காந்தி 1919 இல் பொறுப்பேற்ற பிறகு, காங்கிரஸ் கட்சி செயல்பாடு மிகுந்த ஒரு கட்சியாகிவிட்டது; அல்லது காங்கிரசார் சொல்லிக் கொள்ள விரும்புவது போல, அது சில கடுமையான எதிர்ப்புகளை ஒருங்கிணைத்தது. இது, இதற்கு முன்பு நினைத்துக் கூட பார்த்திராத ஒன்று. காங்கிரசின் ஆயுதங்களாக பல நேரங்களில் பயன்பட்டிருக்கக் கூடிய எதிர்ப்புப் போராட்டங்கள் (1) ஒத்துழையாமை (2) புறக்கணிப்பு (3) சமூகக் கீழ்ப்படியாமை (4) பட்டினிப் போராட்டம் ஆகியவை ஆகும். ஒத்துழையாமை இயக்கத்தின் நோக்கம் அரசை பயனற்றதாக ஆக்குவதாகும். அதற்காக அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள் போன்றவற்றை அங்கீகரிக்கவோ, பயன்படுத்தவோ மறுப்பது மற்றும் அரசுப் பணிகளில் ஈடுபட மறுப்பது போன்ற உத்திகள் பயன்படுத்தப்பட்டன. புறக்கணிப்பு என்பது, காங்கிரசின் ஆளுகைக்கு அடிபணிய மறுத்தவர்களை கட்டாயப்படுத்துவதற்கு ஓர் ஆயுதமாகப் பயன்பட்டது. அதற்கு இரு முனைகள் இருந்தன. சமூகம் மற்றும் பொருளாதாரம்.

Ambedkar
சமூக முனை என்பது, அனைத்து வகையான சமூக கலப்புகளையும் இல்லாமல் ஆக்கியது. நாவிதர்கள், துணி வெளுப்பவர்கள், காய்கறி மற்றும் பலசரக்கு வியாபாரிகள், பிற வியாபாரிகள் அனைவரின் சேவையும் கூட திரும்பப் பெறப்பட்டன. இதனால் அவர்களுக்கு வாழ்க்கை அனைத்து வகையிலும் கடினமாகியது. சமூகக் கீழ்ப்படியாமை என்பது, பிரிட்டிஷ் அரசை நேரடியாகத் தாக்குவதை நோக்கமாகக் கொண்டது. திட்டமிட்ட சட்ட மீறுதல் நடவடிக்கைகளின் மூலம் நீதிமன்றக் காவல் பெறுவது, சிறைகளை நிரப்புவது; இதன்மூலம் அரசுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவது என்பதை நோக்கமாகக் கொண்டது. இது, கூட்டு எதிர்ப்பாகவோ, தனி மனித எதிர்ப்பாகவோ செயல்படுத்தப்பட்டது. வேதனை என்னவெனில், காங்கிரசார் கூட்டு பட்டினிப் போராட்டங்களை விரும்பவில்லை. பட்டினிப் போராட்டம் என்பது ஒரு தனிமனித நடவடிக்கையாக மட்டும் இருந்தது. மற்றுமொரு வேதனையான செய்தி என்னவெனில், காங்கிரசார் சாகும் வரை பட்டினிப் போராட்டத்தையும் நடத்தவில்லை. எப்போதுமே அது குறிப்பிட்ட காலத்தினைக் கொண்டிருந்தது. இது, காந்தி தனக்கென ஒதுக்கி வைத்துக் கொண்ட ஓர் ஆயுதமாகவே இருந்தது. அவரும் ஒரு குறிப்பிட்ட கால அளவிலேயே அதைப் பயன்படுத்தினார். இந்திய விடுதலையை வலியுறுத்த காங்கிரஸ் கையிலெடுத்த நான்கு முக்கிய ஆயுதங்கள் இவைதான்.

போராட்டத் திட்டங்களை வகுத்த பிறகு காங்கிரஸ் அதை செயல்படுத்திக் காட்ட முனைந்தது. 1920 முதல் 1942 வரை நான்கு செயல்திட்டங்களில் ஒன்று மாற்றி மற்றொன்றை காங்கிரசார் செயல்படுத்துவதை நாடு கண்டது. அவர்கள் எழுப்பிய கூக்குரல்கள் காற்றை நிறைத்தன. ‘விடுதலைப் போராட்டம்' என்று அவை அழைக்கப்படலாயின. இப்போராட்டங்களால் என்ன பயன் என்பது கவனிக்க வேண்டிய முக்கியக் கேள்வி. ஆனால், இது அதற்கான இடம் அல்ல. பழைய காங்கிரஸ் இதை விட மோசமாக எதுவும் செய்திருக்க முடியாதென நாம் நிறைவடைந்து கொள்ள வேண்டியதுதான். இந்தப் போராட்ட வடிவங்கள் உண்மையில் வேதனையையே அளித்திருக்கின்றன. சுயராஜ்யம் என்பது அது இருந்த தொலைவிலேயே இருக்கிறது.

