“நான் நிரபராதி. அரசியல் பழிவாங்கலுக்கு ஆளாகி உள்ளேன். என் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. இதற்கு சரியான பதிலடியை நீதிமன்றத்தில் கொடுப்பேன்''

- இப்படிப் பேசியிருப்பவர் ஓர் எதிர்க்கட்சித் தலைவரோ, தோழமைக் கட்சியைச் சேர்ந்த நபரோ, வளர்ந்து வருவதாகக் கருதப்படும் கட்சியைச் சார்ந்த பிரமுகரோ அல்ல. தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவரும், சட்டமன்றத்தின் தற்போதைய உறுப்பினரும், இதனினும் குறிப்பாக, தமிழக அமைச்சரவையில் சுற்றுலா மற்றும் பதிவுத் துறை அமைச்சராகவும் இருக்கும் சுரேஷ்ராஜன் என்பதுதான் வியப்புக்குரிய செய்தி.

தலித் மக்கள் சந்திக்கும் வன்கொடுமைகளுக்கு எதிராகப் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பினும், இன்றுவரை வன்கொடுமைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அதிலும் இதுபோன்ற சட்டங்களை இயற்ற வேண்டிய, நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பிலிருக்கும் ஒரு மாநில அமைச்சரே வன்கொடுமைக் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி இருப்பது, இந்திய சமூகத்தின் இந்து மனப்பான்மையின் வெளிப்பாடேயன்றி வேறல்ல. 1989 ஆம் ஆண்டு பட்டியல் சாதியினர் - பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் இயற்றப்பட்டதிலிருந்தே இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; பொய் வழக்குகள் வருகின்றன; எனவே இச்சட்டத்தையே நீக்க வேண்டும் என்று பல்வேறு சாதி அமைப்புகள் கூச்சலிட்டு வருகின்றன. இக்கோரிக்கைக்கு ஆளும் அரசுகளின் பிரதிநிதிகள் நேரடியாக ஆதரவு தெரிவிக்காவிடினும், இச்சட்டம் அவசியமான ஒன்றுதான் என்றும், சரியானபடிதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும், விதிவிலக்கான நிகழ்வுகளிலும் வழக்குகளிலும் நீதிமன்றத் தீர்ப்புகள் இச்சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும்போது கவனத்தில் கொள்ளும்.

Sureshrajanஎனவே, இச்சட்டத்தை நீக்க வேண்டிய அவசியமில்லை என்று இதுவரை எந்த அரசும் வெளிப்படையாக ஆதரவுக் குரல் கொடுத்ததில்லை. ஆளும் வர்க்கத்தினர் முழுக்க முழுக்க சாதி இந்துக்களாக இருப்பதால், அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள சாதி இந்துக்களைப் பகைத்துக் கொள்ளாத ‘அரசியல் சாணக்கியத்தனம்' தேவை என்பதை முழுமையாக அவர்கள் புரிந்து கொண்டுள்ளதும் தான். தனக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமையைப் பற்றி ஒரு தாழ்த்தப்பட்டவர் புகார் தருவது என்பது, மிக மிகக் குறைந்த அளவிலான நிகழ்வுகளில்தான். ஒவ்வொரு வன்கொடுமை நிகழ்விற்கும் புகார் கொடுக்கப்படுமேயானால், இன்றுள்ள காவல் நிலையங்களும், நீதிமன்றங்களும் போதாது என்பது உறுதியாக நிரூபிக்கப்பட்டுவிடும். அதனால்தானோ என்னவோ வன்கொடுமைப் புகார்களை காவல் நிலையங்கள் ஏற்க மறுப்பதும், வன்கொடுமை வழக்குகளை நீதிமன்றங்கள் வன்கொடுமைச் சட்டத்திற்கு உட்படாதவை என்று தீர்ப்பளிப்பதும் எவ்வித முணுமுணுப்புமின்றி தொடர்கின்றன.

