தூத்துக்குடியில் ஆயுதமற்ற அப்பாவி மக்கள் 13 பேரை நவீன ரக துப்பாக்கிகளைக் கொண்டு குறி வைத்து மார்பிலும், வாயிலும் சுட்டுப் பிணமாக்கிய காவல்துறை மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அவர்களைக் காப்பாற்றுவதற்காகவே விசாரணை ஆணையம் என்ற சடங்குத்தனமான அமைப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
மக்கள் உரிமைக்காகப் போராடும் இயக்கங்களைச் சார்ந்தவர்களை தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து வேட்டையாடத் தொடங்கியிருக்கிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல் முருகன், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சார்ந்த 6 தோழர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் . இன்னும் பலர் இதேபோல் கைது செய்யப்பட இருக்கிறார்களாம்.
இதேபோல் ஊடகங்களும் மிரட்டப்படுகின்றன. கோவையில் தனியார் கல்லூரி கலையரங்கில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி, ‘தொடர் போராட்டங்கள் அடிப்படை உரிமைகளுக்காகவா! அரசியல் காரணங்களுக்காகவா!’ என்ற தலைப்பில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கடந்த 8ஆம் தேதி திரைப்பட இயக்குனர் அமீர் பேசும்போது, (அவர் மதத்தால் இஸ்லாமியர் என்பதால்) பா.ஜ.க.வினரும் சங் பரிவாரத்தினரும் அவரைப் பேச விடாமல் கலவரத்திலும் வன்முறையிலும் இறங்கியுள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி நிறுவனத்தின் மீதும், இயக்குனர் அமீர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் இந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தி இருக்கிறார். பா.ஜ.க.வின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, காவல்துறையை இயக்கும் தமிழக அரசையும் காவல்துறையையும் திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. வழக்குகளை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டில் இயக்கங்களாக செயல்படும் 11 அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருந்த செய்தி ஏற்கனவே ஏடுகளில் வெளி வந்துள்ளது. தூத்துக்குடி போராட்டத்தை ஒரு வாய்ப்பாக்கி இயக்கங்களின் தோழர்களை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து முடக்கி விடலாம் என்ற திட்டத்துடனேயே இந்தக் கைதுகள் நடப்பதாகத் தெரிகிறது. பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய எஸ்.வி. சேகரிடம் நெருங்க முடியாமல் முகத்தில் கரியைப் பூசிக் கொண்டிருக்கும் காவல்துறை, மக்கள் போராளிகளை அடக்கி மிரட்ட வேண்டாம்.