ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, சமூக மாற்றத்திற்கான ஒரு சிறு முயற்சியாகத்தான் "தலித் முரசு' தொடங்கப்பட்டது. மாதம் ஓரிதழே எனினும், அது குறைந்தது பத்தாண்டுகளுக்காவது இடைவிடாது வெளிவர வேண்டும் என்ற தீர்மானத்துடன்தான் செயல்பட்டோம். அந்த நோக்கம் நிறைவேற, இன்னும் ஓராண்டு எஞ்சியிருக்கிறது. நாம் பயணிக்க வேண்டிய தொலைவு நெடியது எனினும், கடந்து வந்த பாதையில் நாம் ஏற்றுக் கொண்ட கொள்கைப் பயணம் மற்றும் செயல்பாடுகள் மீதான ஒரு திறந்த விமர்சனத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

வேறு எவரைக் காட்டிலும், தலித் முரசின் வாசகர்களே இத்திறனாய்வை சிறப்புற செய்ய முடியும். இத்தகைய விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமாகவும், பங்கேற்புப் பூர்வமாகவும் அடுத்த கட்ட நகர்வை நோக்கியும் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் அடுத்த பத்தாண்டுகளுக்கான செயல்திட்டத்தை வடித்தெடுக்க முடியும். எனவே, வாசகர்கள் தங்கள் பகுதியில் இதழை அறிமுகப்படுத்த/விற்பனை செய்ய/வாசகர் வட்டம் அமைக்க, தங்களின் ஒப்புரவை நல்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

நாம் இடையறாது முன்வைக்கும் எளிய கோரிக்கையையே மீண்டும் நினைவூட்டுகிறோம். ஒரு வாசகர், குறைந்தது ஒரேயொரு வாசகரை அறிகப்படுத்தினாலே போதும். இதழின் விற்பனை எண்ணிக்கை, பன்மடங்கு அதிகரிக்கும். கடந்த ஆகஸ்ட் திங்களில் "முதல் உதவி'க்கான வேண்டுகோள் விடுத்திருந்தோம். வெகு சிலரே நமக்குத் தோள் கொடுக்க முன்வந்தனர். இருப்பினும், கிடைக்கும் வாய்ப்புகளைப் பற்றிக் கொண்டு, கொள்கைச் சமரசமின்றியும், தொய்வின்றியும் செயல்பட உறுதி பூண்டுள்ளோம். சாதி ஒழிப்பு என்ற இலக்கை நோக்கிய நம் பயணத்தில், இன்னல்களை உரமாக்கிச் செயல்படுகிறோம். இலக்கை நோக்கிய அம்பு முழு வீச்சுடன் பாய, இயன்றவரை வளையக்கூடிய திண்மையைப் பெற்றிருக்கிறோம். அதேவேளை, வில்லை உடையாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்தச் சமூகத்திற்கும் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஒரு தலித் பத்திரிகையின் தேவையை தொடர்ந்து வலியுறுத்தினாலும் அதன் முக்கியத்துவத்தை இந்தச் சமூகம் சரிவர உணர்ந்ததாகத் தெரியவில்லை! களத்தில் நடைபெறும் போராட்டங்களை வரலாறாக மாற்றும் தன்மை, பத்திரிகைக்கு உள்ளது; விடுதலைக்கான விழிப்புணர்வை, நூல்களும் பத்திரிகைகளுமே பரவலாக்கும்; அதன் மூலம் ஓர் ஒருங்கிணைப்பும் உருவாகும். இருப்பினும், பகட்டு அரசியலுக்கு அளிக்கும் ஆதரவில் நூறில் ஒரு பங்குகூட, நம்மை அடிமைத் தளையிலிருந்து முற்றாக விடுதலை செய்யும் நூல்களுக்கும் ஏடுகளுக்கும் படித்த தலித் மக்கள் அளிப்பதில்லை என்பது பெரிதும் வருந்தத்தக்கது. நாம் "தலித் முரசு'க்காக மட்டும் இதைச் சொல்லவில்லை; இயக்க ஏடுகளுக்கும், பிற தலித் இதழ்களுக்கும் சேர்த்துதான் குறிப்பிடுகிறோம்.

