Binayak Zen
ஆந்திர மாநில எல்லைக்கு அருகில் உள்ள சட்டிஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் பாமெத் காவல் நிலையம் அமைந்துள்ளது. அதற்கு மிக அருகிலுள்ள டான்குடா கிராமத்திற்குப் பக்கத்தில் 2007 நவம்பர் மாதம் 2 ஆம் தேதி நக்சலைட்டுகள் நடத்திய குண்டு வீச்சு மற்றும் வரைமுறையற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பாதுகாப்பு அலுவலர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஆந்திராவிலிருந்து வேட்டை நாய்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. தன்டேவாடா மாவட்டப் பழங்குடியினர் கிராமங்களில் பாரதிய ஜனதா கட்சி நடத்தி வரும் ‘சல்வா ஜூடும்' பிரச்சாரம் காரணமாக, அப்பகுதியை உள்நாட்டு கலவரம் பாதித்துள்ளது. அங்கு பெருமளவில் மனித உரிமை மீறல்கள் நடந்து வருகிறதென பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ஏற்கனவே புலன் விசாரணை செய்து வெளிப்படுத்தியுள்ளன.

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (PUCL) மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் பினாயக் சென் அவர்கள் 2007 மே 14 அன்று ராய்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பிணையில் வெளிவர இதுவரை அவர் அனுமதிக்கப்படவில்லை. டாக்டர் சென் பல ஆண்டுகளாக மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் (NAPM) மாநிலப் பொறுப்பாளராக இருந்தவர். அவரை இக்கூட்டமைப்பு சார்பாக சந்திக்கலாம் என்ற நம்பிக்கையுடன் 2007 நவம்பர் 3 அன்று முயன்றும் அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.

டாக்டர் சென் அவர்கள் ஒரு பிரபல குழந்தை நல மருத்துவர். வேலூர் மருத்துவக் கல்லூரியின் பழைய மாணவர். கல்லூரியின் மிக உயரிய ‘பால் ஹாரிசன் விருது' அவருக்கு 2004 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. அவரைக் கைது செய்தது குறித்து உலகளாவிய மனித உரிமை அமைப்பான ‘அம்னஸ்டி இன்டர் நேஷனல்' கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நோம் சாம்ஸ்கி, அமர்தியா சென், அருந்ததி ராய் போன்ற முக்கிய பிரமுகர்கள் அவருடைய கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். டாக்டர் சென் அவர்கள் தம்தாரி மாவட்டத்திலுள்ள பாக்ரும்நலாவில் ஏழைகளுக்கென ஒரு மருந்தகத்தைப் பல ஆண்டுகளாக நடத்தி வந்தார்.

‘சல்வா ஜூடும்' மூலம் பழங்குடியினர் மத்தியில் பா.ஜ.க. நடத்தி வந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பி வந்ததே டாக்டர் சென் அவர்கள் செய்த முக்கிய ‘குற்றம்.' மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தி வந்ததோடு, பி.யு.சி.எல். பொதுச் செயலாளர் என்ற முறையில சிறைக் கைதிகளை சந்தித்து வந்தது, டாக்டர் சென் அவர்கள் செய்த மற்றொரு ‘குற்றம்.' குறிப்பாக, 2006 ஏப்ரல் மாதம் முதற்கொண்டு சிறையிலிருந்து வரும் மாவோயிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நாராயண் சன்யாலை டாக்டர் சென் சந்தித்துள்ளார்.

ஆனால், சிறைக் கைதிகளை சந்திக்க அவர் காவல் துறையின் அனுமதி பெற்றிருந்தார் என்பதே உண்மை. டாக்டர் சென் அவர்களுக்கு எதிராகப் பொய்யாகவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.

பிரிட்டனின் கிளாஸ்கோ விமான நிலையத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் முகமது ஹனீபிற்கு தொடர்பு இருந்ததாக 2007 சூலை மாதம் ஆஸ்திரேலியாவில் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டபோது, உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங், தனது உறக்கத்தை இழந்ததாகக் குறிப்பிட்டார். ஆனால் டாக்டர் பினாயக் சென் அவர்கள் மீது பொய்க் குற்றம் சுமத்தி சிறையிலடைத்த போது, பிரதமர் தமது உறக்கத்தை இழந்ததாகத் தெரியவில்லை. டாக்டர் சென் அவர்களின் துணைவியார் டாக்டர் இலினா சென் அவர்கள், ‘வார்தா மகாத்மா காந்தி சர்வதேசப் பல்கலைக் கழக'த்தில் மகளிர் ஆய்வுத் துறை தலைவராக இருக்கிறார். மகளிர் இயக்கத்தின் மூத்த செயல்பாட்டாளராகவும் திகழ்கிற அவர் நமக்கு அளித்த பேட்டியிலிருந்து.

