சித்தார்த்தர் சிறுவயதிலிருந்தே மனித நல வேட்கையும், அறிவுக்கூர்மையும் உடையவராக விளங்கினார். தனது எட்டாவது வயதிலேயே கணிதத்திலும், மற்ற படிப்பிலும் நல்ல தேர்ச்சி பெற்றவராகவும் திகழ்ந்தார். நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; என் உற்றார் உறவினர்களும்; எல்லா மக்களும்; எல்லா உயினங்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதான எண்ணங்களை வெளியிட்டார். சிறுவயதிலேயே ஒரு சமூக மனிதருக்குரிய கருத்துகளைக் கொண்டிருந்தார். சாக்கியர்கள் "வப்ரமங்கலம்' என்னும் உழுகுடித் திருநாளை கொண்டாடுவது வழக்கம். விவசாய இனக்குழுக்கள் விதை தெளிப்பு நாளில் கொண்டாடும் ஓர் எளிய கிராமியத் திருநாளாகும் அது. அந்த நாளில் ஒவ்வொரு சாக்கியரும் தாமே ஏர் உழுவது வழக்கம். சித்தார்த்தர் எப்பொழுதும் இந்த வழமையைப் பின்பற்றி ஏர் உழுவார். அவர் உடலுழைப்பை உன்னதமாகக் கருதினார்.

Budda
கிண்டலும் கேலியுமாய்ப் பேசுவதில் பகடி பண்ணுவதில் சித்தார்த்தர் கெட்டிக்காரர். எவர் மனதும் புண்படாத வகையில், நகைச்சுவை உணர்வைக் கொட்டி வைத்த அவர், எவரையும் கவரக் கூடிய வகையில் தக்க சான்றுகள் காட்டி தர்க்கம் செய்யக்கூடியவராக,பகுத்தறிவுவாதியாக நினைந்து காணப்பட்டார். சித்தார்த்தர், மானுடத்தில் தன்னை அடையாளம் கண்டு கொண்டதோடு, தன்னுடைய வாழ்க்கையும் தேர்ந்த ஒரு முடிவு நோக்கிய தேடலே என்பதையும் அறிந்தவராக இருந்தார். இவ்வாறான சிந்தனையாளரான சித்தார்த்தருக்குத் தக்க வயதில் வாழ்க்கைத் துணை நலமானார் யசோதரை. தோழமையான இனிய காதல் வாழ்வின் அடையாளமாக ராகுலன் என்ற மகனும் பிறந்தார்.

அக்காலத்தில் சாக்கியர்களுக்கென "சமூக உறவின் முறை' இயங்கி வந்தது. சித்தார்த்தர் தன் இருபதாவது வயதில் அதோடு இணைந்தார். சித்தார்த்தர் சமூக உறவின் முறையில் அங்கம் வகித்த எட்டாமாண்டில் ஒரு நெருக்கடி ஏற்பட்டது. சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்குமிடையே ரோகிணி ஆற்று நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சினையிருந்து வந்தது. இதனால் சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்குமிடையே ஆண்டுதோறும் வாக்குவாதங்களும் கை கலப்புகளும் ஏற்படுவதுண்டு. இம்முறை மோதல் முற்றியதால், சாக்கியர்கள் மூர்க்கர்களாக போர்ப்பிரகடனம் செய்தனர். சித்தார்த்தர் போரை எதிர்த்தார். மானுடத்தில் போர் எந்தவிதப் பிரச்சினையையும் தீர்ப்பதில்லை; அது மற்றொரு போருக்குதான் வழி வகுக்கும். மேலும், சாக்கியர்களும் கோலியர்களும் நெருங்கிய உறவினர்கள் ஆதலால், அவர்கள் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வது அறிவுடைமை ஆகாது என்றார். ஆனால், போரில் உறவினர்கள் என்றோ மற்றவர்கள் என்றோ பாகுபடுத்திப் பார்க்க முடியாது என்றனர் சாக்கியர்கள்.

