இந்துக்களின் மனதில் இருந்து அச்சத்தையும் கோழைத்தனத்தையும் அகற்றுவதே ‘சங்காதனின்' நோக்கம் ஆகும். ஆனால், ‘சுத்தி'யை இந்துக்களுக்கு சாத்தியம் அற்றதாக ஆக்கிய காரணங்களே - ‘சங்காதனை'யும் இந்துக்களுக்குச் சாத்தியம் அற்றதாக ஆக்குகின்றன. ஆகவே, முகமதியரையும் சீக்கியரையும் போல அல்லாமல் - இந்துக்கள் கோழைகளாகவும் பேடிகளாகவும் இருக்கிறார்கள். இதனால் தான் இந்துக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்கு, நம்பிக்கைத் துரோகத்தையும் கீழ்த்தரமான சூழ்ச்சிகளையும் கடைப்பிடிக்கிறார்கள். முஸ்லிம்களும் சீக்கியர்களும் தைரியசாலியாக, பயமில்லாதவர்களாக இருப்பதற்கான பலத்தை எங்கிருந்து பெறுகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

உடல் வலிமையோ, உணவோ அல்லது உடல் பயிற்சியோ இதற்குக் காரணம் இல்லை என்று நான் நிச்சயமாகக் கூறுவேன். சீக்கியன் ஒருவன் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும்போது எல்லா சீக்கியர்களும் அவனைக் காக்க வந்துவிடுகிறார்கள். ஒரு முகமதியன் தாக்கப்படும்போது, அவனைக் காக்க எல்லா முகமதியர்களும் ஓடோடி வருவார்கள் - இந்த உணர்வின் காரணமாக ஏற்படுகிற பலம் அது. அத்தகைய பலத்தை இந்துவால் பெற முடியாது. தன் உதவிக்கு சக இந்துக்கள் வருவார்கள் என்று எந்த இந்துவும் உறுதியாக நம்பி இருக்க முடியாது.

தனி ஒருவனாக இருப்பதால், தனித்தனியாகவே வாழவேண்டும் என்று இந்துவுக்கு விதிக்கப்பட்டுள்ளதால், இந்து பலமற்றவனாகவே இருக்கிறான். அச்சத்தையும் கோழைத்தனத்தையும் வளர்த்துக் கொள்கிறான். போராட்டம் என்று வரும்போது, சரணாகதி அடைகிறான் அல்லது ஓடி ஒளிந்து கொள்கிறான். மாறாக, தனி ஒருவனாக இருந்த போதிலும் சண்டை என்று ஏற்படும்போது, தான் தனித்து விடப்பட மாட்டோம் என்பது தெரிந்து இருப்பதால் - சீக்கியனும் முகமதியனும் அச்சம் அற்றவனாக சண்டையை சந்திக்கிறான். இந்த நம்பிக்கையைக் கொண்ட ஒருவன், போராட்டத்தில் தாக்குப் பிடிக்கிறான். இந்த நம்பிக்கை இல்லாத மற்றவன் ஓடி ஒளிகிறான்.

சகோதரத்துவத்தை வளர்க்கும் சமூகப்பற்று

இøதப்பற்றி மேலும் ஆராய்வோம். முகமதியருக்கும் சீக்கியருக்கும் இந்த அளவு நம்பிக்கை இருப்பதற்கும், இந்து மதத்தவன் நம்பிக்கையற்று இருப்பதற்கும் காரணம் என்ன? அவர்களுடைய கூடிவாழும் வாழ்க்கை முறைதான் காரணம்.

முகமதியர்களிடமும் சீக்கியர்களிடமும் உள்ள கூடி வாழும் வாழ்க்கை முறை, அவர்களுக்குள் சகோதர உணர்வை வளர்த்துள்ளது. இந்துக்களின் வாழ்க்கை முறை அந்த உணர்வை வளர்க்கவில்லை. சீக்கியரிடமும் முகமதியரிடமும் உள்ள ச­மூகப்பற்று, அவர்களை சகோதரர்களாக ஆக்கி இருக்கிறது. இந்துக்களுக்குள் அத்தகைய சமூகப்பற்றும் இல்லை; எந்த ஓர் இந்துவும் மற்றொரு இந்துவை தன் சகோதரனாகக் கருதுவது இல்லை.