ஆனால், இந்தப் போராட்ட வடிவங்கள் நாட்டுப் பிரிவினையை கடுமையாகவும், உறுதியாகவும் அருகிலேயும் வரவழைத்துவிட்டன. இந்தப் போராட்டங்களினால் ஏற்பட்ட பலன்களை விவாதிக்க இயலாவிட்டாலும், இந்த ‘விடுதலைப் போராட்டம்' பெரும்பாலும் இந்துக்களால் மட்டுமே நடத்தப்பட்டது என்ற உண்மையை நாம் வெளிப்படுத்தியே ஆக வேண்டும். ஒரே ஒரு முறை மட்டுமே முஸ்லிம்கள் அதில் பங்கெடுத்தனர். அது குறைந்த காலமே நடைபெற்ற கிலாபத் போராட்டத்தில் மட்டுமே. அவர்கள் இதை விட்டு விரைவில் வெளியேறி விட்டனர். மற்ற சமூகத்தினர், குறிப்பாக தீண்டத்தகாதோர், இதில் பங்கெடுக்கவே இல்லை. ஒரு சில தனி மனிதர்கள் தங்கள் தனிப்பட்ட நலன்களுக்காகப் பங்கேற்றிருக்கலாம். 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் நிறைவேற்றிய ‘வெள்ளையனே வெளியேறு' தீர்மானத்தைத் தொடர்ந்து ‘விடுதலைப் போராட்டம்' குறித்து கடைசியாக நடந்த பிரச்சாரத்தில் இதை கவனிக்கலாம்.

இது மிக வெளிப்படையான உண்மை. குறிப்பாக, மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் காங்கிரசின் விடுதலைப் போராட்டத்தில் காங்கிரசோடு ஒத்துழைக்க மறுப்பதை காணும் வெளிநாட்டவருக்கு, இது மிக வெளிப்படையாகவே உணரக் கூடியதாக உள்ளது. இந்த நிலை குறித்து அவர்கள் விநோதமாக உணர்கிறார்கள். ஏன் முஸ்லிம்களும் கிறித்துவர்களும் தீண்டத்தகாதோரும் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்பதில்லை என்று கேட்கிறார்கள். இதற்கு காங்கிரஸ் பதில் அளிக்குமென எதிர்பார்க்கிறார்கள். காங்கிரஸ் இதற்கு ஒரு தயாரான பதிலை வைத்திருக்கிறது. அது என்னவெனில், ‘தீண்டத்தகாதோர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கருவிகளாக இருப்பதால், அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்பதில்லை.' போர்க்காலத்தில் எதிர்பட்ட பல வெளிநாட்டவர் இதையே எதிரொலிப்பதை கேட்க முடிந்தது. இதில் வேதனை தரும் அனுபவம் என்னவெனில், இந்த வெளிநாட்டவர்களில் பெரும்பாலோர் இந்தக் குற்றச்சாட்டை உண்மை என நம்புவதுதான். இந்த வாதத்தில் உள்ள எளிமையும் நம்பகத்தன்மையுமே இந்த எளிதான மாற்றத்திற்கு காரணமாக இருக்க இயலும். அது, இரண்டு வகைகளில் உதவுகிறது. விநோதமான ஒரு நிகழ்விற்கு காரணம் காட்ட காங்கிரசிற்கு உதவுகிறது. சூழ்நிலைகள் அளிக்கும் நம்பகத்தன்மையின் அடிப்படையில் ஒரு விளக்கத்தைக் கொடுக்க முடிகிறது.

