சென்ற இதழில் வெளிவந்த க. நெடுஞ்செழியன் பேட்டி இந்த இதழிலும்...

Nedunchezhiyan
பவுத்தம் இருந்த அதே காலத்தில்தான் இங்கு ஆசீவகம் இருந்ததா? இது யாரால் தோற்றுவிக்கப்பட்டது?

ஆமாம். புத்தர், மகாவீரர், அய்யனார் இவர்கள் எல்லாம் சமகாலத்தவர்கள். ஆசீவகம் என்பது அய்யனாரால் தோற்றுவிக்கப்பட்டது. மேற்சொன்ன இரண்டு அய்யனார்களும் பூரணம் பொற்கலையோடு உள்ள காயபர், கணிநந்தாசிரியன் இவர்கள் எல்லாம் சமகாலத்தவர்கள். ஆசீவகம் என்பது பாலி மொழிச் சொல். ஆசீவகம் என்பதற்கு நல்வாழ்க்கை என்று பொருள். இந்திய சமய வரலாற்றில் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்டு, நிறுவன வடிவம் பெற்ற சமயம் ஆசீவகமே ஆகும். மகாவீரரும் நமது அய்யனாரும் ஆதிநாதரின் வழிவந்த அறிஞர்கள். வேதத்திற்கு முற்பட்டதும். ஆரியர்களுக்கு எதிரானதுமான சிந்தனை மரபின் மூலஊற்று ஆதிநாதர்தான். ஆதிநாதரைதான் சைவர்கள் சிவனாக வழிபட்டார்கள். ஜைன சமயத்தின் மூல ஊற்றும் ஆதிநாதர்தான். ஆசீவகத்திற்கு மூல ஊற்றும் ஆதிநாதர்தான். தமிழியச் சிந்தனையின் ஒரு மூல வடிவமாக ஆதிநாதரைத்தான் பார்க்க இயலும்.

ஆதிநாதர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? அவருடைய காலம் எது?

அவர் வாழ்ந்த பகுதியை நாம் ஆராய வேண்டும். அவரை கைலாயத்தோடு தொடர்புபடுத்துகின்றார்கள். இந்தியா முழுவதும் தமிழ் இந்தியாவாக இருந்தபோது, அவர் எந்தப் பகுதியாக இருந்தால் என்ன? ரிக் வேதத்தில் அவரைப் பற்றிய குறிப்பு இருக்கிறது.

என்ன மாதிரியான குறிப்புகள்?

ஆதிநாதரைப் பற்றி அவர் பெரிய தலைவர், ரிஷபநாதர் என்பது போன்ற நேர்மறையான கருத்துகள் இருக்கின்றன.

அவர்கள் நேர்மறையான குறிப்புகளை வைத்திருந்ததற்கு என்ன காரணம் இருக்க முடியும்? பின்னர் அந்த நிலையில் மாற்றங்கள் ஏன் ஏற்பட்டன?

