எந்த ஒரு எழுத்தாளருக்கும் அவர் பெற்ற பரிசுகள் மற்றும் விருதுகளைவிட, அவருடைய சிறுகதைகளையோ, நாவல்களையோ, கவிதைகளையோ, கட்டுரைகளையோ படித்த ஒரு வாசகர் அவற்றைப் பற்றி – தனிமையிலோ,  பொது இடங்களிலோ குறிப்பிடும்போது – எழுத்தாளன் பெறுகின்ற  மன நிறைவு வேறு எதற்கும் நிகரானது அல்ல. சில நேரங்களில் வெகுமதிகள், நல்ல எழுத்தாளர்களைக்கூட நீர்த்துப் போகச் செய்து விடும்; சில எழுத்தாளர்களை அதிகார வர்க்கத்தின் ஆதரவாளர்களாக்கிவிடும்! ஆனால், எளிய வாசகனின் விமர்சனங்களே மூச்சுக்காற்றாக எழுத்தாளனை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும்.

ஒரு நூல் வெறும் பொழுதுபோக்குக்காக படிக்கக் கூடியதாக இல்லாமல், படிக்கின்ற வாசகர்களின் ஆழ்மனதை நெகிழச் செய்வதாக இருக்க வேண்டும். அந்த வகையில் அண்மையில் நான் படித்த சில நூல்கள், எனக்கு அமைதியின்மையை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி, சமூக – அரசியல் அமைப்பு களின் மீது மிகுந்த கோபத்தையும், இந்திய ஜனநாயகத்தின் மீது அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியது. அவ்வாறான நூல்கள், ஆனந்த் டெல்டும்டே எழுதிய "கயர்லாஞ்சி'; ஓம் பிரகாஷ் வால்மீகியின் சிறுகதை தொகுப்பான "அம்மாவும் மற்ற கதைகளும்' மற்றும் கோபால் குரு எழுதிய "ஹுமிலியேஷன்' (Humiliation 2009) போன்ற நூல் வரிசையில், அழகிய பெரியவன் எழுதியுள்ள "மீள்கோணமும்' சேரும்.

meelkonam_350"தலித் முரசு' இதழில் 2005 செப்டம்பர் முதல் டிசம்பர் 2007 வரை வெளியிடப்பட்ட பத்திக் கட்டுரைகளில் வெளிவந்தவையே மொத்தம் 22 தலைப்புகளில் நூலாக்கப்பட்டுள்ளது. அனைத்தும் பல்வேறு விதமான பரிமாணங்களைக் கொண்டு தலித் பார்வையில் எழுதப்பட்ட கட்டுரைகளாகும்.

இக்கட்டுரைகள் நூலாசிரியருக்கே உரிய நய்யாண்டி பாணியில் சமூக, அரசியல், பொருளாதாரக் கண்ணோட்டத்துடன் தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறித்து, கோபம் கலந்த வேதனையுடன், படிப்பவரின் ஆழ்மனதைத் தொடுகின்ற வகையில் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக, நமது சமூக அரசியல் மற்றும் நீதித் துறைகளின் தோல்கள் எவ்வளவு தடிமனானது என்பதற்கும், அத்துறைகளில் பணியாற்றுகின்ற மனங்கள் எவ்வளவு கீழ்த்தரமான சாதிய சிந்தனையைக் கொண்டுள்ளன என்பதை விளக்குவதற்கும் அவர் அளித்திருக்கும் பல செய்திகள் சான்றாக விளங்குகின்றன.

மனிதக் கழிவை மனிதனே அள்ளும் கொடுமையான வேலைச் சூழலை மாற்றுவதற்கு, குஜராத்தைச் சார்ந்த சமூகப் போராளி மார்ட்டின் மெக்வானின் Endless Filth நூலையும், அவர் தயாரித்து வெளியிட்ட "லெஸ்ஸர் ஹியுமன்ஸ்' (Lesser Humans) என்ற ஆவணத்  திரைப்படத்தைப் பற்றியும் குறிப்பிடும்போது, அகமதாபாத் நகராட்சி மன்ற ஆணையத்தின் சாதிய போக்கும், வழக்குரைஞரின் மனிதாபிமானமற்ற குற்றச்சாட்டும் புலப்படுகிறது. மார்ட்டின் மெக்வான் மக்களுக்கு பணம் கொடுத்து நடிக்கச் செய்து நீதிமன்றத்தையும், அரசையும் ஏமாற்றுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு, மார்ட்டின் மெக்வானின் வழக்குரைஞர் நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுக்கு சவாலாக ஓர் அறிவிப்பை முன்வைக்கிறார். அதாவது, மனித மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளர்கள் தவிர வேறு சமூகத்தைச் சார்ந்த யாரேனும் ஒருவர், மனித மலம் நிறைந்து நீர்வழிந்து ஓடுகின்ற கூடையை தலையில் வைத்துக் கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தால், ரூபாய் ஒரு லட்சம் வெகுமதியாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அந்நகராட்சி மன்ற வழக்குரைஞரையும் புகைப்படத்திற்கு "போஸ்' கொடுக்க அழைத்தார். இந்த அறிவிப்பிற்குப் பிறகுதான் நீதிமன்றத்தில் உள்ள நீதியாளர்களுக்கும், வழக்குரைஞர்களுக்கும் சூடும் சுரணையும் வந்து, மார்ட்டின் மெக்வான் தொடுத்த வழக்கில் உண்மையும் நீதியும் இருப்பதை உணர்ந்து, இந்நிலையை ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்து எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தனர். இதைப் படிக்கின்றபொழுதும், குஜராத் மாநிலத்தில் துப்புரவுத் தொழிலாளர்கள் மாற்று துடைப்பம் கோரி ஒரு போராட்டத்தை நடத்தினார்கள் என்பதை அறியும்போதும், எந்த ஒரு சுரணையுள்ள வாசகனின் ரத்தமும் கொதிக்கத்தான் செய்யும்.

