சனவரி

தம்மத்தின் அடிப்படை

புத்த தம்மத்தின் அடிப்படையான கொள்கைகள் என்ன? அவருடைய சிறப்பு என்ன? இந்தக் கேள்விகளைப் புரிந்து கொள்ளாமல் புத்தரின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியாது. இருப்பினும், இடப்பற்றாக்குறை காரணமாக இதை விரிவாக விளக்க இயலவில்லை. புத்தருடைய காலத்தில், பார்ப்பனியம் மூன்று தூண்களைக் கொண்டிருந்தது:

1. வேதங்கள் புனிதத் தன்மையுடையதாகவும், என்றென்றும் மாறாததாகவும் கருதப்பட்டது 2. யாகம் 3. சதுர்வர்ண தர்மம் (நான்கு வர்ணங்களை அடிப்படையாகக் கொண்ட வர்ணாசிரம தர்மம்). வேதத்தில் எழுதப்பட்டுள்ள அனைத்தும் அது அறிவுக்கு ஏற்புடையதா இல்லையா என்பதெல்லாம் பொருட்டல்ல; அது தவறே இல்லாதது. வேதங்கள் புனிதமானவை என்பதை புத்தர் ஏற்க மறுத்து, அதை முதல் விலங்காகக் கருதினார். வேதங்களை ஏற்பதற்குப் பதில் அதை மறுத்து, அறிவை அடிப்படையாகக் கொண்ட உண்மையை ஒப்புக் கொள்வதே புத்தரின் நிலைப்பாடாக இருந்தது.

– டாக்டர் அம்பேத்கர்

த.மு.எ.ச.வின் சாதிய சாய்வு?

தீரன் சின்னமலை வாரிசு என த.மு.எ.ச.வால் பாராட்டுப் பத்திரம் வாசித்தளிக்கப்பட்ட மோகன் தேவசேனாபதி, ஊரறிந்த சாதி வெறியர். தேநீர்க் கடையில் பெஞ்சில் அமர்ந்து அருந்ததியர் சாதியைச் சேர்ந்த இருவர் தேநீர் அருந்தினார்கள் என்பதற்காகவே அவர்களையும், அச்சமூக மக்களையும் அடித்து நொறுக்கி ஊர்க்கட்டுப்பாடு என்ற பெயரில் துன்புறுத்திய சாதி வெறியர். அவரின் சாதிக் கொடுங்கோன்மையை எதிர்த்து, புரட்சிகர இளைஞர் முன்னணி பெரும் போரட்டம் நடத்தியதுடன் தொடர்ந்து போராடியும் வருகிறது. இவ்விழாவில் த.மு.எ.ச.வைக் கண்டித்து துண்டறிக்கை வழங்கிய பு.இ.மு. தோழர்கள் காவலர் துணையோடு அரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டதுடன், 13 தோழர்கள் கைதும் செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோகன் தேவசேனாதிபதியின் சாதிவெறி அனைவரும் அறிய அம்பலப்பட்டு நிற்கையில், த.மு.எ.ச.வினருக்கு மட்டும் தெரியாமல் போனதன் மர்மம் என்ன?

பிப்ரவரி

ஹாங்காங் மோசடி!

பரந்து விரிந்து திறந்த சர்வதேசப் போட்டியின் காரணமாகப் பொருட்களையும் சேவைகளையும் மிக உயர்ந்த தரத்திலும் மிகக் குறைந்த விலையிலும் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மட்டுமே இறுதியில் எஞ்சி நிற்கும். இத்தகைய போட்டியானது, உலகமெங்குள்ள நுகர்வோர்களுக்குப் பெரும் பயனளிக்கும். இனி இவர்கள் தரம் குறைந்த பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிராது. அவர்களது வாங்கும் சக்திக்கு ஏற்ப மிகச் சிறந்த பண்டங்களையும் சேவைகளையும் மிகக் குறைந்த விலைக்கு வாங்கலாம். ஆனால், உண்மை இதற்கு நேர்மாறானது. தடையற்ற வர்த்தகம் என்பது எங்கும் நடைபெறுவதில்லை. உண்மையான, நியாயமான தடையற்ற வர்த்தகம் என்பது சாத்தியமேயில்லை (வர்த்தகம் என்றாலே அதில் லாபம் அடக்கம் அல்லவா?) ஏற்கனவே கூறியது போல, ஒவ்வொரு நாட்டின் வர்த்தகமும் தொழிலும் ஏதோவொரு வகையான அரசுத் தலையீட்டை எப்போதுமே பெற்று வந்திருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் எல்லா நாடுகளும் அதே போல ஒவ்வொரு நாட்டையும் தனித்தனியாக எடுத்துக் கொண்டால், அதிலுள்ள எல்லா தொழிலாளர்களும் பிற உழைக்கும் மக்களும் தடையற்ற வர்த்தகத்தால் பயனடைவதில்லை.