தமிழகத்தில் நடைபெற்ற கொடிய வன்கொடுமைகளான மேலவளவு படுகொலை (1997), திண்ணியம் மலம் தின்ன வைத்த கொடுமை (2002) ஆகியவற்றின் தொடர்ச்சியாக, மதுரை மேலூர் சென்னகரம்பட்டி வேலு, அம்மாசி கொலை (1992) வழக்கில் கரூர் அமர்வு நீதிமன்றம் அண்மையில் (4.8.2008) வழங்கியுள்ள தீர்ப்பும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விடுதலை அளித்துள்ளது. மேலவளவு, திண்ணியம், சென்னகரம்பட்டி - இவை வன்கொடுமை வழக்குகள் இல்லையெனில், வேறு எவை வன்கொடுமை வழக்குகள் என்ற கேள்வியை நீதிமன்றத்தை நோக்கி எழுப்ப வேண்டியுள்ளது. ஆனால், சாதிய ஆதிக்கத்தின் ஒரு கூறாக நீதித் துறையும் செயல்படுவது, தலித் உரிமை ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேல்தட்டு மக்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்புகள் குறித்து மட்டும் தவறாமல் தலையங்கங்கள் தீட்டும் ஊடகங்கள், இவ்வழக்குகளின் தீர்ப்புகள் குறித்துப் பேச மறுக்கின்றன. வன்கொடுமை நிகழ்வு என்றால், ஆதிக்க சாதியினரைக் கூட பாதிக்கப்பட்டோராகக் காண்பிக்க முயலும் ஊடகங்களின் வித்தையை, அண்மையில் ‘உத்தப்புரம்' நிகழ்வில் அறிந்து கொண்டோம். வன்கொடுமைத் தடுப்புச் சுவரை எழுப்பியதோடு, அச்சுவரை அகற்ற கோரிக்கை வைக்கப்பட்டவுடனே ‘சாதிய மேலாண்மை மறுக்கப்படும் ஊரில் குடியிருக்க மாட்டோம்' என்றும், ‘சாதியத்தை காப்பாற்றாத அரசின் அங்கீகார அடையாளங்களான உணவுப் பொருள் வழங்கல் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை இனிமேலும் வைத்திருக்க மாட்டோம்' என்றும், வன்கொடுமைத் தடுப்புச் சுவரை இடித்துவிடக் கூடாது, சாதியம் தொடர வேண்டும் என்பதற்காக மற்ற ஆதிக்க சாதியினருடன் கூட்டணி ஏற்படுத்தியது என, அனைத்து சாதியம் சார்ந்த செயல்பாடுகளுக்கும் எவ்வித விமர்சனமுமின்றி ஊடகங்கள் ஊக்கமளித்து உற்சாகத்துடன் வெளியிட்டதை மறுக்க முடியுமா என்ன?

இப்போதைய நிகழ்வில் ஊடகங்களுடன் முதலமைச்சரும் சேர்ந்து கொண்டுள்ளார். “இந்தக் குற்றச்சாட்டை நான் நம்பவில்லை. ஏனெனில், அவர் (அமைச்சர் சுரேஷ்ராஜன்) தன்னுடைய இளம் வயது முதலே திராவிட இயக்கத்தின் தீவிரப் பற்றாளராக உள்ளார்'' என்று முதலமைச்சர் அறிக்கை விடுத்து, தனது ஆதரவுக் கரங்களை நீட்டியுள்ளார். மற்ற குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படும்போது ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்' என்ற புளித்துப்போன வசனத்தைப் பேசும் அரசியல்வாதிகள், வன்கொடுமைக் குற்றச்சாட்டு என்றவுடன் நிலை தடுமாறி, சாதி இந்துக்களுக்கு துணைபோகின்றனர். இந்தப் பின்னணியில்தான் இவ்வழக்கைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது சிறப்பு துணை ஆட்சியராகப் பணியாற்றி வரும் ஜனார்த்தனன், தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் திட்டத்திற்குப் பொறுப்பாளராக உள்ளார். 18.4.2008 அன்று நாகர்கோயிலில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் திட்டத்தின்படி, தொலைக்காட்சிப் பெட்டிகளை பயனீட்டாளருக்கு விநியோகிக்கும் விழா நடைபெற்றது. அவ்விழாவில் பங்கேற்று தொலைக்காட்சிப் பெட்டிகளை விநியோகித்தார் அமைச்சர் சுரேஷ் ராஜன். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பயனீட்டாளர் பட்டியலின்படி தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டு முடிந்தவுடன், மேலும் 39 நபர்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட வேண்டுமென்று துணை ஆட்சியரிடம் கூறியிருக்கிறார் அமைச்சர். முதல் கட்டத்தில் மேற்படி 39 நபர்களின் பெயர் இடம் பெறவில்லை என்பதால், அவர்களுடைய பெயர்களை இரண்டாம் கட்டத்தில் பயனீட்டாளர் பட்டியலில் சேர்த்துக் கொண்டபிறகு வழங்கலாம் என்று துணை ஆட்சியர் அமைச்சரிடம் கூறியிருக்கிறார்.

