ஈருளியை வண்டியை ஓட்டி வருகிறான் ஓர் இளைஞன். அவனை வழிமறித்த ஒரு பெரியவர் தன்னையும் ஏற்றிச் செல்லும்படி பயண உதவி கோருகிறார். அவரையும் ஏற்றிக் கொண்ட வாகனம் திணறிப் பறிகிறது. “தம்பிக்கு எந்த ஊரு?” என்று நளினமாகப் பேச்சுக் கொடுக்கும் பெரியவர் “எந்தத் தெரு?”, வீடு எந்தப் பக்கம் இருக்கு?”, யார் மகன்?; என்பதாக அடுத்தடுத்து எழும் கேள்விகள் தன்னை ஏற்றிச் செல்லும் பையன் எந்த சாதியைச் சேர்ந்தவன் என்ற தேடலை நோக்கி நீள்கிறது. இப்படித்தான் ஒவ்வொரு அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பேருந்து பயணங்கள் என மனிதர்கள் சந்தித்துக்கொள்ளும் இடங்கள் யாவும், சாதிச் சொந்தங்களை அடையாளங்காணும் அனுகூலப் பகுதிகளாக மாறி வருகின்றன. இச்செயல்பாடுகள் அனிச்சைச் செயல்களைப் போன்று மறைமுகமாக நடைபெறுவதை மனச்சான்றுடையவர்கள் அறிவர்.

                மனிதர்களை சாதியாக அடையாளம் காணத்துடிக்கும் இந்த அணுகுமுறைதான் சாதிய உளவியலுக்கும் - சாதிவெறிக்கும் அரிச்சுவடியாக அமைகிறது.

                அறிவியல் வளர்ச்சியில் பிறந்த நவீனக் கருவிகள் நாளாந்தம் பல்வேறு புதிய பயன்பாட்டு மாற்றத்தை வெளிக்கொணர்ந்தாலும், சாதியம் மட்டும் பழமையைத் தொக்கிப் பிடித்துக்கொண்டு, மனிதகுலத்தைப் பிரித்தாளும் சூழ்ச்சியைச் செய்து, பாராதூரமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

                சமத்துவத்தின் பகை சக்தியாய் விளங்கும் சாதியம், அறிவியல் கண்ணோட்டத்தை அப்புறப்படுத்திவிட்டு, புதிய சூழல்களுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டு, முன்பைவிட வீச்சாய் வெளிப்பட்டு வருகிறது. தற்போது கால வெள்ளத்தில் பழமைகள் பெயர்ந்து விழும் போது சாதியம் மட்டும் நீடித்து நிலைப்பதற்கு மத மூடத்தனங்களும், அருவெறுப்பு தரும் புராண இதிகாசங்களும், அதன் அடிப்படையிலான கடவுள் வழிபாட்டு முறைகளுமே காரணம் என சமூகவியலாளர்கள் கருதுகிறார்கள். மேலும் “சாதிமுறை தொடர்வதற்கான மற்றொரு காரணம் அதன் கணிசமான நடைமுறை பயன்களே” என்பதாக இந்தியத் துணைக்கண்டத்தை ஆட்சி செய்த வெள்ளை ஏகாதிபத்தியத்திய அரசின் கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் ஹட்டன் 1931-இல் குறிப்பிட்டார்.

                சாதிய அமைப்பானது, ஒவ்வொரு சாதியும் தனக்கு மேலுள்ள சாதியினரின் அடக்குமுறைகளைத் தாங்கிக் கொண்டு, தனக்குக் கீழுள்ள சாதியினரை ஆதிக்கம் செலுத்த வாய்ப்பான சாதிய தர்மத்தை வழங்கியுள்ளது. இதனையே புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் சாதியக் கட்டுமானத்தை “படிப்படியான சமத்துவமின்மை” என்று வரையறை செய்கிறார்.

