ஜப்பான் ஆசியக் கண்டத்தில் கிழக்குக் கோடியில் பசிபிக் பெருங்கடலில் இருக்கும் நாடு. ஹொக்காய்தோ, ஹொன்ஷீ, க்யூஷீ, ஷிகோகு என அழைக்கப்படும் நான்கு பெரிய தீவுகளும், பல குட்டித் தீவுகளும் கொண்ட நாடு. அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளுக்கு ஈடாக வளர்ச்சிப் பாதையில் மிக வேகமாக நடை பயிலும் ஓர் ஆசிய நாடு. இருந்தபோதும், இந்தியாவைப் போலவே ஜப்பானிலும் படிநிலை சமூக அமைப்பு உண்டு என்பதும், அந்தப் படிநிலையில் கீழ்நிலையில் ஒதுக்கப்பட்ட ஒரு சமூகம் உண்டு என்பதும் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!

Japan
ஒரு நாள் எனது ஜப்பானியத் தோழியிடம் இதுகுறித்து கேட்ட போது, ஒதுக்குமுறை இருந்ததை ஒப்புக் கொண்ட அவர், தற்பொழுது அது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது என்றார். இப்படி ஒரு கொடுமை ஒழிக்கப்படுவது உண்மையிலேயே சாத்தியமாகி இருக்கிறதா? அப்படி சாத்தியமெனில், அந்த முறையைப் பின்பற்றி இந்தியாவிலும் அதை ஒழித்து விடலாமே! ஆனால், அந்த வகுப்பினரைக் குறிக்கும் சொல் என்னவென்று கேட்டபோது, அந்தத் தோழியின் முகம் மாறிவிட்டது.

நாங்கள் அப்போது ஒரு உணவு விடுதியில் இருந்தோம். சுற்றும் முற்றும் பார்த்த அவர், தயங்கியவாரே நான் அதைச் சொல்ல முடியாது என்றார். பின்னர் நாங்கள் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது, ஒரு தனியான இடத்தில் அவராகவே என்னிடம் "நீங்கள் கேட்ட சொல் "புராக்கு' என்றார். இன்று சட்டப்படி அது முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. இப்போது நான் அதைச் சொல்வது முறையல்ல. அப்பகுதியில் இருந்து வந்தவர்கள் யாரேனும் அருகில் இருக்கலாம். அவர்கள் காதில் நான் சொல்வது விழுந்தால் தவறாகப் போய்விடும். மேலும், அந்தச் சொல்லை இக்காலத்தில் சொல்வது, அநாகரிகமாகக் கருதப்படுகிறது என்றார். நம் நாட்டிலும் ஒரு நாள் "ஜாதி' என்ற சொல்லை சொல்வதற்கு கூச்சப்படும், அச்சப்படும் நாள் வருமா?

ஜப்பானில் மட்டும் அது எப்படி சாத்தியமாயிற்று? புராக்கு மக்களின் நிலையைப் புரிந்து கொள்ள, முதலில் ஜப்பான் நாட்டின் சமூக மற்றும் மதத்தின் பின்புலத்தை அறிந்து கொள்ள வேண்டும். ஜப்பானின் அரச மதமாக அறிவிக்கப்பட்டிருப்பது புத்த மதமே. ஜப்பானிய மக்களும் பெரும்பாலும் புத்த மதத்தினராகவே இருக்கின்றனர். இருப்பினும், புத்த மதம் இங்கு பல பிரிவுகளாக இருக்கின்றன. மிகப்புகழ் பெற்ற "சென்' பிரிவு உட்பட, "ஜோதோ' பிரிவு, "ஜோதோ ஷின்சிசு' பிரிவு, "நிச்சிரின்' பிரிவு என சீன நாட்டிலிருந்தும் கொரிய நாட்டிலிருந்தும் பரவிய புத்த மதப் பிரிவுகள் இன்றும் ஜப்பான் நாட்டில் நிலவி வருகின்றன. இது தவிர, ஜப்பானின் பழமையான மதமான "ஷின்டோ'வும் இன்னமும் உயிர்ப்புடனேயே இருக்கிறது.