சித்தார்த்தரோ மீண்டும் "பகைமையால் பகைமை ஒழியாது என்று அறிவதே நீதி' என்றார். ஆனால், மனித நியாயத்திற்கு சாக்கிய உறவின் முறையினர் துணை நிற்கவில்லை. மூர்க்கர்களின் போர்ப் பிரகடனத்திற்கு ஆதரவாகவே வாக்களித்தனர். சாக்கியர் உறவின் முறை கூடியது. சக மனிதர்களான கோலியர்கள் மீது போர்த் தொடுக்க, இருபதுக்கும் அய்ம்பதுக்கும் இடைப்பட்ட வயதுடையோர் ஆயுதம் தரிக்க ஆயத்தப்படுத்தப்பட்டனர். சித்தார்த்தர் கூறினார் : ""நண்பர்களே! நீங்கள் விரும்பியதைச் செய்யலாம். உங்கள் பக்கம் பெரும்பான்மை உள்ளது. ஆனால், நான் உங்கள் படையில் சேர மாட்டேன்.'' சாக்கியர் உறவின் முறையின் முடிவை ஏற்காதவர்களுக்கு மூவகைத் தண்டனை உண்டு. நாடு கடத்தப்படவோ, தூக்கிலிடவோ சம்மதிப்பது. மற்றொன்று, அவருடைய குடும்பத்தார் சமூக விலக்கத்தால் தண்டிக்கப்பட்டு, சொத்துகள் பறிதல் செய்யப்படுவது.

சித்தார்த்தருக்கு பகை என்ற முரண் அறவே பிடிக்க வில்லை. தங்கள் வாழ்வை எப்படி எதிர்கொள்வது என்பதில் மூர்க்கர்களாகி திமிறிக் கொண்டிருப்பவர்களிடமிருந்து அவர் விலகி நிற்கவே முடிவு செய்தார். சித்தார்த்தர் உறுதிபடக் கூறினார்: ""உயிர்க் கொலை புரியும் போரில் நான் பங்கேற்க மாட்டேன். இது குற்றமென்று சாக்கியர் உறவின் முறை கருதுமானால் அதற்குரிய தண்டனையை நான் ஏற்றுக் கொள்கிறேன். என் குடும்பத்தைத் தண்டிக்க வேண்டாம். நாடு கடத்தியவர்கள் நீங்கள் என்றால், என் தாய் வழி உறவின் முறையினரான கோலியர்களால் உங்களுக்கு ஆபத்து வர வாய்ப்பு உண்டு. எனவே, நான் பொதுவாழ்வு மேற்கொண்டு துறவியாக நாடுவிட்டு நாடு செல்வதாக அறிவிக்கிறேன்.''

மானுடத்தினுள் ஒரு பகுதியில் ஏற்பட்ட பிரச்சனையில் பாதிப்புக்குள்ளான அவர், மானுடம் முழுவதற்குமான தீர்வினை நோக்கி அதற்கானத் தேடல்களில் தன்னை செலவிட ஆயத்தமானார். ஒட்டுமொத்த மானுடம் நோக்கிப் புறப்படுவதும், மனிதத்தை சமச்சீர்மை நோக்கி வலிமைப்படுத்துவதுமே தம் இருப்பிற்கும் இயக்கத்திற்குமான பாரிய பண்பாடு என்பதை வரையறை செய்தார்.

தன் இளமைப் பருவத்தின் அத்தனை ஜொலிப்போடும் இருந்த அவர், இத்தனை நாள் தன்னை குடும்பம், இனக்குழு என்று வளைத்துப் போட்டிருந்த முற்றுப்புள்ளிகளை நீக்கினார். தன்னைப் பற்றிய பணாமத்தை நேர்மையுடன் வெளிப்படுத்தும் செயல்பாட்டிற்கு சமூக மனிதரானார். இனக்குழு சமுதாய வளர்ச்சியின் அப்போதைய சகாப்தத்தில் உலகைச் சரியான முறையில் புரிந்து கொள்ளவும், அதை மாற்றியமைக்கவுமான பொறுப்பினை ஏற்றார். ஒரு திருப்பு முனைக்கான அடையாளமாக ஆன சித்தார்த்தர், மனிதர்களால் சாதிக்கப்பட்டவை பற்றிய பரிசீலனைக்கு தன்னைத்தானே ஆட்படுத்திக் கொண்டார்.

