சர்வதேச வர்த்தகத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது, உலக வர்த்தக அமைப்பு World trade organisation(WTO). 1947இல் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சர்வதேச வர்த்தக அமைப்பு ஒன்றினை உருவாக்குவதென முடிவு செய்யப்பட்டது. ஆனால், அமெரிக்க நாடாளுமன்றம் (காங்கிரஸ்), இந்த அமைப்பு தனது நாட்டின் நலன்களுக்கு ஊறுவிளைவிக்கும் என அச்சம் தெரிவித்ததால், இந்த அமைப்பு உருவாகாமலே போயிற்று. எனவே, உலக வர்த்தகமானது, "இறக்குமதி வரிகள் மற்றும் வர்த்தகம் குறித்த பொது ஒப்பந்தம்' (General Agreement on Trade and Tariff- GATT) என்பதால், ஒழுங்குமுறைக்குட்பட்டு வந்தது. இதற்கு சட்ட ரீதியான தகுதியோ, நிரந்தரமான அமைப்பு என்னும் தகுதியோ இருக்கவில்லை. பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளிடையே பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன.

People's agitation against W.T.O. தென்அமெரிக்க நாடான உருகுவேயில் நடந்த கடைசிச் சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உருவாக்கப்பட்ட "உலக வர்த்தக அமைப்பு' 1995 சனவரி முதல் தேதியிலிருந்து செயல்படுகிறது. இந்த அமைப்பில் உறுப்பியம் வகிக்கும் இந்தியா உள்ளிட்ட 149 நாடுகள், ஒவ்வொன்றுக்கும் ஒரு வாக்கு என்னும் விதியிருந்தாலும், நடைமுறையில் இது வளர்ச்சியடைந்த நாடுகளின் ஆதிக்கத்தில்தான் இருக்கிறது. "தி குவாட்' (The Quad) என அழைக்கப்படும் அமெரிக்கா, ஜப்பான், அய்ரோப்பிய யூனியன், கனடா ஆகியனவே பெரும்பாலான முடிவுகளை எடுக்கின்றன. இவற்றுக்கு வளர்முக நாடுகள் கட்டுப்பட்டாக வேண்டும். இந்த வளர்ச்சியடைந்த நாடுகளை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பில் வழக்காட வேண்டுமானால், இவற்றிடமுள்ள பொருளாதார வல்லுநர்கள், சர்வதேசச் சட்டத்தில் திறமை வாய்ந்த வழக்கறிஞர்களின் எண்ணிக்கையையும் வலுவையும் வளர்முக நாடுகள் பெற்றிருக்க வேண்டும்.

உலக வர்த்தக நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முக்கிய விதிகளில் சில கீழ் வருமாறு : 1. இறக்குமதி வரிகளை (குறிப்பாக ஜவுளிகள், வேளாண் பொருட்கள் ஆகியவற்றின் மீதான வரிகளை) நீக்குதல் 2. ஒரு நாட்டி லிருந்து மற்றொரு நாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும் அந்தந்த நாட்டு நாண யத்திற்கான வரம்புகளை அகற்றுதல் 3. காப்புரிமைகளை நடைமுறைப்படுத்தி, நுண்மதி உடைமைகளுக்கான (அறிவியல், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், புத்தகங்கள், பதிவு செய்யப்பட்ட இசை, புதிய உற்பத்தி முறைகள், நிகழ்முறைகள், புதிய எந்திரங்கள் மற்றும் கருவிகள்) உரிமத் தொகைகள் சம்பந்தப்பட்டோருக்குச் செலுத்துவதை உத்திரவாதம் செய்தல்.