அவர்கள் இங்கு வந்த புதிதில் ஒரு செல்வாக்கு மிக்க அமைப்பினை விட்டுவிட முடியாமல் அவரைப் பற்றி நேர்மறையான குறிப்புகளை அளித்திருக்கலாம். இன்னொன்று, வேதங்களைத் தொகுத்ததே தமிழ் நாட்டில்தான் என்று டி.டி. கோசாம்பி சொல்கிறார். அவர் தென்னகம் என்றும் சொல்கிறார். தென்னகம் என்பதை தமிழ் நாடு என்றே பொருள் கொள்ள வேண்டும். கி.மு. 13 ஆம் நூற்றாண்டில் அதைத் தொகுத்து இருக்கிறார்கள். அதனால் இதை மிகவும் பழமையானது என்று சொல்ல முடியவில்லை. வைதிகத்தின் செல்வாக்கு குறையத் தொடங்கிய காரணத்தினால், தம்முடைய வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்த அறிவுத் துறைகளை எல்லாம் தடை செய்தார்கள். அறிவுக்கான தடை அங்குதான் வந்தது. புஷ்யமித்ர சுங்கன் என்ற சுங்க வம்சத்தைச் சேர்ந்த அரசன் (சுங்க வம்சம் என்பது பார்ப்பன வம்சத்தைச் சார்ந்தது), வைதிக எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டவர்களான பவுத்த, ஜைன, ஆசீவகத் துறவிகளை எல்லாம் கழுத்தை வெட்டிக் கொல்லச் செய்கிறான். அவர்களின் தலையைக் கொண்டு வந்து கொடுத்தால் இவ்வளவு பொன் என்று அவன் பரிசு அறிவிக்கிறான். அப்படிப்பட்ட தடைகளுக்கு உள்ளாகும்போதுதான் இந்தச் சமயங்களில் பிரிவுகளும் திரிபுகளும் ஏற்பட்டுப் போகின்றன. தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக இவர்கள் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதனால் இந்த அறிவுக்கான தடைதான் தீண்டாமையாக மாறுகிறது. இந்தத் தடையின் காரணமாகத்தான் இந்திய சிந்தனை மரபிலேயே ஒரு வீழ்ச்சி ஏற்படுகிறது. சித்தர்களின் இலக்கிய மரபுகள் எல்லாம் அறிவுக்கான தடையினை உடைப்பதில்தான் வருகின்றன. ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது இந்தப் போராட்டம். பெரியார் காலம் வரையிலும் இன்றைக்கும் சமூக நீதிக்கான போராட்டம் என்பதே அறிவுக்கான தடையை உடைப்பதில்தான் இருக்கிறது.

புறஞ்சேரி பற்றி சொன்னீர்கள். அதில் பார்ப்பனர்களும் வைதிக எதிர்ப்பைச் சொன்னார்களா?

ஆம்! சொன்னார்கள். பார்ப்பனர்களும் பெரிய அளவில் வைதிக மதத்தை கைவிட்டு வேறு மதத்தைத் தழுவினார்கள். எடுத்துக்காட்டாக, புத்த சமயத்தில் புத்தருக்குப் பின்னால் அவருடைய கொள்கைகளைப் பரப்பியவன் சாரிபுத்தன். இவன் பிறப்பினால் பார்ப்பனன். இப்படி பலர்.

ஆனால், புத்த சமயத்தை அழிப்பதற்காகத்தான் அதற்குள் ஊடுருவினார்கள் என்று சொல்கிறார்களே... அதனால்தான் மகாயாணம் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்களே, அது பற்றி தங்களுடைய கருத்து என்ன?

இருக்கலாம். நாகார்ச்சுனர் காலத்தில் இச்சூழல் இருந்தது. பிற்காலத்தில் ஒரு மதம் அழிக்க முடியாத நிலையில் வலுவான அமைப்பாக இருக்கும்போது, அதனை அழிப்பதற்காக அதற்குள் ஊடுருவி அதனுடைய வீரியத்தை அழிப்பது என்பது, பார்ப்பனர்களின் ஓர் உத்தியாக இருந்தது.

சமயம் என்பது என்ன? சமயமாக அய்யனார் உருவாக்கினார் என்பதன் பொருள் என்ன?

பெரியார் சுயமரியாதையைப் பரப்பும்போது அது ஒரு கொள்கை. கொள்கைகளை பரப்புபவர்கள் கருப்பு உடை அணியும் போது அது ஓர் அமைப்பு. அதுதான் கொள்கைக்கும் அமைப்புக்கும் உள்ள வேறுபாடு. சமயம் என்பதும் மதம் என்பதும் கொள்கை என்ற பொருளையே குறிக்கின்றன. ஒரு நூலை எழுதும்போது சில கொள்கைகளைப் பின்பற்றித்தான் அந்த நூலை எழுத முடியும். முறையியல் வரைவியல் என்ற பொருள்களும் உண்டு. நாம் சமயத்தை கடவுள், கோயில் என்பதோடு தொடர்புபடுத்திப் பார்க்கிறோம். ஆனால், அய்யனார் தம் கொள்கைகளைப் பாதுகாக்கும் நிறுவனமாக இந்த ஆசீவகத்தை உருவாக்கினார். இது, தமிழ் மரபினுடைய மீட்பு முயற்சியாகவும் அமைந்திருக்கிறது.

