சுபேதார் தருமலிங்கம் என்ற கவுதம்

வேலூர் மாவட்டத்தில் தலித் இயக்கம் நெடுநாட்களுக்கு முன்பே வேர் பிடித்திருந்தது. பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி அய்யா அவர்களின் பங்களிப்பு முதல் "செட்யூல்டு காஸ்ட் பெடரேசன்', இந்தியக் குடியரசுக் கட்சி என பல்வேறு இயக்கங்கள் ஆற்றிய அயராத பணிகளால் பல தலித் போராளிகள் உருவாயினர். அதில் முதன்மையானவர் அய்யா சுபேதார் தருமலிங்கம் என்றழைக்கப்பட்ட கவுதம் அவர்கள். ஆற்காடு கோவிந்தம்மாள் – வேலூர் எம்.திருவேங்கடம் இணையருக்கு 16.3.1922 அன்று பிறந்தார்.

Dharmalingam_200பள்ளிக்குச் செல்லும் இளம் வயதிலேயே தீண்டாமைக் கொடுமையை தருமலிங்கம் சந்தித்தார். வேலூர் ரோமன் கத்தோலிக்கப் பள்ளியில் படித்தபோது அங்கு தமிழாசிரியராக இருந்த வரதராஜ (அய்யங்கார்) சிறு தவறுக்குக்கூட "பறையன்களுக்குப் படிப்பு எதற்குடா?' என்று திட்டியதால், வேறு பள்ளிக்குச் சென்று 9ஆவது வகுப்பு வரை படித்தார். தமது 13ஆவது வயதிலேயே (1935) வேலூர் கஸ்பா பகுதியில் சக இளைஞர்களுடன் சேர்ந்து "ஆதிதிராவிட மாணவர் அபிவிருத்தி சங்கம்' என்ற அமைப்பினை ஏற்படுத்தி, முதற்கட்டமாக அப்பகுதி மாணவர்களுக்கு ஊர்ப் பெரியவர்களின் உதவியுடன் இரவுப்பள்ளி நடத்தி வந்தார்.

மாணவர் பருவத்திலேயே தந்தை பெரியாரின் உரைகளாலும் எழுத்துகளாலும் ஈர்க்கப்பட்டு, பெரியாரின் "குடியரசு' வார இதழ், "விடுதலை' நாளிதழ் மற்றும் பிற பகுத்தறிவு நூல்களை வாங்கி, அவர்கள் நடத்திய நூலகத்தில் வைத்துப் படிப்பதும், மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு மற்றும் சமூக நாடகங்களை தம் பகுதியில் நடத்தியதுடன் சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான நாடகங்களில் பெண்ணாக (லலிதா) நடித்து, மக்களிடையே சாதி ஒழிப்பு பரப்புரையில் தீவிரமாக செயல்பட்டார்.

அவர் வாழ்ந்த பகுதியில் இருந்த பெரியவர் ஜெயராமன் என்பவருடன் இணைந்து ஆடு கோழி பலியிடப்படுவதை எதிர்த்து, ஒருமுறை கோயிலுக்குள் மஞ்சள் குங்குமம் பூசப்பட்ட நாய் ஒன்றினை இழுத்துவர, கோயிலில் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தி, தமது பகுத்தறிவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். 1940 ஆம் ஆண்டு தமது பதினெட்டாவது வயதில் பெங்களூரில் இருந்த ராணுவ முகாமில் சேர்ந்து, படிப்படியாக சுபேதாராக பதவி உயர்வு பெற்றார்.

