தொழிலாளி மகன் எப்படி எஸ்.எஸ்.எல்.சி.,  எப்.ஏ.,பி.ஏ., படிப்பது? படித்தால்தானே குமாஸ்தாவாகவாவது வர முடியும்? இதை யார் கவனிக்கிறார்கள்? நான் சொல்கிறேன், நம்முடைய தொழிலாளர்களுக்கு ஒன்றும் பெரிய வேலை கொடுக்கப்படாவிட்டாலும், கொடுக்கிற சம்பளமாவது அதிகமாகக் கொடுக்கக்கூடாதா? நல்ல வசதியான அறையிலே பேனுக்கு கீழே உட்கார்ந்து கொண்டு, மேசை நாற்காலியோடு வேலை செய்கிற குமாஸ்தாவுக்கு 100ரூபாய் சம்பளம்; நெருப்பிலே உழன்று சம்மட்டி அடிக்கிற தொழிலாளிக்கு 30, 50 ரூபாய்தானா?

கொடுக்கிற வேலைக்குதான் தகுதி, திறமை பார்க்கிறாய்; வாழ்க்கைக்குக்கூடவா தகுதி திறமை? சம்பளத்திலாவது சரிசமன் செய்யக்கூடாதா? தகுதி, திறமை உடையவன் அதிகமாகச் செலவழிக்கவும் தகுதி, திறமை இல்லாதவன் குறைவாகவுமா செலவழிக்கிறான்? எதற்குச் சொல்கிறேன்  என்றால் ஒரு பெரிய சமுதாயத்தை நிரந்தரமாகத் தலைமுறை, தலைமுறையாக அடிமைகளாகவே வைத்திருப்பதற்கு எவை எவைகளின் பேரால் சூழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்பதை எடுத்துக் காட்டத்தான். பள்ளிக் கூடத்துக்குப் போய் எம்.ஏ. பட்டம் வாங்காததால், அவன் மனித சமுதாயத்திலே மதிக்கப்படத் தகாதவனாக ஆகி விடுவானா? வாழ்வில் சராசரித் தேவைகள் வசதிகள்கூட அற்றவனாக அவன் வாழ வேண்டுமா?

periyar_250இப்படியெல்லாம் செய்து அவன் மேலுக்கு வர முடியாதபடி அழுத்தி அழுத்தி வைத்துக்கொண்டே நீ எம்.ஏ. படி; உனக்கு தகுதி திறமை இருக்கிறதா அப்படியானால் தருகிறேன் என்கிறாய்! கொடுப்பதே சோற்றுக்கு கணக்குப் பார்த்துதானே! அப்புறம் எப்படி அவர்கள் முன்னுக்கு வர முடியும்? இரண்டரை அணாவுக்கு வேலை செய்த ஆள் இன்றைக்கு கூலி ஒன்றரை  ரூபாய் கேட்கிறான். ஏனென்று கேட்டால், சாமி! தவசம் (தானியம்) என்ன விலை விற்கிறது என்று பாருங்கள்: சோற்றுக்குக் கணக்குப் பார்த்துக் கொடுங்கள் என்கிறான். பத்து அணாவுக்கு விற்ற புல்கட்டு என்னம்மா ஒரு ரூபா சொல்றாங்க என்று கேட்டால், கம்பு, சோளம் என்ன விலை விற்கிறது என்று பார்த்து கொடுங்கள் சாமி! என்றுதானே பதில் வருகிறது. அந்தத் தன்மை மாறவேண்டும். சோற்றுக்கு கணக்குப் பார்த்து வரும்படி என்பது போய் வாழ்வுக்கு, வசதிக்குத் தேவையான வருமானம் என்கிற நிலைமை ஏற்பட வேண்டும்.

