இந்திய மக்கள் திருவிழாக்களை விரும்புகிறார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அவர்கள் தங்களின் பாதி நாட்களை திருவிழா கொண்டாட்டங்களுக்கும், மதச் சடங்குகளுக்குமே செலவிடுகின்றனர். மாமனிதர்களின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் நிகழ்வுகளுக்கும் அவர்கள் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கிருஷ்ண ஜென்மாஷ்டமி, ராமநவமி மற்றும் அனுமான் ஜெயந்தி ஆகிய கொண்டாட்டங்கள், இந்துக்களின் மனநிலைக்குச் சான்றாக விளங்குகின்றன. இந்திய மக்கள் கொண்டாட்டங்களை அதிகம் விரும்பினாலும், புத்தர் பிறந்த நாளை அவர்கள் இதே உணர்வோடு ஏன் கொண்டாடுவதில்லை என்பது வெளிநாட்டினருக்கு வியப்பளிக்கக் கூடும்! இந்தியாவில் பிறந்த மாமனிதர்களிலேயே புத்தர்தான் மிகவும் உயர்ந்தவராகத் திகழ்கிறார். புத்தரை இவ்வுலகின் ஒளிவிளக்காக அவருடைய வழித்தோன்றல்கள் போற்றுகின்றனர்.

Buddha
கிறித்துவர்கள் புத்தடம் பகைமைப் பாராட்டினாலும், புத்தரை ஆசியாவின் ஒளிவிளக்காகவே பார்க்கின்றனர். இந்துக்களும் புத்தரை விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாகக் கருதுகின்றனர். இத்தகைய புகழ்பெற்ற மனிதர், இந்திய மக்களின் நினைவலைகளிலேயே புதைக்கப்பட்டு விட்டார். இந்திய மக்கள் அவரை நினைவு கூர்வதே இல்லை. இத்தகைய புகழ்பெற்ற மனிதர் மறக்கடிக்கப்பட்டது, பெருத்த அவமானத்திற்கும், வியப்புக்கும் உரிய செய்தியாகும்! இச்சூழலில், பெங்கால் மற்றும் பிற மாநிலங்களில் புத்தர் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடத் தொடங்கியிருப்பது, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது மிகுந்த பாராட்டுக்குரியது. ஆனால், இது மிகப்பெரிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்பட வேண்டும். எனவே, இந்த முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்த புத்தரின் வாழ்வையும் தொண்டையும் மக்களிடையே அறிகப்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது...

புத்த தம்மத்தின் அடிப்படையான கொள்கைகள் என்ன? அவருடைய சிறப்பு என்ன? இந்தக் கேள்விகளைப் புரிந்து கொள்ளாமல், புத்தரின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியாது. இருப்பினும், இடப்பற்றாக்குறை காரணமாக, இதை விரிவாக விளக்க இயலவில்லை. புத்தருடைய காலத்தில், பார்ப்பனியம் மூன்று தூண்களைக் கொண்டிருந்தது : 1. வேதங்கள் புனிதத் தன்மையுடையதாகவும், என்றென்றும் மாறாததாகவும் கருதப்பட்டது 2. யாகம் 3. சதுர்வர்ண தர்மம் (நான்கு வர்ணங்களை அடிப்படையாகக் கொண்ட வர்ணாசிரம தர்மம்). வேதத்தில் எழுதப்பட்டுள்ள அனைத்தும் அது அறிவுக்கு ஏற்புடையதா இல்லையா என்பதெல்லாம் பொருட்டல்ல அது தவறே இல்லாதது. வேதங்கள் புனிதமானவை என்பதை புத்தர் ஏற்க மறுத்து, அதை முதல் விலங்காகக் கருதினார். வேதங்களை ஏற்பதற்குப் பதில், அதை மறுத்து, அறிவை அடிப்படையாகக் கொண்ட உண்மையை ஒப்புக் கொள்வதே புத்தரின் நிலைப்பாடாக இருந்தது.

