பாபர் மசூதி இடிப்பு, டிசம்பர் 6 அன்று தற்செயலாக நடந்த ஒன்றுதானா? அந்நிகழ்வு வெறிகொண்ட ஒரு கும்பலின் தன்னியல்பான ஒரு நடவடிக்கையின் விளைவல்ல. மாறாக, அது ஒரு மேல்மட்ட சதித்திட்டத்தின் விளைவு என்று நம்புவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன. நாட்டின் எல்லா மூலை முடுக்குகளிலும் மதவெறியைக் கட்டியெழுப்ப சங் பரிவார் இந்நிகழ்வைப் பயன்படுத்திக் கொண்டதில் வியப்பில்லை.

கவனமாகத் தோற்றுவிக்கப்பட்டு, தொடர்ந்து வளர்த்தெடுக்கப்பட்ட இவ்வெறி மசூதி தரைமட்டமாக்கப்பட்டதில் தனது உச்சத்தை அடைந்தது. ஆனால், முக்கியமான கேள்வி என்னவெனில், தங்களின் குரூர நடவடிக்கைக்கு இந்த குறிப்பிட்ட நாளைத் தேர்ந்தெடுக்க காவிப் பரிவாரங்களைத் தூண்டியது எது? இக்கேள்வியைக் கொஞ்சம் அலசி ஆராய்ந்தால் நான் உறுதியாகச் சொல்கிறேன், இந்து மதவாதத்தின் அல்லது இந்துத்துவாவின் உண்மையான தன்மையை அது வெளிப்படுத்திவிடும்.

நாமனைவரும் அறிருந்திருப்பதைப் போல, எல்லா மனித சமூகங்களிலும் சுரண்டுவோருக்கும் சுரண்டப்படும் சமூகங்களுக்கும் இடையில் வர்க்கப் போராட்டம் முடிவின்றி தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. வரலாற்றின் சில குறிப்பான புள்ளிகளில் தன்னை வன்முறையான வடிவங்களில் வெளிப்படுத்திக் கொண்டாலும் பெருபான்மையான நேரங்களில் உளவியல் தளத்தில் இப்போராட்டம் தீவிரம் குன்றாமல் நடந்து கொண்டேயிருக்கிறது.

எல்லா இடங்களிலும் ஒவ்வொரு முறையும் ஆளும் வர்க்கங்களின் போர்த் தந்திரம் என்பது, மக்களின் இந்த நாட்டார் நினைவை (Folk memory) அழிக்க முயல்வதாகவே இருந்து வந்திருக்கிறது. இந்நாட்டார் நினைவு என்பது அப்போதிருந்த அதிகார மய்யங்களுக்கு எதிராக, மக்களாலும் அவர்களின் வரலாற்று நாயகர்களாலும் காட்டப்பட்ட எதிர்ப்பின் வரலாற்றுப் பதிவேயன்றி வேறல்ல. ஒடுக்கப்படும் சமூகங்கள் தாங்கள் சந்திக்கும் தற்கால ஒடுக்கு முறையை விடவும் தங்களின் முன்னோர்கள் சந்தித்த கொடுங்கோன்மையைக் குறித்து கேள்வியுறும் போதே மிகவும் கொந்தளிப்படைகின்றன என்பதை ஒடுக்கும் வர்க்கம் அறிந்தே இருக்கிறது. எனவே, அதிகார வர்க்கங்கள் தம்மிடமுள்ள அனைத்துக் கருவிகளையும் பயன்படுத்தி, இக்கூட்டு நினைவை அழித்து விட முயல்கின்றன.

அதே வேளையில், குடிமை வர்க்கங்கள் தனது சொந்த இலக்கியம், பண்பாடு, கலை, நாட்டார் வழக்காறுகள் ஆகியவற்றின் வழியாகத் தமது அடுத்தடுத்த தலைமுறையினருக்குச் சொத்துகளாக விட்டுச் செல்வதன் மூலம், இந்தக் கூட்டு நினைவை அழிவற்றதாக்க கடுமையாக முனைகிறது. நமது சமகாலத்து தலித் எழுத்தாளர்களால் எழுதப்படும் தன் வரலாற்று நூல்கள் இதை மிகச் சிறப்பாக விளக்கும். அவர்கள் தங்கள் வரலாற்றின் மிக முக்கியமான நாட்களையும், தங்கள் தலைவர்களுடன் தொடர்புடைய நாட்களையும் (அத்தலைவர்களின் பிறந்தநாள், மறைந்த நாள் போன்றவற்றை) தமது லட்சியத்தின் ஒளி அணைந்து விடாமல் காக்கும் வகையில் கொண்டாடவும், கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள்.

சிகாகோ எழுச்சியில் உயிர்த்தியாகம் செய்த தொழிலாளர்களை நினைவு கூறும் வகையில் உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களால் கொண்டாடப்படும் மே தினம், இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். தங்களது முன்னோர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுங்கோன்மையைக் குறித்த இந்நினைவு, ஒடுக்கப்பட்டவர்கள் அரிய செயல்களைச் செய்வதற்கு எவ்வாறு உத்வேகமளிக்கக் கூடியதாக இருக்கிறது என்பதை வெஸ்ட் இண்டீஸில் உள்ள ஆண்டிகுவாவைச் சேர்ந்த பிரபலமான கறுப்பின கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் வெளியிட்ட ஓர் அறிக்கையில் நாம் காண முடியும்.

