"ராத்திரி முழுக்க வெலங்கோடவே ஒக்காந்திருந்தோம்"

யஷ்வந்திரன், வேலூர் மாவட்டம் ஆம்பூரில் ஒரு தோல் தொழிலாளியின் மகனாகப் பிறந்தவர். பள்ளி மாணவராக இருக்கும் போதே இவர் ஆர்வத்தோடு வண்ணங்களை கையாண்டதைப் பார்த்த கவிஞர் யாழன் ஆதி, சென்னை கவின் கலைக் கல்லூரியை யஷ்வந்திரனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். 1998 இல் சென்னை கலைக் கல்லூரிக்குள் நுழைந்த யஷ்வந்திரன் கனவிலும் நினைத்திருக்க மாட்டார், இந்தக் கல்லூரியின் முதல்வர் தன் கையில் விலங்கிடுவார் என்று.

பிப்ரவரி மாதம் 26 அன்று சென்னை கவின் கலைக் கல்லூரியின் தற்காலிக முதல்வர் மனோகர் நடராஜனின் கார் கண்ணாடியை, மதுரையைச் சேர்ந்த முதுகலை மாணவர் சசிக்குமார் உடைத்து விட்டார். இதற்கு அவர் கூறும் விளக்கம் இதுதான்: ‘‘சூன் மாதம் நடக்கப் போற செம்மொழி மாநாட்டில் காட்சிக்கு வைக்க 1330 திருக்குறளையும் சுடுமண் சிற்பமாக்குற வேலயில் ஈடுபட்டிருக்கேன். சுடுமண் சூளை மற்றும் களிமண் வேணும்னு கல்லூரி முதல்வர் மனோகரை தொடர்ந்து கேட்டு வந்தேன். ஆனா அவர் கொடுக்கல. 3 மாதத்திற்கு முன்பே சுடுமண் வேலைக்கான பொருட்களைக் கேட்டு முதல்வர்கிட்ட மனு 

கொடுத்தேன். அதுல யஷ்வந்திரனும் கையெழுத்துப் போட்டிருந்தார்.

‘‘1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகத்த சிங்களவர்கள் எரித்தார்கள். அவர்கள் எரித்தாலும், திருக்குறள் சுடுமண்ணாகப் பிறக்கும் என்ற அடிப்படையில்தான் மூன்று மாசமா இந்த வேலய செஞ்சிக்கிட்டிருக்கேன். வேலை முடியும் தருவாயில் இன்னும் கொஞ்சம் களிமண் தேவைப்படுது. மனோகர் சார் கிட்ட திரும்பவும் கேட்டேன். எந்த பதிலும் இல்ல. முடிக்கப்பட்ட களிமண் வேலைகளை சுடாததால, 300 திருக்குறள் பலகைகள் உடஞ்சிடுச்சி. இந்த வேலய பகல் நேரத்துல பண்ண முடியாது. குறிப்பிட்ட தட்பவெப்ப சூழல்லதான் செய்ய முடியும். அதனால நான் இரவு நேரத்துல கல்லூரியில் தங்கி செய்து வர்ரேன். கல்லூரியில் பணரீதியா எந்த உதவியும் செய்யாததாலே, ஊர்ல இருந்து எனக்கு சாப்பாட்டுக்கு அனுப்புற பணத்தையெல்லாம் இதுக்காக செலவு செய்றேன்.

‘‘இந்த நிலையில் பிப்ரவரி 26 அன்று மாணவர்கள் எல்லாரும் சுற்றுலா போயிட்டாங்க. கல்லூரியில யாரும் இல்லாத 

நேரமா பாத்து முதல்வர் சார்பா ரவிக்குமார் என்பவர் என்னைக் கூப்பிட்டு, களிமண் எதுவும் தர முடியாது, நீ வேணும்னா டி.சி. வாங்கிட்டுப் போன்னார். ஏன்னு கேட்டு எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் அதிகமாயிடுச்சி. கோபத்தோடு வெளியில வந்தேன். அங்க நின்றிருந்த மனோகரின் கார் கண்ணாடிய உடைச்சிட்டு கிளம்பி மதுரைக்குப் போய்ட்டேன்'' என, தான் எதற்காக காரை உடைத்தேன் என்பதை வெளிப்படையாகவே கூறினார்.