பார்ப்பனியத்தைப் பொறுத்தவரை, கடவுளை அடைவதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; யாகங்களைச் செய்யாமல் கடவுளை அடைய முடியாது. எனவே, யாகங்கள் செய்வதே மதமாகக் கருதப்பட்டது. பார்ப்பனர்கள், மனிதர்களை யாகத்தில் எரிப்பதற்கு முன்பு, இந்த யாகத்தை ஏற்பாடு செய்பவர்கள் மனிதனுடைய சதையை உண்ண வேண்டும். புத்தருடைய காலத்தில் இந்தச் சட்ட விதி இல்லை. புத்தர் காலத்தில் மிருகங்களை யாகத்தில் எரிக்கும் வழக்கம் இருந்தது. அந்தக் கால இலக்கியத்தைப் படிக்கின்ற எவரும், பார்ப்பனர்களின் மூதாதையர்கள் எண்ணற்ற பசுக்களை யாகங்களில் பலியிட்டதை அறிவர். பார்ப்பனர்கள் யாகங்களில் எண்ணற்ற பசுக்களைக் கொன்றது முஸ்லிம்கள் பசுக்களைக் கொன்ற எண்ணிக்கையைவிட அதிகமானது என்ற உண்மையை, இத்தகைய இலக்கியங்களைப் படிக்கும் எவரும் புரிந்து கொள்வர்.

புத்தர் வேதங்களை எந்தளவுக்குத் தாக்கினாரோ, அதே அளவுக்கு அவர் யாகங்கள் செய்வதையும் கண்டித்தார். இதில் புத்தரின் நிலைப்பாடு புரட்சிகரமானது என்றே எவரும் சொல்ல முடியும். கடவுளை அடைவதற்கும் மதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று புத்தர் அறிவுறுத்தினார். மதத்தின் நோக்கம், ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதோடு தொடர்புடையது. இதுதான் புத்தரின் நிலைப்பாடு. கடவுளை அடைவது, ஒரு மதத்தின் நோக்கமாக இருக்க முடியாது என்று புத்தர் எண்ணினார்.

ஒருபுறம், கடவுளை அடைய முயல்வதும், மறுபுறம் தன்னுடைய சக மனிதனை இழிவாக நடத்துவதும் மதத்திற்கு எதிரானது. பார்ப்பனியத்தின் மூன்றாவது தூணான சதுர்வர்ண தர்மத்தை, புத்தர் கடுமையாகத் தாக்கினார். பார்ப்பனியத்தின் சாரமே சதுர்வர்ண தர்மத்தில்தான் அடங்கி இருக்கிறது. ஒருவன் பிறக்கும்போதே, சாதி அடிப்படையில் உயர்வானவனாகவோ, தாழ்வானவனாகவோ பிறக்கிறான் என்று நினைப்பதற்கு, சதுர்வர்ணத்தில் உள்ள நம்பிக்கையே காரணம். பார்ப்பனியத்தில் தாழ்த்தப்பட்ட சாதிக்கும், பெண்களுக்கும் மரியாதைக்குரிய இடம் இல்லை. வாழ்வியல் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டே வந்துள்ளன. அவர்களுக்கு எதையும் சொந்தம் கொண்டாடும் உரிமைஇல்லாததால் இவ்விரு வகுப்பினரும் சுதந்திரமாக இல்லை. அவர்கள் உயிரோடு வாழும் வரை இதுதான் நிலைமை. இதே நிலை அவர்கள் இறந்த பிறகும் தொடர்கிறது. பார்ப்பனியத்தில் இவ்விரு வகுப்பினருக்கும் இறந்த பிறகும் சுதந்திரம் இல்லை.