ராணுவப்பணியில் 5 ஆண்டுகள் மியான்மரிலும் (இரண்டாவது உலகப்போரின்போது), பின்னர் காஷ்மீர், கருநாடகம் ஆகிய மாநிலங்களில் பணிபுரிந்ததுடன் சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகம், புதுவை தாகூர் கலைக்கல்லூரி, சென்னை அய்.அய்.டி., சென்ட்ரல் பாலிடெக்னிக், மாநிலக்கல்லூரி, புதுக்கல்லூரி, வணியம்பாடி இஸ்லாமியா கல்லூரி, திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி, தஞ்சை மற்றும் தென்னாற்காட்டில் 52 பெண்கள் மற்றும் ஆண்கள் உயர் நிலைப்பள்ளிகளில் – தேசிய மாணவர் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றினார். 1967இல் ராணுவப்பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

05.07.1954 அன்று ராணிப்பேட்டை பாவலர் பங்காரு தலைமையில், வேலூர் விருப்பாட்சிபுரத்தைச் சார்ந்த சாவித்திரியை வாழ்கைத் துணைவராக ஏற்றுக் கொண்டார். இவரது மகன் செல்வகுமார் பொறியாளராகவும், மகள் செல்வகுமாரி ஆசிரியையாகவும் பணிபுரிகின்றனர். 1976 முதல் 1993 வரை வேலூர் கஸ்பாவிலுள்ள முஸ்லிம் குழந்தைகளுக்கு காலையிலும் மாலையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தி உதவினார். 1980 முதல் வடாற்காட்டின் 364 கிராமங்களை உள்ளடக்கிய "வடாற்காடு மாவட்ட நாட்டாண்மைக்காரர்கள் சங்க'ப் பொதுச்செயளாளராகப் பணிபுரிந்த காலத்தில், விழிப்புணர்வு மாநாடுகள் மற்றும் கிராம வட்டாரக் கூட்டங்களை நடத்தினார். எல்லா உறுப்பினர்களுக்கும் தமது கைப்பட எழுதிய அஞ்சல் அட்டைகளைத் தாமே அஞ்சல் பெட்டியில் போடுவது இவருடைய வழக்கம். பொதுப்பணத்தைக் கையாள்வதில் மிகவும் கவனமாக இருப்பார்.

"வடாற்காடு மாவட்ட பண்பாட்டுக் கழகம்' என்ற அமைப்பை குமரேசன், ஏ.எல்.பொன்னுசாமி மற்றும் டி.ஆர்.கிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து உருவாக்கினார். 1984 முதல் வடாற்காடு மாவட்ட ஆதிதிராவிடர் கல்விச் சங்கத்தில் பேராசிரியர் பெருமாள், க.லோகநாதன், டி.ஆர்.கிருஷ்ணன், டி.சீனிவாசன், பூ.மார்க்கீஸ் மற்றும் "பெல்' சகோதரர்களுடன் தாம் இறக்கும்வரை செயல்பட்டார். இவருடைய துணைவியாரின் மறைவுக்குப் பிறகு, 2003இல் "சாவித்திரி கவுதம் கல்வி அறக்கட்டளை'யை ஏற்படுத்தி, பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கல்விஉதவித் தொகையை வழங்கி வந்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, 2002 முதல் ஒன்பதாண்டு காலம் 'தலித் முரசு' இதழை தன்னுடைய மிதிவண்டியில் சுமந்து சென்று, மக்களிடையே பரப்பும் பணியை மிகுந்த ஆர்வத்துடன் மேற்கொண்டார். என்னிடமிருந்து மாதந்தோரும் அய்ம்பது தலித் முரசினைப் பெற்று, பொதுமக்கள் கூடுமிடங்களில் இதழினை விற்று தொகையை என்னிடம் கொடுத்து, கையொப்பம் பெற்றுக் கொள்வது இவருடைய வழக்கம். அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால், தமது இறுதிக் காலத்தில் அவரால் "தலித் முரசை' தொடர்ந்து பரப்ப இயலாமல் போனது. இருப்பினும், "தலித் முரசை' மாதந்தோறும் படித்து, தன்னை சந்திக்க வருபவர்களிடம் அவர் விவாதிக்கத் தவறியதில்லை! தன்னுடைய தள்ளாத வயதிலும் தொண்டறம் புரிந்து வந்த தோழர் தருமலிங்கம் அவர்கள், 29.9.2011 அன்று இயற்கை எய்தினார். ஒரு பவுத்தராகவே வாழ்ந்து மறைந்த தோழருக்கு நம் வீர வணக்கம்.

Pin It