நாத்

மே

தலித்துகளை இழிவுபடுத்தும் இலக்கியங்களை அனுமதியோம்

ஒடுக்கப்பட்ட மக்கள் இழிவானவர்கள், அருவருப்பானவர்கள், நேர்மையற்றவர்கள், ஒழுக்கக் கேடானவர்கள், திறமையற்றவர்கள் என்பன போன்ற ஆதிக்கக் கருத்தியல்கள் தொடர்ந்து நிலைப்படுத்தப்படுகின்றன. இதற்கு மிகச் சமீபத்திய எடுத்துக்காட்டாக "காலச்சுவடு' மாத இதழ் 62இல் வெளிவந்த சுந்தர ராமசாமியின் "பிள்ளை கெடுத்தாள் விளை' என்ற சிறுகதையைக் கூறலாம். இக்கதை, தலித்துகள் மீதான ஒரு பச்சாதாபப் போலி மனிதாபிமான குரலைக் கொண்டிருக்கிறது. அக்கதையில் பாதிக்கப்பட்டவராக வரும் தாயம்மாவினுடைய தன்னிலைக்குரல் முடக்கப்படுகிறது.

தலித் பெண்களின் ஒழுக்கத்தையும், நேர்மையையும் இழிவுபடுத்தும் கருத்தை அது வெளிப்படுத்துகிறது. திட்டமிட்டு கதை வடித்து, தலித் மக்களைக் கொச்சைப்படுத்தும் சுந்தர ராமசாமியையும், இக்கதையை வெளியிட்ட "காலச்சுவடு' இதழையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். சுந்தரராமசாமியும் "காலச்சுவடும்' பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில், கதையில் பேசப்பட்டுள்ள செய்திகளின் அடிப்படையில், சுந்தர ராமசாமி மீது "தாழ்த்தப்பட்டோர் – பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட'த்தின் கீழ் வழக்குத் தொடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கிறோம். – கண்டனத் தீர்மானம்

பீடங்கள் பறிபோகின்றன; பதற்றத்தில் பார்ப்பனர்கள்

பார்ப்பனரல்லாத, தலித் அல்லாத சாதி இந்துக்களை மட்டுமே இச்சமூகத்தின் எதிரிகளாக முன்னிறுத்தி, தலித் – பார்ப்பனக் கூட்டணியை வலியுறுத்தும் சூழ்ச்சியின் நீட்சியே ஆனந்தின் இந்தக் கட்டுரை. பெரியாரையும் அதன் வாயிலாக பிற்படுத்தப்பட்டோரையும் தலித் மக்களுக்கு எதிரானவர்களாக சித்தரித்துப் பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் "ஆனந்த்' கூட்டணி எய்திருக்கும் அம்புதான் பார்ப்பனர்களை தலித்துகளோடு ஒப்பிட்டு சுய பச்சாதாபம் தேடும் இந்த முயற்சி.

– ஜெனிபர்

சூன்

தேவாலயத்தில் ஜாதிவெறி

கடவுளின் பெயரால்... தலித் மக்களுக்கு எதிராக மநுதர்மம் வகுத்து வைத்திருக்கும் அயோக்கியத்தனமான விதிகள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன. உலகின் எந்த மதத்துக்கும் மக்களுக்கும் சாத்தியப்படாத சாதி என்னும் இனப்பாகுபாபட்டுக் கொடுமையை, இந்து மதத்தின் கொடி தூக்கிகளான பார்ப்பனர்கள் இங்கு வலுப்பெறச் செய்தனர். மூட நம்பிக்கை மயக்கங்களிலிருந்து வெளியேறுவதற்கான அறிவை நாம் எட்டுவதற்குள் எல்லாம் நடந்து முடிந்திருந்தது.

காற்று, ஒலி, ஒளியைப் போல ஜாதியும் இங்கு இயற்கை ஆக்கப்பட்டிருக்கிறது. சாதியின் வேர்கள் மேலும் அகலமாகவும், ஆழமாகவும் ஊன்றி பலமடைவதைத் தடுக்கவே இந்து மதத்துக்கு எதிரான பிரச்சாரங்களை நாம் தீவிரப்படுத்த வேண்டியிருந்தது. ஆனால், இந்து மதமும் பார்ப்பனியமும் கண்ட அதிவேக வளர்ச்சிக்கு முன் எதிர்ப்பிரச்சாரங்கள் நிற்கக் கூட முடியவில்லை என்பதுதான் நடைமுறை உண்மை. எல்லாம் "இந்துமயமாதல்' என்பதன் நீட்சியாகவே கிறித்துவத்தில் சாதியைப் பார்க்க முடிகிறது.