வரலாறு தெரியாதவர்கள், வரலாற்றை உருவாக்க முடியாது என்பது மட்டும் அல்ல; வரலாற்றை முறையாகப் பதிவு செய்யாதவர்களும், தங்கள் அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாது.

ஓர் அமைப்பாக/நிறுவனமாக நாம் இயங்கினால்தான் ஓரளவுக்காவது திறம்படச் செயலாற்ற முடியும். 1940களின் இறுதியில், டாக்டர் அம்பேத்கர், மாவட்டங்கள் தோறும் ஒரு சமூக மய்யம் அமைக்க விரும்பினார். மேற்கத்திய நாடுகளில் இருக்கும் சமூகக் குடியிருப்புகள் போல, தீண்டத்தகாத மக்களின் சமூக, பண்பாட்டு வாழ்வியல் நிலைகளில், பழக்க வழக்கங்களில் ஒட்டுமொத்த மாற்றத்தை ஏற்படுத்துவதும், இம்மக்களிடையே ஒருமித்த நோக்கத்தையும், ஒருங்கிணைந்த செயல்பாடுகளையும் உருவாக்குவதுமே இம்மய்யத்தின் நோக்கம். ஆனால், இந்நோக்கம் நிறைவேறாமலேயே போய்விட்டது. அண்ணலின் தொலைநோக்குச் செயல்திட்டத்தை, ஒன்பதாம் ஆண்டுச் சிறப்பிதழில் வெளியிட்டிருந்தோம். அதை விரைவில் ஒரு சிறு கையேடாகவும் ‘தலித் முரசு' வெளியிட இருக்கிறது. அதன் முக்கியத்துவம் கருதி, அதிலிருந்து சில முக்கிய பகுதிகளை, அடுத்த பக்கத்தில் வெளியிட்டுள்ளோம்.

நம்மீதான பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க, அம்பேத்கர் வலியுறுத்திய சமூக மய்யத்தை உருவாக்குவது இன்றியமையாத ஒன்றாகும். இதுகுறித்து இடையறாது பிரச்சாரம் செய்வதே பத்தாம் ஆண்டில் நமது தன்மையான செயல் திட்டங்களில் ஒன்றாக இருக்கும்.

நம் இயக்கம் வெற்றிபெற...: அம்பேத்கர்

ஒரு வரலாற்று மாணவன் என்ற அடிப்படையில் அறிவாழமிக்கப் பார்வையுடன் அணுகினால், ஒரு சமூகத்திற்குப் புத்துயிரூட்ட, அரசியல் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், சமூக, பொருளாதார மற்றும் நெறி சார்ந்த கொள்கைகளே வேறு எதை விடவும் முக்கியமானதாக எனக்குத் தெரிகிறது. மக்களின் சமூக, பொருளாதார மற்றும் நெறி சார்ந்த எழுச்சிக்கான ஒரு வழியாக மட்டுமே அரசியல் சக்திகள் இருந்திருக்கின்றன.

நான் தொடக்க நிலையிலிருந்தே அரசியல் இயக்கத்தைவிட, சமூக இயக்கத்திற்கே மாபெரும் அழுத்தத்தையும் முக்கியத்துவத்தையும் அளித்து வந்திருக்கிறேன். என்னுடைய 25 ஆண்டுகால பொது வாழ்க்கையின் பெரும் பகுதியை தீண்டத்தகாத மக்களின் சமூக மேம்பாட்டுக்காகவே செலவழித்திருக்கிறேன். நான் ஓர் அரசியல்வாதி மட்டுமே என்ற என் மீதான கருத்தைத் திருத்தவே இதை இங்கு குறிப்பிடுகிறேன். நான் ஓர் அரசியல்வாதி என்பது தவறான கருத்து.