எந்த காலகட்டத்தில் இது மறைந்துபோனது?

பக்தி இயக்க காலத்திற்குப் பிறகுதான் இது மறைந்து போனது.

திருநாவுக்கரசர் ஜைன மதத்தை சார்ந்தவர் என்று ஒரு குறிப்பு சொல்லுகிறதே... ஆசீவகத்தில் இல்லையே?

நல்ல கேள்வி. அவர் ஜைன மதத்தைச் சார்ந்தவர். அக்காலத்தில் ஜைனத்திற்கும் ஆசீவகத்திற்கும் ஒரு போட்டி நிலவியது. இன்றுகூட ஜைனர்களின் வீட்டில் சிலப்பதிகார நூல் இருக்காது. ஏனெனில், சிலப்பதிகாரம் ஆசீவகக் காவியம். பக்தி இயக்க காலம் வரும் போது பக்தி இயக்கத்திற்கு மாறான கருத்துடைய பவுத்த, ஜைன, ஆசீவகத் துறவி களெல்லாம், கிட்டத்தட்ட ஒரு தற்காப்புக்காக, ஒரு கூட்டணி சேர்கிறார்கள். அப்படி சேர்ந்தபொழுது பக்தி இயக்கங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தவர்கள், தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்த ஆசீவக இயக்கக்காரர்கள். அதில் திருநாவுக்கரசர் ஜைன மதத்துக்காரர்.

அய்யனாருக்குப் பிறகு குறிப்பிடும்படியாக யாரும் இல்லையா?

அதுதான் பெரிய கொடுமையாகப் போகிறது. மதம் இருந்தது. கிறித்துவம் போல, தலைவர்கள் பற்றிய செய்திகள் இருந்தன.

சிலப்பதிகாரம் ஆசீவகக் காப்பியம் என்று கூறுகிறீர்கள். சிலப்பதிகாரத்தில் அய்யனாரைப் பற்றி குறிப்பு உள்ளதா?

சாத்தன் என்ற சொல்... பாசண்ட சாத்தர்க்குப் பாடு கிடந்தாளுக்கு ஏசும் பிநயோர் வடிவம் இளங்கொடியாய்... என்று வருகிறதே.

அய்யனார் கோயிலில் கண்ணகி சிலம்போடு நிற்கும் காட்சி இருக்கிறது. சாத்தன் என்று குறிப்பிடுவது அனைத்துமே அய்யனாரைத்தான். ஆசீவகம் எந்த அளவிற்கு இருந்தது என்பதைப் பெயர்களை வைத்தே கண்டுபிடிக்கலாம். வெள்ளையன், வெள்ளைச் சாமி, பாண்டி, பாண்டித்துரை, பாண்டியம்மா, ராசப்பன், ராசய்யன். அய்யன், அய்யனார், அய்யம்பெருமாள், அய்யன் துரை ஆகிய பெயரை வைத்தே நாம் கண்டு பிடிக்கலாம். இந்தப் பெயர்களெல்லாம் ஆசீவக சமயத்தோடு தொடர்புடையவை.

இன்றைக்கு நாம் சிறு தெய்வமாக வழிபடும் அய்யனாரும் அவரும் ஒன்றா?

அவரேதான் இவரும். இன்றைக்கு தமிழ் நாட்டில் இருக்கக் கூடிய பல பெரிய கோயில்கள் எல்லாம் ஒரு காலத்தில் அய்யனார் கோயில்களாக இருந்தன.

அப்படி ஒன்றே என்றால், இன்றைக்கு குடும்பக் கோயில்கள், குலதெய்வக் கோயில்கள் - இவைதான் சாதியை நிலைபெற வைக்கின்றன எனும்போது, இன்று இந்த அய்யனார் கோயில்களும் சாதியை நிலைபெறச் செய்யும் இடமாகத்தானே இருக்க முடியும்?

