Ambedkar and Periyar
மதத்தின் மொழியில் இந்திய அரசியல் சூழல் மாசு பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவாவை கூட இங்கு பலர் விமர்சிக்க அஞ்சுகின்றனர். ஏனெனில், அதனை விமர்சிப்பது இந்துக்களை, இந்து மதத்தை விமர்சிப்பதாகிவிடும் என்பது அவர்களது கருத்து. இது எவ்விதத்திலும் உண்மையாகாது. அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் ஒருபோதும் மதத்தின் பாதுகாவலர்களாக இருக்க இயலாது என்பதை நாம் அறிவோம். இந்த அமைப்புகளில் எவையும் இந்துக்களின் பிரதிநிதிகள் கூட அல்ல. 1920களில் இந்து அரசர்கள் மற்றும் நிலப்பிரபுக்கள் உருவாக்கிய ஒழுங்கு செய்யப்பட்ட அரசியல் கருத்தாக்கம்தான் ‘இந்துத்துவா'. அது முஸ்லிம் லீக்கின் மத தேசியத்திற்கு இணையானது.

இந்துவும் இஸ்லாத்தும் மதங்களாகத் திகழ்பவை. ஆனால் இந்துத்துவாவும், இஸ்லாமியமும் அந்த சமூகத்தின் வசதி பெற்றவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் சில குறிப்பிட்ட பகுதியினரின் நலன்களுக்காக மட்டும் குரல் கொடுப்பவை. ஒட்டுமொத்த மதத்தினரின் கோரிக்கைக்கும் இவர்களுக்கும் தொடர்புகள் ஏதும் இல்லை. சுதந்திரப் போராட்ட காலத்தில் பெரும்பான்மையான இந்துக்களோ, முஸ்லிம்களோ இந்து மகா சபை மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய இயக்கங்களின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஆதரவாக அணி திரளவில்லை.

இன்று உலக பயங்கர வாதத்தை ஒழிக்கப் புறப்பட்டவர்கள், இஸ்லாத்தை குறி வைத்தே புறப்பட்டுள்ளனர். அல் கொய்தாவின் தோற்றத்திற்குப் பிறகு தான் உலக அரசியலில் பயங்கரவாதத்தை ஒரு மதம் அல்லது மதக் குழுவினருடன் ஒப்பிட்டு அடையாளப்படுத்தும் போக்குகள் தொடங்கின. இஸ்லாத்தின் பெயரால் ரஷ்யாவை தாக்க, அமெரிக்க நிதியுதவியுடன் மதராசாக்களில் ஏராளமான இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சிஅளிக்கப்பட்டது. இதுதான் பயங்கரவாதமும் மத அடையாளமும் உருப்பெற்ற புள்ளி. எந்த மதமும் ஒன்றுமறியாதவர்களைக் கொல்லவோ, பயங்கரவாதத்தை ஆதரிக்கவோ சொல்லவில்லை. இந்த பன்முகங்கொண்ட நிகழ்வு, அரசியலாக அடையாளம் பெற்று முன்வைக்கப்பட்டதற்கு மூலகாரணமாய் திகழ்ந்தது அமெரிக்க ஊடகங்களே.

அண்மையில், ‘இந்து ஜாக்ரன் மஞ்சி'ன் தொண்டர்கள் நடத்திய ‘தானே' (மும்பை) குண்டு வெடிப்புகள், பயங்கரவாதம் ஓர் அரசியல் கருத்தாக்கமே; மதக் கொள்கை அல்ல என்பதை மீண்டும் நிறுவியிருக்கிறது. இதற்கு மிக அண்மையில்தான் நாண்டேட்டில் இரு பஜ்ரங் தள தொண்டர்கள் குண்டு தயாரித்த போது இறந்து போன சம்பவம் நிகழ்ந்தது.

இன்று பாரதிய ஜனதாவின் அரசியல் செல்வாக்கும் வி.எச்.பி., பஜ்ரங்தள், வனவாசி கல்யாண் மஞ்ச் ஆகிய அமைப்புகளின் சமூகத் தாக்கமும் வளர்ந்து வருவதைக் காண முடிகிறது. இவர்களின் வளர்ச்சி, இந்திய ஜனநாயகத்தின் செயல்பாடுகளில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். இது, இரு தளங்களிலும் செயல்படும். சமூகத்தின் பல பகுதிகளில் வெகுமக்கள் மனங்களில் தீய விளைவை ஏற்படுத்தி (மூளை சலவை எந்திரம்) கருத்துக்களை விதைக்கும் மிக ஆபத்தான ஒரு தளம். ஊடகங்கள், அதிகார வர்க்கம், காவல் துறையில் உள்ள ஆதரவாளர்கள் எனப் பல வழிகளிலும் சமூகத்தை மதவாதப்படுத்துவது. இதன் அடிப்படையில் தான் மத அரசியல் இயங்குகிறது. இரண்டாம் தளம், அரசியல் அமைப்புகளின் வழி செயல்படுகிறது. பா.ஜ.க. ஆட்சியில் அமரும் காலங்களில் எல்லாம் இந்தப் பிரிவினை எந்திரம் அரசு ஆதரவுடன் பீடு நடை போடுகிறது.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அரசின் கொள்கைகள் அனைத்தும், சிறுபான்மையினருக்கு எதிராகவே உள்ளன. அவர்கள் அரசின் விதிமுறைகளை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் ஆர்.எஸ்.எஸ். புத்துணர்வு பெறுகிறது. அரசாங்கத்தின் செயல்பாடுகளில் பெரும் செல்வாக்கை செலுத்துகிறது. நமக்கு அளிக்கப்பட்டுள்ள அரசியல் இயங்குவெளியின் துணையுடன் நாம் ஜனநாயகத்தின் பண்புகளை மீட்டுருவாக்க வேண்டும். சுதந்திரப் போராட்டக் காலத்தின் கனவுகளை, பார்வைகளை நனவாக்க வேண்டும்.