நம்முடைய இயக்கம் வெற்றி பெற வேண்டும் எனில், பின்வரும் மூன்று தேவைகளும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதில் இரு கருத்துகளுக்கு இடமிருக்க முடியாது. 1. ஒரு மய்ய தலைமைச் செயலகம் 2. அர்ப்பணிப்புடன் கூடிய நன்கு பயிற்சி பெற்ற செயல்வீரர்கள் 3. நிதி ஆதாரம். இத்தகைய வழிமுறைகள் இருந்தால்தான் நம்முடைய இயக்கம் உறுதியாக, நிரந்தரமாக இயங்க முடியும். இம்மூன்று முக்கிய தேவைகளுள் ஒரு சமூக மய்யத்தை மய்ய தலைமைச் செயலகமாக நிறுவுவதே, இவற்றுள் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஒரு சமூக மய்யம் நிறுவப்பட்டு விட்டால், இயக்கத்திற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நான் வகுத்த திட்டத்தின்படி ஒருங்கிணைக்க உதவியாக இருக்கும். மேலும் இது, அர்ப்பணிப்புள்ள முழுநேர செயல்வீரர்களுக்கான ஊதியத்திற்கும், சமூக செயல்பாடுகளுக்கான செலவுகளுக்கும் வருவாய் ஈட்டக்கூடியதாக இருக்கும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தீண்டத்தகாத மக்களுக்கென ஒரு சமூக மய்யம் கண்டிப்பாகத் தேவை என்பதில், எந்த சந்தேகம் இருக்க வேண்டியதில்லை. உண்மையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒன்று வழங்குவது என்பது என்னுடைய திட்டம். எனினும் தொடக்கத்தில் எங்காவது ஓடத்தில் இது நிறுவப்பட வேண்டும். எனவே, இதை பம்பாயில் நிறுவுவது, ஒரு நல்ல தொடக்கமாக அமையக்கூடும் என்ற முடிவுக்கு நான் வந்திருக்கிறேன்.

இவ்வியக்கத்திற்கான தோற்றுவாயாக பம்பாய் அமைந்துள்ளது. இதன் தொடக்க கட்டமாக, முறையான நிரந்தர அமைப்பு பம்பாய் மாநகரத்தில் அமைய உள்ளது. பம்பாயில் நிறுவப்பட உள்ள சமூக மய்யம், தீண்டத்தகாத மக்களின் மேம்பாட்டுக்கான சமூக, பொருளாதார, கல்வி செயல்பாடுகளுக்கான ஒரு மாதிரியாக மட்டுமே இருக்காது. புதிய சிந்தனைகள் ஒளிரும் மய்யமாகவும், ஒட்டுமொத்த நல்லிணக்கத்திற்கான பல்வேறு செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் மய்யமாகவும் இது அமையும்.

பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் அரசியல்வாதிகள் எடுத்த முயற்சிகளுக்குப் பிறகும் நாடு சந்தித்திருக்கும் முன்னேற்றம் என்பது, நிறைவு அளிக்கக்கூடிய வகையில் இல்லை. உண்மையில், பிரச்சினையின் ஒரு முனை அளவே இதுவரை விவாதிக்கப்பட்டுள்ளது. ஒரு பெரும் திரளாகக் கருதப்படும் தீண்டத்தகாத மக்கள், வேறு எவரையும் விடவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுடைய சமூக, பொருளாதார, கல்வி மற்றும் அரசியல் முன்னேற்றம் ஒவ்வொரு நிலையிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு வருகிறது. உதவிக்காக மற்றவர்களை சார்ந்திருப்பது இம்மக்களிடையே நயவஞ்சகமாக ஊட்டப்பட்டு வருகிறது. இது, தீண்டத்தகாத மக்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து போராடுவதற்குத் தகுதியற்றவர்களாகவும் அவர்களை மாற்றி விடுகிறது.

தங்களின் லட்சியத்திற்கானப் பாதையில் குறுக்கிடும் அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து, பல்லாண்டுகால அடிமைத் தளையிலிருந்து உண்மையான விடுதலை பெறுவதற்கான ஆற்றல், கண்டிப்பாக இம்மக்களிடமிருந்தே வர வேண்டும். ஏனெனில், தீண்டத்தகாத மக்களின் இப்புதிய இயக்கம் அதாவது தங்களுக்கான இயக்கம் நான் உறுதியாகச் சொல்கிறேன், அது அவர்களை மேம்படுத்தி வெற்றிக்கு வழிவகுக்கும்.
Pin It