கீழ்மை அகற்று

காற்று ஒரு பூவின் முன்னே வந்து நின்றது.

‘மலரே! உன்னை, உன் நிறத்தை, உயரிய மணத்தை எனக்குப் பிடிக்கும்! உன்னைப் போன்ற ஓரிரு மலர்களை எனக்கு அறிமுகம் செய்க!' என்று கேட்டது.

அவ்வளவுதான்! அந்தப் பூ, காடே அலறும்படியாகச் சிரித்தது.

‘என்னைப் போலா?! வேறு பூக்களா? முட்டாள் காற்றே! மூடத்தனமான கேள்வி இது. என்னைப் போல நானே நானே!' என்றது.

காற்று திகைத்தது.

‘அந்தப் பூவைப் பார். அதன் நிறம் சிறுமை. அந்த மலரைப் பார் அதன் வடிவம் கொடுமை. ஒன்றுக்கு மணமே இல்லை! மற்றொன்றிடம் தேனே இல்லை; வேறொன்றிடம் அழகே இல்லை! என்னைவிட எல்லாமே கீழானவை; என்னைவிட எல்லாமே தாழ்வானவை. அதோ வானத்தைப் பார்! அந்த விண்மீன்களுக்கு நல்ல நிறத்தைப் பூசு! நல்ல மணத்தைக் கொடு, உயரிய வடிவை உண்டாக்கு; அப்போதும் அவை என்னைவிடத் தாழ்ந்தவையே!' என்று மீண்டும் மீண்டும் அந்தப் பூ கூறியது.

தாழ்வான பூ எது என்று காற்றுக்குத் தெரிந்தது. ஆணவத்தால் அனைத்தையும் தாழ்த்திய பூவே தாழ்ந்தது எனத் தலையில் மோதியது. பூ சிதைந்தது.

ஓதுவது ஒழியேல்

அறிவழகன் பாட நூல்களைக் கருத்தோடு கற்று கல்வியில் முதல் மாணவனாக விளங்கினான். அத்துடன், நூலகம் செல்வதில் அவனுக்கு விருப்பம் அதிகம். நூலகம் சென்று பொது அறிவு நூல்களையும், வளர்ச்சிக்குத் தேவையான நூல்களையும், எதிர்கால வாழ்வுக்குத் துணை செய்யும் நூல்களையும் படிப்பது அறிவழகனுக்கு வழக்கமானது. நாள், வார, மாத ஏடுகள் போன்ற பல வகையான ஏடுகளையும் தவறாமல் படிப்பதும், குறிப்பெடுப்பதும் அவனுக்கு வாடிக்கையானது.

இனியனோ, அவனுக்கு நேர் எதிராக இருந்தான். ஊர் சுற்றுவது, தொலைக்காட்சி பார்ப்பது, இரவில் திரைப்படம் பார்ப்பது, அரட்டை அடிப்பது எனத் திரிந்தான். மாநில அரசு, மத்திய அரசு தொடர்பான வேலைகளுக்கான தேர்வுகளில் மிக எளிதாகப் பங்குபெற்ற அறிவழகன் இரண்டிலும் வெற்றி பெற்றான்.

தேர்வுக்காகப் புத்தகங்களையும், நாள், வார, மாத ஏடுகளையும் இனியன் தேடத் தொடங்கினான். அரசு தரும் வேலைகளோ, அறிவாளிகளைத் தேடத் தொடங்கின. பாவம் இனியன்!

நன்றி : ‘அவ்வையின் ஆத்திச்சூடி குட்டிக் கதைகள்'
Pin It