"உலக வர்த்தக அமைப்பை'யும் அதன் கொள்கைகளையும் ஆதரிப்பவர்கள், உலகம் முழுவதும் ஒரே ஒரு பொதுவான பெரும் தடையற்ற வர்த்தக வலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது ("நாட்டெல்லைகள் இல்லாத உலகம்') என்று கூறுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு பொதுவான, பெரும் தடையற்ற வர்த்தக வலையம் உருவாகும் போது, பொருட்களும் சேவைகளும் தங்கு தடையின்றியும், வரம்புகள் இன்றியும், சந்தைகளின் தேவைக்கேற்ப ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் போய்ச் சேரும். இந்தச் சூழலானது, சர்வதேச அளவில் ஒவ்வொரு நாடும் மற்றொரு நாட்டுடன் போட்டிப் போடக்கூடிய தகுதியை உருவாக்கும்.

இப்படிப் பரந்து விரிந்த திறந்த சர்வதேசப் போட்டியின் காரணமாக, பொருட்களையும் சேவைகளையும் மிக உயர்ந்த தரத்திலும் மிகக் குறைந்த விலையிலும் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மட்டுமே இறுதியில் எஞ்சி நிற்கும். இத்தகைய போட்டியானது, உலகமெங்குள்ள நுகர்வோர்களுக்குப் பெரும் பயனளிக்கும். இனி இவர்கள் தரம் குறைந்த பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிராது. அவர்களது வாங்கும் சக்திக்கு ஏற்ப மிகச் சிறந்த பண்டங்களையும் சேவைகளையும் மிகக் குறைந்த விலைக்கு வாங்கலாம்.
ஆனால், உண்மை இதற்கு நேர்மாறானது. தடையற்ற வர்த்தகம் என்பது, எங்கும் நடைபெறுவதில்லை. உண்மையான, நியாயமான தடையற்ற வர்த்தகம் என்பது சாத்தியமேயில்லை (வர்த்தகம் என்றாலே அதில் லாபம் அடக்கம் அல்லவா?) ஏற்கனவே கூறியது போல, ஒவ்வொரு நாட்டின் வர்த்தகம் தொழிலும் ஏதோவொரு வகையான அரசுத் தலையீட்டை எப்போதுமே பெற்று வந்திருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் எல்லா நாடுகளும், அதே போல ஒவ்வொரு நாட்டையும் தனித்தனியாக எடுத்துக் கொண்டால், அதிலுள்ள எல்லாத் தொழிலாளர்களும் பிற உழைக்கும் மக்களும் தடையற்ற வர்த்தகத்தால் பயனடைவதில்லை.

ஒரு குறிப்பிட்ட கனிமம், வேளாண்மைப் பயிர், உற்பத்திப் பொருள் அல்லது திறமையில் செழிப்பாக உள்ள ஒரு நாடு அவற்றைத் தனக்கு வேண்டிய இதர பொருட்களுக்காகப் பரிவர்த்தனை செய்து கொள்ள தேசங்களுக்கிடையிலான வர்த்தகம் துணைபுகிறது. இதை ஒரு நாடு பெற்றிருக்கும் "ஒப்பீட்டு ரீதியான அனுகூலம்' எனப் பொருளாதார அறிஞர் டேவிட் க்கார்டொ கூறினார். கருத்தளவில், தேசங்களுக்கிடையிலான வர்த்தகம் எல்லா தேசங்களுக்கும் பயனளிப்பதுதான். ஆனால், நடைமுறையிலோ இத்தகைய லட்சியத்தன்மை வாய்ந்த வர்த்தகம் ஒருபோதும் நடைபெறுவதில்லை. ஒவ்வொரு தேசம் தனது சொந்த நலன்களின் பொருட்டு, பல வர்த்தகத் தடைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றன. இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துதல், இறக்குமதிப் பொருட்களுக்குக் கூடுதலான வரி விதித்தல், தனது நாட்டில் மேற்கொள்ளப்படும் வேளாண்மை, பொருளுற்பத்தி ஆகியவற்றுக்கு மான்யம் அளித்து, சந்தையில் அவற்றின் விலையைக் குறைத்தல் போன்றவற்றைச் செய்கின்றன.