சித்தார்த்தர், தன் வாழ்க்கைத் துணை நலமான இளம் மனைவியையும், அப்போதுதான் பிறந்திருந்த குழந்தையையும், கண்ணீருடன் நின்ற பெற்றோரையும் உண்மையைத் தேடும் அறிவுத்தாகத்தைத் தீர்த்துக் கொள்ளவே விட்டுப் பிரிந்தார். குடும்பத்தினர் அனைவரும் சித்தார்த்தரால் பின்னாளில் அடையப் போகும் உண்மையான விடுதலையின் ஆனந்தத்தை உணர்ந்து, அவருக்கு விடை கொடுத்து அனுப்பினார்கள். அவர் இல்லற வாழ்க்கையிலேயே தங்கி இருந்தால், குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியினையும் வசதிகளையும் துணையையும் அளித்திருக்க முடியும். ஆனால், அவர் மானுடத்தினுள் உண்மையைத் தேடும் தனது அறிவுத்தாகத்தைத் தீர்த்துக் கொள்ளவே குடும்பத்தை விட்டு அகன்றார்.

விருப்பு வெறுப்புகளின் பிடியிலிருந்து தன்னை முதலில் விடுவித்துக் கொள்ளாமல், ஒட்டுமொத்த மனிதர்களுக்கான பாதையைக் கண்டறிய முடியாது என்பது சித்தார்த்தரின் தலையாயப் புரிதலாகும். அவருடைய முக்கிய இலக்கு உண்மைக்கான தேடலை அடைவது மட்டுமல்ல; தாம் முழுமையான விடுதலை பெற்று சக மனிதர்களையும் விடுதலை பெறச் செய்ய வேண்டும் என்பதுதான். சித்தார்த்தர் தனது குடும்பத்தாரின் இசைவைப் பெற்றே இல்லற வாழ்வைத் துறந்தார் என்பதே உண்மை.

சித்தார்த்தர், தன் துணைவியாரை விட்டுப் பிரிந்தாலும் தன் வாழ்க்கைப் பங்காளரின் வாழ்க்கை சிதையாமல் தொடர, மறுமணம் செய்து கொள்ள வலியுறுத்தினார். தன் பிரிவு குறித்து நியாயம் கற்பிக்க அறிவுரைகளால் தன் மனைவியைத் துளைத்தெடுக்காமல், தொடர்ந்து அர்த்தத்தோடும் ஆனந்தத்தோடும் வாழ கேட்டுக் கொண்டார். வாழ்வதற்கான வெளியையும், அதற்கான மன உறுதியையும் ஏற்படுத்தினார். தனது பெற்றோர்களை, குடும்ப இனக்குழு உறவுகளில் சமன்பட்டு வாழ வலியுறுத்தினார். சாக்கிய சங்கத்தவருடன் ஏற்பட்ட முரண்பாடு, சித்தார்த்தரின் துறவுக்குத் தூண்டுகோலாக அமைந்தது என்பது உண்மையின் ஒரு பக்கமே; அவர் தனது தனிப்பட்ட நோக்கங்களுக்காக இல்லற வாழ்வைத் துறக்கவில்லை என்பது மறுபக்க உண்மையாகும். எனவே, அவரது குடும்பத்தாருடன் அவர் நிகழ்த்திய உரையாடலை தெரிந்து கொள்வது அவசியமாகும்.

சுத்தோதனர் : போரின் தீமைகள் குறித்து நாங்களும் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால், நீ இவ்வளவு தூரம் போவாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

சித்தார்த்தர் : நிகழ்வுகள் இப்படியொரு திருப்பத்தை அடையும் என்று நானும்கூட எதிர்பார்க்கவில்லை. சாக்கியர்களை அமைதியின் பக்கம், எனது வாதங்களால் வென்றெடுக்க முடியும் என்று நான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், கெடுவாய்ப்பாக நம்மவர்களில் மூர்க்கர்கள் ஆனவர்கள், எனது வாதங்கள் எந்தப் பயனுமின்றி தோற்றுப் போகும் அளவுக்கு சாக்கியர்கள் மனதில் உணர்ச்சிகளையும் தூண்டி விட்டுள்ளார்கள். ஆனால், இப்போது நிலைமை மோசமடையாமல் காப்பாற்றி விட்டேன் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். நீதிக்காகவும் நியாயத்துக்காகவும் நிற்பதில் என்ன தண்டனைகள் கிடைத்தாலும், நீதியையும் நியாயத்தையும் நான் விட்டுக் கொடுத்து விடவில்லை. மேலும், அதனால் வரும் பாதிப்புகளை நான் மட்டுமே அனுபவிக்குமாறு செய்வதிலும் நான் வெற்றியடைந்துள்ளேன்.