– எஸ்.வி.ராஜதுரை

கியூபா : உலகின் நண்பன்

எந்த முதலாளித்துவ நாட்டைக் காட்டிலும் எழுத்தறிவு, கல்வி, சுகாதாரம் எனப் பல தளங்களிலும் அதிசயிக்கத்தக்க வளர்ச்சிகளை எட்டி நிற்கிறது கியூப வாழ்க்கை. லத்தீன் அமெரிக்காவின் சராசரி வளர்ச்சி 4 சதவிகிதம் என்றால், கியூபாவின் வளர்ச்சி 11.8 சதவிகிதத்தை எட்டி நிற்கிறது. எங்கும் இல்லாதவாறு சிறு காய்ச்சல் முதல் நுட்பமான அறுவை சிகிச்சை வரை, கியூபா மக்களுக்கு இலவசம்தான். உலகின் தலைசிறந்த மருத்துவர்களும், மருத்துவமனைகளும் கியூபாவில்தான் உள்ளன. புற்றுநோய்க்கு மருந்தைக் கண்டுபிடித்தே தீருவோம் என பிடலின் உறுதியுடன் வருங்கால மனிதகுலத்திற்கான அக்கறையுடனான ஆராய்ச்சிகள் அந்த மண்ணில்தான் நடத்தப்படுகின்றன.

– அ. முத்துக்கிருஷ்ணன்

மார்ச்

எட்டாத எட்டுத் துறைகள்

தமிழ்நாட்டைப் பொருத்த அளவில், பட்டியல் சாதியினத்தவருக்கு இன்றியமையாத இணக்கமாக இருக்க வேண்டிய இந்த எட்டுத் துறைகளைப் பற்றி உலகத்திற்குத் தெரிய வேண்டிய பெரிய உண்மை ஒன்றுண்டு. அது என்னவெனில், 12 லட்சமாக உள்ள அரசுப் பணியாளர்கள் சற்றொப்ப 150 துறை அலகுகளில் (ஈஞுணீச்ணூtட்ஞுணtச்டூ தணடிtண்) உள்ளனர். ஆனால், இவருள் 90 சதவிகித ஊழியர்கள் வெறும் 18 அலகுகளில் பணியாற்றுகின்றனர். இந்த 18 அலகுகளும் எட்டே துறைகளில் அடங்குகின்றன. இந்த எட்டுத் துறைகள் எவை தெரியுமா? இவைதான் பட்டியல் சாதியினர் இனத்தவர் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும், உடல் நலனையும் காக்க வேண்டிய மேற்குறிப்பிடப்பட்ட எட்டுத் துறைகள். இந்த எட்டுத் துறைகளும் பட்டியல் சாதியினருக்கு தமது பணியிடங்களில் என்ன பங்கு தந்துள்ளன? எல்லா துறைகளும் பணியாளர் பட்டியலை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறையாவது வெளியிட வேண்டும் என்பது நடைமுறை. பல துறைகளில் இது செய்யப்படும்போது, இந்த எட்டுத் துறைகளில் ஒரு சில பதவிகளுக்குத் தவிர இந்தப் பணியாளர் பட்டியல் முறையாக வெளியிடப்படுவதில்லை. எங்கெங்கெல்லாம் பணியாளர் பட்டியல் வெளியிடப் படுவதில்லையோ, அங்கெல்லாம் பட்டியல் சாதியினர் கண்டிப்பாக இருட்டடிப்புச் செய்யப்படுவர். அதன்படியே இத்துறைகளில் நடந்து வருகிறது.