– ஜெனிபர்

“சமத்துவமின்மையும், சமூக அநீதியும் சூழ்ந்திருக்கும் இந்நேரத்தில், சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலானது அவர்கள் எதிர்காலத்தில் அதிகாரப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது. தங்களை அதிகாரப்படுத்துவதற்காக அவர்கள் நடத்தும் போராட்டம், இந்தியாவை அதிகாரப்படுத்துவதற்கானப் போராட்டமாகும்.'' – கே. ஆர். நாராயணன் : "இந்நாட்டு மக்களுக்கு டாக்டர் கே.ஆர். நாராயணன் விடுத்த இறுதிச் செய்தி' 

சூலை

கண்டதேவி சூழ்ச்சி

கண்டதேவி மாதிரியான தேர்வடப் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு இந்து மதத்தை விட்டு வெளியேறுவதுதான். அதில் வன்முறைக்கு இடமில்லை; அம்பேத்கர் வழிகாட்டுதலிலான சட்ட ரீதியான நடைமுறைத் தீர்வு இது. கோயிலுக்குள் நுழைவதும் வடம் பிடிப்பதும் தலித் மக்களின் உரிமை என்ற அடிப்படையில்தான் இவ்வளவு பிரச்சனைகள். தலித் கட்சிகளும் இயக்கங்களும்கூட அந்த உரிமையை (!) வலியுறுத்துகின்றன. மண்ணுரிமை கேட்கிறோம், பொது இடங்களில் உரிமை கேட்கிறோம், பொது வளங்களில் பங்கு கேட்கிறோம், அரசுத் துறைகளில் ஒதுக்கீடு, அரசியல் – சமூக அங்கீகாரம் கோருகிறோம். இந்நாட்டு குடிமக்கள் என்ற அடிப்படையில் மேற்கூறிய உரிமைகளைக் கேட்பதற்கும் பெறுவதற்கும் தலித் மக்களுக்கு முழு உரிமை உண்டு.

– ஜெனிபர்

கூடா நட்பு...

உத்திரப் பிரதேசத்தில் ஏறக்குறைய 26 மாவட்டங்களில் கடந்த நான்கு மாதங்களாக சுற்றுப்பயணம் செய்து, 50 "பிராமண சமாஜ் மகர சம்மேளன'ங்களை மாயாவதி நடத்தி இருக்கிறார். இதன் நிறைவு மாநாடு 9.6.2005 அன்று இம்மாநிலத் தலைநகரான லக்னோவில் நடைபெற்றது. இம்மாநாட்டை நடத்திய அவருக்கு பார்ப்பனச் சடங்குகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பார்ப்பனர்கள் சூழ்ந்து நிற்க, வேத மந்திரங்கள் ஓதப்பட்டுள்ளன.

"தலித் – பார்ப்பனர் கூட்டணி' என்பதெல்லாம் வளர்ந்துவரும் தலித் இயக்கங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கான சதித் திட்டமே. "பிற்படுத்தப்பட்டவர்கள்தான் நம் எதிரிகள்; நம்முடன் இணையும் பார்ப்பனர்களைப் புறந்தள்ளுவது அறிவீனம்' என்றெல்லாம் அறிவுஜீவிகள் பல்வேறு விளக்கங்களை அளிக்கலாம். இந்த "ஆரிய மாயை'களைக் கண்டு ஏமாறாமல் அம்பேத்கரின் துணை கொண்டு, தலித் இயக்கங்கள் தங்களின் செயல்திட்டங்களையும் கொள்கை முடிவுகளையும் தொலைநோக்குடன் செப்பனிட்டுக் கொள்ள வேண்டும். நம்முடைய இழிவுக்கும் கொடுமைகளுக்கும் மூல காரணமான இந்து மதத்தின் பாதுகாவலர்களாக இருப்பவர்கள் பார்ப்பனர்களே! விழிப்புணர்வற்ற பிற்படுத்தப்பட்ட மக்களும், தலித்துகளும் இம்மதத்தின் பாதந்தாங்கிகளாகவே உள்ளனர். எனவே, இதில் யாரை எதிர்ப்பது, யாருடன் கூட்டுச் சேர்வது என்பதில் குழப்பங்கள் தேவையற்றது. புத்தர் இயக்கத்தை ஆரியம் ஊடுறுவி அழித்த சூழ்ச்சியை, நாம் ஒரு போதும் அலட்சியப்படுத்திவிடக் கூடாது. கூடா நட்பு கேடாய் முடியும்.