பார்ப்பனியத்தின் கொள்கைகளைப் பொறுத்தவரை, துறவிகளுக்குதான் சுதந்திரம் உண்டு. ஆனால், தாழ்த்தப்பட்ட சாதியினரும் பெண்களும் துறவிகளாக மாறுவதற்கு அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. இத்தகையதொரு அநீதியான நிலையை புத்தர் ஏற்க மறுத்தார். புத்தர், சமூக சமத்துவத்தை வலியுறுத்திய மாபெரும் போராளி. அவரைப் போன்ற ஒருவரை வேறு எங்கும் காண முடியாது. பார்ப்பனியத்தில் பெண்களுக்குச் சுதந்திரம் இல்லை. புத்தர் அவர்களுடைய சுதந்திரத்திற்கான வழிகளைத் திறந்தார். தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கும் சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது. எனவே, புத்தர் அவர்களை சங்கத்தில் ஆசான்களாக சேர்த்துக் கொண்டார். புத்தர் சமூக சமத்துவத்தை வலியுறுத்தியதோடு, அதை நடைமுறைப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் புத்தர் தன்னுடைய அமைப்பில் சேர்த்துக் கொள்ளவில்லை; பிற தாழ்த்தப்பட்ட சாதியினரையும் தமது சங்கத்தின் உறுப்பினர்களாக்கினார்.

மேற்கூறிய விளக்கங்கள், போதுமானவை அல்ல. இருப்பினும், புத்தர் இந்த நாட்டுக்கு என்ன செய்தார் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள இது பயன்படும். புத்தரின் கொள்கைகள் மிகவும் பயனுள்ளவையாகவும், ஈர்ப்புடையதாகவும் இருந்ததால் புத்தரின் தம்மம் உலகெங்கும் பெருமளவுக்குப் பரவியது. தெற்கில், இலங்கை மற்றும் பசிபிக் பெருங் கடலில் உள்ள பல தீவுகளில் அது பரவியது. கிழக்கில் பர்மா, அசாம், தாய்லாந்து, சீனா மற்றும் ஜப்பானில் பரவியது. வடக்கில் திபெத், நேபாளம் மற்றும் டர்க்ஸ்டனுக்குப் பரவியது. புத்தரின் தம்மம், ஆப்கானிஸ்தானிலும் பரவியது. எந்த மதம் இந்த அளவுக்குப் பரவியது இல்லை. மற்றொரு சிறப்புத் தன்மையும் புத்த தம்மத்திற்கு இருக்கிறது. எல்லா மதங்களும் தன்னுடைய மதிப்பு மற்றும் கொள்கைகளால் மட்டும் பரவிவிடுவதில்லை. போரின் மூலமே இஸ்லாம் வளர்ந்தது. சட்டத்தின் மூலம் கிறித்துவம் வளர்ந்தது. பவுத்தம் மட்டுமே அதன் மதிப்பு மற்றும் கொள்கைகளால் வளர்ந்தது. அதற்கு வாளின் ஆதரவோ, சட்டத்தின் ஆதரவோ தேவைப்படவில்லை.

புத்தர் தனது கருத்துகளை மக்களிடம் திணிக்கவில்லை. அவருடைய கருத்துகளை மக்கள் தங்கள் மீது திணித்துக் கொண்டனர். இவையெல்லாம் இருப்பினும், இந்திய மக்கள் ஏன் புத்த தம்மத்தை மறந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவுக்கு வெளியே பவுத்தம் இன்றளவும் வாழ்கிறது. உலகெங்கும் பவுத்தர்கள் பெருமளவில் உள்ளனர். இருப்பினும், இந்தியாவில் பவுத்தம் அழிக்கப்பட்டது. இடப்பற்றாக்குறை காரணமாக, இதற்கான விரிவான பதில்களை நான் இங்கு சொல்ல இயலாது. இருப்பினும், இதுகுறித்து சுருக்கமாக விவாதிப்பது அவசியம். புத்தரை காலத்தால் மறக்க முடியாது. புத்தர் அழிவற்றவர்; எக்காலத்திற்கும் பொருந்தி வருபவர். இவ்வுலகில் இருந்து அவருடைய பெயர் எப்படி மறையும்? சீனா புத்தரை மறக்கவில்லை; ஜப்பான் மறக்கவில்லை; பர்மா மறக்கவில்லை; இந்தியாவில் மட்டும்தான் அவர் மறக்கடிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு காலம் காரணம் அல்ல என்பது தெளிவாகிறது.