மிகவும் உயர் நிலையில் இருக்கும் வெளிநாட்டினரையும் இந்தக் கருத்து பாதித்திருக்கிறது என்ற உண்மை இல்லையெனில், இத்தகையதொரு திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம் குறித்து யாரும் இந்தளவுக்கு கவலைப்படத் தேவையில்லை. விடுதலைப் போராட்டம் என்று அழைக்கப்படும் ஒன்றில் தீண்டத்தகாதோர் பங்கெடுக்காததற்கு, காங்கிரஸ் அளிக்கும் விளக்கம் அபத்தமானது. இம்மாதிரியான ஒரு விளக்கத்தை நேர்மையற்றவர்களால் மட்டுமே தர இயலும். ஒரு முட்டாள் மட்டுமே அது சரியானது என ஏற்றுக் கொள்ள இயலும். ஆனால் இந்தியாவின் சிக்கல்கள் குறித்து வெளிநாட்டினர் என்ன நினைக்கிறார்கள் என்பது, ஏதாவது ஒரு கட்டத்தில் முக்கியத்துவம் பெறும் என்பதை நடைபெறும் நிகழ்வுகள் காட்டுவதால், தீண்டத்தகாதோர் குறித்து தவறான கருத்து அவர்கள் மனதில் பதியாத வண்ணம் உண்மையான நிலையை விளக்குவது என்பது முக்கியமென நான் நினைக்கிறேன். அதிலும் விடுதலைப் போராட்டத்தில் தீண்டத்தகாதோர் இணையாதது, அவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கருவிகள் என்பதால் அல்ல. மாறாக, தீண்டத்தகாதோர் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அவர்களின் விடுதலையையும் மகிழ்ச்சியையும் ஒட்டுமொத்தமாக அழித்து அவர்களை மரம் வெட்டுபவர்களாகவும், நீர் இறைப்பவர்களாகவும் மட்டுமே நிறுத்தவிடக்கூடிய இந்து ஆதிக்கத்தை, நாட்டின் விடுதலை நிலை நிறுத்திவிடும் என்று அவர்கள் அஞ்சுவதால்தான் என்ற உண்மையை வெளிப்படுத்துவதின் மூலம் தீண்டத்தகாதோர் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு பொய்யானது என்பதை நிரூபிக்க எளிதான வாய்ப்பு இருக்கும் போது நான் அதனை செய்யவே நினைக்கிறேன்.

தீண்டத்தகாதோர் காங்கிரசுடன் ஒத்துழைக்காததற்கு காங்கிரஸ் கூறும் சிறுபிள்ளைத்தனமான காரணம் உண்மையல்ல என்பதற்கு, ‘விடுதலைப் போராட்ட'த்தில் காங்கிரசுடன் தீண்டத்தகாதோர் இணைய மறுத்தது என்பதே வெளிப்படையான சான்றாகும். அதற்குப் பின்னால் உண்மையான வலுவான காரணம் இருக்க வேண்டும். அது என்ன? காங்கிரசுடனான ஒத்துழையாமைக்கு, தீண்டத்தகாதோர் வெளிப்படையாகவே தங்கள் காரணங்களைக் கூறியுள்ளனர். பனியாக்களும் பார்ப்பனர்களும் ஆளும் வர்க்கத்தினராகவும், கீழ் ஜாதி இந்துக்கள் காவல் படையாகவும் இருக்கக்கூடிய ஓர் இந்து ராஜ்ஜியத்தில், தாங்கள் இருக்க வைக்கப்பட விரும்பவில்லை என்று அவர்கள் தெளிவாகவே கூறியுள்ளனர். ஏனெனில், இவர்கள் அனைவரும் தீண்டத்தகாதோரின் பரம்பரை எதிரிகள். இம்மாதிரியாக பேசுவது உறவுகளைக் கெடுக்கக் கூடியது என சொல்லப்படுகிறது. அது உண்மையாக இருக்கலாம். ஆனால் அதன் அடிப்படை உண்மையை உணர மறுக்கிறவர்களுக்கு மட்டுமே அது அவ்வாறு தோன்றலாம். ஆனால் அதன் அடிப்படை உண்மைகளும் கருத்துக்களும் எந்த அச்சுறுத்தலுக்காகவும் அல்ல. அதற்காக ஓர் உண்மையாக மதிக்கத்தக்க அரசியல் சித்தாந்தத்தின் முகமூடியை அணிந்து கொள்ள இயலாது.

அரசியல் பார்வையில் நோக்கினால், இந்த முழக்கங்கள் எல்லாம் என்ன பொருள் தருகின்றன? தீண்டத்தகாதோர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெறுவதற்கு எதிரானவர்கள் அல்ல என்ற பொருளைத் தருகின்றன. ஆனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்தான விடுதலையோடு நிறைவு கொள்ள அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் வலியுறுத்துவது எல்லாம் விடுதலை பெற்ற இந்தியா போதாது; விடுதலை பெற்ற இந்தியா, ஜனநாயகப் பாதுகாப்பு உடையதாகவும் இருக்க வேண்டும். இந்த நோக்கத்துடன் தான் அவர்கள் ஒரு செய்தியினை சொல்கிறார்கள். அதாவது, இந்தியாவில் உள்ள தனித்துவமான சமூக அமைப்பின் காரணமாக, மதப் பெரும்பான்மையினராகிய இந்துக்களோடு ஒப்பிடுகையில், மற்ற சிறுபான்மை சமூகத்தினர் கரைந்து போய்விடுகின்றனர். அதனால் பெரும்பான்மை இந்து மதத்தினரின் கூர்மையான பற்களை வெட்டுவதற்கு அரசியல் சட்டத்தில் இடமளிக்காவிட்டால், இந்தியாவில் ஜனநாயகப் பாதுகாப்பு இருக்காது. அதனால் இந்தியாவின் சிறப்புச் சூழல்களை கருத்தில் கொள்ளக்கூடிய ஓர் அரசியல் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தீண்டத்தகாதோர் வலியுறுத்துகின்றனர்.

