அன்பான குழந்தைகளே!

வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

இளம் வயதில் எல்லோரும் படிக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது. உங்கள் பெற்றோர்களும், பெரியவர்களும்கூட அப்படித்தான் விரும்புகின்றனர். இளம்வயதில் படிப்பது நல்லது என்பதே உண்மை. அதனால் தான் ‘இளமையில் கல்' என்றார்கள் மூத்தோர்கள். ஆனால், இளம் வயது படிப்பதற்கு மட்டுமே சொந்தமானது அல்ல. நமக்கு விருப்பமான திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும் ஏற்ற வயது அதுதான். ஓவியம், இசை, விளையாட்டு, சிற்பம், நடனம், தச்சு, தையல், பூத்தையல், கணினி என்று உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள பல துறைகள் உள்ளன.

விளையாடுவது உடல்நலனைப் பெருக்கும். உங்களுக்குப் பிடித்தமான விளையாட்டைத் தேர்வு செய்து பயிற்சி எடுக்கலாம். ஓவியம் வரைவதும், இலக்கிய நூல்களை கற்பதும், இசையைப் படிப்பதும், இசைக் கருவிகளை இசைப்பதும் மனதைப் பண்படுத்தும்; கலையுணர்வையும் படைப்புத் தன்மையையும் அளித்திடும். மரம் நடுவதும், தோட்டம் போடுவதும், இயற்கையைப் பாதுகாப்பதும் கூட திறமைதான்! ஓய்வு நேரங்களில் தொலைக்காட்சியைப் பார்த்து நேரத்தை வீணடிக்காமல், உங்களுக்குப் பிடித்த திறனை வளர்த்துக் கொள்ள முயற்சி எடுங்கள். அப்போதுதான் முழுமையான மனிதர்களாய் நீங்கள் மாறுவீர்கள்.
Pin It