நம் முன்னுள்ள கடமைகள்

கடந்த இருபது ஆண்டுகளாக மதக்கலவரங்கள் மற்றும் பயங்கரவாத செயல்பாடுகள் தீவிரமாகியுள்ளன. பொதுப் புத்தி, வெகுஜன மனோபாவம் ஆகியவை இத்தகு செயல்களில் முக்கியப் பங்காற்றுகின்றன. வரலாறு குறித்த தவறான கற்பிதங்களை மக்களிடையே பொதுமைப்படுத்தி, அதன் வழியே சமூகம் சிந்திக்கும் விதத்தைக் கூட அவர்கள் கட்டுப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு வன்முறை நிகழ்வும் பொதுப் புத்தியை தீவிரப்படுத்துகிறது; இறுகச் செய்கிறது. சமூகத்தின் பெரும் பகுதியை, மதவாத விவாதம் மேலாதிக்கம் செலுத்துகிறது. சமூக நல்லிணக்கத்தை மறுதலித்து, இந்த மதவாத சக்திகள் தங்கள் வன்முறை செயல்களின் வழியே நம்பிக்கை பெற்று, அடுத்த தளத்தை நோக்கி நகர்கிறார்கள்; தேர்தல் வழியில் ஆதாயம் பெறுகிறார்கள். மதக் கலவரங்கள், பயங்கரவாத செயல்களின் வழியே சிறுபான்மையினர் எதிர்ப்பு மனோபாவம் இன்னும் அதிகரிக்கவே செய்கிறது.

பயங்கரவாத வன்முறைகள், பிரிவினை அரசியல் ஆகியவற்றுக்கு எதிராக அழுத்தமாகப் போராடி வரும் சமூக இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகளால் கூட இதற்கு மாற்றான ஜனநாயகப் பன்முகத் தளத்தை ஏற்படுத்த இயலவில்லை. நாட்டில் உள்ள மதவாத இயக்கங்கள் -உணர்வுப்பூர்வமான பிரச்சனைகள், மதவாத வன்முறை ஆகிய இரண்டையும் தங்கள் அடிப்படைக் கருவிகளாக அடையாளம் கண்டுள்ளனர். இவை தான் அவர்களை ஆட்சிக்கு அழைத்துச் செல்கிறது. அமைதியை நிலைநாட்ட விரும்புகின்றவர்கள், மேற்கூறிய விஷயங்களை எல்லாம் கவனத்தில் கொள்வது அவசியம். வன்மம் நிறைந்த கருத்தியல்கள் சமூகத்தில் அதிகமாக காணப்படுகின்றன. மதவாதிகளால் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ள அடையாள அரசியல், மெல்ல ஜனநாயக விழுமியங்களை விழுங்கி வருகிறது. ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் காக்க முயல்பவர்கள் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஜனநாயகத் தளத்தை நாம் பல்வேறு முனைகளிலிருந்து உருவாக்க வேண்டும். சமூக இயக்கங்களின் போராளிகள் தான் இந்தப் போராட்டத்திற்கு அடித்தளமாகத் திகழ்வார்கள். சமூக இயக்கங்களின் நோக்கங்களை எல்லாம் நாம் திட்டங்களாக உருமாற்ற வேண்டும். முற்போக்கு இயக்கங்கள் சிறு குழுக்களாகப் பிரிவதை நாம் தடுக்க வேண்டும், தாராளமனம் கொண்ட (இறுக்கங்கள் குறைவான) திட்ட அடிப்படையிலான பல குழுக்களின் கூட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும். பொருளாதார உரிமைகள், சமூகத்தின் சமத்துவம், பாலின நீதி ஆகியவை நம் முக்கிய கோரிக்கைகளாகத் திகழ வேண்டும். நம் திட்டத்தின் பட்டியலில் தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஒரு முக்கிய கோரிக்கையாக இணைக்கப்பட வேண்டும். குடிமைச் சமூக, ஜனநாயக விடுதலை சார் போராட்டங்களையும் நாம் மேற்கொள்ள வேண்டும். கல்வியின் வாயிலாக நாம் மதசார்பற்ற விழுமியங்களைப் பரவலாக்க வேண்டும்.