சந்திப்பு : காபிரியலே டீட்ரிக்

பினாயக் சென்னை கைது செய்ய இட்டுச் சென்ற சம்பவங்கள் எவை?

சிறிது காலத்திற்கு முன்னர்தான், வார்தா மகாத்மா காந்தி சர்வதேச பல்கலைக் கழகத்தில் நான் மகளிர் ஆய்வுத் துறை தலைவராக சேர்ந்திருந்தேன். 2007 ஏப்ரல் 30 அன்று பினாயக் சென்னின் தாயாரைக் காண எனது மகள்களை கொல்கத்தாவிற்கு நான் அழைத்துச் சென்றேன். மே 2 ஆம் தேதியன்று பினாயக் வருவதாக இருந்தது. இது நெடு நாட்களுக்கு முன்னதாகவே திட்டமிட்ட ஒரு குடும்ப விடுமுறையாகும்.

பினாயக் மே 1 அன்று விலாஸ்பூரில் உள்ள தனது மருந்தகத்தை நடத்திவிட்டு, இரவு 8 மணிக்கு ஒரு ஓட்டலிலே பியூஷ் குஹாவைச் சந்திக்கச் சென்றார். குஹாவின் அறை பூட்டப்பட்டிருந்தது. அவர் வெளியே சென்றிருப்பதாகவும், விரைவில் திரும்பி விடுவாரென்றும் ஓட்டல் வரவேற்பு அலுவலர்கள் தெரிவித்தனர். உணவுக்காக வெளியே சென்றுவிட்டு பினாயக் மீண்டும் வந்தபோது, தகவல் ஏதுமின்றி குஹா அறையைக் காலி செய்துவிட்டதாக அவரிடம் தெரிவித்தனர். தேடிப் பார்த்தும், பினாயக் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏற்கனவே திட்டமிட்டபடி பினாயக் கொல்கத்தா சென்றார்.

மே 4 ஆம் தேதி குஹாவின் மனைவி டாக்டர் சென்னைத் தொடர்பு கொண்டு, தனது கணவரைக் காணவில்லை என்று கூறினார். பினாயக் விடுமுறையில் இருந்ததால், குஹாவின் மனைவியை சட்டிஸ்கர் மாநில பி.யு.சி.எல். தலைவருடன் தொடர்பு கொள்ளச் செய்தார். மே முதல் தேதியிலிருந்தே குஹாவைக் காணவில்லை என்றாலும், மே 5 ஆம் தேதிதான் சட்டிஸ்கர் காவல் துறையினரிடம் பி.யு.சி.எல். இது குறித்துப் புகார் செய்தது. ராய்பூர் ஸ்டேஷனுக்குச் செல்லும் வழியில் சந்தேகத்திற்கிடமான ஒரு மனிதரைக் கைது செய்துள்ளதாகவும், அவருடைய பையில் 49,000 ரூபாயும், நக்சலைட் பிரசுரங்களும், நாராயண் சன்யால் கைப்பட எழுதிய 3 கடிதங்கள் இருந்ததாகவும் காவல் துறை தெரிவித்தது.

அவற்றை பினாயக் தன்னிடம் கொடுத்தாரென குஹா சொன்னதாகவும் காவல் துறை கூறியது. ஆனால், குஹா ஏற்கனவே காணாமல் போய்விட்டார் என்பதாலும், மே 2 ஆம் தேதியே பினாயக் கொல்கத்தா சென்று விட்டதாலும் நிச்சயமாக குஹாவை பினாயக் சந்தித்திருக்க முடியாது.