ஆனால், சம்பவத்தின்போது துகள்கள் கண்ணில் பட்டுவிட்டதால் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு, அயர்ச்சியில் 

தூங்கிக் கொண்டிருந்த ஆனந்த்குமாரையும் கண்ணாடி உடைப்பில் தொடர்பு படுத்தியதுதான் மனோகரின் சாதி மூளையின் சாமர்த்தியம். தூங்கி எழுந்து வெளியே வந்த ஆனந்த் குமாரை பார்த்து, ‘‘பறப்பசங்களா உங்க திமிர அடக்குறன்டா. பற நாயே நீ எப்படி இனிமேல் சிற்பவேøலயை கல்லூரியில செய்யிறேன்னு பாக்குறேன்'' என மிரட்டினார் .

அன்றிரவு ஏ.சி. அசோக்குமார், ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்டோர் இரு சுமோ வண்டிகளில் கல்லூரிக்கு வந்தனர். சென்னை மாநகராட்சிக்காக சிற்பங்கள் வடித்து வரும் பணியில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் ஆனந்தகுமார் உள்ளிட்ட குழுவினரைப் பார்த்து, ‘‘டேய் புடுங்கிங்களா இங்க என்ன கஞ்சா அடிக்கிறீங்களா'' என முருகேசன் அசிங்கப்படுத்தினார். அங்கிருந்த ஆனந்த்குமாரிடம், ‘‘ஏய் நீதானா ஆனந்த். யஷ்வந்திரன் எங்கே? காட்டலன்னா அவ்வளவுதான்'' என சட்டையைப் பிடித்து இழுத்து, நெஞ்சில் உதைத்து வண்டியில் ஏற்றியுள்ளார்.

வண்டியில் ஆனந்த்குமாரை அழைத்துச் செல்லும் போதே யாரிடமிருந்தோ முருகேசனுக்கு செல்பேசி வந்தது. பேசிக் கொண்டிருந்த அவர், ‘தேவர் காரை உடைச்சிருக்கானுங்க, தாயொளிப் பசங்க, மாட்டிக்கிட்டானுங்க' என சாதி வெறியோடு பேசியிருக்கிறார் முருகேசன் (இந்த முருகேசன், திருநெல்வேலியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் கொலையில் கொலையாளியை காப்பாற்ற முயன்றதற்காக, மார்ச் மாதம் 18 ஆம் தேதி சஸ்பென்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது).

நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் பெரம்பூரில் உள்ள யஷ்வந்திரன் அறைக்கு வந்தனர் காவல் துறையினர். இதற்குப்பிறகு நடந்தவை குறித்து யஷ்வந்திரன் கூறுகிறார்: ‘‘அறையில நான் மட்டும் தனியா இருந்தேன். ஒரு போலிஸ்காரர் உள்ளே வந்து, ‘அய்யா வெளியில இருக்கார் வா' ன்னார். தயங்கி, தயங்கி கீழ போனேன். போலிஸ்காரர் பேச ஆரம்பிச்ச போதுதான் என்ன நடந்ததுன்னு லேசா புரிய தொடங்கிச்சி. என்னைப் பார்த்ததும் போதையில் இருந்த பெரியமேடு ஆய்வாளர் முருகேசன், ‘சசி எங்கே'ன்னார். எனக்குத் தெரியாதுன்னேன். இப்படி கேட்டா சொல்ல மாட்ட, நீ வண்டியில ஏறுன்னார். நான் மறுத்தேன். ‘நீ படிச்சி மயிர புடுங்கப் போறியா, ஏறுடா வண்டியில'ன்னு வாயில் சொல்லக் கூசும் வார்த்தைகளால் திட்டி வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்றினார்.

