சென்னை உயர் நீதிமன்றம், நவம்பர் 21, 2008 அன்று, கழிவுநீர் கால்வாயில் மனிதர்கள் எவரையும் அடைப்பை நீக்குவதற்காக உள்ளே இறங்கச் சொல்லக்கூடாது என்று தீர்ப்பளித்திருந்தது. நவம்பர் 27, 2010 அன்று நகராட்சி நிர்வாகமும் ஓர் அரசாணையை இதேபோல வெளியிட்டிருந்தது. கழிவு நீர் கால்வாயில் அடைப்பை சரிசெய்ய மனிதர்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்கவே முடியாது என்று அரசு உறுதியாகத் தெரிவித்திருந்தது. ஆனால் மாநகராட்சியின் பணியாளர்களை அரசுதான் அடைப்பை சரிசெய்ய தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. மேலே வெளியிட்டுள்ள படம் சென்னையில் உள்ள ஆரிங்டன் சாலையில் எடுக்கப்பட்டது (‘இந்தியன் எக்ஸ்பிரஸ்', 3.12.2010). நீதிமன்ற அவமரியாதை பற்றி நீதிமன்றத்திற்கும் கவலை இல்லை! இம்மக்களை இத்தகு பணிகளில் ஈடுபடுத்தும் சமூகமும் அரசும்தான் இதில் குற்றவாளிகள். தீண்டாமை – தீண்டத்தகாத மக்களின் பிரச்சினை அல்ல. தீண்டாமையை கடைப்பிடிக்கும் ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சினை; இந்நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் அவமானம். இதை உணராதவரை, தீண்டாமைக் கொடுமைகளை ஒழிக்க முடியாது.
சீர்திருத்தத் துறையை சீர்திருத்துக
தலித் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக, அண்மையில் கிடைத்துள்ள அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 2004 முதல் நவம்பர் 2009 வரை, மூன்று மாவட்டங்களில் மட்டும் தலித் பெண்களுக்கு எதிராக 142 வன்கொடுமைகள் நடைபெற்றுள்ளன. மதுரையில் 84 வழக்குகள், சிவகங்கை மாவட்டத்தில் 32 மற்றும் தேனி மாவட்டத்தில் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல்களை, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பெற்றுள்ள ‘சாட்சியம்' என்ற அமைப்பு, இதுவரை 2009 இல் மட்டும் தமிழ்நாட்டில் தலித் பெண்களுக்கு எதிராக 6,051 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. மதுரை மாவட்டத்தில் தலித் பெண்களுக்கு எதிராக 84 வன்கொடுமைகள் நிகழ்ந்திருப்பினும், 2 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்; 12 வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்; 7 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன; 57 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேனி மாவட்டத்தில் உள்ள 25 வழக்குகளில், ஒரு குற்றவாளிகூட தண்டிக்கப்படவில்லை!
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், வன்கொடுமைகள் நிகழ் வதைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்று. ஆனால், அவை நிகழ்ந்த பிறகு தண்டிப்பதற்காக மட்டுமே இச்சட்டம் மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தப்படுகிறது. சமூக இயக்கங்களும்கூட, நிவாரணம் பெறுவதற்கான முனைப்பில்தான் கவனம் செலுத்துகின்றன. இம்முறை தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மீண்டும் உருவாக்கப்பட்ட சமூக நீதித் துறை, வன்கொடுமைகளைத் தடுப்பதற்கான எந்த செயல்திட்டத்தையும் உருவாக்கவில்லை. முடங்கிப் போயிருக்கும் இத்துறையை சீர்திருத்த யாராவது முன்வருவார்களா?
கிரிமிலேயர்வாதிகளுக்கு ஒரு சவால்!
‘தலித் முரசு' இதழில் (2009) குறுந்தொடராக வெளிவந்த அசோக் யாதவ் அவர்களின் கிரிமிலேயர் தொடர்பான கட்டுரை, தற்பொழுது கருப்புப் பிரதிகள் சார்பில் ‘சாதி எதிர் வர்க்கம் : சி.பி.எம். முன்வைக்கும் கிரிமிலேயர் – ஒரு விவாதம்' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலுக்கு, இக்கட்டுரையை மொழிபெயர்த்த ம. மதிவண்ணன் எழுதியுள்ள முன்னுரையிலிருந்து சில வரிகள் : “அசோக் யாதவ் முன்வைக்கும் வாதங்கள், கிரிமிலேயருக்கு ஆதரவாக சி.பி.எம்.மிலும், அதற்கு வெளியிலும் இருப்போர் முன்வைக்கும் வாதங்களின் அடிப்படையையே தகர்க்க வல்லவை. கிரிமிலேயருக்கு ஆதரவாக நிற்பவர் யாராயினும், அவற்றுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும். அவர்களுக்கு இரண்டு வழிகள்தான் மிச்சமிருக்கின்றன. ஒன்று, கிரிமிலேயருக்கு ஆதரவான தங்களுடைய கருத்தை திரும்ப பெற்றுக் கொள்வது. இல்லையெனில், இவ்வாதங்களை எதிர்கொண்டு அவை தவறானவை என்று நிறுவ வேண்டும். இவை இரண்டையும் செய்யாமல், தமது பழைய புராணத்தையே திரும்பவும் பாடிக் கொண்டிருந்தால், அது பார்ப்பனிய அணுகுமுறையை கொண்ட பயங்கரவாத நடவடிக்கையாகவே கொள்ளப்படும்.''