– கிருத்துதாசு காந்தி

ஏப்ரல்

மிதந்து வரும் அபாயம்

பத்து லட்சம் மைல்களுக்கு மேல் பயணித்துள்ள கிளெமென்சியே, உலகின் எல்லா பெருங்கடல்களையும் 50 முறை வலம் வந்துள்ளது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கப்பல் ஓய்வு பெற்றது. போர் முடிந்த பிறகு 1997 வாக்கில் அணுகுண்டுகளைச் சுமந்து செல்லும் விமானங்களைக் கையாளுவதற்கான வசதிகள் படைத்த புதிய கப்பல் வரவழைக்கப்பட்டவுடன், கிளெமென்சியே செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அந்தக் கப்பலில் இருக்கும் ஆபத்தான நச்சுத் தன்மையுடைய கழிவுகளை, எப்படிப் பாதுகாப்பாகக் கையாளுவது என்ற நேர்மையான செயல்முறைகளைப் பற்றி யோசிக்காமல், யார் தலையில் அந்தக் கப்பலைக் கட்டலாம் என்று திட்டம் தீட்டியது பிரான்ஸ் அரசு. மேற்குலக நாடுகளைப் பொருத்தவரை, அவர்களின் குப்பைத் தொட்டியாக இருக்கவே இருக்கின்றன மூன்றாம் உலக நாடுகள். எல்லா வசதிகளையும் பணக்கார நாடுகள் அனுபவிக்க, அதன் அவலத்தை ஏழை நாடுகள் சுமக்க வேண்டுமாம்! நம் நாட்டில் இதற்கு எதிராகப் போராடுவோர், "வளர்ச்சிக்கு எதிரானவர்கள்' என முத்திரை குத்தப்படுகின்றனர்.

– அ. முத்துக்கிருஷ்ணன்

தலித் அரசியல் X தேர்தல் அரசியல்

அறிவுஜீவிகளின் எகத்தாளத்தை எதைக் கொண்டும் கட்டுப்படுத்த முடியாது. திருமாவளவனை எப்போது பழி வாங்கலாம் என்று காத்துக் கிடந்தவர்களுக்கு, தற்காலிகமாக ஓர் வாய்ப்பு கிடைத்தது. "தலித் அரசியல் இனி உயிர் பிழைக்காது' என அவர்கள் கொக்கரிக்கிறார்கள். தேர்தல் அரசியலை மட்டுமே ஒட்டுமொத்த தலித் அரசியலாகப் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள், வேறு எப்படி சிந்திப்பார்கள்? சமூகத் தளங்களில் நிலவும் சாதிக் கொடுமைகளைக் கண்டு முகிழ்த்தெழுந்த தலித் இயக்கத்தின் தேவை சாதி ஒழியும் வரை இருக்கவே செய்யும். தலித் விடுதலை அரசியலின் ஒரு பகுதியே தேர்தல் அரசியல். அத்தளத்தில் பங்காற்றுபவர்கள், தேர்தல் அரசியலுக்குரிய சமரசங்களுடனேயே செயல்பட வேண்டியிருக்கிறது. ஆனால், அதை பூதாகரமாக்கி ஒட்டுமொத்த சாதி ஒழிப்பு அரசியலையே கொச்சைப்படுத்துவது, சாதியத்திற்கு ஆதரவாகவே முடியும். 

ஒரு தலித் இயக்கத்திற்கு, தேர்தலைப் புறக்கணித்தாக வேண்டிய சூழல் எழுவது இயல்புதான். ஏனெனில், இந்து சமூக வாழ்வியலில் தீண்டாமை, எந்நேரமும் தீப்பற்றக் கூடிய ஆபத்து உள்ளது. அரசியல் களத்திலும் அது தலித்துகளை வழிமறிக்கும். சமூகப் புரட்சியைக் கையிலெடுத்தாக வேண்டிய நிர்பந்தத்தை அது நம்மீது திணிக்கும். ஏனெனில், "தலித் அரசியல்' என்று சொல்லப்படும் சாதி ஒழிப்பு அரசியல், "தேர்தல் அரசியல்' என்று சொல்லப்படும் சாதிய, மதவாத அரசியலுக்கு நேர் எதிரானது.

– தலையங்கம் 

ஒரு டீக்கடைக்குச் சென்றேன். அந்தக் கடையில் நிறைய இந்து சாமிப் படங்களை கடைக்காரர் வைத்திருந்தார்.அங்கு போனதும், "கல்லா'வில் இருந்தவர் – வாங்க பாய் உட்காருங்க – டேய் பாய்க்கு ஒரு டீ போடு' என்றார். இதைத்தான் மிகப் பெரிய சமூக அங்கீகாரமாக நான் நினைக்கிறேன். இவை எல்லாம்தான் என்னை கொஞ்சம் கொஞ்சமாக பலப்படுத்தியது.

– கொடிக்கால் ஷேக் அப்துல்லா 

எனது விருப்பம் பகுத்தறிவுள்ள மனிதர்களாக எங்கள் வாழ்வை நாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை வேண்டும். எனக்கு நம்பிக்கை இருந்தபோதும், காலம் தெரியவில்லை. எனது நிலைப்பாடு உண்மையைச் சார்ந்தது. இறுதியில் உண்மை வெற்றிபெறும் என்று நம்புகிறேன். கடவுள் எனக்கு துணிவைத் தருகிறார். அதனால் இந்த செயற்கை வழிமுறைகளின் மூலமாகவும் நான் உயிருடன் இருக்கிறேன்.

– இரோம் சர்மிளா

Pin It