– தலையங்கம்

ஆகஸ்ட்

வீரஞ்செறிந்த பனையடிக்குப்பம் மக்கள்

மக்களின் கிளர்ந்தெழுந்த போராட்டத்தின் மூலமே உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பது வரலாறு நமக்குச் சொல்லும் பாடம். ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட வரலாறு இன்னமும் முடிந்தபாடில்லை. அவர்களின் போர்க் குணமும் சற்றும் குறையவில்லை. மாறாக, அது கூர்மை பெற்றிருக்கிறது என்பதற்கு சாட்சியாகத் திகழ்கின்றன – பனையடிக்குப்பம், வீராணம் மற்றும் சொரப்பூர் கிராமங்கள். புதுவை மாநிலம் பாகூர் கொம்யூனைச் சேர்ந்த கிராமம் பனையடிக்குப்பம். அந்தக் கிராமத்தை ஒட்டியவாறே இரு புறமும் இருக்கின்றன – தமிழகத்தைச் சேர்ந்த கிராமங்களான வீராணமும் சொரப்பூரும். இந்த கிராமங்களின் பெயர்கள் வெளி உலகிற்குத் தெரிய வந்தது 1989 இல்தான்.

பூங்குழலி

செப்டம்பர்

தொலைக்கப்பட்ட சீக்கியர்கள்

பஞ்சாபில் நடைபெற்ற காலிஸ்தான் தனி நாட்டிற்கானப் போராட்டத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சீக்கியர்களையே "குற்றப்பரம்பரை' போன்று சித்தரித்து சட்டத்திற்குப் புறம்பாகக் கொன்று குவித்ததை மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்த அறிக்கையில் வெளிக் கொணரப்பட்டது, உண்மையில் நடந்ததில் 10 சதவிகிதம் கூட இல்லை என்பதுதான் மிகவும் வேதனைக்குரியது. இப்படி வெளி வந்த சம்பவங்களில்கூட அரசாங்கம் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த அறிக்கையில் குறிக்கப்பட்ட 838 வழக்குகளிலும், இது நாள் வரையில் ஒருவர் கூட தண்டிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.

– கோ. சுகுமாரன்

அக்டோபர்

ஆதிக்கம் – ஆபாசம் – ஆண்கள் : அமைதி காக்கலாமா பெண்கள்?

ஜனநாயகத்துக்கு எதிரான ஆதிக்கவாதிகளையும் "ஒழுக்கக் காவலர்'களையும் கண்டிக்காமல் வளரவிட்டோமானால், பெண் விடுதலையும் அதனால் சமூக விடுதலையும் வேரோடு அழித்தொழிக்கப்பட்டுவிடும். இதுகாறும் வளர்த்தெடுக்கப்பட்ட பகுத்தறிவும், பெண் சுயமரியாதையும் மிக வேகமாக பொசுக்கப்படுகிறது. இதற்கு அனைத்துத் தரப்பு ஆண்களும் கூட்டு சேர்ந்திருக்கிறார்கள். ஆக, இங்கு ஒன்றிணைய வேண்டியது பெண்கள். ஆதிக்கம் – ஆபாசம் – ஆண்கள் இம்மூன்றுக்கெதிராகவும் ஒரு நிலையான போராட்டத்தைப் பெண்கள் உடனே தொடங்க வேண்டியிருக்கிறது. இல்லையெனில், தமிழ்க் கலாச்சாரம் என்ற பெயரில், இந்து மதக் கற்பிதங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, தன் கொடிய கால்களால் இந்தச் சமூகத்தைப் புரட்டி எடுக்கும். அந்தத் தாக்குதலில் மிகக் கொடூரமாக பலியாகப் போவது தலித் மக்களும் பெண்களும்தான்.

– ஜெனிபர் 

நவம்பர்

நெடும் போராட்டம்

மனித உரிமை மீறல் குற்றங்கள் நடைபெறும்போதெல்லாம் அதிகாரத்தைக் கைப்பற்ற போட்டிப் போடும் பெரிய அரசியல் கட்சிகள், தங்களுக்கு அப்பிரச்சனையில் துளியும் தொடர்பில்லாதது போல ஒதுங்கி நிற்கும் அவலம் தொடர்கிறது. ஆனால், அரசியல் கட்சிகளுக்கு மக்களின் கண்ணீரைத் துடைக்கும் கடப்பாடு உள்ளது. இப்போதாவது அவை பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்க முன் வரவேண்டும். "ஒர்க்ஷாப்' உள்ளிட்ட அதிரடிப்படையினரின் பழைய சித்திரவதை முகாம்கள், இட்லரின் நாஜி வதை முகாம்கள் நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டது போல மாற்றப்பட வேண்டும்.