                இந்தியாவின் அரசியல் சட்ட விதி -17, தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டதாகப் பிரகடனம் செய்கிறது. ஆனால் சாதி வெறியால் அன்றாடம் நடந்தேறும் மனிதப் பேரவலங்கள் இந்திய அரசியல் சட்ட விதிகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. சிலர் கூற்று இது: இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்? அதெல்லாம் அந்தக்காலம். சிலரால் அறியாமல் சொல்லப்படும் அல்லது நடைமுறைகளைத் திட்டமிட்டு மறைக்கும் வகையிலான இக்கூற்று எந்த அளவிற்கு அபத்தமானது என்பதை சில சான்றுகள் மூலம் தெளியலாம்.

                குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தியத் துணைக்கண்டத்தில்தான் குழந்தைகளைக் கொன்று மகிழும், கல்நெஞ்சம் கொண்ட காட்டு விலங்காண்டிக் கூட்டத்தைக் காண்கிறோம். அரியானாவில் 2 பிஞ்சுகளை சாதியத்தீக்கு தின்னக் கொடுத்த துயரச் சம்பவம் நம் கனத்த நெஞ்சத்திலிருந்து இன்னும்கூட அகலவில்லை. இந்தியத் துணைக்கண்டத்தையே உலுக்கி எடுத்த கொடூரம் அது.

                “ஊர் கூடித் தேரிலுப்போம்” என்று நம் தமிழ்மறை மக்களை அணி சேர்க்க ஆவனம் செய்கிறது. ஆனால் சாதி வெறியர்களின் மறையோ, “சாதி மக்கள் திரண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் தேரை எடுப்போம்” என்கிறது. இன்னும் ஒருபடி மேலே போய், “வாழ்விடங்களை எரித்துச் சாம்பலாக்குவோம்” என்று கொக்கரிக்கிறது.

                பதவிவெறி நாற்காலி அரசியலுக்கு, சாதிவெறி தீவைப்பு கொலைச் சம்வங்கள் நல்ல ஆதாயத்தைத் தரும் என்பது இராமதாசு வகையறைக்களின் ஆழ்ந்த எதிர்பார்ப்பு. எனவேதான் தர்மபுரி, மரக்காணம், சேஷசமுத்திரம் என தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையும் கலவரத்திற்குள்ளாக்கப்பட்ட பகுதிகளின் பரப்பும் விரிந்து கொண்டே செல்கிறது.

                ஒடுக்கப்பட்ட மக்கள் அறிவிற் சிறந்து – கல்விகற்று அரசின் உயர்பதவிக்கு வந்தாலும், அவர்கள் சாதியத்தின் கோர நாக்குகளுக்கு இரையாக நேரிடும் என்பதற்கு, திருச்செங்கோடு மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வி.விஷ்னுப்பிரியாவின் மர்ம மரணம் சான்றாக நிற்கிறது.

                காதலும் சாதியும்தான் தமிழர் பண்பாட்டு வாழ்வியல் நெறி என்கிறது பழந்தமிழ் இலக்கிய நூல்கள்.

                காதல் என்பது ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நிகழும் ஓர் உள்ளார்ந்த உணர்வு. அத்தகைய காதல் அந்தந்த சாதி ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேதான் உருவாக வேண்டும் என்று முஷ்டி தூக்குவது இயற்கை விதிக்கு முரணானது! ஆனால் இன்று நடப்பது என்ன? சாதி மாறிக் காதலிக்கும் இணையர்கள் சாவுக்குள்ளாக்கப்படுகிறார்கள்.

                சாதிய கௌரவத்தை நிலைநாட்டும் சாதிவெறி ஆணவக் கொலைகள் அதிகளவில் நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு என்கிறது ஓர் புள்ளி விவரம்.

                தன்னல வாழ்க்கை முறையை மேற்கொள்ளும் தமிழர்களை விட, தமிழர் - தமிழர் நலன்பேசும் சாதியவாத தமிழர்கள் ஆபத்தானவர்கள் என்பதை குடிநாயக ஆற்றல்கள் உணர வேண்டும்.

                ஆசையாய் வளர்த்த மகளை அரிவாள் கொண்டு உயிர்குடித்து – அநாதைப் பிணமாக்கி- புதர்களில் புதைக்கும் அற்பத்தனமான செயல் வேறெந்த தேசத்திலும் நடந்திருக்குமோ? இத்தகைய மனிதகுல விரோதச் செயல்களைக் “கௌரவம்” எனக்கருதும் இந்தச் சமூக அமைப்பை நாகரீக சமூகம் என்று சொன்னால், சொல்பவர்களின் ‘நா’ அழுகிப்போகாதா?

