தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும் 2 ரூபாய் அரிசி, 13,000 சாலைப் பணியாளர்களுக்குப் பணி நியமன ஆணை, 10,000 மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி, சத்துணவுப் பணியாளர்களுக்கு சலுகை, இலவசத் தொலைக்காட்சி வழங்குதல் என அனைத்தையும் கவனமாக நிறைவேற்றி வருகிறது. ஆனால், தலித் மக்களுக்குரிய பின்னடைவுப் பணியிடங்களை மட்டும் நிரப்ப மறுக்கிறது. 19 சதவிகித இடஒதுக்கீட்டில், இதுவரை சுமார் 4 சதவிகித இடஒதுக்கீடு மட்டுமே தலித்துகளுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. 1993 முதல் 2001 வரை பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் இடஒதுக்கீட்டை ‘சிறப்பு சேர்க்கை' மூலம் நிரப்பிட, பல அரசு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அரசுகள் இதை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை.

Agitation against DMK govt.
தலித் மக்களுக்குரிய அனைத்துப் பிரிவுகளிலும் 19 சதவிகித அளவீட்டை எட்டும் வகையில் பின்னடைவுப் பணியிடங்களை நிறைவு செய்ய வேண்டும் என தி.மு.க. அரசு, 1997 இல் அரசு ஆணை (2/97) வெளியிட்டது. ஆனால், அதை நிறைவேற்றாமல், 595 அரசுக் கல்லூரி ஆசிரியர் பணிக்காக மட்டுமே விளம்பரம் கொடுக்கப்பட்டது. இதை எதிர்த்து நான் பொதுநல வழக்குத் தொடர்ந்தேன் (வழக்கு எண். OA/6844 Tamilnadu Administrative Tribunal). இதன் அடிப்படையில், டாக்டர் கிருஷ்ணசாமி சட்டப் பேரவையில் வெள்ளை அறிக்கை கேட்டுப் போராடியதால், நீதிமன்றத்தின் பிடியிலிருந்து தப்பிக்க 100 கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை மட்டும் தி.மு.க. அரசு நிரப்பியது.

அவ்வாறு கொடுக்கப்பட்ட விளம்பரத்தில், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் அரசுக் கல்லூரிகளில் மொத்தம் 595 ஆசிரியர் பணிகளுக்கானப் பின்னடைவு இடங்கள் நிரப்பப்பட வேண்டும். அதில் 100 இடங்களுக்கு மட்டும் 1998 இல் விளம்பரம் கொடுத்து விட்டு மீதி, 495அய் படிப்படியாக நிரப்புகிறோம் என உறுதி அளித்தது. ஆனால், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பணி நியமனத் தடைச் சட்டம் போட்டுவிட்டது. தற்பொழுது மீண்டும் தி.மு.க. ஆட்சி ஏற்றபிறகு, 495 கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதுடன், பொது இடங்களையும் நிரப்ப வலியுறுத்தி, சென்னையில் 9.9.2006 அன்று மாபெரும் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. மேலும், இதை வலியுறுத்தி 28.9.2006 அன்று தொல். திருமாவளவன் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இருப்பினும், 18.9.2006 அன்று பத்திரிகை மூலம் 1034 அரசுக் கல்லூரி விரிவுரையாளர் நியமனத்துக்கான விளம்பரம் கொடுக்கப்பட்டுவிட்டது. பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் பின்னடைவு ‘சிறப்பு சேர்க்கை' விளம்பரம் மட்டும் கொடுக்கப்படவில்லை.

எனவே, அரசுக் கல்லூரிகளில் கொடுக்கப்பட வேண்டிய 495 ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் அனைத்துப் பிரிவுகளிலும் கொடுக்கப்பட வேண்டிய 17,314 பின்னடைவுப் பணியிடங்களையும் நிரப்பக் கோரி 2.10.2006 அன்று மதுரையில் ‘மத்திய மாநில பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு' சார்பில் மாபெரும் பட்டினிப் போராட்டம் நடத்தப்பட்டது.

பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்குரிய இடஒதுக்கீட்டை முழுமையாக (19%) நிறைவு செய்ய தமிழக அரசு மறுத்து வருவதால், நான் தலித்தாக இருந்தும் 1987இல் எம்.பில். பட்டமும் 1992 இல் பிஎச்.டி.யும் முடித்து 55 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்து, அதில் 25அய் வெளியிட்டும், 2 புத்தகங்கள் எழுதி முடித்தும் இன்று வரை வேலையில்லாப் பட்டதாரியாகவே இருக்கிறேன். இதே நிலையில்தான் 100க்கும் மேற்பட்ட பிஎச்.டி. பட்டதாரிகளும் சுமார் 3000க்கும் மேற்பட்ட எம்.பில். பட்டதாரிகளும் இருக்கிறார்கள். அண்மையில் வெளிவந்த இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து தமிழக முதல்வர், அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார்; இடஒதுக்கீடுக்காக சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், அவர் நிரப்ப வேண்டிய இடங்களை மட்டும் நிரப்ப மறுப்பது என்ன நியாயம்?
Pin It