புத்த மதத்தினர் "ஷின்டோ' வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுபவர்களாகவே இருக்கின்றனர். ஷின்டோவின் கடவுளான "கமி'களை புத்தரின் வடிவங்களாகவே பெரும்பாலான புத்த மதத்தினர் கருதுகின்றனர். புத்த கோயில்களில் ஷின்டோ மதத்தின் தாக்கங்கள் நிறைய இருக்கின்றன. ஷின்டோ மதத்தின் திருவிழாக்கள், புத்த கோயில்களிலும் நடைபெறுகின்றன. புத்த மதத்திற்குரிய சிறப்பு வழிபாடுகள் ஷின்டோ கோயில்களிலும் நடைபெறுகின்றன. புத்த மதம், ஷின்டோ இரண்டையும் பின்பற்றுபவர்கள் ஒரே மக்கள் என்பதால், இவ்விரண்டு மத வழிபாட்டு முறைகளும் பிரித்துக் காண இயலாதவாறு ஒன்றோடு ஒன்று கலந்து இருக்கின்றன.

இந்தியாவைப் போலவே ஜப்பானிலும் நான்கு படிநிலை சமூக அமைப்பு உண்டு. "சாமுராய்' என அழைக்கப்படும் வீரர்கள் முதல் நிலை. இரண்டாவதாக வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டிருப்போர். மூன்றாவதாக பிற தொழில் மற்றும் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் சாதாரண மக்கள். நான்காவதாக, சாவு தொடர்பான வேலைகளில் ஈடுபட்டிருப்போர். இதில் கால்நடைகளைக் கொல்வது, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது போன்றவையும் அடங்கும். ஜப்பானின் பழமையான மதமான ஷின்டோ மதத்தில், இத்தகைய தொழில்கள் புனிதமற்றவையாகக் கருதப்பட்டன. அதனால் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களும் புனிதமற்றவர்களாகவே கருதப்பட்டனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக, பிறரோடு கலந்து பழக இயலாதவாறு அவர்கள் வாழவைக்கப்பட்டனர். இந்தப் படிநிலை அமைப்பு முறை, 1333இல் ஜப்பானில் முடியாட்சி முறை இருந்தபோது ஏற்படுத்தப்பட்டது. எனினும், அதற்கு முன்பிருந்தே இம்மக்கள் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்களாகவே இருந்திருக்கின்றனர். படிநிலை முறை அவர்களது நிலையை உறுதிப்படுத்தி, அவர்களை சமூகத்திலிருந்து மேலும் அன்னியப்படுத்தியது.

ஜப்பான் நாடு முழுவதிலும் பரவியிருக்கும் இம்மக்களின் வாழ்க்கை நிலை, காலம் காலமாக மிகவும் மோசமான நிலையிலேயே இருந்தது. கல்வி, வேலைவாய்ப்பு, சமூகக் கலப்பு போன்றவை அவர்களுக்கு அடியோடு மறுக்கப்பட்டன. ஜப்பானிய சமூகத்தில் ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இனமாக அவர்கள் வாழ்ந்து வந்தனர். "புராக்கு' என்றால் ஜப்பானிய மொழியில் ஒரு சிறிய கிராமம் என்று பொருள். இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த பகுதிகள் "தொகுஷீ புராக்கு' சிறப்பு கிராமம் என்று அழைக்கப்பட்டன. நாளடைவில் "புராக்கு' என்ற சொல்லே இம்மக்கள் வாழும் பகுதியைக் குறிக்கும் சொல்லாகவும், புராக்கு- மின் - புராக்கு மக்கள் என்ற சொல், இம்மக்களைக் குறிக்கும் சொல்லாகவும் பயன்படத் தொடங்கியது.