உலக வர்த்தக அமைப்பில் உறுப்பியம் வகிக்கும் நாடுகளின் வர்த்தகத் துறை அமைச்சர்களின் மாநாடு, இரண்டாண்டுகளுக்கொரு முறை நடக்கிறது. இந்த மாநாட்டில் உருவாக்கப்படும் தீர்மானங்களே இந்த அமைப்பின் செயல்பாடுகளுக்கு வழிகாட்டுகின்றன. 1996இல் சிங்கப்பூரிலும், 1998இல் ஜெனீவாவிலும், 1999இல் அமெரிக்க நகரான சியாட்டிலிலும், 2001இல் அரபு வளைகுடா நாடான கத்தான் தலைநகர் டோஹாவிலும், 2003இல் மெக்சிகோ நகரான கேன்கன்னிலும், 2005 டிசம்பல் ஹாங்காங்கிலும் இந்த மாநாடு நடைபெற்றது.

W.T.O டோஹா மாநாடு, உலக வர்த்தக அமைப்பைப் பொறுத்தவரை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்த மாநாட்டில்தான், உறுப்பு நாடுகளின் வேளாண்மை சார்ந்த மற்றும் வேளாண்மை சாராத உற்பத்திப் பொருட்களுக்கான சந்தையை விரிவுபடுத்துவதற்காக "டோஹா அபிவிருத்தி செயல்திட்டம்' (Doha Development Agenda) உருவாக்கப்பட்டது. உலகளாவிய வர்த்தகத்திற்குட்படும் ஆயிரக்கணக்கான வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கும், தொழிலுற்பத்திப் பொருட்களுக்கும் விதிக்கப்படும் இறக்குமதி வரிகளை நீக்குதல் அல்லது குறைத்தல், ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவுகளுக்கு இருந்த உச்சவரம்புகளை நீக்குதல் ஆகியவற்றின் மூலம் உலக வர்த்தகத்தைப் பெருக்க முடியும் என்றும், இதன் மூலம் உலகச் சந்தைக்குப் பல்லாயிரக்கணக்கான டாலர்கள் வந்து சேரும் என்றும், இது எல்லா நாடுகளுக்கும் குறிப்பாக குறைவளர்ச்சியுடைய ஏழை நாடுகளுக்கும் இந்தியா, பிரேசில், சீனா போன்ற வளர்முக நாடுகளுக்கும்கூட பயனளிக்கும் என்றும் கூறப்பட்டது.

ஆனால், "டோஹா செயல்திட்டத்தை' நடைமுறைப்படுத்துவதில் எல்லா உறுப்பு நாடுகளுமே தயக்கம் காட்டி வந்தன. ஏனெனில், ஒவ்வொரு நாடும் தனது பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்காக சில பொருட்களின் இறக்குமதியின் அளவுக்கு வரம்பு விதித்தல், இறக்குமதி வரிகளை விதித்தல், ஏற்றுமதிகளை ஊக்குவிக்க மானியங்கள் வழங்குதல் போன்றவற்றைக் கடைப்பிடிக்கின்றன. அமெரிக்காவும் அய்ரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளும், தமது வேளாண் துறைக்கு அளித்து வரும் மிகப் பெரும் அரசு மான்யங்களின் காரணமாக, அவற்றின் வேளாண் உற்பத்திப் பொருட்கள் உலகச் சந்தையில் குறைந்த விலைக்கு விற்கப்படுவதால், இந்த அனுகூலங்கள் இல்லாத தமது வேளாண் உற்பத்திப் பொருட்களை உலகச் சந்தையில் விற்க முடிவதில்லை என்றும், அவற்றைத் தமது நாடுகளில் இறக்குமதி செய்தால், தம் நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்றும், குறைவளர்ச்சி நாடுகளும் வளர்முக நாடுகளும் தொடர்ந்து புகார் கூறி வந்தன.