‘‘காவல் நிலையத்துக்கு ஜீப் வந்தது. நான் வண்டியில் இருந்து இறங்கும் போது ஓவியர் சந்ரு அங்கு இருந்தார். என்னைப் பார்த்ததும்’ஏன் அவனை இங்க கூப்பிட்டு வந்தீங்கன்னு' கேட்டார் சந்ரு. அதற்கு ஆய்வாளர் முருகேசன், ‘நீதான் அந்த சந்துருவா? உன்னையும் உள்ளே தள்ளிடுவேன்’னார். தான் கவின் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் என்று சந்ரு சொல்லியும் அவருக்கு எந்த மரியாதையும் கொடுக்காம ‘பறப்பசங்க எல்லாம் ஒண்ணா சேந்துட்டானுங்க'ன்னு கத்தினார் முருகேசன். ‘உங்களையெல்லாம் சும்மா விடக்கூடாதுடா’ என கத்திக் கொண்டே ஒரே வெலங்க என் கையிலயும், என் தம்பி கையிலயும் மாட்டினார். நாங்க எந்தத் தப்பும் செய்யல. என்ன நடந்ததுன்னு கூட எங்களுக்குத் தெரியாது. எங்கள விட்டுடுங்கன்னு மன்றாடினோம், கெஞ்சினோம், கதறினோம். ஆனா இது எதுவுமே போலிஸ்காரங்க காதுல விழல. ராத்திரி முழுக்க வெலங்கோடவே ஒக்காந்திருந்தோம். மறுநாள் காலையிலதான் கழட்டி விட்டாங்க'' என்று காவல் நிலையத்தில் நடந்ததை விவரித்தார் யஷ்வந்திரன்.

மறுநாள் காலை 10.30 மணி வரை கூட, யஷ்வந்திரன் மீதும் ஆனந்த் குமார் மீதும் எந்த விதப் புகாரும் பதிவாகவில்லை. காலை 11 மணி வாக்கில் மனோகர் நடராஜன், செந்தமிழ்ச் செல்வன் (இவருக்கும் கல்லூரிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மனோகருக்கு மிகவும் நெருக்கமானவர். கல்லூரியின் அன்றாட செயல்பாடுகளில் தலையிடுபவர்) ஆகியோர் காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போதுதான் சம்பவ இடத்தில் இல்லாத தலித் மாணவர்களாகிய யஷ்வந்திரன், ஆனந்த்குமார், 

கமலஹாசன், கார் கண்ணாடியை உடைத்த சசிக்குமார் உள்ளிட்ட 15 பேர் மீது புகார் கொடுத்தனர்.

அப்போது கூட ‘என்ன குற்றம் செஞ்சேன்னு எனக்கு தெரியல. நீதிமன்றத்துக்கு கூட்டிக்கிட்டு போய், அங்க புகார படிச்சப்பதான் தெரியும். எங்க மேல கண்ணாடிய ஒடைச்சிட்டோம்ன்னு பொய் புகார் கொடுத்தது' என்கிறார் யஷ்வந்திரன். விசாரணைக்கு அழைத்துச் சென்ற மாணவரை புழல் சிறையில் கைதியாக மாற்றியது மனோகரின் ஜாதிவெறி. (இப்போது பிணையில் வெளிவந்து, தினமும் பெரியமேடு காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு வருகிறார் யஷ்வந்திரன்). புகாருக்கு ஆளாகியுள்ள இன்னொரு தலித் மாணவராகிய கமலஹாசன், கல்லூரியில் நடைபெறும் பல சமூக விரோத செயல்களையும், அதற்கு ஆதாரமாய் இருக்கும் மனோகரையும் அவருடைய சாதி வெறி பற்றியும் பல தகவல்களை கூறினார்.