இந்து மதப் பெரும்பான்மையினர் அரசியல் அதிகாரத்தை கையகப்படுத்திக் கொண்டு தீண்டத்தகாதோரை அடக்கவும், ஒடுக்கவும் இயலாதவகையில் அரசியல் சட்டத்தில் பாதுகாப்புகள் இருக்க வேண்டும் எனவும், அதன் மூலம் தீண்டத்தகாதோர் தங்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் சுரண்டல்களையும் தடுப்பதற்கான குறைந்த பட்ச அரசியல் போரை நடத்த வழி வகை செய்வதாகவும், மதப் பெரும்பான்மையினருக்கு எதிராக தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் நடத்தும் போராட்டத்தில், தங்களுக்கென அவர்கள் உரிமை கொண்டாடக் கூடியதாகவும் அரசியல் சட்டம் இருக்க வேண்டுமென வலியுறுத்தினர். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், தீண்டத்தகாதோர் கோருவதெல்லாம் மதப் பெரும்பான்மையினரான இந்துக்களின் ஆதிக்கத்தைத் தடுக்கக் கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகள், அரசியல் சட்டத்திலேயே இடம் பெற வேண்டும் என்பதே.

... ஆனால் காங்கிரசாரின் சிறுபிள்ளைத்தனமான வாதங்களை ஏற்க தீண்டத்தகாதோர் தயாராக இல்லை. இந்திய சமூக அமைப்பு குறித்து, குழுக்களின் அடிப்படையில் சிந்திக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதிலிருந்து தப்ப இயலாது. இந்திய சமூக அமைப்பின் மறுக்கவியலாத உண்மை, அதில் இருக்கும் குழுத்தன்மையே. குழுக்களுக்கிடையே இருக்கும் உறவு நிலைகளில் குழு சார்ந்த விருப்பம் மற்றும் முன் தீர்மானங்கள் ஆகியவை ஆதிக்கம் செலுத்தவில்லை என்பதை ஏற்றுக் கொள்வது தவறாகும். இந்து மதப் பெரும்பான்மையினரின் சமூக மனப்பான்மையை, ஒரு விதமான கருத்தியல் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த கருத்தியலானது சமத்துவமின்மையை அங்கீகரிப்பது மட்டுமல்ல; அந்த சமத்துவமின்மையே பல்வேறு குழுக்களிடையிலான உறவு நிலைகளை தீர்மானிக்கும் சட்டமென அதற்கு மதிப்பளித்தது. இவ்வாறான படிநிலை சமத்துவமற்ற கருத்தியலானது, சுதந்திரத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் முற்றிலும் எதிரானது.

இந்தப் படிநிலை சமத்துவமின்மை ஒழியும் என்றோ, இந்துக்கள் அதனை ஒழிக்க முற்படுவார்கள் என்றோ நம்ப இயலாது. அதுவே இந்துக்களின் மதம். அதுவே இந்து மதத்தின் அதிகாரப்பூர்வ கருத்தியல். அது புனிதமானது. அது இல்லாமல் போவதை குறித்து எந்த இந்துவும் நினைத்துப் பார்க்கவும் முடியாது. அதனால் இந்து மதப் பெரும்பான்மையினர் அவர்களின் இந்தப் படிநிலை சமத்துவமின்மையோடு இருப்பது என்பது, ஒரு கடந்து போகக்கூடிய எளிய செய்தி அல்ல. அது நிரந்தர உண்மை. நிரந்தரத் தொல்லையும் கூட. இந்தியாவிற்கான அரசியல் சட்டத்தினை உருவாக்கும்போது பெரும்பான்மை மக்களை ஒதுக்கிவிட இயலாது. அவர்கள் அரசியல் ஜனநாயகத்தில் பங்கெடுப்பதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்கான பாதுகாப்புகளை உறுதி செய்ய வேண்டி உள்ளது. அதுதான் தீண்டத்தகாதோரின் வாதம்...