ஜப்பானில் சமூக பொருளாதார மாற்றத்திற்குப் பெரிதும் வித்திட்டவர், 1869 - 1912 வரை ஆண்ட மெய்ஜி அரசராகும். அவரது காலத்தில்தான் படிநிலை சமூக அமைப்பு, சட்டப்படி நீக்கப்பட்டது. மக்கள் அனைவரும் சமமென அறிவிக்கப்பட்டனர். ஜப்பானை ஒரு சம நிலை சமூக அமைப்பாக, ஜனநாயக நாடாக மாற்ற மெய்ஜி பெரும் முயற்சி எடுத்தார். அவரது முயற்சியின் விளைவாக, புராக்கு வேறுபாடும் சட்டப்படி ஒழிக்கப்பட்டது. ஆனால், நடைமுறையில் அதை சாத்தியப்படுத்துவது மிகுந்த கடினமான ஒரு சவாலாகவே இருந்தது.

அவரது காலகட்டத்திற்குப் பிறகு, இத்தகைய சமூக மாற்ற நடவடிக்கைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு நாட்டின் பொருளாதார, அரசியல் வளர்ச்சி மட்டுமே முன்னிறுத்தப்பட்டன. நவீனமயமாக்குதல் காலம் என அழைக்கப்படும் இக்காலத்தில், புராக்கு மக்களின் நிலை மேலும் மோசமடைந்தது. மெய்ஜி காலகட்டத்தில் ஓரளவு அரசியல் தெளிவும், உலக அறிவும் பெற்ற ஒரு சில புராக்கு மக்கள் ஒன்றிணைந்து "புராக்கு விடுதலைக் கூட்டமைப்பை' உருவாக்கினர். 1965 ஆம் ஆண்டு இவ்வமைப்பின் அழுத்தத்திற்குப் பணிந்து, புராக்கு மக்களின் நிலையைப் பற்றி ஆராய அரசு ஒப்புக் கொண் டது. அரசு அமைத்த குழு அம்மக்களின் நிலையை ஆராய்ந்து, அரசுக்கு அறிக்கை அளித்தது. அவ்வறிக்கை, புராக்கு மக்களின் புறந்தள்ளப்பட்ட வாழ்க்கை நிலையை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியது.

குடியிருப்புகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பின்மை, அதனால் வறுமை, குற்றச் செயல்கள் அதிகரிப்பு போன்றவை புராக்கு மக்களின் அடையாளமாகவே இருந்ததை அவ்வறிக்கை சுட்டிக்காட்டியது. ஜப்பானின் அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை மனித உரிமைகள் அனைத்தும் இம்மக்களுக்கு மறுக்கப்படுவதையும், மிக அவசர நிலையாகக் கருதி அரசு இப்பிரச்சனைகளை உடனடியாகத் தீர்க்க வேண்டுமென்றும் இவ்வறிக்கை வலியுறுத்தியது. பத்தாண்டுகள் மட்டுமே காலவரையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட இச்சட்டம், பின்னர் சிறிது சிறிதாக நீட்டிக்கப் பெற்று, 1997 ஆம் ஆண்டு வரை நடைமுறையிலிருந்தது. இச்சட்டத்தின் அடிப்படையில் 30 ஆண்டுகள் அப்பகுதிகளின் முன்னேற்றத்திற்கானப் பணிகள் செயல்படுத்தப்பட்டன.

காலம் காலமாகப் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு, 30 ஆண்டுகள் சலுகை போதுமானதாக இருக்க முடியாது என்ற போதும் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தில் பெரிதும் முன்னேற்றம் காணப்படுகிறது. பரம்பரைத் தொழில்களிலிருந்து விடுபட்டு, வேறு தொழில்களில் ஈடுபடவும், கல்வி கற்று அதன் மூலம் வேலைவாய்ப்பினைப் பெறவும் அம்மக்கள் முயற்சிக்கத் தொடங்கினர்; அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர்.