இதைக் கேட்டு கோபமுற்ற அமைச்சர் துணை ஆட்சியரை - அவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவருடைய சாதிப் பெயரை சொல்லி இழிவாகப் பேசியிருக்கிறார். அமைச்சருடைய தூண்டுதலின் பேரில் அப்போது அவருடனிருந்த அவரது உதவியாளர்கள் ராமசாமி, ஷேக்தாவூத் ஆகியோரும், அரசு வழக்குரைஞர் மகேஷ் என்பவரும் மற்றொரு வழக்குரைஞர் தாமரை பாரதி என்பவரும், சிறப்பு துணை ஆட்சியரைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். இச்சம்பவம் வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர், நகரமன்ற உறுப்பினர், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரின் முன்னிலையில் நிகழ்ந்தேறியுள்ளது. இது தொடர்பாக ஜனார்த்தனன் அளித்த புகார், வழக்கம் போலவே காவல் துறையினரால் பதிவு செய்ய மறுக்கப்பட்டுள்ளது.

சாதாரண நபர்களுக்கெதிரான புகார் என்றாலே பதிவு செய்ய மறுக்கும் காவல் துறை, குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவராக, அதிலும் குறிப்பாக அமைச்சராக இருக்கும்போது வேறெப்படி நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியும்? இந்நிலையில், சிறப்புத் துணை ஆட்சியர், மாவட்ட ஆட்சியரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். ஆனால், அவருடைய புகார் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படாமல் நீதிமன்றம் செல்லாமல் விஷயத்தைப் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. எனினும் துணை ஆட்சியர் புகாரை வலியுறுத்தியதால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அரசு அலுவலர் சங்கத்திலும் அவர் முறையீடு செய்துள்ளார்.

இச்சம்பவம் 2008 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றிருந்தாலும் சூலை மாத இறுதி வாக்கில்தான் இதுகுறித்த செய்தி ஊடகங்களில் வெளியானது. தொடர்புடைய அமைச்சரின் மறுப்பு வெளியாகியும் இப்பிரச்சனை ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் இருந்ததால், முதலமைச்சரே ஒரு மறுப்பையும் வெளியிட்டு இச்சம்பவத்தை நியாயப்படுத்தும் வகையில் ‘குற்றச்சாட்டை நம்பவில்லை' என்று புகார் தந்த துணை ஆட்சியரைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் செயல்பட்டிருக்கிறார். கூடுதலாக, திராவிட இயக்கத்தின் பெருமையையும் சந்தடி சாக்கில் திரித்துப் பேசியிருக்கிறார்.

திராவிட இயக்கம் தமிழகத்தில் தோன்றி இன்று வரை நிலைத்து நின்றாலும், பெரியார் தவிர, திராவிட இயக்கத்தினர் தலித் விடுதலை, மேம்பாடு குறித்து தெளிவாக சிந்தித்து செயல்படவில்லை. திராவிட இயக்கத்தின் இரு பெரும் அரசியல் கட்சிகளாகத் திகழும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்கள் அரசியல் அதிகாரத்தில் தலித்துகளை எந்த அளவு பங்கெடுக்க அனுமதித்துள்ளனர்? ஏன், இன்றைய தமிழக அமைச்சரவையில் கூட ஆதிதிராவிடர் நலத்துறைக்கு (தவிர்க்க முடியாமல்) தமிழரசியும், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறைக்கு இளம்பரிதியும், பால்வளத்துறைக்கு மதிவாணனையும், பேரவை துணைத் தலைவராக வி.பி. துரைசாமியையும் தவிர வேறு தலித் எவர் உள்ளனர்?