தீண்டத்தகாதவர்கள் கேட்கும் இந்த உத்தரவாதங்கள் தீண்டத்தகாதோரின் பிரதிநிதிகள் சட்டமன்றத்தையோ, அதிகாரத்தையோ, நிர்வாகத்தையோ நிரப்ப வேண்டும் என்பதற்காக அல்ல. அந்த உத்தரவாதங்களே உண்மையான அடித்தளங்கள். இந்து மதப் பெரும்பான்மையினரின் அழுத்தம் காரணமாக அந்த அடித்தளத்திற்கும் கீழாக தீண்டத்தகாதோர் விழ வாய்ப்பில்லை. இந்து மதப் பெரும்பான்மையினரை ஒரு கட்டுக்குள் வைக்கவே அவர்கள் விரும்புகின்றனர். இந்த உத்தரவாதங்கள் அளிக்கப்படாவிட்டால், சட்டமன்றங்கள், அதிகாரம் மற்றும் நிர்வாகத்தை இந்து மதப் பெரும்பான்மையினர் முழுமையாகக் கைப்பற்றுவதோடு, அவைகளில் இந்து மதப் பெரும்பான்மையினரே முற்றிலும் நிரம்பி இருப்பார்கள். அரசின் வலிமை வாய்ந்த இந்த உறுப்புகளானது, சிறுபான்மையினரை காப்பதற்கு பதிலாக, இந்து மதப் பெரும்பான்மையினர் தாங்கள் நினைத்ததை சாதிக்க உதவும் கருவிகளாக மாறிவிடும்...

‘ஏன் விடுதலைப் போராட்டத்தில் காங்கிரசோடு சேரக் கூடாது' என்று வெளிநாட்டினர் கேட்கின்றனர். ‘காங்கிரசோடு ஒத்துழைப்பதற்கு, ஏன் அரசியல் சட்டப் பாதுகாப்புகளை முன் நிபந்தனையாக விதிக்க வேண்டும். இந்த பாதுகாப்பெல்லாம் விடுதலையை வென்ற பிறகுதானே சாத்தியம்'. இந்த விவாதங்களை எல்லாம் தொடர்ந்து கவனித்து வரும் வெளிநாட்டினர், காங்கிரஸ் பிளவுபட்டதற்கான காரணங்களையும், காங்கிரசோடு இந்த ‘விடுதலைப் போராட்டத்தில்' ஒத்துழைப்பது பாதுகாப்பானது அல்ல என்று தீண்டத்தகாதோர் ஏன் நினைக்கிறார்கள் என்பதையும் அவர்களாகவே புரிந்து கொள்ளலாம். ஆனால் இதை எல்லாம் நினைத்துப் பார்க்க இயலாதவர்கள் இருக்கலாம். அவர்கள் அதைத் தெரிந்து கொள்ள நினைக்கலாம். அவர்கள் தவறான காரணங்களை கண்டுபிடிக்குமாறு அவர்களை விடுவதற்கு பதிலாக, அவர்களுக்கு சரியான காரணங்களை விளக்கும் சிரமத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

காரணங்கள் பல. அவற்றில் முக்கியமானவை கீழே தரப்பட்டுள்ளன. முதல் காரணம், சாதாரண அறிவுக்கே புலப்படக் கூடியது. தீண்டத்தகாதோர், ‘காங்கிரசிடம் முன்னதாகவே ஓர் உடன்பாட்டை கோருவதில் என்ன தவறு இருக்க முடியும்? அப்படி ஓர் உறுதிப்பாட்டை முன்னதாகவே கொடுப்பதில் காங்கிரசுக்கு என்ன இழப்பு வந்துவிடப் போகிறது?' காங்கிரஸ் இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னதாகவே ஒப்புக்கொண்டால், இரு விளைவுகள் ஏற்படும். முதலாவதாக, இந்து மதப் பெரும்பான்மையினரின் ஆளுகைக்கு கீழ் தங்கள் நிலை என்னாகுமோ என்பது குறித்து பெரும் அச்சத்தை கிளப்பும் தீண்டத்தகாதோருக்கு ஓர் உறுதி கிடைக்கும். இரண்டாவதாக, அந்த உறுதியானது தீண்டத்தகாதோர் காங்கிரசுக்கு ஒத்துழைப்பு நல்குவதற்குப் பெருமளவில் உதவிடும். ஏன் தீண்டத்தகாதோர் ஒத்துழைக்க மறுக்கிறார்கள்? ஏனெனில் விடுதலை பெறப்பட்டால், அது இந்து மதப் பெரும்பான்மையினர் தங்களை மீண்டும் அடிமை ஆக்குவதற்கு உதவிடும் என்று அஞ்சுகிறார்கள். ஏன் இந்த அச்சத்தைப் போக்கக் கூடாது? அதுவும் முன்னதாகவே அளிக்கும் ஓர் உறுதிமொழி என்ற எளிதான நடவடிக்கையின் மூலமாக அது சாத்தியமெனில், ஏன் அதைத் தரக்கூடாது?