அது அப்படியில்லை. ஜைனர்களை சமணர்கள் என்று சொல்வது எப்படி ஒரு தவறான கருத்தோ அதுமாதிரி, சிறுதெய்வ கோயில்கள் சாதியத்தின் இருப்பிடங்கள் என்பதும் ஒரு தவறான கருத்தாகும். எப்படி என்றால், தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அய்யனார் கோயில்களும் ஒரு குறிப்பிட்ட சாதிக்குரிய அய்யனார் கோயில்களாக இல்லை. தமிழ் நாட்டினுடைய சாதி வேறுபாடுகளைக் கடந்து, சாதி வேறுபாடுகளை களையக்கூடிய மய்யமாகத்தான் அய்யனார் கோயில் இருக்கிறது. அய்யனார் கோயில் என்பது, தமிழ் நாட்டில் உள்ள பல சாதியினருக்கு குலதெய்வமாக இருக்கிறது. நாம் மேலோட்டமாகப் பார்க்கும் செய்தி என்பது வேறு. நுணுகி ஆராய்ந்து அறியும் தகவல்கள் வேறாக இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, திருச்சிக்கு அருகே செம்பட்டுக்குப் பக்கத்தில் குண்டூர் அய்யனார் கோயில் என்பது, தேவேந்திரகுல வேளாளருக்குக் குலதெய்வம்; கள்ளர்களுக்குக் குலதெய்வம்; உடையார்களுக்குக் குலதெய்வம்; இப்படி தமிழ்நாட்டில் உள்ள அவ்வளவு சாதியினருக்கும் அது குலதெய்வமாக இருக்கிறது. இதைவிட வியப்பு என்னவென்றால், அய்யனார் கோயிலில் இடம் பெறக் கூடிய சிறுதெய்வம் ஒன்று. அதன் பெயர் சாம்பான். இது, கள்ளர்களின் குல தெய்வமாக வணங்கப்படுகிறது. பெரிய வியப்பு அது. ஆக, நானும் என் மனைவியும் செய்த கள ஆய்வின் அடிப்படையில் அய்யனார் கோயில்கள் தமிழ் நாட்டில் உள்ளவர்களின் சமூக ஒத்திசைவுக்கு உரிய மய்யமாக விளங்குகின்றனவே தவிர, ஒரு குறிப்பிட்ட சாதியினருக்குண்டான அடையாளத்தோடு அவை இல்லை.

பிற சிறுதெய்வ வழிபாட்டில் இருப்பது போன்று இது இல்லை என்கிறீர்களா?

ஆம். அய்யனார் கோயிலில் மட்டும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லை. ஒரு சில இடங்களில் பறையர்கள் தங்களுக்கென்று தனி அய்யனார் கோயிலை உருவாக்கிக் கொண்டார்கள். அவர்களைத் தங்களோடு இந்தச் சமூகம் புழங்க விடாததே இதற்குக் காரணம். ஆனால், அய்யனார் கோயிலில் சாம்பான் என்ற பறையர் ஒருவரை குல தெய்வமாக ஏற்றுக் கொள்ளும் நிலை இருக்கிறது. இந்தச் சாம்பான் சிலை, மலைக்கோட்டை அடிவாரத்தில் ஏழுமுனி கோயில் என்ற ஒரு அய்யனார் கோயிலில் மத்தளம் வாசிப்பவராக - சாம்பவ மூர்த்தி என்றே குறிப்பிடுகிறார்கள். ஆக, தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கு, சாதியைக் கடந்த சமூகத்தின் ஓர்மைக்குரிய மய்யமாகவும்தான் அய்யனார் கோயில் விளங்குகிறது. அய்யனார் என்பவருடைய கோட்பாடுகளைப் பற்றி என்றிச் சிம்மர் சொல்லும்போது, அறிவியல் கலைக்களஞ்சியம் என்று கருதக் கூடிய கோட்பாடுகளைக் கொண்டது ஆசீவகம் என்று குறிப்பிடுகிறார். அவ்வளவு பெரிய மாமேதையாக விளங்கியவர்தான் அய்யனார். சாதாரண அறிஞர் இல்லை. அவர் மாமேதை. உலகின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவர்.