இச்சூழலுக்கு புத்தரின் எதிரிகளே காரணம். பார்ப்பனர்களே புத்தரின் எதிரிகள். பார்ப்பனர்கள் புத்தருக்கு மட்டுமே எதிரிகள் என்பதும் உண்மை அல்ல. அவர்கள் ஜெயினிசத்தின் நிறுவனரான மகாவீரரையும் எதிர்த்தனர். ஆனால், புத்தர் பார்ப்பனியத்தைக் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கியது போல, மகாவீரர் செய்யவில்லை. இதற்குக் காரணம், புத்தர்தான் சதுர்வர்ண தர்மத்தின் மிகப்பெரிய எதிரியாக விளங்கினார்; மகாவீரர் அல்ல. புத்தர் வேதங்களையும், யாகங்களையும் தாக்குதலுக்கு ஆளாக்கியதைப் பற்றிக்கூட பார்ப்பனர்கள் பெரிதும் கவலைப்படவில்லை. ஆனால், சதுர்வர்ண தர்மத்தை புத்தர் தாக்கியதே அவர்களைக் கடும் பாதிப்புக்குள்ளாக்கியது.

சதுர்வர்ணம் அழித்தொழிக்கப்பட்டால், பார்ப்பனியம் அடியோடு ஒழிந்துவிடும். இதைப் பார்ப்பனர்கள் நன்கு அறிந்திருந்தனர். உண்மையில், பார்ப்பனர்கள் சதுர்வர்ணத்தைத் தங்களுடைய உயிர் மூச்சாகக் கருதுகிறார்கள். எனவே, சதுர்வர்ண தர்மத்தின் மீதான தாக்குதல் என்பது, பார்ப்பனர்கள் மீதான தாக்குதல்தான். அந்தக் காலத்தில் இருந்த பார்ப்பன எதிர்ப்பு இயக்கமாக புத்தருடைய இயக்கத்தையும், அந்த இயக்கத்தின் தலைவராக புத்தரையும் ஒருவர் கூற முடியும். எனவேதான், பார்ப்பனர்கள் புத்தரையும் அவரது தம்மத்தையும் அனைத்து வழிகளிலும் அழித்துவிட வேண்டும் என்று சதி செய்தனர்.

பார்ப்பனர்கள் தங்களுடைய வேதக் கடவுள்களைக் கைவிட்டு, போரிடும் கடவுளர்களை தங்களுடைய சொந்தக் கடவுளர்களாக உருவாக்கினர். பார்ப்பனர்கள் ராமனை வழிபடத் தொடங்கினர். அந்தக் காலத்தில் பார்ப்பனர் அல்லாத இயக்கத்தின் தலைவரான ஜெடாவை வணங்கத் தொடங்கினர். ஒரு கடவுளோடு அவர்கள் நிறைவடையவில்லை. இன்னொரு போரிடும் கடவுளான கிருஷ்ணனை அவர்கள் ஆதரிக்கத் தொடங்கினர். தற்பொழுது பார்ப்பனர்கள், நமது கடவுளர்களை வழிபடத் தொடங்கி விட்டனர்; இதனால், பார்ப்பனர் அல்லாதவர்கள் அவர்களை எதிர்த்துப் போரிடத் தேவையில்லை என நினைத்தனர். எனவே, பார்ப்பனர்களுக்கு எதிரான புத்தர் இயக்கம் நலிவடைந்தது.

புத்தர் உங்களுடையவராக இருந்தாலும், நாங்கள் அவரை விஷ்ணுவின் அவதாரமாக ஏற்றுக் கொள்கிறோம் என்று பார்ப்பனர்கள் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். புத்தரை விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாகப் பார்ப்பனர்கள் ஏற்றுக் கொண்டதும், பிரச்சினை முடிவுக்கு வந்தது. இனி, சண்டையிடுவதில் என்ன பொருள் இருக்க முடியும்? ஒருபுறம் பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாதவர்களை அமைதிப் படுத்திக் கொண்டு, மறுபுறம் புத்தருடைய தம்மத்தைப் போலவே எல்லாவற்றையும் செய்யத் தொடங்கினர். இதன் மூலம் பார்ப்பனியம் பவுத்தம் ஒன்றுதான் என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு மக்களுக்குத் தவறான வழிகாட்டத் தொடங்கினர்.