விவியன் ரிச்சர்ட்ஸ் நாம் அனைவரும் அறிந்திருப்பதைப் போல ஒரு மிகச்சிறந்த விளையாட்டு வீரர் மட்டுமல்ல; இனவெறி அநீதிக்கெதிரான கருத்துரிமைப் போராளியும் ஆவார். அவர் ஒருமுறை சொன்னார்: “எனது அணியிலுள்ள ஒவ்வொரு வீரரும் நூற்றாண்டுகளாக எங்கள் முன்னோர்கள் வெள்ளையர்களிடம் அனுபவித்த கொடுமைகளைக் குறித்த நினைவுகளால் வாடி வதங்கிக் கொண்டிருப்பவர்கள்'' என்று. வெள்ளை அணிகளுக்கு எதிராக மிகச் சிறப்பாகப் பந்து வீசுவதோ அல்லது சிறப்பாக பேட் செய்வதோ அவர்கள் வெள்ளையர்களின் கொடுங்கோன்மைக்குப் பழிக்குப்பழி வாங்குவது போலவும் தங்களது மிகச் சிறப்பான அந்தஸ்தைப் பெற்றுத் தருவதாகவும் இருந்தது.

இப்படி, ஒடுக்கப்பட்டோரின் படைக்கலன்களில் இக்கூட்டு நினைவே தலைமைப் படைக்கலனாக விளங்குவதை நாம் காணலாம். அதிகார வர்க்கத்தால் தனது கடுமையான முயற்சிகளுக்குப் பின்பும் அழித்து விட முடியாத சில குறிப்பிட்ட நினைவுகள் உள்ளன. இவ்வாறான தருணங்களில் இந்நினைவுகளில் மாசு கலந்து தங்களது துரோகத்தனமான முடிவுகளுக்கு ஏற்றவாறு மடைமாற்றம் செய்வதில் அவர்கள் தஞ்சமடைகிறார்கள். டிசம்பர் 6, 1992இல் பாபர் மசூதி தரைமட்டமாக இடிக்கப்பட்டபோது இதைப் போன்ற முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டன என்று நான் குற்றஞ்சாட்டுகிறேன் (பின்னர் அதை விளக்குகிறேன்). முதலில் இந்துத்துவாவின் உண்மையான தன்மையைக் குறித்து சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

சாதி அமைப்பே இந்து நம்பிக்கையின் மிக முக்கியமான அம்சமாகத் திகழ்கிறது. இந்துத்துவக் கொள்கை இச்சாதி அமைப்பை பாதுகாப்பதாகவும் நிலைநிறுத்துவதாகவுமே இருக்கிறது. இந்து மறை நூல்களின் தொகுப்பில் மிக உயர்ந்த இடத்தைப் பெறும் கீதையில், “வர்ண தர்மத்தை நான் தான் படைத்தேன்'' என்று கிருஷ்ணனாக அவதரித்த கடவுள் சொல்கிறார். மேலும் இந்து நம்பிக்கை சார்ந்த எல்லா மறைநூல்களுமே சாதி அமைப்பை உறுதியாக ஆதரிப்பவையாக இருக்கின்றன. வர்ணாசிரம தர்மம் நடைமுறையில் இருக்கும் வரையிலும் வர்ணப்படிநிலை அமைப்பின் உச்சியில் வசதியாக உட்கார்ந்திருப்பவர்களின் ஆதிக்கம், மேன்மை, சலுகைகள், சொர்க்கம், மீட்பு மற்றும் அனைத்தும் உத்திரவாதப்படுத்தப்பட்டிருக்கும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

இருபிறப்பாளர்களின் உன்னத நிலையும், அவர்களது சமூக, அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டு மேலாதிக்கம் ஆகியவையும் எவ்வாறு நிரந்தரமாக நிலைநிறுத்தப்படுகின்றன என்பதே சனாதன தர்மத்தின் தலையாய அக்கறையாக இருக்கிறது. இல்லையெனில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீடு பிரச்சனையில் இந்துத்துவத்தை முன்மொழிபவர்கள் ஏன் அவ்வளவு வஞ்சினம் கொள்ள வேண்டும்? இந்தியாவின் உண்மையான வரலாறு இனிமேல்தான் எழுதப்பட வேண்டும்.

இந்நாட்டின் வரலாற்றுப் பூர்வமான வளர்ச்சியில் சாதி அமைப்புக்கு எதிரான போராட்டத்தின் மய்யப்பங்களிப்பு குறித்தெல்லாம் இன்று வரையிலும் கூட விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. தலித் - பகுஜன் மக்கள் திரள் ஒரு பண்பாட்டுப் புரட்சிக்கு உள்ளாகும் போதுதான் இது நனவாகும். அல்லது இன்னும் சரியாகச் சொல்வதென்றால், இவ்வரலாறு எழுதப்பட்டால்தான் தலித் பகுஜன் மக்கள் திரளின் பண்பாட்டுப் புரட்சி உயிர்ப்பெறும்.