சுத்தோதனர் : எங்களுக்கு என்ன நடக்குமென்று நீ சிந்திக்கவில்லையே!

சித்தார்த்தர் : நான் பரிவ்ராஜகன் ஆவதென முடிவெடுத்ததற்கு அதுதானே காரணம்! சாக்கியர்கள் உங்கள் நலங்களை அபகரிக்க உத்தரவிட்டால், தங்கள் நிலைமை என்ன ஆகுமென நினைத்துப் பாருங்கள்.

சுத்தோதனர் : ஆனால், நீயில்லாமல் இந்த நலங்களினால் எங்களுக்கு என்ன பயன்? இந்தக் குடும்பம் முழுவதும் சாக்கியர்களின் இந்த நாட்டை விட்டு உன்னுடன் ஏன் வெளியேறி விடக்கூடாது?

பஜபதி கோதமி : நானும் இதற்கு உடன்படுகிறேன். எங்களை இந்நிலையில் விட்டு விட்டு நீ மட்டும் தனியாக எப்படிப்போக முடியும்?

சித்தார்த்தர் : அன்னையே! நீங்கள் எப்போதுமே ஒரு தீரனின் தாய் எனப் பெருமை கொள்வீர்கள் அல்லவா? அது உண்மையல்லவா? அப்படியெனில் நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். இந்தக் கவலை உங்கள் தகுதிக்கு உரியதன்று. நான் போர் முனைக்குச் சென்றிருந்தால், நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? இப்படித்தான் துக்கம் அடைந்திருப்பீர்களா?

கோதமி : இல்லை. அது ஒரு சாக்கியருக்குப் பொருத்தமானதேயாகும். ஆனால், நீ இப்போது மக்களை விட்டு நீங்கி பரிவ்ராஜகன் ஆக ஆயத்தமாகிவிட்டாய். நாங்கள் இங்கு எப்படி அமைதியோடிருக்க முடியும்? எனவேதான் நீ எங்களையும் உன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டுமென நான் கேட்கிறேன்.

சித்தார்த்தர் : எப்படி உங்கள் எல்லோரையும் நான் என்னுடன் அழைத்துச் செல்ல முடியும்? நந்தா இன்னும் குழந்தைதான். என் மகன் ராகுலன் இப்போது தான் பிறந்திருக்கிறான். உங்களால் அவர்களை விட்டு விட்டு வர இயலுமா?

கோதமி : நாம் அனைவரும் இந்த சாக்கியர்களின் நாட்டை விட்டு வெளியேறி, கோசல அரசன் பாதுகாப்பில் அந்த நாட்டில் சென்று இருக்கலாமே?

சித்தார்த்தர் : ஆனால் அன்னையே, சாக்கியர்கள் என்ன சொல்வார்கள்? இதைத் துரோகமென்று அவர்கள் கருத மாட்டார்களா? அது மட்டுமல்லாமல், எனது பரிவ்ராஜகத்துக்கான உண்மையான காரணத்தை, கோசல அரசன் கவனத்துக்குக் கொண்டு வரமாட்டேன் என்று நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன். நான் தனியாக வசிக்க நேரிடும் என்பது உண்மைதான். ஆனாலும், எது சிறந்தது? தனியாக வசிப்பதா? இல்லை கோலியர்களைக் கொல்வதில் பங்கேற்பதா?

