“அக்டோபர் 2 மாலை உங்களை மருத்துவமனையில் பார்த்தேன். எல்லோரும் போன பிறகு உங்களுடன் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தேன். நீங்கள் நடக்க சிரமப்பட்டீர்களே தவிரப் பேச்சில் மிகுந்த தெளிவு இருந்தது. கடந்த ஒரு மாதத்துக்குள் நீங்கள் எழுதியிருந்த (செப். 7) ‘ஜகதி' கதையைப் பற்றி மீண்டும் பேசினோம். ‘ஏற்கனவே திருவனந்தபுரம் விமான நிலையத்தில் போலிஸ் எனக்காகக் காத்திருக்கிறார்கள்!' என்று சிரித்தீர்கள். நான் சொன்னேன், ‘நல்ல வேளை ‘ஜகதி' தமிழ்நாட்டில் வெளியாகவில்லை, இல்லையென்றால் இதிலிருந்தும் ஏதாவது பூதம் கிளம்பியிருக்கும்' என்று. ‘நான் தமிழ்நாடு பக்கம் போகாமல் இருப்பது நல்லதுதான்' என்று சிரித்தீர்கள்." - ‘காலச்சுவடு', நவம்பர் 2005

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் (‘சுரா') சாவு, இப்பொழுது கொண்டாடப்படுகிறது. நெகிழ்வு, கண்ணீர், நினைவுகள், அஞ்சலி, இரங்கல், எங்கும் வாசிப்பின் சுவடற்ற புகைப்படங்கள் - இழுத்து நிறுத்தப்படும் போலி பிம்பம். இறந்தவர்களைப் பற்றி தவறாக எழுதக் கூடாது என்றொரு கருத்து உண்டு. ஆனால்...

தன்னுடைய ஜாதிய மனப்பான்மையை, பார்ப்பனியத்தை, சுயநலத்தை, சக மனிதர்களை எள்ளலுடன் பார்த்ததை - கலை, இலக்கியம் என்ற முகமூடியில் மறைத்ததை -

எந்தவொரு உறவையும் பயன்பாடு, லாபம் ஆகியவற்றின் அடிப்படையில் வஞ்சகத்துடனும், தந்திரத்துடனும் அணுகியதை - சந்தையில் தன் பொருள், பெயர் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சுய விளம்பரம் என்பதைப் பின்தொடர்ந்து அலைந்ததை -

உழைப்பையும், சேவையையும் சார்ந்து நின்ற சிறுபத்திரிகை இலக்கியத்தை முழுமையான வியாபாரமாக மாற்றிக் காட்டியதை -

அரசியல், திரைப்படத்திற்கு அடுத்தபடியாக திறமை என்பதை முழுமையாகப் புறக்கணிக்கும் விதத்தில் இலக்கியத்தில், அதன் வியாபாரத்தில் வாரிசை, குடும்பத்தை, ஜாதியை நிலைநிறுத்தியதை –

90களில் உரிமைகளை நோக்கிய போராட்டத்தை உள்ளடக்கி மேலெழுந்து வந்த தலித் இலக்கியத்தை, அதன் உறுப்பினர்களை தன் அரசியலால், வியாபார நோக்கத்தால் பிளவுபடுத்தியதை -

தேடல், சமூக விமர்சனம் என்ற முகமூடியுடன் சாதிய மனப்போக்கை, நடுத்தர வர்க்க நலத்தை, கையாலாகததனத்தை நளினமான நடையில் இலக்கியமாக முன்வைத்ததை –

இறுதிவரை, தனது குற்றத்தை, தவறை நேர்மையுடன் ஒப்புக் கொள்ளாததை –

சரியாக எழுதித்தானே ஆகவேண்டும். ‘சுரா' இறந்திருக்கலாம். ‘சுரா'வும் அவருடைய போலிகளும் ஏற்படுத்திய, ஏற்படுத்தும் சுற்றுப் புறச் சூழல் கேடு, இன்னும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது
Pin It