முதலாவதாக, கலைக் கல்லூரியில் மாணவர்களுக்குக்கான குடிநீர், கழிவறை என அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. இதற்காகப் பலமுறை முறையிட்டும் முதல்வர் இதுவரை கண்டு கொள்ளவில்லை. மாணவர்களுக்காக தரமணியில் உள்ள விடுதி, பதினைந்து ஆண்டுகளாகப் பயன்படுத்தாமல் பூட்டியே இருக்கிறது. இதனை திறந்து விடச் சொல்லி ஆர்.பி. பாஸ்கர், சந்ரு ஆகியோர் முதல்வர்களாக இருந்த காலத்திலிருந்தே மாணவர்கள் போராடி வருகிறார்கள். அதே மாதிரி இப்பொழுதும் விடுதி கேட்டு ஒரு மாதம் உள்ளிருப்புப் போராட்டத்தை மாணவர்கள் செய்தனர். இதில் முக்கியப் பங்கு வகித்தவர்கள், இந்த மூவர்தான் என்பதால் முதல்வர் மனோகருக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை.

இரண்டாவதாக, எழும்பூர் அருங்காட்சியகத்தில் இருப்பதைவிட பழமை வாய்ந்த அரிய ஓவியங்கள், சிற்பங்கள், விக்டோரியா ராணிக்காக தங்கத்தால் நெய்த புடவை என பல அழகிய பொருட்களைக் கொண்ட அருங்காட்சியகம் கவின் கலைக் கல்லூரியில் உள்ளது. இப்படி ஒன்று இருப்பதே யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள், இந்த கல்லூரியைச் சேர்ந்த அதிகாரிகள். இங்கே உள்ள விலைமதிப்பற்ற பொருட்கள் அடிக்கடி காணாமல் போகின்றன என்பதும் மாணவர்களின் குற்றச்சாட்டு. இந்த அருங்காட்சியகத்தை தினமும் திறந்து வைப்பதோடு, அதில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்ற கணக்கு வேண்டும் என கோரிக்கை வைத்தவர் கமலஹாசன். இதுவும் மனோகருக்கு எரிச்சலை அதிகப்படுத்தியது.

அடுத்து, 120 ஆண்டுகள் பழமையான, இன்னும் பயன்பாட்டிலுள்ள கிணறு ஒன்றை கடந்த நவம்பர் மாதம் (2009) விடுமுறை நாட்களின் போது மனோகரன் நடராஜன் மூடிவிட்டார். விடுமுறை முடிந்து வந்து பார்த்தபோது, மாணவர்கள் அனைவருக்குமே அதிர்ச்சி. நன்றாக இருந்த கிணறு மூடப்பட்டது குறித்து கமலஹாசன் கேள்வி எழுப்பினார். இந்த கிணறு ‘வாஸ்து'படி இங்கே இருப்பது சரியில்லை எனக் கூறி மனோகரன் அதை மூடியது மட்டுமின்றி, அதை பிளாஸ்டிக் பொருட்கள் போடும் இடமாகவும் மாற்றிவிட்டார். கமலஹாசனின் எந்த கேள்விக்கும் பதில் தர மறுத்துவிட்டார்.

பிரச்சனையின் உச்ச கட்டமாக, பிப்ரவரி மாத தொடக்கத்தில் மனோகரன், கவின் கலைக் கல்லூரி முன்பு சிறிதாக இருந்த கோயில் ஒன்றைப் பெரிதுபடுத்தி, 12 அடி உயரத்திற்கு கட்டி எழுப்பத் தொடங்கினார். அரசுக் கட்டடத்தில் எப்படி இந்து கோயிலைக் கட்டுவீர்கள் என கேள்வி எழுப்பினார் கமல். இது, மதசார்பின்மைக்கு எதிரானது என்றும் இதனை கட்டக் கூடாது என்றும் கமல் வாதாடினார். கோயில் கட்டுவது தொடர்ந்தால் கோயில் அருகிலேயே சர்ச், மசூதி, மற்றும் பவுத்த கோயில் என அனைத்தையும் கட்ட வேண்டும் என்று போர்க் கொடி தூக்கியுள்ளார் கமல். இதுதான் கமலை இந்த குற்றவாளிப் பட்டியலில் சேர்த்து பழிவாங்க முக்கியக் காரணம்.