அமெரிக்காவும் அய்ரோப்பிய யூனியன் நாடுகளும் மேற்சொன்ன அரசு மானியங்களை நீக்க வேண்டும் என வற்புறுத்தி வந்தன. மற்றோர்புறம் வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்றவை, தமது தொழிலுற்பத்திப் பொருட்களுக்குக் குறைவளர்ச்சி நாடுகளும் வளர்முக நாடுகளும் விதித்துவரும் இறக்குமதி வரிகளைக் கணிசமாகக் குறைத்தால்தான் தங்களது ஏற்றுமதிகளை அதிகரிக்க முடியும் எனக் கூறிவந்தன. "புதிய பொருளாதாரக் கொள்கை'யின் காரணமாக இந்தியாவில் உருவாகியுள்ள வசதிபடைத்த பிரிவினடையே வெளிநாட்டுக் கார்களுக்கான மோகம் அதிகரிப்பதிருப்பதால், தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் கார்களுக்கு இந்தியா இறக்குமதி வரிகள் ஏதும் விதிக்கக் கூடாது என்று மேற்சொன்ன நாடுகள் விரும்புகின்றன.

எனவே, "டோஹா செயல்திட்டத்'தை நடைமுறைப்படுத்துவதில் தொடர்ந்து காலச்சுணக்கம் ஏற்பட்டு வருவதைத் தவிர்க்க, ஹாங்காங் மாநாடு வழிவகுக்கும் எனப் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. வளர்முக, குறைவளர்ச்சி நாடுகளை "தாஜா' செய்வதற்காக, ஹாங்காங் மாநாடு தொடங்குவதற்கு முன் அமெரிக்காவும் அய்ரோப்பிய யூனியன் நாடுகளும் தமது நாடுகளில் வேளாண் உற்பத்திப் பொருட்களுக்குத் தரப்பட்டு வரும் மானியங்களை வெகுவாகக் குறைக்கப் போவதாகக் கூறின. அதாவது, வர்த்தகத்தைப் பாதிக்கும் மானியங்களுக்கான (Trade- distorting subsides) உச்சவரம்புகளில் அமெரிக்காவும் அய்ரோப்பிய யூனியன் நாடுகளும் முறையே 60 விழுக்காடும் 70 விழுக்காடும் குறைக்க முன்வந்தன. வளர்முக, குறைவளர்ச்சி நாடுகளுக்குத் தரப்படும் மிகப்பெரும் சலுகை போல இது தோற்றமளித்தாலும் உண்மை இதுவல்ல. இந்த 60, 70 விழுக்காடு வெட்டு, "வர்த்தகத்தைப் பாதிக்கும் மானியங்களின் உச்சவரம்பு'களில் ஏற்படுத்தப்படும் வெட்டேயன்றி, இந்த நாடுகள் தமது வேளாண் உற்பத்திப் பொருட்களுக்குத் அளித்து வரும் மானியங்களில் ஏற்படுத்தப்படும் குறைப்பு அல்ல. அதாவது அமெரிக்காவைப் பொருத்தவரை, கடந்த ஆண்டு "வர்த்தகத்தைப் பாதிக்கும் மானியங்களாக'த் தரப்பட்ட 74.7 பில்லியன் டாலர், இந்த ஆண்டு 73.1 பில்லியன் டாலராகக் குறைக்கப்படும்!