மாவட்ட ஆட்சியரை நியமிப்பது உட்படப் பல்வேறு விஷயங்களில் பலம் பொருந்தியதாகக் கருதப்படும் மாவட்டச் செயலாளர்களில் ஒருவர் கூட தலித் இல்லை. இத்துறைகள் எந்த அளவிற்கு அரசமைப்பில், அரசியல் அதிகாரத்தில் முக்கியத்துவம் பெற்ற துறைகள் என்பதை அனைவரும் அறிவர். அ.தி.மு.க.விலும் நிலைமை இதைவிட மோசம். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் அருணாச்சலம் தன்னுடன் ஒரே விமானத்தில் பயணிக்கக் கூடாது என, ஜெயலலிதா அவரை விமானத்திலிருந்து இறக்கிவிட்டது மறக்க முடியாத நிகழ்வாகும்.

வன்கொடுமை குறித்த புகார் எனினும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் அமைச்சர் என்பதால், கைது என்ற நடவடிக்கையைப் பாசாங்குக்கு கூட செய்ய காவல் துறை முன்வரவில்லை. தலித் விடுதலை குறித்து உரக்கப் பேசும் இயக்கங்களும் வழக்கமான ஆர்ப்பாட்டம், தொடர் முழக்கம் என்று எந்த ஒரு எதிர்வினையும் புரியவில்லை. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவருமான செ.கு. தமிழரசன் மட்டும் காரசாரமான அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான கோரிக்கை மனு ஒன்றை தமிழக ஆளுநருக்கு அளித்துள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட துணை ஆட்சியர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையை அணுகியிருக்கிறார். அமைச்சருக்கு எதிரான புகார் அடிப்படையற்றது என்று முதலமைச்சர் கூறிய பிறகு வழக்கைப் புலன்விசாரணை செய்ய வேண்டிய காவல் துறை, முதலமைச்சரின் கருத்தை பலப்படுத்தும் வகையில் மட்டுமே செயல்படும் என்பதாலும் புலன்விசாரணை அதிகாரியான காவல் கண்காணிப்பாளர், புகார் பதிவு செய்யப்பட்ட பிறகு குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் ஒருவருடன் விழாவில் கலந்து கொண்டார் என்பதாலும், புகார்தாரரான துணை ஆட்சியர் புலன் விசாரணை அதிகாரியை அணுகிய போதும் அவருடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்யாமல், குற்றம் சாட்டப்பட்டவர்களின் நண்பர்களிடம் மட்டுமே வாக்குமூலம் பெற்று பதிவு செய்து வருவதாலும், இவ்வழக்கின் புலன் விசாரணையை மத்திய புலனாய்வுத் துறைக்கு (சி.பி.அய்.) மாற்றக் கோரியுள்ளார். வழக்கில் உயர் நீதிமன்றம் என்ன உத்தரவு வழங்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளான காஞ்சி சங்கராச்சாரி, அன்றைய ஜெயலலிதா அரசு தன் மீது பொய் வழக்கு போட்டிருக்கிறது என்பதால், தமிழ்நாட்டில் உள்ள எந்த நீதிமன்றத்தில் தான் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டாலும் தனக்கு நீதி மறுக்கப்படும் என்று கோரியதன் அடிப்படையில் அவ்வழக்கு புதுச்சேரிக்கு நீதிமன்ற உத்தரவின்படி மாற்றப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவருக்கே இந்த உரிமை உண்டென்றால், புகார்தாரரான துணை ஆட்சியர் தன் வழக்கின் புலன்விசாரணையை வேறு நிறுவனத்திற்கு மாற்றக் கோரியிருப்பது, கூடுதல் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டியதாகும். குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் அமைச்சர் என்பதாலும் முதலமைச்சரே குற்றச்சாட்டு பொய் என்று கூறிவிட்டதால், மாநில அரசின் காவல் துறை புகாரை பொய்ப் புகார் என்று தள்ளிவிட வாய்ப்புள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் தொடர்புடைய அமைச்சரை அவர் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் தக்கவாறு நீக்கப்படும்வரை அமைச்சரவையிலிருந்து நீக்கி, காவல் துறையினர் சட்டப்படியாக புகார் மீது நடிவடிக்கை எடுக்க வழிவகுக்க வேண்டும். காவல் துறையினர் சுரேஷ்ராஜனையும் மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும்.

