அன்பான குழந்தைகளே!

வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

கோடை விடுமுறையின் குதூகலம் முடிந்து, பள்ளிக்குச் செல்லத் தொடங்கியிருப்பீர்கள். கற்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு வந்து விட்டிருக்கும். அந்த உணர்வுக்கு ஏற்ப இப்போதிலிருந்தே படிக்கத் தொடங்கி விடுங்கள்.

நம் நாட்டில் இன்னும் கூட லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. வறுமை, அறியாமை, மூடப்பழக்க வழக்கங்கள், வசதி இல்லாத நிலை போன்ற காரணங்கள் தான் அக்குழந்தைகள் படிப்பதற்குத் தடையாக இருக்கின்றன.
உங்களுக்கு படிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால், அதற்காக நீங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். படிக்க முடியாத நிலை இருந்தால், அதைப் போக்க முயற்சி செய்ய வேண்டும்.

படிப்பது மகிழ்ச்சி தரும் செயல்பாடு ஆகும். படிப்பதை நீங்கள் விரும்ப வேண்டும். உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாட நூல்களை முழுமையாகப் புரட்டிப்பார்த்து பாடங்களை புரிந்து கொள்ள வேண்டும். பிறகு வகுப்பறையில் ஆசிரியர்கள் கற்பிப்பதை கவனம் கொடுத்து கேட்க வேண்டும்.

அன்றைய பாடங்களை அன்றன்றே படித்து முடிக்க வேண்டும். படித்ததை அய்ந்து முறைகளுக்கு மனதிலே திரும்பத்திரும்ப நினைவுபடுத்தி ஞாபகத்தில் வைக்க வேண்டும். இப்படி செய்தால் பாடங்கள் மனதில் நிற்கும். தேர்வு குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.

பாடங்களை நன்றாகப் புரிந்து கொண்டு படியுங்கள். புரியவில்லை எனில் ஆசிரியரின் உதவியை தயங்காமல் நாடுங்கள். இப்படி படிப்பதைத் தான் திருவள்ளுவர் ‘கற்க கசடு அற’ என்று கூறுகிறார். பிழையின்றி கற்றால்தான் பிழையின்றி நடக்கலாம்.
Pin It