வளர்சியடைந்த நாடுகள், தமது வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு தற்சமயம் ஒவ்வோராண்டும் வழங்கி வரும் மானியங்களின் அளவு 350 பில்லியன் டாலராகும் என்றும், உலக வர்த்தக அமைப்பு செயல்படத் தொடங்கிய 1995 சனவரி முதலாம் நாளிலிருந்து வளர்முக நாடுகளிலும் குறைவளர்ச்சி நாடுகளிலுள்ள விவசாயிகள், ஆண்டுதோறும் 24 பில்லியன் டாலர்களை இழந்து வருகின்றனர் என்றும் 2005 ஆம் ஆண்டுக்கான அய்.நா. மனித வளர்ச்சி அறிக்கை (UN Development Report 2005) கூறுகிறது. அதாவது இந்த நாடுகளின் அரசாங்கங்கள், வேளாண் துறைக்கு ஒதுக்கப்படும் மானியங்களைக் குறைத்ததாலும், வெளிநாட்டு வேளாண் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்ததாலும் இந்த இழப்பு ஏற்பட்டது. அமெரிக்காவிலும் அய்ரோப்பிய யூனியன் நாடுகளிலும் மானியங்களாகத் தரப்படும் மிகப்பெரும் தொகையில் அங்குள்ள சிறு விவசாயிகளுக்குக் கிடைப்பது, 5 சதவிகிதத்திற்கும் குறைவு. 95 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மானியத் தொகைகளை விழுங்குபவர்கள் அங்குள்ள பெரும் பண்ணை முதலாளிகளும், நிலவுடைமையாளர்களும் கார்கில், மோன்ஸென்டோ போன்ற பெரும் வேளாண் பொருள் வர்த்தக நிறுவனங்களும்தான்.

அது மட்டுமல்ல. அந்த நாடுகளில் வேளாண் துறைக்குத் தரப்படும் மானியங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன : 1. மஞ்சள் பழுப்புப் பெட்டி 2. நீலப் பெட்டி 3. பச்சைப் பெட்டி. "வர்த்தகத்தைப் பாதிக்கும் மானியங்கள்' மஞ்சள் பழுப்புப் பெட்டிக்குள் அடங்கும். அமெரிக்காவும் அய்ரோப்பிய நாடுகளும் செய்வதெல்லாம் "மஞ்சள் பழுப்புப் பெட்டி'யிலிருந்து "நீலப் பெட்டி'க்கும் பின்னர் "நீலப் பெட்டி'யிலிருந்து "பச்சைப் பெட்டி'க்கும் மானியத் தொகைகளை மாற்றிவிடுவதுதான். முதலிரண்டு பெட்டிகளிலுள்ள மானியங்கள் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு மறைகமாகப் போய்ச் சேர்பவை; "பச்சைப் பெட்டி'யிலுள்ளவை அவர்களுக்கு நேரடியாக வழங்கப்படும் தொகைகள்.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், 2002 ஆம் ஆண்டு நிறைவேற்றிய அயோக்கியத்தனமான "பண்ணைகள் சட்ட முன்வரைவி'ன் படி 180 பில்லியன் டாலர் மானியங்கள் பத்தாண்டுக் காலத்தில் தரப்படும். இது "மஞ்சள்பழுப்பு' பெட்டியிலிருந்து "நீலப் பெட்டி'க்கு மாற்றப்பட்ட தொகை. "நீலப் பெட்டி' என்பதற்கான வரையறையும்கூட, 2004 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டுவிட்டதால், இந்த மானியத் தொகைகள் "பச்சைப் பெட்டி'க்குப் போய்ச் சேர்ந்துவிடும். அதாவது கார்கில், மோன்ஸென்டோ போன்ற ராட்சத நிறுவனங்கள் பயப்படத் தேவையில்லை! அய்ரோப்பிய யூனியன் நாடுகள் 2003 - 04 ஆம் ஆண்டில் தமது "பொது வேளாண் கொள்கை' யில் ஏற்படுத்திய "சீர்திருத்தங்க'ளின் காரணமாக, "நீலப் பெட்டி' மானியங்களில் மிகப் பெரும் பகுதி "பச்சைப் பெட்டி'க்கு மாற்றப்பட்டு விட்டது. எனவே, அமெரிக்காவும் அய்ரோப்பிய யூனியன் நாடுகளும் தமது வேளாண் துறைக்குத் தரப்பட்டு வரும் அரசு மானியங்களை, வெகுவாகக் குறைத்துவிட்டதாகக் கூறுவது அப்பட்டமான மோசடி.