இதுதான், ஒரு சீக்கியன் ஏழு லட்சம் பேருக்கு சமமானவன் என்றும், ஒரு முகமதியன் ஓர் இந்துக் கூட்டத்துக்கே சமமானவன் என்றும் - முகமதியரும் சீக்கியரும் உணரவும் கூறவும் காரணம். இந்துக்களுக்கும் பிறருக்கும் இடையிலான இந்த வேறுபாடு, சந்தேகமின்றி சாதியின் காரணமாக ஏற்பட்ட வேறுபாடுதான். சாதி இருக்கும்வரை "சங்காதன்' சாத்தியம் அற்றது. ‘சங்காதன்' இல்லாதவரை, இந்து கோழையும் மோழையுமாகவே இருப்பான்.

இந்துக்கள் தங்களை மிகவும் சகிப்புத் தன்மை உடையவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இது பொய் என்றே நான் கருதுகிறேன். பல சந்தர்ப்பங்களிலும் அவர்கள் சகிப்புத்தன்மை இல்லாமல்தான் இருக்கிறார்கள். சிற் சில சமயங்களில் அவர்கள் சகிப்புத் தன்மையோடு இருக்கக் காரணம், எதிர்ப்பதற்கான பலம் அல்லது அக்கறை இல்லாததுதான். தமக்கு இழைக்கப்படும் அவமரியாதையையும் அநீதியையும் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளும் தன்மை, இந்துக்களின் ரத்தத்திலேயே ஊறிவிட்டது.

மாரிசின் (Marris) வார்த்தைகளில் கூறுவதானால், "இந்து மதத்தில் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்களை மிதிக்கின்றனர். வலுத்தவன் இளைத்தவனை அடித்து நொறுக்குகிறான். கொடியவர்களுக்கோ அச்சம் என்பதே இல்லை. அன்பு மனம் கொண்டவர்களுக்கோ துணிச்சல் இல்லை. அறிவாளிகளுக்கோ பிறர்மேல் அக்கறை இல்லை.'' இந்து கடவுளர்கள் எல்லாமே மன்னித்து அருளும் கடவுளாக அமைந்துவிட்ட நிலையில், இந்துக்களில் அநீதிக்கும் அடக்கு முறைக்கும் ஆளாக்கப்படுகிறவர்களின் இரங்கத் தக்க நிலையை எளிதில் உணர முடியும். மனிதர்களை மிக எளிதில் தொற்றுகிற மிகக் கொடிய நோய் ‘அலட்சியப் போக்கே' ஆகும். இந்து மதத்தவன் ஏன் இந்த அளவுக்கு அலட்சியப் போக்குடன் இருக்கிறான்? நல்ல நோக்கங்களுக்காகக்கூட ஒன்று சேர் வதையும் ‘சங்காதனை'யும் சாத்தியம் அற்றதாக்கிவிட்ட சாதிய அமைப்பே - இந்துக்களின் இந்த அலட்சியப் போக்குக்கு காரணம்.

சாதி ஒதுக்கலும் மரண தண்டனையும் ஒன்றே!