இரண்டாவது காரணம், அனுபவத்தால் அறியக்கூடியது. எந்த ஒரு ‘விடுதலைப் போராட்டம்' முடிவுக்கு வரும்போதும், வலிமை வாய்ந்தவர்கள் வலிமை குறைந்தவர்களைப் பற்றி அக்கறை கொண்டு, அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முன் வந்ததற்கான எந்த நம்பிக்கையையும் உலக அனுபவம் தரவில்லை என தீண்டத்தகாதோர் சொல்கின்றனர்...

மூன்றாவது வாதம் என்னவெனில், ‘விடுதலைப் போராட்டமே முதன்மையானது; அரசியல் சட்டப் பாதுகாப்புகள் குறித்த ஒப்பந்தம் எல்லாம் பிறகுதான் எழ வேண்டும்' என்ற காங்கிரசின் வாதத்தில் நியாயம் இல்லை. இந்தியாவின் விடுதலை பெறும் உரிமை குறித்து பிரிட்டிஷ் அரசின் பார்வை மதிக்கக் கூடியதாக இருப்பதால், காங்கிரஸ் மிகவும் விரும்பும் இந்தப் போராட்டம் உண்மையில் தேவையற்றது. எதுவாயினும் குதிரைக்கு முன் வண்டியை நிறுத்த காங்கிரஸ் விழைகிறது என தீண்டத்தகாதோர் கருதுகின்றனர். இந்தியாவின் விடுதலை கோரிக்கை குறித்து பிரிட்டிசாரின் பார்வை, 1857 கிளர்ச்சி காலத்திலிருந்து இன்று முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. இந்தியாவின் விடுதலை குறித்து நேர் எதிரான கருத்தை பிரிட்டிஷ் அரசு கொண்டிருந்த காலமும் உண்டு. கல்கத்தாவில் உள்ள லாரன்சின் சிலையின் கீழ் உள்ள வாசகம் இதை உறுதிப்படுத்துகிறது: ‘இந்தியாவை பிரிட்டிஷ் தன் வாள் முனையில் கைப்பற்றியது. அதை வாள் முனையிலேயே தக்க வைக்கும்.' இந்தப் பார்வை மடிந்து புதைக்கப்பட்டுவிட்டது. அது குறித்து ஒவ்வொரு ஆங்கிலேயனும் வெட்கப்படுகிறான் என்று சொன்னால் அது மிகையல்ல.

Ambedkar
இதற்கு அடுத்தபடியாக, இந்தியாவின் விடுதலைக்கு எதிராக பிரிட்டிசார் வைத்த வாதம், ‘நாடாளுமன்ற நிறுவனங்களை நிர்வகிக்கும் அளவுக்கு இந்தியர்களுக்கு திறன் போதாது' என்பது. இது லார்டு ரிப்பனின் காலத்தில் தொடங்கி, பின்னர் அதன் தொடர்ச்சியாக இந்தியர்களுக்கு அரசியல் பயிற்சி கொடுக்கும் முயற்சி எடுக்கப்பட்டது. முதலில் உள்ளாட்சி அமைப்புகள் குறித்தும், அதன் பிறகு மாநில அரசு குறித்து மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்த்திருத்தங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது நாம் மூன்றாவது நிலையில் இருக்கிறோம். ‘இந்தியாவை வாள் முனையில் தக்க வைத்துக் கொள்வோம்' என்று சொல்வதற்கு தற்போது பிரிட்டிஷ் அரசு வெட்கப்படுகிறது. நாடாளுமன்ற நிறுவனங்களை நடத்த இந்தியர்களுக்கு திறன் போதாது என்று இனி அது சொல்வதில்லை. இந்தியாவிற்கு விடுதலை பெறும் உரிமை இருப்பதை பிரிட்டிஷ் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

தங்களுக்குரிய அரசியல் சட்டத்தை தாங்களே வடிவமைத்துக் கொள்ள இந்தியர்களுக்கு உரிமை உள்ளதென பிரிட்டிஷ் அரசு ஒப்புக் கொள்கிறது. கிரிப்சின் பரிந்துரைகளை விட இதற்கு சிறந்த சான்று வேறு இருக்க இயலாது. இந்தியாவின் விடுதலைக்கு பிரிட்டிஷ் அரசு வைத்த முன் நிபந்தனை என்னவெனில், நாட்டின் தேசிய வாழ்க்கை முறையின் முக்கிய கூறுகளை உள்ளடக்கிய ஓர் அரசியல் சட்டத்தை, இந்தியர்கள் உருவாக்க வேண்டும் என்பதே. இந்த நிலையைத்தான் நாம் அடைந்துள்ளோம். அதனால் இந்தியர்களுக்குள் ஒரு புரிதல் ஏற்படுவதை குறித்துப் பேசாமல் ஏன் காங்கிரஸ் தொடர்ந்து ‘விடுதலைப் போராட்டம்' என்ற அளவிலேயும், தீண்டத்தகாதோர் அதில் சேராதது குறித்துமே பேச வேண்டும்?