வன்கொடுமைக் குற்றம் தவிர கொலை முயற்சி குற்றம் புரிந்ததாகவும் அவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், இக்கைது நடவடிக்கை காவல் துறை சட்டப்படி செயல்படுகிறது என்பதை நிரூபிக்க சிறிதளவாவது உதவும். நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் கடந்த ஆண்டு அங்காளன் என்பவர், புதுச்சேரி அமைச்சராக இருந்தபோது அவரது மனைவி, அவர் தன்னை கொடுமைப்படுத்தியதாக வழக்கு தொடர்ந்ததின் பேரில் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். எனவே, அமைச்சரவையிலிருந்து நீக்குவது என்பது ஒரு பெரிய விஷயமே அல்ல.

நிலைமை இவ்வாறிருக்க, குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல் ‘திராவிடப் பாரம்பரியம்' குறித்து முதலமைச்சர் பேசியிருக்கிறார். இப்போது தமிழக செய்தித்துறை அமைச்சராக உள்ள பரிதி இளம்வழுதியின் தந்தையார், 1954இல் நடைபெற்ற தி.மு.க.வின் உட்கட்சித் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அண்ணாதுரை நியமிக்கும் நபரே கட்சி நிர்வாகி என்ற நிலைக்கு எதிரானதாக அவ்விஷயம் கருதப்பட, அதையும் மீறி இளம்பரிதி 4 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அன்று தொடங்கி இன்றுவரை அவரைத் தவிர வேறு யாரும் தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு வர முடியவில்லை. தஞ்சை தாழைக் கருணாநிதி மட்டும் இடையில் கொஞ்ச நாள் அமர்த்தப்பட்டு, நீக்கப்பட்டிருக்கிறார்.

இளம்பரிதி தேர்தலில் வெற்றி பெற்று மாவட்டச் செயலாளரானாலும் கூட, மாவட்ட அலுவலகச் சாவியை அண்ணாதுரையின் ஆதரவாளர், இளம்பரிதியிடம் கொடுக்கவில்லை. பொதுக்கூட்டம், பிரச்சாரம் நடத்துவதற்கு தேவையான ஸ்பீக்கர் குழாயைக்கூட கொடுக்கவில்லை. அண்ணாதுரையிடம் புகார் செய்தும் அவர் கண்டு கொள்ளவில்லை. அவர் கடும் கோபத்தில் இருந்தார். தனது முதலியார் சாதியை சார்ந்தவரை அண்ணாதுரை நிறுத்தியும், இளம்பரிதி வெற்றி பெற்றதால் அண்ணாதுரை கோபம் கொண்டார். இளம்பரிதியையும் அவருடனிருந்தவர்களையும் புறக்கணித்தார். இறுதியில் 1956இல் இளம்பரிதி கட்சியை விட்டே நீக்கப்பட்டார். இவை தொடர்பான செய்திகளை இந்தியக் குடியரசுக் கட்சியின் மூத்த தலைவர் அ. சக்திதாசன், தன்னுடைய அண்மைப் பேட்டி ஒன்றில் (‘முற்றுகை' காலாண்டிதழ் சூலை 2008) விரிவாக தி.மு.க. தலைவர்களின் சாதிய மனப்பான்மையை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் இதே சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தபோது, இந்த அமைச்சரும் அவருடன் இருவரும் தி.மு.க.வின் விவசாயப் பிரிவு நகரச் செயலாளர் மணிகண்டன் என்பவரை, இதே போல் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசியதுடன் தாக்கியும் இருக்கிறார்கள். இவ்வழக்கில் அமைச்சர் விடுதலையாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இது தவிர, இதுபோன்றே மேலும் 4 வன்கொடுமைப் புகார்கள் குறிப்பிட்ட இந்த அமைச்சர் மீது கூறப்பட்டு, பின்னர் சமரசத்தால் கைவிடப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் கூறும் "திராவிடப் பாரம்பரியம்' இதுதானா?

Pin It