ஆனால், சமூகப் புறக்கணிப்பு இன்றும் தொடரவே செய்கிறது. இன்றைய இளைஞர்கள் புராக்கு குடியிருப்புகளிலிருந்து வெளியேறி, பொதுக் குடியிருப்புகளில் வாழத் தொடங்கிவிட்டனர். இருப்பினும், தங்களின் அடையாளத்தை மறைத்தே வாழ வேண்டிய நிலையில் இருக்கின்றனர். ஜப்பானில் வேலை மற்றும் திருமணங்களுக்கு, பின்புல விவர சேகரிப்பு செய்து தர பல தனியார் புலனாய்வு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களின் உதவியால், புராக்கு இளைஞர்களின் பின்புலத்தை அறிந்து, அவர்கள் புராக்கு மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களுக்கு வேலை மறுக்கப்படும் கோடுமை தொடருகிறது. பல திருமணங்களும் இத்தகைய புலனாய்வுகளால் தடைபட்டிருக்கின்றன.

அப்படி ஒரு வேளை திருமணத்திற்குப் பிறகு இவ்விவரம் தெரிய வருமானால், உடனடியாக மண விலக்கு நடப்பதோடு அந்த ஆணோ பெண்ணோ, கடுமையாக அவமானப்படுத்தப்படுகின்றனர். இதனால் தற்கொலை செய்து கொண்டவர்களும், வேலையை விட்டுஊரை விட்டே வெளியேறியவர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காது. புராக்கு மக்களுடன் குடியிருப்பதையோ, புராக்கு மக்களுடனான திருமண உறவையோ பிற சமூகத்தினர் விரும்புவதில்லை. தெரியும் வரையில் பிரச்சனை இல்லை; தெரிந்தால் ஒதுக்குதலும் ஒதுங்குதலும் இன்றளவும் நீடிக்கிறது.

பெரும்பாலான புராக்கு மக்கள், தங்களுக்கு நேர்ந்த அவமானங்களை அமைதியாகவே ஏற்றுக் கொள்வதாக ஓர் ஆய்வு கூறுகிறது. வெகு சிலரே அரசையோ அல்லது புராக்கு விடுதலை இயக்கத்தையோ நாடுகின்றனர். பள்ளிகளில், வேலை பார்க்கும் இடங்களில், மதம் தொடர்பான இடங்களில், அரசு அலுவலகங்களில் என அனைத்து இடங்களிலும் அவர்கள் மீதான ஒதுக்குதலும், அவதூறுகளும் நடத்தப்படுகின்றன. இதனால் கல்வியை பாதியில் விட்டவர்களும், வேலையை விட்டு வேறு ஊர்களுக்கே சென்று விட்டவர்களும் அதிகம் உள்ளனர்.

புராக்கு விடுதலை இயக்கத்திற்கு மிரட்டல்களும், அவமானப்படுத்தும் அவதூறான கடிதங்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. இத்தகைய அவதூறான கடிதங்கள், தெளிவான பெயர் முகவரியோடு வருவது அதிர்ச்சியூட்டும் செய்தியாகும். ஆனால், இத்தகைய செயல்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் சாத்தியம் இல்லாததால், இவற்றைத் தடுக்க முடியாமல் போய்விடுகிறது.

"கேவலமான புராக்கு மிருகமே, புராக்கு மக்கள் அனைவரையும் கொல்; புராக்கு மக்களை விஷ வாயு அறைகளில் அடைத்து' என்பது போன்ற கொடூரமான வாசகங்கள், இணையத் தளங்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளன. ஒசாகா நகரில் வாழும் ஒருவன், 1993 ஆம் ஆண்டு முதல் இன்று வரையில் தன் வீட்டைச் சுற்றிலும், புராக்கு மக்களைக் கேவலப்படுத்தும் வாசகங்களை எழுதி ஒட்டி வைத்துள்ளான். எத்தனையோ முறை உள்ளூர் அதிகாரிகள் வலியுறுத் தியும் இச்செயலை அவன் நிறுத்த வில்லை. அரசு, அம்மக்களுக்கான முன்னேற்றப் பணிகளை மேற்கொண்டாலும் சட்டப்பூர்வமான பாதுகாப்பை, அம்மக்களுக்கு வழங்காததையே இந்நிகழ்வு வெளிப்படுத்துகிறது.