பிரிட்டிஷ் அரசின் பரிந்துரையை காங்கிரஸ் ஏன் எதிர்க்க வேண்டும்? இரண்டு காரணங்களின் அடிப்படையில் அது தனது எதிர்ப்பை நியாயப்படுத்த முயல்கிறது. பிரிட்டிஷ் அரசு விதித்திருக்கும் நிபந்தனையானது, இந்தியாவின் விடுதலை குறித்த இறுதி முடிவை எடுக்கும் அதிகாரத்தை தீண்டத்தகாதோர் கையில் ஒப்படைத்திருக்கிறது என காங்கிரஸ் சொல்கிறது. இது ஒரு முட்டாள்தனமான வாதம் என்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவதாக, இந்தியாவில் உள்ள தீண்டத்தகாதோர் நடக்க இயலாத கோரிக்கைகளை வைத்தது இல்லை; நியாயமற்ற கோரிக்கைகளை அவர்கள் வைத்ததில்லை. கர்சன், ரெட்மண்டிற்கு சொன்னது போல், “உனது பாதுகாப்புகளை நீயே வைத்துக் கொள். நாங்கள் உன்னால் ஆளப்படுவதை விரும்பவில்லை'' என்று அவர்கள் சொல்லவில்லை. இந்து பெரும்பான்மையினரின் ஆளுகைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள அவர்கள் தயாராகவே உள்ளனர். ஆனால் இந்துமதப் பெரும்பான்மையினரின் மரபுகளில் உள்ள சமூகத்திற்கு எதிரான, ஜனநாயகத்திற்கு எதிரான நிலையை பொறுத்துக் கொள்ள இயலாமல், அப்படி ஆளுகைக்கு உட்பட வேண்டுமெனில், அரசியல் சட்டம் அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றே கேட்கிறார்கள்.

தீண்டத்தகாதோர் இந்தியாவின் விடுதலை குறித்து தங்களிடம் உள்ள முடிவெடுக்கும் அதிகாரத்தை, நிறைவேற்ற இயலாத கோரிக்கைகளை வைப்பதன் மூலம் பயன்படுத்துவார்கள் என்பது, எவ்வித நியாயமுமற்ற அப்பட்டமான அவதூறாகும். அந்த அச்சம் உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், காங்கிரசுக்கு வேறு வழி இல்லாமல் இல்லை. இந்துக்களுக்கும் தீண்டத்தகாதோருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், ஓர் உலகளாவிய நடுவர் மன்றத்தில் இந்த சிக்கல் எழுப்பப்பட வேண்டும் என்று கேட்க காங்கிரசிற்கு இன்னமும் வழி இருக்கிறது. காங்கிரஸ் அப்படி ஒரு நிலை எடுக்குமானால், பிரிட்டிஷ் அரசோ தீண்டத்தகாதோரோ அதற்கு சிறிதளவேனும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் ஏற்கத்தக்கதோர் அரசியல் சட்டத்தை கொண்டு வருவதற்கான நேர்மையான முயற்சிகளை எடுக்காமல், விடுதலையை அடைவது குறித்த ஓயாத பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது - அவ்வப்போது ஓய்வும் பின்வாங்கலும் செய்து கொண்டேதான்.

தீண்டத்தகாதோரின் கோரிக்கைகளுக்கு ஏற்ப பாதுகாப்புகள் அளிப்பது குறித்து எவ்வித உறுதிமொழியும் தராமலேயே, பிரிட்டிஷ் அரசு தனது அதிகாரத்தை மாற்றிக் கொடுக்க வேண்டும்; அல்லது திரு. காந்தியின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமெனில், ‘சாவியை காங்கிரசிடம் கொடுக்க வேண்டும்' என்பதையே காங்கிரஸ் விரும்புகிறது என்ற ஒரே முடிவுக்குதான் தீண்டத்தகாதோர் வரவேண்டியிருக்கிறது. சுருக்கமாக, விடுதலை பெற்ற இந்தியா முழுவதும் தனக்கே வேண்டுமென காங்கிரஸ் நினைக்கிறது. விடுதலை பெற்ற இந்தியாவில் தீண்டத்தகாதோரை தாங்கள் விரும்பிய வண்ணம் ஒழித்துக் கட்ட, இந்துக்களுக்கு எவ்விதத் தடையும் அற்ற சுதந்திரத்தை தரக்கூடிய விடுதலையாக அது இருக்க வேண்டும். ‘விடுதலைப் போராட்டம்' என்ற பெருமைமிகு சொல்லாடலால் உயர்த்திப் பிடிக்கப்படும் இத்தகைய நேர்மையற்ற போராட்டத்தில் பங்கெடுக்க, தீண்டத்தகாதோர் விரும்பவில்லை என்பதில் வியப்பொன்றும் இல்லை.