அதை விட்டுவிட்டு சும்மா ஜன்னல் வைப்பது, நாலாவது வரை சம்பளமில்லாமல் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித் தருவது, ஆஸ்பத்திரி கட்டி விடுவது  இதுபோன்ற சாதாரண வசதிகளைத் தொழிலாளிகளுக்கு செய்து கொடுத்துவிட்டு, பெரிய பிரச்சினைகளிலே, உரிமைக் கிளர்ச்சியிலே, அவர்களின் கவனம் செல்லவொட்டாமல் தடுக்கப்படுகிறது. நம்முடைய தேவை அதுவல்ல; நம்மால் செய்யப்படுகிற கிளர்ச்சியும் அதற்காகவல்ல. நம்முடைய தேவையெல்லாம் அடிப்படையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதாவது, தொழிலாளிகளுக்கு இலவச காலேஜ் வேண்டும்; அதில் தொழிலாளிகள் மக்கள் 2000 பேராவது எப்போதும் இலவசமாய் படித்து, ஆண்டுக்கு 200 பேர் வெளியாக வேண்டும். அவர்கள் மேல் வேலைக்குத் தகுதி ஆகவேண்டும். அப்படிப்பட்ட மாற்றம் ஏற்பட வேண்டும்.

முக்கியமாக எந்தக் காரணம் கொண்டும் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இன்றைக்கு இருக்கிற மாதிரி "ஏழாம் பொருத்தம்' இருக்கக்கூடாது. இருவருக்குள்ளும் பரஸ்பரம் நல்லெண்ணமும்,  சுமூகமான உறவும் கூட்டுப் பொறுப்பும் ஏற்பட வேண்டும். இந்தத் தன்மை ஏற்பட அடிப்படையில் மாறுதல் ஏற்பட வேண்டும். முதலாளியும் தொழிலாளியும் பங்காளிகள், கூட்டாளிகள் என்கிற நினைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.

தொழிலாளி என்றால் யார்? முதலாளி என்றால் யார்? எவனொருவன் தன் வயிற்றப் பிழைப்புக்காகத் தனது உழைப்பை மாற்றுப் பண்டமாகப் பிறருக்கு கொடுக்கிறானோ அல்லது பிறர் இஷ்டப்படி நடக்க வேண்டியவனாகிறானோ அவன்தான் தொழிலாளி அல்லது வேலையாள் ஆவான். எனனொருவன் தன் உழைப்பைத் தன் இஷ்டமான விலைக்கு, பிரதி பிரயோசனத்திற்கு  மாற்றுப் பண்டமாக விலை பேசுகிறானோ அவன் முதலாளி அல்லது எஜமான் ஆவான். இவைதாம் தொழிலாளி என்பதற்கும் முதலாளி என்பதற்கும் அடிப்படைக் கருத்துகள் ஆகும்.

ஒரு வெற்றிலைப் பாக்கு கடைக்காரன் முதலாளிதான்  எப்படி? அவன் சாமானுக்குச் சொன்ன விலையைக் கொடுத்து நாம் வாங்குவோம். அதுபோலவே, தட்டுக் கடைக்காரனும் இன்னும் செருப்புக் கடைக்காரனும் முதலாளிகளேயாவார்கள். இவர்களில் யாரும் தங்களுடைய உழைப்பைத் தங்கள் வயிற்றுக்குத் தேவையான அளவுக்குப் பிறர் இஷ்டத்திற்குச் செலவழிப்பவர்களல்லர். அவர்கள் சொல்கிற விலைக்குச் சாமான்கள் வாங்கிக்கொள்ள வேண்டும். நாம் அவர்களிடத்தில் சேவிப்பதானால், சோற்றுக்கு கணக்குப் பார்த்து அவர்கள் கொடுப்பதை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். இன்று அவர்கள் வியாபாரம் செய்யலாம் அல்லது செய்யாமலும் இருக்கலாம். அவர்களை ஏன் செய்யவில்லை, ஏன் இவ்வளவு அதிக விலை சொல்கிறார்கள், குறைந்த கூலி கொடுக்கிறார்கள் என்று கேட்க முடியாது.                                        

– தொடரும்

Pin It