பவுத்தர்கள் "விகார்'களைக் கட்டினர். விகாரங்கள்தான் பவுத்தத்தின் ஒளியாகத் திகழ்ந்தன. பார்ப்பனர்கள், தங்களுடைய கோயில்களை பவுத்த விகாரங்களுக்குப் பக்கத்திலேயே கட்டத் தொடங்கினர். இத்தகைய வெளிப்படையான மாற்றத்தைக் கண்ட மக்கள், பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையில் வேறுபாடுகளைக் காண மறந்தனர். இறுதியில், முஸ்லிம்கள் இந்தியாவுக்குப் படையெடுத்தபோது, அவர்கள் விகாரங்களை அழித்தனர். பவுத்தத் துறவிகள் வேறு நாடுகளுக்குத் தப்பி ஓடினர். இவர்கள் இல்லாததால், பார்ப்பனர்கள் பவுத்தத்தை அழிக்கத் தொடங்கினர். அதற்குப் பிறகு, அவர்கள் பவுத்த குகைகளை "பாண்டவ் லேனி' என்று பிரச்சாரம் செய்து, புத்தரின் உருவங்களை சிவனுடைய லிங்கமாக மாற்றினர். பார்ப்பனர்கள் பவுத்தத்தை எதிர்த்ததன் மூலம் அவர்கள்தான் முக்கிய எதிரிகளாக விளங்கினர் என்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான். இந்நிலையில், புத்தரின் பிறந்தநாள் விழாவை அவர்கள் எப்படிக் கொண்டாடுவார்கள்?

ஆனால், பார்ப்பனர் அல்லாத மக்கள் இம்மாமனிதரை மறந்திருக்கக் கூடாது. ஏனெனில், மூட நம்பிக்கைகளிலும் மந்திரங்களின் பிடியிலும் கட்டுண்டு கிடந்த மக்களை புத்தர்தான் விடுதலை செய்து அவர்களை மனிதநேயப் பாதைக்குக் கொண்டு வந்து, அவர்களை மனிதர்களாகவும் மாற்றினார். இவர்களுடைய நலன்களுக்காகத் தன்னுடைய சொகுசு வாழ்க்கையை விட்டொழித்து, இம்மக்களின் சுயமரியாதைக்காக, இந்த நாட்டைத் தன்னுடைய கொள்கைகளால் செழுமைப்படுத்திய புத்தரை இவர்கள் மறந்திருக்கக் கூடாது. பார்ப்பனர் அல்லாத மக்கள் இத்தகையதொரு மாமனிதரை மறந்தது, மிகுந்த வருத்தத்திற்குய செய்தியாகும். அவர்கள் புத்தரை தங்களின் நினைவில் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்.

Ambedkar
இந்த ஒரு காரணத்திற்காகவே புத்தர் பிறந்த நாள் விழாவை, இந்திய மக்கள் கொண்டாட வேண்டும் என்று நாம் வலியுறுத்தவில்லை. மேற்கூறிய காரணங்களில் இருந்து நாம் சொல்லும் காரணம் வேறுபட்டது; மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்துக்களில் உள்ள படித்த வகுப்பினர், இந்துப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு, இந்துக்களுக்காக அரசியல் ஜனநாயகத்தை நிறுவ விரும்புகின்றனர். இதற்காக அவர்கள் போராடி வருகிறார்கள். இத்தகைய அறிவுஜீவிகளின் மீது நாம் இரக்கம் கொள்கிறோம்.

இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிறுவ நினைக்கும் மக்கள் முட்டாள்களாகவோ, சூழ்ச்சி நிறைந்த மக்களாகவோதான் இருக்க முடியும். ஆனால், இத்தகைய பேதமையும் சூழ்ச்சியும் நீண்ட நாட்களுக்கு நீடித்திருக்க முடியாது. அனுபவங்களின் அடிப்படையில், பார்ப்பனியம் ஜனநாயகம் எதிரெதிர் திசைகள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஜனநாயகத்தை நிலைநாட்ட, சதுர்வர்ண தர்மத்தை அழித்தொழிக்க வேண்டிய தேவை இருக்கிறது. சதுர்வர்ண கிருமிகளை அழித்தொழிப்பதற்கு, புத்த தம்மத்தைவிட ஆற்றல் வாய்ந்த மருந்து இல்லை. எனவே, அரசியலைத் தூய்மைப்படுத்த அனைத்து இந்துக்களும் புத்தர் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும். அவர்களுக்கும் இது பயனளிக்கும் என்ற வகையில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

அரசியலில், இந்தியா ஒரு நோயாளி மனிதனைப் போல காட்சியளிக்கிறது. நாம் இந்தியாவை நினைக்கும்போது, வயிறு பெரிதாக உள்ள ஒரு மனிதனின் கை, கால்கள் எலும்புகளாக மட்டுமே சுருங்கி நிற்பதையும், ரத்தசோகையுடனும், ஓர் எலும்புக் கூடு போன்ற குழிவிழுந்த கண்களுமாக கற்பனை செய்து பார்க்கிறோம். ஜனநாயகத்தைச் செழித்தோங்கச் செய்யும் ஆற்றல் அவனிடம் இல்லை. ஆனால், அவனுள் தீராத வேட்கை இருக்கிறது. இந்த வேட்கையைத் தணிக்க அதிகாரம் மிகவும் முக்கியம். இந்த அதிகாரத்தை மருந்தின்றி கைப்பற்ற முடியாது. ஆனால், மருந்து மட்டும் பயனளித்து விடுமா? மருந்தை உட்கொள்ள வேண்டும் எனில், வயிற்றைத் தூய்மையாக்க வேண்டும் என்பது, அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அனைத்துவகை மாசுபாடுகளும் அகற்றப்பட வேண்டும். இதைச் செய்யாதவரை, மருந்தை மட்டும் உட்கொள்வதால் எந்தப் பயனும் இருக்காது.

இந்துக்களின் வயிறு தூய்மையாக இல்லை. அவர்களுடைய வயிற்றில் நீண்ட நாட்களாக பார்ப்பனியக் கழிசடைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. இதைத் தூய்மைப்படுத்தும் மருத்துவரால்தான் இந்தியாவில் ஜனநாயகத்தை நிறுவ உதவி புரிய முடியும். இந்த மருத்துவர் சந்தேகத்திற்கிடமின்றி, புத்தராகத்தான் இருக்க முடியும். இந்துக்களுடைய வாழ்வியலை ராமன் பிறந்த நாள், கிருஷ்ணன் பிறந்த நாள் மற்றும் காந்தி பிறந்த நாளைக் கொண்டாடுவதன் மூலம் தூய்மைப்படுத்திவிட முடியாது. ராமன், கிருஷ்ணன், காந்தி ஆகிய மூவருமே பார்ப்பனியத்தை வழிபடுபவர்களே. ஜனநாயகத்தை நிலைநிறுத்த, அவர்கள் ஒருபோதும் பயன்பட மாட்டார்கள். ஜனநாயகத்தை நிர்மாணிக்க, புத்தர்தான் பயன்படுவார். எனவே, புத்தரை நினைவு கூர்வது மிகவும் முக்கியமானது. அவரது மாமருந்தே இந்துக்களின் அரசியல், சமூக நீரோட்டத்தில் கலந்துள்ள மாசுபாடுகளைத் தூய்மையாக்கும். எனவே, மக்கள் ஜனநாயகத்தை நிறுவ, புத்தம் சரணம் கச்சாமி! தம்மம் சரணம் கச்சாமி! சங்கம் சரணம் கச்சாமி! என்ற மாபெரும் அறிவுரையை நாம் முழங்க வேண்டும்.

‘ஜனதா' என்ற ஏட்டுக்கு (17.5.1941) அம்பேத்கர் அளித்த கட்டுரை. ‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் மராட்டிய நூல் தொகுப்பு' : 20 பக் : 327 335, ஆங்கிலத்திலிருந்து தமிழில் : அமிழ்தினி
Pin It