                புறநானூற்று வீரத்தை போற்றும் தமிழ்நாடு, இன்று சாதிய கௌரவத்திற்காக அல்லவா சாட்டை சுழற்றுகிறது.

                பல தேசங்கள் கொண்டாடத்தக்க வாழ்வியல் அறத்தைத் தன்னகத்தே கொண்ட தமிழ்நாட்டில், சாதிவெறியின் உச்சத்தைத் தொடும், ஆணவக் கொலைகள் நடப்பதென்பது, நமது பண்பாட்டு விழுமங்கள் மீது தொடுக்கப்பட்ட போர்.

                சாதிகடந்த காதலர்களின் பினங்களைக் காட்சிப்படுத்துவதற்காக தண்டவாளங்கள் காத்துக்கிடக்கின்றன. அப்படித்தான், திவ்யா காதலித்து மணமுடித்த இளவரசன் உடலும், சேலம் கோகுல்ராஜ் உடலும் கிடத்தப்பட்டிருந்தன.

                இவ்வாறான சாதிவெறி ஆணவக் கொலைகளைத் தடுத்து நிறுத்தாமல், தன் சாதிவெறியூட்டி சாதிவெறியை மக்கள் மயப்படுத்தும் இராமதாசு போன்ற தலைவர்களை தமிழக அரசியல்; பரப்பில் இருந்து அப்புறப்படுத்தாமல், தமிழ்த்தேசிய ஓர்மையைக் கட்டமைப்பது எப்படி?

                மேலும் சாதிவெறி ஆணவக் கொலைகள் அதிகம் நிகழும் மாவட்டங்களில் இராமநாதபுரம் மாவட்டம் முதலிடத்தை வகிக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில்; 78 பேர் சாதிவெறிக் கோரப்பசிக்கு இலக்காகியிருக்கிறார்கள் என்கிறது எவிடன்ஸ் அமைப்பின் புள்ளி விவரக்குறிப்பு.

                ஆக, வறட்சிக்குப் பேர்போன இராமநாதபுரம் மாவட்ட மக்களில் சில பிழைப்புவாதிகள், மக்களின் வாழ்வியல் - அடிப்படைத் தேவைகளைப் பற்றிக் கவலைப்படாமல், சாதிவெறி உசுப்பேற்றி சாதியத்தின் வளர்ச்சிக்குத் தூபம் போட்டு வருகிறார்கள்.

                கோவில் திருவிழாக்களின் வாயிலாக சாதிய பாரம்பரியத்தை மீட்டுருவாக்கம் செய்து, அதனை சனாதன தர்மமாக்க முயல்கிறார்கள் கிராமப்புறத்தில் வாழும் சாதிய மேலாண்மைவாதிகள்.

                அறம் போதிக்கும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்கள் இன அடையாளத்தை மறுதலித்து, சாதிய அடையாளத்தை கரங்களில் நிறக்கயிற்று வடிவில் காட்டி, கலவர மேகம் சூழ்வதற்கான காரணகர்த்தக்களாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தென் மாவட்டங்களில் இந்தக்‘கயிறுப்’ பிரச்சனை நீதிமன்றம்வரை சென்றுள்ளதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தோம்.

                “சாதியினால் நிம்மதியும் அழிந்து போகும்

                தலைமுறைககள் பலங்குன்றிச் சாயும்” இது கவிஞர் கண்ணதாசன் அன்றே பாடியது, இன்றைய இளைஞர்களின் எதார்த்தப் போக்கோடு அப்படியே பொருந்திப் போவதாக இருக்கிறது.

                இளைஞர்கள் இன்று சாதிதான் தங்கள் பலமெனக்கருதிக் கொண்டு, தங்கள் ஆடைகளிலும், ஈருளி வாகன முகப்புகளிலும், கைபேசித் திரைகளிலும், வாய்ப்புள்ள இன்ன பிற இடங்களிலும் சாதிய அடையாளத்தைப் பொறிப்பதிலேயே முனைப்புக்காட்டி, தங்கள் இன அடையாளத்தை இழந்து வருகிறார்கள்.