இத்தோடு விடவில்லை கமல். இதுகுறித்து கலை மற்றும் பண்பாட்டுத் துறை செயலர் இறையன்புவிடமும் முறையிட்டார். ஆனால் ‘படிக்கிற வயதில் உனக்கெதுக்கு இதெல்லாம்' என கமலின் நியாயத்தைப் புறந்தள்ளிவிட்டு, நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டார் இறையன்பு. பணி மூப்பு அடிப்படையில் முதல்வர் பதவி பெற ஓவியர் சந்ருவுக்குப் பின் ரங்கராஜன், ஜெயராமன், ராதா

கிருஷ்ணன் என வரிசை இருக்க, மனோகரன் நடராஜன் எப்படி முதல்வராக முடிந்தது? இந்தக் கேள்விக்கு பதில், கலை மற்றும் பண்பாட்டுத்துறை செயலருக்குதான் தெரியும்.

நாங்கள் தொடர்ந்து நியாயங்களை கேட்டு வருவதால்தான் சசிகுமார் செய்த தவறுக்கு, அறையில் தூங்கிக் கொண்டிருந்து வெளியே வந்த என்னை, ‘பறப் பய, தேவடியா பயலுக்கு இதே வேலயாப் போச்சு’ என சாதிவெறியோடு திட்டியதோடு மட்டுமல்லாமல், கார் கண்ணாடியையும் உடைத்தாகப் புகாரும் கொடுத்தார் மனோகரன் என்கிறார் கமல். யஷ்வந்திரன், ஆனந்த்குமார், கமலஹாசன் ஆகியோர் கல்லூரியில் நடக்கும் முறைகேடுகளையும், தவறுகளையும் அவ்வப்போது கேட்டதும், ஓவியர் சந்ருவுடன் நெருக்கமாக இருப்பதும் மனோகருக்கு பிடிக்கவில்லை. இவர்களை கல்லூரியில் இருந்து விரட்ட நேரம் பார்த்திருந்த மனோகர், கார் கண்ணாடி உடைப்பு சம்பவத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, தன் சாதியைச் சேர்ந்த பெரியமேடு காவல்நிலைய ஆய்வாளர் முருகேசனை பயன்படுத்தி, தலித் மாணவர்கள் மீது வீண் பழியை சுமத்தியுள்ளார்.

மனோகரனின் சாதிவெறி செயல்பாடுகள் தவறுகளை தட்டிக் கேட்பதால் மட்டுமல்ல; அவருடைய இயல்பே தலித்துகளை அவமானப்படுத்துவதுதான். அரசு கவின் கலைக் கல்லூரியில் தற்காலிக முதல்வராகப் பொறுப்பில் இருக்கும் மனோகர் ஏற்கனவே, ‘‘நான் ஒண்ணும் பறயன் மாதிரி குப்பையிலிருந்து வரல, நான் தேவர்'' என தலித் மாணவர்களை திட்டியவர். அதற்கான தண்டனை தான் பணி இடமாற்றம். ஆனாலும் அவருக்கு சாதித் திமிர் அடங்கவில்லை. இது போன்றே கும்ப

கோணம் கலைக் கல்லூரியிலும் தலித் மாணவர்களை சாதிப் பேரைச் சொல்லி இழிவாகப் பேசியதால், இடம் மாறுதல் பெற்று சென்னை கலைக் கல்லூரிக்கு வந்தார். சாதி ரீதியாக பேசி, தலித் மாணவர்களை அவமானம் செய்வதே இவருக்கு வாடிக்கையாகிவிட்டது.

இதுபோன்ற பல சாதி வெறியர்களால் தலித்கள் மீது வன்கொடுமைகள் நடப்பதும், அதன்பிறகு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவாவதும், கண்டனக் கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதும் சடங்காகவே மாறிவிட்டது.இனி ஒரு தலித்துக்கு இதுபோல் நிகழாமல் இருக்க என்ன வழி என்பதுதான் சமூக சிந்தனையாளர்களின் கேள்வி.

- அநாத்மா

Pin It