மே 9 ஆம் தேதி ராய்பூரிலிருந்து நண்பர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, டாக்டர் சென்னும் அவரது குடும்பத்தினரும் கொல்கத்தாவில் தலைமறைவாக இருக்கிறார்களென காவல் துறையினர் சொல்லி வருவதாகத் தெரிவித்தனர். இதை முன்னிட்டு, டாக்டர் சென் முன் ஜாமின் கோர வேண்டுமென அவரது வழக்குரைஞர் சுதா பரத்வாஜ் ஆலோசனை கூறினார். சட்டிஸ்கரில் நேரில் ஆஜராகித்தான் முன் ஜாமின் கோர முடியும் என்பதால், மே 14 ஆம் தேதியன்று பினாயக் விலாஸ்பூருக்கு வந்தார். அப்போது சுதா பரத்வாஜ் அலுவலகத்தில் பினாயக் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அவரை சிக்க வைக்கும் ஆதாரங்கள் ஏதும் உண்டா?

இதுவரை ஒரு சிறு துளி ஆதாரம்கூட அளிக்கப்படவில்லை. மே 16 ஆம் தேதி காவல் துறையினர் எங்களது குடியிருப்பைச் சோதனையிட விரும்பியுள்ளனர். ஆனால், உடைமையாளரான நான் அங்கே இல்லை என்பதால், அதற்கு சீல் வைத்து விட்டனர். மே 16 அன்று வந்த நான், மே 17 அன்றே நீதிமன்றத்தில் எனது குடியிருப்பைச் சோதனையிடுவதென்றால், சுயேச்சையான சாட்சிகள் அப்போது அங்கே இருக்க வேண்டுமென வற்புறுத்தினேன்.

எனது கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. ஏற்கனவே எங்களது பண்ணை வீடு எந்தவித ஆணையுமின்றி சோதனையிடப்பட்டிருந்தது. மே 19 அன்று வீட்டைச் சோதனையிட்ட காவல் துறையினர் கணினியின் ‘வன்தட்டை' (Hard Disk) எடுத்துச் சென்று, அய்தராபாத்தில் அதைப் பரிசோதனைக்குட்படுத்தினர். அதன் விளைவுகள் சூன் 16 அன்று தெரிந்தாலும், அவற்றை அவர்கள் வெளியிடவில்லை. கைது செய்யப்பட்ட 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை கொடுக்கப்பட்டது. தீவிர நக்சலைட் என்று கருதப்படும் பினாயக் மீதுள்ள குற்றச்சாட்டுகளின் தன்மையோ மிகவும் பொதுவானது, ஆதாரமற்றது. எங்களது வீட்டிலிருந்து கைப்பற்றிய சன்யால் (பி.யு.சி.எல். செயலாளருக்கு எழுதிய) அட்டைகள், சிறை அலுவலர்களது அனுமதியுடன் எழுதப்பட்டவை.

சிறை நிலவரம் எப்படியுள்ளது என்று உணர்கிறீர்கள்?

உணவு மிகவும் மோசம். பினாயக் 17 கிலோ எடை குறைந்திருக்கிறார். உறவினர்கள் கொண்டு செல்லும் உணவுப் பொருட்களில் பாதியை காவலர்கள் அனுமதிப்பதில்லை. கூரை ஒழுகுகிறது. வாரத்தில் ஒரு முறை மட்டுமே அரை மணி நேரம் அவரை சந்திக்கலாம். நீதிமன்றத்தில் அடைத்து வைக்கும் முறை மிக மோசமானது. கும்பலாக வாகனங்களில் கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். அதிகபட்ச பாதுகாப்பு கருதி பினாயக் தனியாக வைக்கப்படுகிறார். குடும்பத்தினரை நீதிமன்றத்தினுள்ளே அனுமதிப்பதில்லை.

நீதிமன்ற அறையிலுள்ள கூண்டுகளுக்குள் தகவல்களை சத்தமிட்டு கத்திச் சொல்ல வேண்டியுள்ளது. எங்களது குழந்தைகள் இந்த நிலவரத்தைப் பார்த்து மிகவும் சோர்ந்து போகிறார்கள். பினாயக்கின் வழக்கை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்த லாமென காவல் துறையினர் கூறினர். நாங்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. ஏனெனில், அதன் பிறகு வழக்குரைஞரைத் தொடர்பு கொள்ளக்கூட அவருக்கு வழியில்லாமல் போய்விடும்.

சட்டிஸ்கர் மாநிலம் உருவான நாளை நினைவுகூர்ந்து போற்றும் வகையில், 2007 நவம்பர் முதல் தேதியிலிருந்து 7 ஆம் தேதி வரை மாநில அரசு விழா நடத்துகிறது. ‘நல்ல ஆளுகை' என்று சொல்வது குறித்து உங்களது கருத்து என்ன?