கற்பனைக் கதைகளில் புதையலைக் காக்க, அதன் அருகில் யாரையும் விடாமல் அதன் மீது அமர்ந்திருக்கும் பாம்பைப் போல இந்தியாவின் விடுதலை மீது, பிரிட்டிசார் அமர்ந்திருந்த காலம் மாறி வெகு நாட்களாயிற்று என தீண்டத்தகாதோர் கருதுகின்றனர். பொறுப்புள்ளவர் கையில் ஒப்படைக்கப்பட்ட பொருளைப் போன்று இருக்கிறது இந்தியாவின் விடுதலை. பிரிட்டிஷ் அரசு பொறுப்பு மிக்கதாக நடந்து கொள்கிறது. முரண்கள் தீர்க்கப்பட்டவுடன், சரியான அரசியல் சட்டம் ஏற்கப்பட்டவுடன், உரிமையுடையவர்கள் அதாவது, இந்தியர்கள் கையில் பொருளை ஒப்படைத்து விடவே அது விரும்புகிறது. ஏன் இந்த சூழலை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்று தீண்டத்தகாதோர் கேட்கின்றனர். நாட்டில் உள்ள முக்கிய குழுக்களுடன் ஒரு புரிதலை எட்டுவதற்கான நேர்மையான, வெளிப்படையான முயற்சியை ஏன் மேற்கொள்ளக்கூடாது? அதற்குப் பிறகு இணைந்தே பொருளை விடுவிக்க சொல்லிக் கேட்கலாமே? இந்த வழிமுறையை காங்கிரஸ் பின்பற்றாததினால், காங்கிரசின் ‘விடுதலைப் பேராட்டம்' வெறும் உத்தியே என்று தீண்டத்தகாதோர் சொல்கின்றனர். அதாவது தீண்டத்தகாதோர் கோருகின்ற, விடுதலைக்கான முன் நிபந்தனையாக பிரிட்டிஷ் அரசு விதித்த ஏற்றுக் கொள்ளத்தக்க ஓர் அரசியல் சட்டத்தின் அவசியத்தை ஓரம்கட்டி விடுவதற்காகவே அதைப் பயன்படுத்துகிறது.

பிரிட்டிஷ் அரசின் அறிவிப்புகளை தீண்டத்தகாதோர் குறைத்து மதிப்பிடவில்லை. இந்தியர்களுக்குள் புரிந்துணர்வு ஏற்பட்டால் பின்னர் ‘தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும்' என்ற நிலையாகவே இருக்கும் என்றும் அவர்கள் சொல்லவில்லை. பிரிட்டிஷ் தாங்கள் அறிவித்தபடி நடக்காமல் போகலாம் என்பதை ஒப்புக் கொள்கின்றனர். ஏற்றுக் கொள்ளத்தக்க ஓர் அரசியல் சட்டத்தை உருவாக்கிய பின்னும் உறுதி அளித்தபடி அவர்கள் நடக்க மறுக்கலாம். அதன் மூலம் விடுதலைக்கானப் போராட்டத்திற்கு அவசியம் ஏற்படலாம். இந்த சாத்தியங்களை தீண்டத்தகாதோர் புறந்தள்ளவில்லை. ஆனால் அவர்கள் சொல்வதெல்லாம் இந்தியர்கள் பிரிட்டிசாரை ஏன் சோதித்துப் பார்க்கவில்லை என்பதுதான். ஓர் ஏற்கத்தக்க அரசியல் சட்டத்தை அளிக்காமல் அவர்களை சோதிக்க இயலாது. இந்த வழிமுறையை இறுதியானதாக அல்லாமல் முதன்மையான செயல்முறையாக காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளா தவரை, தங்களுடனான நடவடிக்கைகளில் மட்டுமல்லாத, நாட்டிற்கும் அது நேர்மையானதாக இல்லை என்று தீண்டத்தகாதோர் கருதுகின்றனர். காங்கிரசின் ‘விடுதலைப் போராட்டத்தில்' பங்கேற்க மறுப்பதற்கு தீண்டத்தகாதோருக்குப் போதுமான நியாயங்கள் இல்லை என்று யார் சொல்ல முடியும்?

தமிழில் : பூங்குழலி
Pin It