சுத்தோதனர் : ஆனாலும், ஏன் இந்த அவசரம்? சாக்கிய சங்கம்தான் போர் நடவடிக்கைகளை சில காலத்துக்கு ஒத்திவைக்கத் தீர்மானித்துள்ளதே! ஒருவேளை இந்தப் போர் தொடங்காமலேயேகூட போய் விடலாம். ஏன் உன் பரிவ்ராஜகத்தை ஒத்திப் போடக்கூடாது? நீ சாக்கியர்களுடனே வாழ்வதற்கான சங்கத்தின் அனுமதியைக்கூட பெறும் சாத்தியம் இருக்கிறது.

சித்தார்த்தர் : நான் பரிவ்ராஜகத்தை ஏற்க உறுதியளித்த காரணத்தினால்தான், சங்கம் கோலியர்களுக்கு எதிரான போர் நடவடிக்கைகளைத் தள்ளி வைக்கத் தீர்மானித்து - நான் பரிவ்ராஜகத்தை ஏற்ற பிறகு, சங்கத்தைப் போர் நடவடிக்கையை பின்வாங்கிக் கொள்ளும்படி வலியுறுத்த சாத்தியப்பாடுகள் உள்ளன. ஆனால், இது எதுவுமே நான் பரிவ்ராஜகத்தை ஏற்பதைப் பொறுத்தே நிகழும். நான் ஒரு வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். நான் அதை நிறைவேற்றியே ஆக வேண்டும். அந்த சத்தியத்தை மீறுவதால் ஏற்படும் விளைவுகள், நமக்கும் அமைதிக்கான நோக்கத்துக்கும் மிகவும் பங்கம் விளைவிப்பதாக இருக்கும். அன்னையே, எனது பாதையில் குறுக்கே நிற்காதீர்கள்! உங்கள் அனுமதியையும், ஆசியையும் தாருங்கள்! நடப்பதெல்லாம் நன்மைக்கே!

(கோதமியும் சுத்தோதனரும் மவுனமானார்கள். அதன் பிறகு சித்தார்த்தர் யசோதரையின் அறைக்குள் சென்றார். யசோதரையைப் பார்த்ததும் அவருக்கு என்ன பேசுவது, எப்படிப் பேசுவது எனத் தயங்கி மவுனமாக நின்றார். அந்த மவுனத்தை யசோதரையே கலைத்தார்)

யசோதரை : கபிலவஸ்துவில் சங்கக் கூட்டத்தில் நடந்த அனைத்தையும் கேள்விப்பட்டேன்.

சித்தார்த்தர் : சொல் யசோதரை, பரிவ்ராஜகம் ஏற்பது என்ற என் முடிவுகுறித்து என்ன நினைக்கிறாய்?

யசோதரை : உங்கள் நிலையில் நான் இருந்திருந்தால், நான் மட்டும் வேறென்ன செய்திருக்க முடியும்? நிச்சயமாக கோலியர்கள் மீதான போரில் நானும் பங்களித்திருக்க ஒப்பியிருக்க மாட்டேன். நீங்கள் எடுத்த முடிவே சரியானது. உங்களுக்கு என் சம்மதம் ஆதரவும் உண்டு. நானும் உங்களுடன் பரிவ்ராஜகம் ஏற்றிருப்பேன். அப்படி நான் செயல்பட முடியவில்லை என்றால், அதற்கு ராகுலைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே காரணம். இது இப்படி நிகழ்ந்திருக்கக் கூடாது. ஆனால், நாம் துணிவுடன் இச்சூழலை சந்திக்க வேண்டும். உங்கள் பெற்றோரைப் பற்றியும் மகனைப் பற்றியும் நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். என் உயிருள்ளவரை அவர்களை நான் கவனித்துக் கொள்வேன். நான் விரும்புவதெல்லாம், உங்களுக்கு நெருக்கமானவர்களையும், பிரியமானவர்களையும் விட்டுவிலகி பரிவ்ராஜகராக ஆகும் நீங்கள், இந்த மனித சமுதாயத்துக்கு மகிழ்ச்சி தரும் புதிய வழியைக் கண்டறிய வேண்டும் என்பதுதான் (ஆதாரம் : 'புத்தரும் அவர் தம்மமும்' - டாக்டர் அம்பேத்கர், 1957).

 

.
(தொடரும் )

-ஏ.பி.வள்ளிநாயகம்
Pin It