ஹாங்காங் மாநாட்டில், வளர்முக நாடுகளில் ஒப்பீட்டு நோக்கில் வளர்ச்சி கூடுதலாக உள்ள "ஜி - 20 நாடுகள்' என்பன (இந்தியா, பிரேசில், அர்ஜென்டினா, சீனா போன்றவை) இந்தியாவின் தலைமையில் ஒன்றுகூடி வளர்ச்சியடைந்த நாடுகளை எதிர்கொள்ள முடிவு செய்தன. இந்தியாவின் வர்த்தக அமைச்சர் கமல்நாத் தலைமையில் நடந்த இந்த முயற்சியை இந்தியப் பெருமுதலாளிகளும் "இந்து' போன்ற நாளேடுகளும் நாள்தோறும் புகழ்ந்து வந்தன. ஆனால் இந்த நாடுகள், ஏற்கனவே வளர்ச்சியடைந்த நாடுகளுக்குத் திறந்துவிட்டுள்ள தமது சந்தைகளை இன்னும் அகலமாகத் திறந்து விடுவதில் அக்கறை காட்டினவேயன்றி தமது நாட்டு சிறிய, நடுத்தர விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதில் அல்ல.

ஹாங்காங் மாநாட்டில் செய்யப்பட்ட முடிவுகள் என்ன? 2006 ஆம்ஆண்டு முடிவதற்குள் "டோஹா செயல்திட்டத்திற்கான சட்டகத்தை' முழுமைப்படுத்துவதற்கு உறுப்பு நாடுகளுக்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் தரப்பட்டுள்ளது. அய்ரோப்பிய யூனியன் நாடுகள் தமது ஏற்றுமதிகளுக்கு அளித்துவரும் மானியங்களை 2010 ஆம் ஆண்டிற்குள் ரத்து செய்துவிட வேண்டும் என "ஜி 20 நாடுகள்' வற்புறுத்தி வந்தன. ஆனால், 2013 ஆம் ஆண்டுவரை அதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக் கொண்டன அய்ரோப்பிய யூனியன் நாடுகள். இதற்கு அவசரம் அவசரமாக சம்மதம் தெரிவித்தது இந்தியா. இந்த மானியக் குறைப்பாலும்கூட, அய்ரோப்பிய யூனியன் நாடுகளுக்குப் பெரும் இழப்பு ஏதும் இல்லை. இந்த மானியங்களின் அளவு ஆண்டுக்கு 2.7 பில்லியன் யூரோக்கள். ஆனால், இந்த நாடுகள் வேளாண் துறைக்கு ஆண்டு தோறும் அளித்து வரும் மானியங்களின் அளவு 40 பில்லியன் யூரோக்கள். இதில் எந்தக் குறைப்பும் ஏற்படவில்லை.

W.T.O எனவே, அமெரிக்க அய்ரோப்பிய யூனியன் நாடுகளின் வேளாண் உற்பத்திப் பொருட்கள், உலகச் சந்தையில் மலிவாகக் கிடைக்கும் என்பதாலும், அவற்றை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்குத் தடைகள் ஏதும் இல்லை என்பதாலும் இந்திய விவசாயிகளுக்குப் பாதிப்பைத் தவிர வேறேதும் இல்லை. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கோதுமை போன்ற வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு, கார்கில், மோன்ஸென்டோ போன்ற நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யும் கோதுமை போன்றவற்றுக்கு உலகச் சந்தையில் கிடைக்கும் விலையை விடக் குறைவாகவே கிடைக்கும்.