தலித்துகள் மீதான வன்கொடுமைகள் நாள்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற சூழலில், தனித் தொகுதி மூலம் தேர்வு செய்யப்பட்ட தலித்  நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களவையில் 1975லிருந்து 2000 ஆண்டு வரை (25 ஆண்டுகளில்) கேள்வி நேரத்தின்போது சுமார் ஆறரை மணி நேரம் மட்டுமே பேசியிருக்கிறார்கள் என்றும், அதில் நான்கு மணி நேரம்கூட தலித் மக்களின் பிரச்சனையைப் பற்றி விவாதிக்கவில்லை என்ற புள்ளி விவரத் தையும் அறியும்போது, தனித்தொகுதி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் மீது, நமக்கு கடும் கோபம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

மேலும், இந்திய ஜனநாயகத்தின் மானங்கெட்ட செயலை வெளிப்படுத்துகின்ற வகையில் நூல் ஆசிரியர் ஒரு செய்தியை குறிப்பிடுகிறார். நாகரிக சமூகமே வெட்கித் தலைகுனியும்படியான கயர்லாஞ்சி படுகொலைக்குப் பின் நடைபெற்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், அந்தப் படுகொலை பற்றி கேள்வி எழுப்பி கொந்தளிப் பதற்கு மாறாக, தென்னாப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணியின் மோசமான விளையாட்டு பற்றி அனல் பறக்கும் விவாதம் நடத்தி தோல்விக்கான காரணத்தை ஆராயவும், வீரர்களுக்கு ஆலோசனை வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைப் படிக்கின்றபொழுது இந்திய ஜனநாயகத்தின்  மீது மீண்டும் மீண்டும் அவநம்பிக்கை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

சமூகத் தளத்தில் தொடர்கின்ற பல்வேறு பிரச்சனைகளை, அழகிய பெரியவன் வருத்தம், கோபம், வேதனை மற்றும் எள்ளி நகையாடுதல் போன்ற பல பரிமாணங்களில் தனது உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, தமிழக அரசின் இலவசங்களைப் பற்றி குறிப்பிடும்போது, இலவசமும் ஒரு வகையான போதைதானே என்று வினவுகிறார்.  ஜெ.ஜெ. தாஸ் அவர்களின் ஆய்வுக் கட்டுரையில், ஒரு போராளியைப் பற்றிய நினைவுகள் துடைத்து அழிக்கப்பட்டுக் கிடக்கின்றன. இது ஒரு போராளிக்குச் செய்யும் பெரும் துரோகம் என்று வேதனையுடன் குறிப்பிடுகிறார்.

இந்த உலகத்தில் நிறைந்திருக்கின்ற துன்பம், வன்முறை போன்ற பல்வேறு கொடுமைகளுக்கு காரணம் கொடியவர்களோ, வன்முறையாளர்களோ அல்லர்; அறிவுஜீவிகளும் நல்ல மனிதர்களின் மவுனமுமே என்பது மார்ட்டின் லூதர் கிங்கின் கூற்று. அதைப்போல நம் நாட்டில் தலித் மக்களுக்கும், சிறுபான்மையினருக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக இழைக்கப்பட்டு வரும் கொடூரங்களுக்கு இணையானதாக, அக்கொடூரங்கள் குறித்து நம்மிடையே நிலவும் மவுனம் இருக்கிறது. இந்த மவுனம் ஒரு வன்முறை. இதைவிட, ஒரு பெரிய கொடுமை நிகழ்ந்தது. தமிழகத்தில் 2004இல் சுனாமி தாக்கி ஒரு லட்சம் உயிர்கள் கொல்லப்பட்ட தருணத்தில், தமிழக தனியார் தொலைக்காட்சியில் "உள்ளத்தை அள்ளித்தா' என்ற காதல் நகைச்சுவை படத்தை ஒளிபரப்பி அஞ்சலி செலுத்தினார்கள். இதுபோன்று பல்வேறு நிகழ்வுகளை இந்த கட்டுரைத் தொகுப்பில் பதிவு செய்துள் ளார் அழகிய பெரியவன்.

திராவிடக் கட்சி அரசுகளை விமர்சனம் செய்யும்பொழுதும், இடைச்சாதியினரின் ஆதிக்க அரசியலை குறிப்பிடும்போதும், அதிகார வர்க்கங்களை சாடும்பொழுதும் –நூலாசிரியர் கையாளுகின்ற மொழி, மிகவும் மென்மையாக, எந்த அழுத்தமுமின்றி இருப்பதாகத் தோன்றுகிறது.

தற்கால சமூக, அரசியல் ஆய்வாளர்கள், தலித் சிந்தனையாளர்கள், களப்பணியாளர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு – இந்திய தமிழ் சமூகச் சூழ்நிலையை தலித்திய பார்வையில் புரிந்து கொள்வதற்குப் பெருமளவில் இந்நூல் உதவுகிறது. இந்நூலில் உள்ள சில கட்டுரைகளை ஆங்கில ஆக்கம் செய்து வெளியிட்டால், பரவலாக கருத்துப் பரிமாற்றம் செய்ய ஏதுவாக இருக்கும்.        

Pin It