அதிகப்படியான மக்களால் பின்பற்றப்பட்டு வந்தபோது, இது எப்படி வீழ்ச்சியடைந்தது?

பக்தி இயக்கங்கள் வரும்போது பக்தி இயக்கத்தின் வீச்சில் அதாவது, ஆசீவகர்களுடைய குறியீடு யானை; ஆசீவகர்கள் தங்களுடைய கோயிலை யானை வடிவத்தில் கட்டுகிறார்கள். அதற்கு ‘கஜபிரஸ்டம்' என்ற வடமொழிப் பெயர். இந்த யானை வடிவத்தில் இருக்கக் கூடிய அய்யனார் கோயிலை சிவன் கோயிலாக மாற்றுகிறார்கள். அதற்குப் பிறகுதான் அந்த சிவன் சிலையை மாற்றிவிட்டு, அய்யனார் சிலையைக் கொண்டுபோய் வைக்கிறார்கள். இப்படித் தங்களுடைய கோயிலைக் கைப்பற்றி விட்டார்கள் என்று திருநாவுக்கரசர் உண்ணாவிரதம் இருந்து, ஆயிரம் ஆசீவகத் துறவிகளையும் கொண்டுவந்து யானைதானே இவர்களின் சின்னம் என்று அந்த யானையைக் கொண்டே அவர்களின் தலையினை இடரச் செய்து படுகொலையைச் செய்தவர் திருநாவுக்கரசர்.

சைவம் ஆறு உட்பிரிவுகளைக் கொண்டது. கபாலிகம், காளாமுகம், பாசுபதம், மாவிரதம், வார்மம், பைரவம். இந்த ஆறு உட்பிரிவுகளில் கபாலிகம், காளாமுகம், பாசுபதம் என்ற மூன்று உட்பிரிவுகள் தான் செல்வாக்குப் பெறுகின்றன. மற்ற பிரிவுகள் மற்ற மூன்று பிரிவுகளோடு சேர்ந்து கலந்து விடுகின்றன. இதில் கபாலிகம் என்பதுதான் தொடக்ககால வரலாற்றினைக் கொண்டது. அந்த கபாலிகப் பிரிவைச் சார்ந்தவர்தான் இந்த திருநாவுக்கரசர். இந்த கபாலிகப் பிரிவு, வேத எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டது. உலகாய்தர்களுக்கு ஒரு காலத்தில் தடை வந்தபோது, உலகாய்தத் துறவிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் இந்த கபாலிகர்கள். கபாலிகத்தில் வேத எதிர்ப்பை அப்புறப்படுத்திவிட்டு சைவத்தில் வேதக் கோட்பாடுகளைத் திணித்து, வைதிகச் சார்புள்ளதாக மாற்றியதுதான் காளாமுகம். இந்த காளாமுகப் பிரிவினைச் சார்ந்தவர்தான் திருஞான சம்பந்தர். காளாமுகம் வந்த பிறகு காலிகம் சரியத் தொடங்கியது.