ஓர் அமைப்பின் நியமங்களுக்கும் அதிகாரத்துக்கும் நலன்களுக்கும் எதிராக, தனிமனிதன் தன் சொந்தக் கருத்துகளையும் நம்பிக்கைகளையும் தன் சொந்த சுதந்திரத்øதயும் நலன்களையும் வலுவாக வெளிப்படுத்துவதுதான் - எல்லா சீர்திருத்தங்களுக்கும் தொடக்கமாக இருக்கிறது. ஆனால், சீர்திருத்தம் தொடருமா என்பது இத்தகைய தனிமனித வெளிப்பாட்டுக்கு, அந்தக் கூட்டம் எந்த அளவு இடமளிக்கிறது என்பதைப் பொருத்தது. தன் கருத்துகளை வெளிப்படுத்தும் தனிமனிதர்களிடம் அந்த வகுப்பினர் சகிப்புத் தன்மையோடும் நேர்மையோடும் நடந்து கொண்டால், அத்தனி மனிதர்கள் தொடர்ந்து தம் கருத்துகளைக் கூறி, தன் கூட்டத்தாரைச் சீர்திருத்துவதில் வெற்றி பெறுவார்கள். இதற்கு மாறாக, அந்தக் கூட்டத்தினர் சகிப்புத் தன்மை அற்றவர்களாகவும், அந்த தனிமனிதர்களை அடக்கி ஒடுக்க எல்லா வகையிலும் முற்படும்போது, சீர்திருத்தக்காரர்களும் அழிந்து விடுவார்கள், சீர்திருத்தமும் அழிந்துவிடும்.

சாதிச் சட்டங்களை மீறுகிறவனை சாதியில் இருந்து விலக்கி வைப்பதற்கு, கேள்விக்கு இடமற்ற அதிகாரம் சாதிக்கு உண்டு. சாதியில் இருந்து விலக்கி வைக்கப்படுபவன், எந்த சமூக உறவும் இல்லாதவன் ஆகிவிடுகிறான். ஆக, தண்டனை என்ற வகையில் சாதியிலிருந்து விலக்கி வைத்தலுக்கும் மரண தண்டனைக்கும் அதிக வேறுபாடு இல்லை. எனவே, சாதியின் தடைகளை மீறி தன் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் அளவுக்கு இந்து மதத்தில் எந்த தனிமனிதனுக்கும் துணிச்சல் இல்லாமல் போனதில் வியப்படைய எதுவும் இல்லை. எந்த மனிதனும் முழுமையாக சக மனிதர்களுடன் ஒத்துப்போக முடியாது என்பது உண்மை தான். ஆனால், அவர்களின்றி இவனில்லை என்பதும் உண்மைதானே.

சாதி சீர்திருத்தத்தை அழிக்கும் கருவி

தன் கருத்துப்படி சமூகம் இருக்க வேண்டும் என்று ஒருவன் விரும்பலாம். அது சாத்தியம் ஆகாதபோது, தன் கருத்துகளை முற்றுமாகக் கைவிட்டு சரணாகதி அடைந்தாவது - சமூக உறவைத் தக்க வைத்துக் கொள்ள அவன் தயாராக இருப்பான். ஏனெனில், சமூகத்தில் இருந்து தனித்து வாழ முடியாது. மனிதனின் இந்த இயலாமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள சாதி எப்போதும் தயாராக இருக்கிறது. சொல்லாலும் செயலாலும் சாதிச் சட்டங்களை முற்றிலும் ஏற்றுக் கொண்டாக வேண்டுமென அது வற்புறுத்துகிறது. சீர்திருத்தக்காரனின் வாழ்க்கையை நரக வாழ்க்கை ஆக்கும் சதிக்கும்பலாகவும் சாதியால் மாற முடியும். சதிச் செயல் என்பது ஒரு பெரும் குற்றம் தானே? அப்படி இருக்கையில் சாதிச் சட்டங்களுக்கு மாறுபாடாக நடக்க முயல்வோரை சாதியிலிருந்து விலக்குதல் போன்ற கேடுகெட்ட நடவடிக்கைகள், ஏன் சட்டத்தின் தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கப்படக் கூடாது?

தன் சாதி உறுப்பினர்களை ஒழுங்குபடுத்தவும், சாதிச் சட்டங்களை மீறி நடப்பவர்களை சாதியில் இருந்து விலக்கி தண்டிக்கவும் தேவையான அதிகாரத்தை சாதித் தலைமைக்கு இப்போதுள்ள சட்டம் வழிவகுத்துள்ளது. வைதீகர்களின் ஆதிக்கத்தில் உள்ள சாதி, சீர்திருத்தக்காரர்களை துன்புறுத்தவும் சீர்திருத்த இயக்கங்களை அழிக்கவும் சக்தி வாய்ந்த ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
Pin It