மதசார்பற்ற விழுமியங்களின் தேவை

மதவாத, பயங்கரவாத வன்முறை எப்பொழுதும் இல்லாத அளவுக்கு அண்மையில் தலை தூக்கியுள்ளது. வன்மங்களின் வழியே தகவமைவு பெற்ற சமூக மனம், மிகுந்த அமைதியுடன் கலவரங்களுக்கு ஒப்புதல் அளிக்கிறது. பாடநூல்களின் மூலம் கூட, குழந்தைகளின் மனங்களில் மதவாத வன்மம் திணிக்கப்படுகின்றன. ஊடகங்கள், அதிலும் ஆங்கில ஊடகங்களில் சில பகுதியினர் -இந்த மதவாதப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஊடகங்கள் மூலம் மக்களிடம் பிரிவினையை விதைக்கின்றனர். பண்பாட்டுத் தளங்களில் மதவாத சக்திகளே மேலாதிக்கம் செலுத்துகின்றன. இத்தனை தீமைகளுக்கு எதிராகவும் நாம் போராட வேண்டும்.

இதில் சில குழுக்கள் பண்பாடு மற்றும், ஊடகத் துறைகளில் இடையீடு செய்யலாம். வீதி நாடகக் குழுக்கள், வட்டாரக் கலை வடிவங்கள், கூட்டிசை எனப் பல வழிகளிலும் பண்பாட்டு நடவடிக்கைகள் அமையலாம். தெரு நாடகம் இதில் மிக முக்கிய வடிவமாகக் கருதப்படலாம். ஆவணப் படங்களைத் திரையிடுவது, கருத்தியல் பட்டறைகள், விவாதக்களங்கள் எனப் பல நிகழ்வுகளில் போராளிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் சங்கமிக்கலாம். வட்டாரத் தெரு அளவிலான செயல்பாடுகள் இதில் முக்கியமானவை. என்.எஸ்.எஸ்., நேருயுவ கேந்திரா, மாணவர் -ஆசிரியர் அமைப்புகள், கல்லூரிகள் எனப் பல தளங்கள் நமக்காக காத்துக் கிடக்கின்றன.

நாம் பல தளங்களில் பணியாற்ற வேண்டிய சூழலில் இருக்கிறோம். இந்திய சமூக மனங்களில் படிந்துள்ள பல தவறான கற்பிதங்களை அகற்றியாக வேண்டும். கடந்த 30 ஆண்டுகளாக இந்துத்துவவாதிகள் இந்திய சராசரி மனதை கூட விட்டு வைக்கவில்லை. ஏறக்குறைய எல்லா மனங்களிலும் இந்திய வரலாறு, கட்டாய மதமாற்றம், மதம், பண்பாடு, சுதந்திரப் போராட்டத்தில் மதவாதிகளின் பங்களிப்பு, பிரிவினை, காஷ்மீர் பிரச்சனை, முஸ்லிம்கள் -கிறித்துவர்கள் குறித்த கருத்துகள், பயங்கரவாதம் என எல்லாவற்றைப் பற்றியும் மிகத் தவறான புரிதல்களே விதைக்கப்பட்டுள்ளன. நாம் இந்த எல்லா விஷயங்கள் குறித்தும் மக்களிடம் உண்மையை விளக்க வேண்டும்.

இந்த விழிப்புணர்வு செயல்பாடுகள் தவிர, நம் பண்பாட்டு வெளிப்பாடுகள் சார்ந்தும் இயங்க வேண்டும். நம்மிடம் உள்ள அலுவலகங்கள், குழு மய்யங்கள் எனப்பல வழிகளில் நாம் மக்களை சென்றடைய வேண்டும்; அணிதிரட்ட வேண்டும். தேசிய விடுமுறைகள், முக்கிய நாட்கள், குழு விழாக்கள் என நாம் மக்களை சந்திக்க நாட்களை திட்டமிட வேண்டும். குழந்தைகளுக்கு கதை சொல்லும் முகாம்களை நடத்த வேண்டும். சமூகத்தின் அமைதியை உறுதிப்படுத்தும் பல்சமய, பன்மதப் பரிமாற்றங்களை நிகழ்த்தலாம். மனித விழுமியங்களை நாம் புனரமைக்க வேண்டும். நமக்கு கிடைக்கும் நல்ல ஆவணப்படங்களை மொழியாக்கம் செய்வது பெரிதும் உதவும். இவ்வாறாகப் பல திசைவழிகளிலும் பயணித்து, மதசார்பற்ற சமூகத்தை உருவாக்க உறுதியேற்போம்.
Pin It