                சாதி அதன் இயங்குதலைத் தீண்டாமை வடிவத்திலேயே வெளிப்படுத்துகிறது. எனவே தீண்டாமை எனும் கொடுமையை, சமூகத்தனத்திலிருந்து களைந்தெறியப்பட வேண்டுமாயின், சாதியம் முற்றாக அழித்தொழிக்கட்ட வேண்டும். சாதியத்தின் ஆணிவேரை அறுத்தெறியாமல் தீண்டாமைக்கு தீமூட்டலாகாது. எங்கெல்லாம் ஆதிக்கச் சாதியினரால் சாதிய வன்கொடுமை கட்டவிழ்த்து விடப்படுகிறதோ அங்கெல்லாம், சனநாயக ஆற்றல்கள் சாதியத்திற்கு எதிராக நெஞ்சு நிமிர்ந்து குரல்கொடுக்க வேண்டும். அக்குரல்கள் ஒப்புக்கு விடுத்ததாக கூடாது; சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக இடதுசாரி அமைப்புகள், தமிழ்த்தேசிய இயக்கங்கள், சாதியொழிப்பு இயக்கங்கள் முதலான சக்திகளின் வேலைத்திட்டம் தொடர்களைச் செயல்பாட்டோடு ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

                இந்தியத் துணைக்கண்ட, தமிழக அரசியல் சூழலில், காங்கிரஸ் கட்சி, திராவிடக் கட்சிகள் என தேர்தல்வாத கட்சிகள் யாவும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் தேர்வின் போது, தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் சாதிப் பிரதிநிதிகளையே வேட்பாளராக அறிவிக்கிறார்கள். இதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட விதிவிலக்கில்லை. இவ்வாறாக சாதியக் கட்டுமானத்தைப் பாதுகாப்பதில் தேர்தல்வாத அரசியல் கட்சிகளும் கூட ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

                இந்தியத் துணைக்கண்டத்தில் நிலவும் சாதியம், அதிகார – ஆதிக்க வர்க்க நலனுக்கு வலுச்சேர்ப்பதாக இருப்பதால் - அது தொடர்ந்து நீட்டிக்கச் செய்வதற்கான வேலையைத்தான் அரசும் - ஆட்சியாளர்களும் செய்துவருகிறார்கள். சாதியத்தின் அசுரக் கரங்களுக்கு நேரடியாகப் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் ஏழை-எளிய சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் என்றாலும், அது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான நச்சு வலை மட்டுமன்று, இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கும் எதிரானது; அனைத்து சாதியினரின் பொது அமைதியைக் கெடுக்கும் தன்மையுடையது; பொதுவான மக்கள் உரிமைப் போராட்டங்களை சீர்குலைக்கும் ஆற்றலுடையது; வீச்சான மக்கள் போராட்டத்தை விழலுக்கு இறைத்த நீராய் மாற்றும்; தமிழர்களிடம் புரையோடிப் போயிருக்கும் சாதியரும் - அது சார்ந்த முரண்பாடுகளுமே, அண்டை நாட்டவர்கள் நம்மை எளிதாய் வீழ்த்த வழியமைத்துக் கொடுக்கிறது; தமிழர்களின் பேரெழுச்சிக்கும் பெருந்தடையாய் இருக்கிறது. எனவே சாதியும் - தீண்டாமையும் தகர்த்தெறியப்பட வேண்டிய நச்சுக்கோட்டை என்பது உழைக்கும் மக்கள் அனைவரும் உய்த்துணர்ந்து, அதற்கு களமாட அணியமாக வேண்டியது காலத்தின் கட்டாயம்; அத்தகைய புரட்சிகர போராட்டங்களுக்கு புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற தலைவர்களின் சிந்தனைகள் நல் வழிகாட்டிகளாக அமையும் என்பதே வரலாறுகள் நமக்குச் சொல்லும் செய்தி.

- தங்க.செங்கதிர்

Pin It