இந்திய வரலாறு என்பது, சாதி அமைப்புக்கு எதிரான போராட்டங்களின் தொகுப்பாக இருக்கிறது. ஜைன மதம், புத்த மதம், சீக்கிய மதம் ஆகியவற்றின் தோற்றமோ, இஸ்லாமிய, கிறித்துவ நம்பிக்கைகளின் நுழைவோ அவற்றின் ஏற்போ சாதி அமைப்பு முறை இல்லாமல் இருந்திருந்தால் சாத்தியமாகி இருக்காது. இந்நாட்டில் உற்பத்தி சக்திகள் தேக்கமடைந்ததற்கும், அறிவியல் மற்றும் அறிவுத் துறைகளின் வளர்ச்சி வரலாற்று ரீதியாக தேக்கமடைந்ததற்கும் இதே சுரண்டலை மய்யமாகக் கொண்ட சாதி அமைப்பே காரணமாக இருந்தது.

பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் வருகையால் தெரிந்தோ தெரியாமலோ இந்த வரலாற்று ரீதியிலான தேக்கநிலை நிறுத்தப்பட்டது. இதைக் குறித்து காரல் மார்க்ஸ், ராஜாராம் மோகன்ராய், ஜோதிபா புலே ஆகியோரின் ஆக்கங்களில், குறிப்பிடத்தகுந்த அளவு கருத்தொற்றுமை உள்ளன. அரசுக்கு இணையான சமூக அதிகாரம் கொண்ட மய்யங்களாக இந்து கோயில்கள் விளங்கியதால், மத்திய காலத்தில் முஸ்லிம் படையெடுப்பாளர்களால் இந்து கோயில்கள் இடிக்கப்பட்டபோது, பெரும்பான்மையான தலித் பகுஜன்கள் நிம்மதியே அடைந்தனர்.

பொதுமக்கள் அனைவரும் செல்லத் தடையற்றதும், மேல்/ கீழ் என்ற எண்ணமின்றி கூட்டுவழிபாட்டில் அனைவரும் ஒன்று கலக்க முடிந்ததுமான மசூதிகள், தேவாலயங்கள், குருத்துவாராக்கள், மடாலயங்களைப் போலன்றி சூத்திரர்களும், ஆதி சூத்திரர்களும் நுழையத் தடை விதிக்கப்பட்டவையாக இந்துக் கோயில்கள் விளங்கின. பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கு எதிரான போராட்டம் உக்கிரமடைந்திருந்த காலங்களிலும், சமூக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்க்கொடி ஜோதிபா புலே, நாராயணகுரு, பெரியார், சாகு மகராஜ், பாபாசாகேப் அம்பேத்கர் போன்றவர்களால் உயர்த்திப் பிடிக்கப்பட்டது.

வி.பி.சிங் அரசு மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப் போகும் தன்னுடைய முடிவை அறிவித்தபோது, சாதி ஒழிப்பு ஆர்வலர்கள் பெரும் ஊக்கமடைந்தனர். வி.பி. சிங்கின் இந்நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஆதிக்க சாதியினருக்கு எதிரான தலித் பகுஜன்களின் அறைகூவல் பன்மடங்கு அதிகரித்து. எனவே மண்டல் அரசியலை எதிர்கொள்வதற்காக ஆதிக்க சாதியினர் ‘கமண்டல்’ என்னும் ‘பூத’த்தைக் கட்டவிழ்த்து விட்டனர்.

அதன் தொடர்ச்சியாக வழியெங்கிலும் ரத்தத் தடங்களை ஏற்படுத்திக் கொண்டு அத்வானி தன்னுடைய ராமரதத்தில் ஏறி, நாட்டின் மீது சூறாவளித் தாக்குதல் நிகழ்த்தினார். இறுதியாக, லாலு பிரசாத் அவரைக் கைது செய்தவுடன் பாரதிய ஜனதா கட்சி வி.பி.சிங் அரசுக்கு வழங்கிய தனது ஆதரவை விலக்கி, அதன் மூலம் மன்னிக்க முடியாத பெருங்குற்றத்தை இழைத்தது. வி.பி. சிங்கிற்குத் தண்டனை வழங்கியது.

இந்துத்துவ சக்திகளின் மதவாத அணிதிரட்டல் மற்றும் தூண்டுதலின் விளைவால் இந்துத்துவ சக்திகள் உந்துவிசை பெற்றதன் பலன் பாபர் மசூதி இடிப்பில் முடிந்தது. பார்ப்பனரும், பார்ப்பனியவாதியுமான அன்றைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ் பதட்டம் சூழ்ந்த அன்றைய பகல் வேளையில் மாலை நேர உறக்கத்தில் மும்முரமாய் மூழ்கியிருந்ததிலும், அவர் எழுந்த போது மசூதி முற்றிலுமாய் தரைமட்டமாக்கப் பட்டிருந்ததிலும் வியப்படைய ஒன்றுமில்லை.

-அடுத்த இதழில் முடியும்
Pin It