கபாலிகத்தை காளாமுகம் உள்வாங்கிக் கொண்டது. இந்த காளாமுகம் பின்னாளில் பாசுபதமாக மாறுகிறது. இந்த மூன்றினுடைய அடிப்படையே வன்முறைதான். எண்ணாயிரம் சமணர்கள் என்பது ஜைன, பவுத்த, ஆசீவகத் துறவிகள் சேர்த்துதான் எண்ணாயிரம் பேர். அவ்வளவு பேரையும் கொலை செய்துவிட்டு அவர்களுடைய கோயில்களையெல்லாம் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டு, சிவன் கோயிலாக மாற்றினார் திருஞானசம்பந்தர். திருநாவுக்கரசர் தொடங்கி வைத்ததை உச்சத்திற்குக் கொண்டு போகிறார் ஞானசம்பந்தர். இதற்கிடையே திருநாவுக்கரசர் மற்றும் திருஞான சம்பந்தர் இருவருக்கும் மத்தியிலேயே ஒரு பெரிய போட்டி வந்துவிட்டது. காளாமுகப் பிரிவு பிற்காலத்தில் வந்தது அல்லவா. கபாலிகப் பிரிவு தொன்மையானது என்று சொல்கிறோம். சென்னையிலுள்ள கபாலீசுவரர் கோயில் கபாலிகப் பிரிவினருக்குள்ள கோயில். அதைப் போல வேதாரண்யம் என்று சொல்லக்கூடிய திருமரைக்காட்டில் உள்ள சிவன் கோயிலும் கபாலிகப் பிரிவினுக்குரிய கோயிலாக இருந்தது. இந்த கபாலிகப் பிரிவினருக்குரிய கோயிலை காளாமுகப் பிரிவினர் கைப்பற்றத் தொடங்கினர். இருதரப்பினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் வேதாரண்யத்தில் உள்ள சிவன் கோயிலைப் பூட்டி விடுகின்றனர். அது நியாயப்படி பார்த்தால், கபாலிகர்களுக்குரியது. ஆனால், இப்போது பூட்டி விட்டார்கள். அதனால் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பேசி அந்தக் கோயிலை மீண்டும் திறந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்.

திருநாவுக்கரசர் ஏன் திறப்பதற்குப் பாடினார் என்றால், அவர் கபாலிகப் பிரிவினைச் சார்ந்தவர் என்பதால் அவரே பாடித் திறக்கட்டும் என்றுதான் அவரைப் பாடச் சொன்னார்கள். அப்படிப் பாடும்போது, அவர் பத்துப் பாட்டு பாடியும் கதவு திறக்கவில்லை. வேதனை தாளாமல் அழத் தொடங்குகிறார் திருநாவுக்கரசர். பிறகு கதவு திறந்து கொண்டது. அப்போது மூடுவதற்காக திருஞான சம்பந்தரைப் பாடச் சொன்னார்கள். அவர் ஒரு பாட்டு பாடியவுடன் கதவு மூடிக்கொண் டது. அதைப் பார்த்த திருநாவுக்கரசருக்கு தன்னைக் கொன்று விடுவார்களோ என்ற பயம் ஏற்பட்டது. அவர்கள் தங்கியிருந்த மண்டபத்தில் இரவெல்லாம் ஒரு மூலையில் முடங்கி கண்விழித்திருந்துவிட்டு விடிவதற்கு முன்னால் எழுந்து சென்று விடுகிறார். சேக்கிழார் இதையெல்லாம் பதிவு செய்கிறார். அவர் சென்றது பயத்தில்தான். அதற்கப்புறம் வேத அடிப்படையில் வழிபாடுகளும், வேத எதிர்ப்பின் அடிப்படையில் வழிபாடுகளும் ஒரே நேரத்தில் நடைபெறுமாறு செய்து விட்டு திருஞான சம்பந்தரும் போகிறார். வேத வழக்கும், எதிர் வழக்கும் என்ற சொல்லையே சேக்கிழார் இங்கு பயன்படுத்துகிறார்.

எதிர்வழக்கு என்பது, நாம் இன்றைக்கு சொல்லக் கூடிய தமிழ் வழிபாடு என்று சொல்லக் கூடியதா?