இது ஒரு காவல் துறை ராஜ்யம். 2008 தேர்தல்களைக் கருத்தில் கொண்டு வெளிப்படைத் தன்மையைக் குறிக்கும் ‘மின்னணுஆளுகை' என்பதாக விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால், அமைதிப் பிரச்சாரம் எனச் சொல்லிக் கொள்ளும் ‘சல்வா ஜூடும்' அமைப்பு காரணமாக வன்முறை அதிகரித்துள்ளது. காவல் துறையினர் மீது நடந்த திடீர்த் தாக்குதலில் 11 காவலர்கள் உயிரிழந்ததால், விழாவை நிறுத்த வேண்டியதாயிற்று. விழாவில் நடந்த கண்காட்சியில் நக்சலைட்டுகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

கண்காட்சியின் ஓரிடத்தில் நக்சலைட்டுகளின் உருவங்களைத் திரையில் காட்டி, அவர்கள் மீது மக்கள் துப்பாக்கியைப் பயன்படுத்தவும், துப்பாக்கி சூடு நடத்தப் பயிற்சி பெறவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. மாநிலத்தின் உள்ளடங்கிய தொலைவான கிராமங்களில் காணப்படும் கொடூரமான வறுமையையும், ‘சல்வா ஜூடும்' மூலம் மேற்கொள்ளப்படும் அடக்குமுறையையும் - ஜனநாயக ரீதியாகவே சந்திக்க வேண்டும். பா.ஜ.க. அரசிலும் சரி, காங்கிரஸ் அரசிலும் சரி அதற்கான அறிகுறிகள் இல்லை.

மாநில மக்கள் இயக்கங்களின் நிலைமை எப்படியுள்ளது?

பெருவாரியான அடக்குமுறை காரணமாக, மக்கள் இயக்கங்கள் துன்பகரமான நிலைமையில் உள்ளன. அமைப்பு ரீதியாக ஒருங்கிணைவதும், ஆக்கப்பூர்வமாக செயல்படுவதுமே நியோகி தலைமையின் கீழ் ‘சட்டிஸ்கர் முக்தி மோர்ச்சா'வின் முழக்கங்களாக இருந்தன. ஆனால் இன்று ‘முக்தி' என்னவாயிற்று? மோர்ச்சாவும், பிற செயல்பாட்டாளர்களும் தொடர்ந்து தைரியமாகச் செயல்பட்டு வருகின்றனர். பினாயக் அவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களும், அமைதி வழிப் போராட்டங்களும் நடைபெறுகின்றன. பிலாயிலுள்ள பண்பாட்டுக் குழுக்களும், சிறுவர் குழுக்களும் ஒரு மருத்துவர் என்ற முறையில் அவரது நினைவைப் போற்றி வருகின்றன. அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை, அவரது மருத்துவப் பணியை குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் பெரிதாக இருக்கவில்லையென்றும், அது ஒரு போர்வையே என்றும் கூறுகிறது.

Binayak Zen
டல்லி ராஜராவில் உள்ள ஷாகீத் மருத்துவமனை மற்றும் ‘ஜன் ஸ்வஸ்திய சகயோக்' நிறுவனத்தைச் சார்ந்த மருத்துவர்கள் விலாஸ்பூர் மருந்தகத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். தர்ணாக்கள் நடத்தி ‘ஜன் முக்தி மோர்ச்சா' முதலமைச்சரது கொடும்பாவியை எரித்தது. மருத்துவ நண்பர்கள் குழு, தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மருத்துவமனை பழைய மாணவர் சங்கம், பிரிட்டனின் மக்களவை, ‘அம்னஸ்டி இன்டர்நேஷனல்' போன்ற அமைப்புகளும் சாம்ஸ்கி, அமர்த்தியா சென், அருந்ததி ராய் மற்றும் வேறு பலரும் குறிப்பிடத்தகுந்த வகையில் தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

எனினும், உலகமயமாக்கலின் கீழ் சட்டிஸ்கர் நிலவரம் மிகவும் மனச் சோர்வு தருவதாக உள்ளது. சட்டிஸ்கர் பண்பாடு வீழ்ச்சியடைந்து வருகிறது. மினுமினுக்கும் பேரங்காடிகளும், நுகர்வு மனப்பான்மையும் ராய்பூரை மூச்சுத் திணற வைத்துள்ளன. அதே சமயம், பண்பாட்டுப் பன்மையை ‘இந்துத்துவா' ஒருமுகப்படுத்த முயல்கிறது; உள்நாட்டுப் பண்பாட்டை சமற்கிருதமயமான இந்து மதமாக ஆற்றுப்படுத்த விழைந்துள்ளது. ராணுவமயச் சூழல் காணப்படுவதால், ஜனநாயகம் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி, ஆயுதமேந்திய எதிர்ப்பு பரவலாகி வருகிறது.