முன்னேற்றப் பணிகளும் முழுமையாக அம்மக்களைச் சென்றடையவில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன் இப்பணிகளின் தொடக்கக் காலத்தில் புனரமைக்கப்பட்ட குடியிருப்புகள், இன்று மிக மோசமான நிலையில் இருக்கின்றன. ஒரு சிறிய அறையில் ஆறு உறுப்பினர்கள் வாழும் நிலை இருக்கிறது. சின்னஞ்சிறிய சாலைகள், குளிருக்குப் பாதுகாப்பு இல்லாத வீடுகள், பொதுக் கழிப்பறைகள், சுகாதாரச் சீர்கேடுகள், போதுமான நீர் மற்றும் கழிவு நீர் வெளியேற்ற வசதிகளின்மை போன்றவை இன்றும் புராக்கு குடியிருப்புகளில் நிலவுகின்றன.

அரசின் பராமரிப்பில் அறிவிக்கப்பட்ட புராக்குகளின் நிலைமையே இதுவென்றால், அரசுத் திட்டங்கள் சென்றடையாத புராக்குகளின் நிலைமை மேலும் மோசமாக இருக்கின்றன. உயர் கல்வி கற்ற, கற்கும் புராக்கு மக்கள் ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம். பெரும்பாலான புராக்கு இன மக்கள், தொடக்கக் கல்வி நிலையிலேயே படிப்பை விட்டுவிடுகின்றனர். ஒரு சிலர் பள்ளி இறுதி வரை படித்திருக்கின்றனர். கல்லூரி வரை சென்றுள்ள புராக்கு இளைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதிலும் முழுமையாக கல்விப் படிப்பை முடித்தவர்கள் வெகு குறைவானவர்களே.

ஒடுக்கப்படுவர்களிலேயே மோசமாக ஒடுக்கப்படுபவள் பெண் என்ற உண்மை இங்கும் உறுதிப்படுகிறது. புராக்கு இனப் பெண்கள், புராக்கு இனத்தில் பிறந்ததினாலும், பெண்ணாக இருப்பதினாலும் இரட்டை ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றனர். புராக்கு இன மக்களிடையே படித்தவர்களில், பெண்கள் 10 சதவிகிதம்கூட இல்லை. பெரும்பாலான புராக்கு இனப் பெண்கள், படிக்கவோ எழுதவோ கூடத் தெரியாதவர்களாகவே உள்ளனர். வேலை என்று வரும்போதும், நிரந்தர அல்லது மாத வருமானம் ஈட்டும் பெண்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர். பெரும்பாலான பெண்கள் மணி நேர கூலி வாங்குபவர்களாகவோ, தினக் கூலி வாங்குபவர்களாகவோ உள்ளனர்.

நிலைமை இப்படியிருக்க, பொது மக்கள் மத்தியில் வேறு எண்ணம் நிலவுகிறது. இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்த என் தோழியைப் போலவே, புராக்கு வேறுபாடு என்ற ஒன்றே தற்போது இல்லை என்றும், அரசு அவர்களுக்குத் தேவைக்கு அதிகமாக சலுகை காட்டுகிறது என்றும் பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். அரசு சலுகை அவர்களுக்கு கிடைப்பதால் ஏற்பட்ட பொறாமை, மிக அதிக மாக பொது மக்களிடம் இருக்கிறது. "அதைப் பற்றி பேசி ஏன் பெரிது படுத்துகிறீர்கள்? அமைதியாக விட்டால் அப்பிரச்சினை தானாக ஒரு நாள் காணாமல் போய்விடும்' என்று சொல்கிறவர்களே அதிகம். மேலும், "இத்தனை ஆண்டு கால சலுகைக்குப் பிறகும் அம்மக்கள் முன்னேறவில்லை. அது அவர்கள் குற்றம். அவர்களை ஒன்றும் செய்ய முடியாது' என்று அலட்சியமாகப் பேசுபவர்களும் உள்ளனர். இந்த மனநிலை இந்தியாவிலும் இருப்பதை நாம் உணர்ந்துள்ளோம்.

மக்களின் மனநிலையில் மாற்றம் வரும்வரையில், அரசுத் திட்டங்கள் மட்டுமே இத்தகைய சமூக மாற்றங்களை கொண்டு வரப் போவதில்லை.

-பூங்குழலி
Pin It