ஆமாம். இந்தியச் சிந்தனை மரபில் வேதத்திற்கு எதிரான மரபு என்றால் அது தமிழ் மரபுதான். அன்றிலிருந்து இன்று வரைக்கும் அதுதான். இந்தக் காலகட்டத்தில் தான் ஆயிரக்கணக்கில் ஆசீவகர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். ஏனென்றால், இவர்களின் கொள்கையில் அடிப்படையானது வைதிக எதிர்ப்பு; வர்ண சாதி எதிர்ப்பு. ஜைனர்கள் நான்கு வகையான வர்ண வேறுபாடுகளை ஏற்றுக் கொண்டவர்கள். பவுத்த சமயம் கடவுளைப் பற்றி கவலைப்படாத மாதிரி, சாதியைப் பற்றியும் அது ஒரு காலகட்டத்தில் கவலைப்படவில்லை. ஆனால், இந்த ஆசீவகம் மட்டும் சாதி எதிர்ப்பிலேயே கூர்மையாக இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் வைணவமும் சைவ எழுச்சியில் பாதிப்பிற்குள்ளாகிறது. வர்ண எதிர்ப்பு, வேத எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு இவற்றிலெல்லாம் ஈடுபட்ட இந்த ஆசீவகத் துறவிகளுக்கு ஒன்று உடல் ரீதியான தொல்லை; மற்றது கடுமையான வரிவிதிப்பு. மற்ற மதத்தினைச் சார்ந்தவனுக்கு ஒரு ரூபாய் வரி என்றால், இவர்களுக்கு இருபது மடங்கு வரி விதிக்கப்பட்டது. அந்த இருபது மடங்கு வரியையும் கட்டத் தவறும்போது, அது இரண்டு மடங்காகிறது. இப்படியான கடுமையான வரிவிதிப்புகள், வன்கொடுமைகள் இவற்றுக்கு ஈடுகொடுக்க முடியாத இந்த ஆசீவகத் துறவிகளில் 90 விழுக்காட்டினர் போய் மாலியத்தில் சேர்ந்துவிடுகின்றனர். திருமாலினை கடவுளாக ஏற்றுக்கொண்டு வைணவத்தில் போய் சேர்ந்துவிடுகின்றனர். ஒரு பத்து விழுக்காட்டினர் ஜைன மதத்தினோடு சேர்ந்து விடுகின்றனர். அதற்குப் பிறகு அதனுடைய அடையாளங்களாக அய்யனார் கோயில்கள்தான் இருக்கின்றனவே தவிர, ஆசீவக சமயம் என்பது தமிழர் வாழ்விலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டது.

நீங்கள் சொல்வதுபடி பார்த்தால், ஆசீவகத்தைப் பின்பற்றியவர்கள்தான் இன்றைய காலகட்டத்தில் அய்யனாரை வணங்குகின்றவர்களா?

ஆமாம். மதப் பாதுகாப்பின்மை காரணமாக வைணவத்திற்கு ஒரு காலத்தில் மாறியவர்களே அவர்கள். சிறிது பிரபலங்களாக இருந்தவர்களே வைணவத்திற்கு மாறினார்களே தவிர, சிறிய குடும்பத்தில் இருந்தவர்கள் அப்படியே இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. பல அய்யனாருக்கு அய்யனார் கோயிலில் நாமத்தைப் போட்டுவிடுகின்றனர். சித்தண்ண வாயிலின் குகைக் கோயிலில் இருக்கக்கூடிய கருவறையில்கூட வடகலை நாமம், தென்கலை நாமம் செதுக்கப்பட்டிருக்கின்றன.

மதுரை கோயில் உள்ளே ஓர் அய்யனார் சிலை இருக்கிறது. அதைப் பார்த்திருக்கிறீர்களா?

இல்லை. அப்படி அய்யனார் சிலை இருந்திருந்தால், ஒரு காலத்தில் அது அய்யனாருக்கு மட்டுமே உரிய கோயிலாக இருந்து, பிற்காலத்தில் கைப்பற்றப்பட்டு மாற்றப்பட்டிருக்கும். மதுரை பாண்டிய மன்னர்களே ஒரு காலத்தில் ஆசீவகத்தைத் தழுவியிருக்கிறார்கள். அய்யனாருக்கு உரிய அடையாளங்களில் சாட்டை புகழ் பெற்றது. அந்தச் சாட்டை, பாண்டிய மன்னர்களின் நாணயத்தில் இடம் பெற்றிருந்தது. அடுத்து யானைச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. யானைச் சின்னம் ஆசீவகச் சின்னம். இதையெல்லாம் ‘சங்ககாலத் தமிழர் சமயம்' என்ற நூலில் விளக்கியிருக்கிறோம்.

பேட்டி அடுத்த இதழிலும்
Pin It