மாநிலத்திற்கே உரிய சட்டிஸ்கர் சிறப்பு பொது மக்கள் பாதுகாப்புச் சட்டம் (2005), மத்திய அரசின் யு.ஏ.பி.ஏ. சட்டம் (2004) போன்ற மிகக் கடுமையான சட்டங்கள், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நடைமுறையில் உள்ளதே -நிலவரம் மிக மோசமாக இருப்பதற்குச் சான்று. இந்தச் சட்டங்கள் எதிர்க் கருத்துகளை நசுக்கவே பயன்படுத்தப்படுகின்றன என்பதால், அவற்றை திரும்பப் பெற வேண்டியது அவசியம்.

எடுத்துக்காட்டாக, நீரைத் தனியார் வசமாக்குதல் (ஷியோநாத் நதி); தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்தாதிருத்தல்; நீர், நிலம், காடு ஆகியவற்றிலிருந்து பழங்குடியினரை அந்நியப்படுத்துதல்; நிலம், நீர், மது, கூட்டு மற்றும் ஒப்பந்த வர்த்தகம் ஆகியவற்றின் அடாவடிக் கும்பல்களின் ஆதிக்கம் போன்றவற்றிற்கு எதிரான போராட்டங்களை நசுக்கவே அந்தச் சட்டங்கள் பயன்படுகின்றன.

பி.யு.சி.எல்., பி.யு.டி.ஆர்., உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மக்கள் வழக்குரைஞர்கள் சங்கம் போன்ற பல மனித உரிமை அமைப்புகள் சுயேச்சையான விசாரணைகளை மேற்கொண்டன. கணக்கில் வராத நூற்றுக்கணக்கான கொலைகள், பெண்களை வன்புணர்வுக்கு ஆட்படுத்தியவை, ஆயிரக்கணக்கான வீடுகளை எரித்தது,
கால்நடைகளை அழித்தது, தானியங்களை நாசம் செய்தது, நூற்றுக்கணக்கான கிராமங்களைக் காலி செய்ய வைத்து - கிட்டத்தட்ட 2 லட்சம் மக்களை இடம் பெயரச் செய்தது போன்றவை குறித்த விவரங்கள் இந்த விசாரணைகள் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

உங்களது வேண்டுகோள் என்ன?

நடப்பு உண்மைகளை உற்று நோக்குவது அவசியம். குற்றப்பத்திரிகையில் முழுவதும் பொருளற்ற பொதுவான குற்றச்சாட்டுகளே சொல்லப்பட்டுள்ளன. ஒரு கிறித்துவ மிஷினெரி என்றுகூட பினாயக் சித்தரிக்கப்பட்டுள்ளார். சன்யால், பி.யு.சி.எல். பொதுச் செயலாளர் என்ற முறையிலும், ஒரு மருத்துவர் என்ற வகையிலும் தமது கடமையை மட்டுமே செய்தார். ஒரு மருத்துவராகவும், மனித உரிமை ஆர்வலராகவுமே பினாயக் பிரபலமாக அறியப்பட்டவர், மதிக்கப்படுகிறவர்.

புருலியாவில் நடைபெற்ற பழையதொரு குண்டுவீச்சு வழக்கில் பியூஷ் குஹாவை அண்மையில் குற்றவாளியாகச் சேர்த்துள்ளனர். முன்பு இந்த வழக்கில் அவரைப் பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை. அரசு மற்றும் காவல் துறையின் தன்னிச்சையான போக்கு திடுக்கிடச் செய்வதாக இருக்கிறது. செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு வழக்கு வரும்போது அதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். சட்டிஸ்கர் மாநிலத்தில் மீண்டும் ஜனநாயகத்தை நிலைநாட்ட, நாடு தழுவிய ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்வது இதில் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

தமிழில் : ஞான. சுரபி மணி
Pin It