இப்படியிருந்தும் தங்களது தொழிலுற்பத்திப் பொருட்களுக்கும் சேவைகளுக்கும், வளர்முக நாடுகள் போதுமான சலுகைகள் அளிக்கவில்லை என அமெரிக்காவும் அய்ரோப்பிய நாடுகளும் குறை கூறுகின்றன. மேற்கு ஆப்பிக்க நாடுகளின் பொருளாதாரம், பருத்தி உற்பத்தியையே பெரிதும் சார்ந்திருக்கிறது. ஆனால் அமெரிக்கா, தனது பருத்தி உற்பத்தியாளர்களுக்குப் பெரும் தொகைகளை மானியமாகக் கொடுப்பதால், மேற்கு ஆப்பிரிக்கப் பருத்தி உற்பத்தியாளர்களால் உலகச் சந்தையில் போட்டிப் போட முடிவதில்லை. ஹாங்காங் மாநாட்டில் அமெரிக்கா அதிகபட்சம் செய்ததெல்லாம் தனது நாட்டுப் பருத்தி உற்பத்திக்குத் தரப்பட்டு வரும் மானியங்களைக் குறைப்பது பற்றி ஆப்பிக்க நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டதுதான்.

உலக வர்த்தக அமைப்பின் விதிகளின்படி, ஜவுளி ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் இருந்த உச்சவரம்பு (கோட்டா முறை) 2005 சனவரி முதல் தேதியுடன் முடிவுக்கு வந்துவிட்டது. மேலும், "தடையற்ற வர்த்தகம்' என்னும் சொல்லாடலை உரத்துப் பேசுபவை வளர்ச்சியடைந்த நாடுகள்தான். ஆனால், குறை வளர்ச்சி நாடுகள் என அய்.நா.வால் மட்டுமின்றி உலக வர்த்தக அமைப்பாலும் வரையறுக்கப்பட்டுள்ள எல்லா நாடுகளிலிருந்தும் அனைத்துப் பொருட்களுக்கும் கோட்டா முறை இல்லாமலோ, இறக்குமதி வரி இல்லாமலோ தங்கள் நாட்டில் இறக்குமதி செய்வதை அமெரிக்காவும் ஜப்பானும் விரும்புவதில்லை. ஜவுளி ஆடைகளின் குறிப்பாகப் பின்னலாடைகளின் ஏற்றுமதியையே பெரிதும் சார்ந்திருக்கிறது பங்களாதேஷின் பொருளாதாரம். ஆனால் அவற்றுடன் தனது நாட்டில் உற்பத்தியாகும் ஜவுளியாடைகளால் போட்டிப் போட முடியாத அளவிற்கு விலை குறைவாக உள்ளது என்று அமெரிக்கா ஆட்சேபனை தெவித்தது.

அதேபோல வளர்முக, குறைவளர்ச்சி நாடுகளிலிருந்து அரிசி, பதனிடப்பட்ட தோல் போன்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தயக்கம் காட்டியது ஜப்பான். ஹாங்காங் மாநாட்டின் இறுதியில் வளர்ச்சியடைந்த நாடுகள், அய்ம்பது குறைவளர்ச்சி நாடுகள் ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 97 சதவிகிதத்திற்கு இறக்குமதி வரிகளை நீக்குவது என ஒப்புக் கொண்டன (இந்த நாடுகள் ஏற்றுமதி செய்பவை பெரும்பாலும் அடிப்படைப் பொருட்களே; உற்பத்திப் பண்டங்களின் எண்ணிக்கைகளும் வகைகளும் மிகக் குறைவானவை). அதே சமயம், தங்கள் நாட்டுப் பொருளாதாரம் பாதிக்கப்படாமலிருக்க, குறைவளர்ச்சி நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சில வகை ஜவுளி ஆடைகள், அரிசி, பதனிடப்பட்ட தோல் முதலியவற்றுக்கு இறக்குமதி வரிகள் விதிக்கும் உரிமையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன.

ஆக, "டோஹா செயல் திட்டம்' பற்றிய பேச்சுவார்த்தைகள் (பேச்சுவார்த்தைகள் மட்டுமே) இன்னும் ஓராண்டுக்கு நீடிக்கும் என்பதுதான் ஹாங்காங் மாநாட்டில் விளைந்த இறுதி விளைவு.

Pin It