– ச. பாலமுருகன்

மரண தண்டனை

மரணம் மதிப்புடையதாக இருக்க வேண்டும். தீர்மானிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் மரணமே கொலை. நீதியை நிலைநாட்ட, அரசும் நீதி அமைப்புகளும் செய்யும் கொலையை "மரண தண்டனை' என்கிறது இந்திய அரசியல் சாசனம். எந்த உயிரையும் பறிக்கும் அதிகாரம் அரசுக்கும் நீதி அமைப்புகளுக்கும் கூடாது என்பதே மனித உரிமையின் அடிப்படை. காட்டுமிராண்டிக் காலத்தில் நிலவிய "பழிக்குப் பழி' தற்பொழுதும் பின்பற்றப்படுவது மனித நேயத்தைக் குழிதோண்டிப் புதைக்கிறது. சமூகச் சூழ்நிலையில் நிகழ்த்தப்பட்ட ஒரு குற்றத்திற்காக, சிறைக் கொட்டடியில் சட்டப்பூர்வமாக இன்னொரு குற்றம் நிகழ்வதை ஏற்க முடியாது. மரணத்தை எதிர்கொண்டே வாழும் சமூகத்திற்கு, மரணத்தை தண்டனையாக வழங்குவது ஒழிக்கப்பட வேண்டும்.

– கோ. சுகுமாரன்

டிசம்பர்

அழித்தலும் திமிறி எழுதலும்

தலித் இலக்கியங்களைத் தள்ளி வைப்பதன் மூலம் தலித் அல்லாதவர்களுக்குத் தேவையான சித்தாந்தங்களை உருவாக்கவும், காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய காலத்தின் அடிப்படையில் கருத்துகளைத் தோற்றுவிக்கவும் காரணிகள் உருவாகலாம். ஆனால், இந்தத் தள்ளிவைப்பு அல்லது புறக்கணிப்பு என்பது நீடிக்கும்வரை அவர்கள் உருவாக்குகின்ற சித்தாந்தங்களும் கருத்துகளும் முழுமை பெறாத ஓர் அரைகுறைதான். இந்த இந்தியாவைப் போல! – அலோக் முகர்ஜி

“தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் மற்ற சமுதாயங்களுக்கு எவ்வளவு உரிமை உண்டோ அத்தனையும் சக்கிலியர் சமூகத்திற்கும் உண்டு. இவர்களில் பலர் இருமொழி பேசுவோர். இதுகுறித்து அவர்களை தமிழரல்லர் என்று கூறுவது தவறு. ஏனைய தமிழருக்கு இல்லாத கூடுதல் திறமை இது. அவர்கள் இருமொழி பேசுவதால் தமிழில் அவர்களுக்குள்ள திறமை பிறரை விட சற்றும் குறைந்ததல்ல.'' – ஞான. அலாய்சியஸ் "சமத்துவ சமூகத்திற்கு எதிராகவே தேசியம் உருவாக்கப்பட்டது'

சாதி அமைப்பு என்ற அடித்தளத்தின் மீதுதான் மலத்தை கையால் அள்ளும் கொடிய வழக்கம் நிலைத்து நிற்கிறது. தீண்டாமை, தூய்மை – மாசுபாடு, தர்மம், தலைவிதி என்று சாதி அமைப்பு தோற்றுவித்த நம்பிக்கைகளின் மிக மோசமான வெளிப்பாடே கையால் மலமள்ளுவது. சாதி அமைப்புக்கும் கையால் மலமள்ளுவதற்கும் தொடர்பில்லை என்று சாதி இந்துக்கள் மறுக்கலாம். இந்த அமைப்பில் இருக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகளில் இதுவும் ஒன்று என அவர்கள் வாதிடலாம். படிநிலைப்படுத்தப்பட்ட சாதி அமைப்பைத் தகர்க்காமல், கையால் மலமள்ளுவதை ஒழிக்கவே முடியாது என்பதை நான் தெளிவாகப் புரிந்து கொண்டேன். – பெசவாடா வில்சன்: "இந்தியா நாறுகிறது'

Pin It