செப்.17இல் இல்லம் தேடி சந்திப்பு

தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் 17.9.2015 அன்று தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட கழகச் சார்பில் ஒரு நாள் முழுவதும் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்பு என்றும், மாலை குடும்ப விழாவாகவும் கொண்டாடப் பட்டது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆலோசனைப்படி, இவ்விழாவினை கடந்த ஆண்டு 17.9.2014 அன்று தூத்துக்குடி பகுதியில் மிக சிறப்பாக நடைபெற்றது. அன்று மாலை மாணவர் கழகம் சார்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோன்று, பாவூர் சத்திரம் பகுதியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை தோழர்கள், ஆதரவாளர்கள் சந்திப்பாக நடத்த திட்டமிட்டு, முதல் நிகழ்வாக, கீழப்பாவூர் பெரியார் திடலிலுள்ள பெரியார் சிலைக்கு கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சுப்பையா மாலை யணிவித்ததோடு தொடங்கியது. தோழர்கள் இரு சக்கர வண்டியில் கொடிகளை கட்டிக் கொண்டும் கார்களிலும் அணிவகுத்து வந்தது பொது மக்களை பெரிதும் கவர்ந்தது.

தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களைச் சந்தித்து கழக வெளியீடுகளையும், பெரியாரியல் புத்தகங் களையும் அன்பளிப்பாக வழங்கி, தொடர்ந்து கழகத் திற்கு தங்கள் ஆதரவை தர வேண்டுமென பொறுப் பாளர்கள் கேட்டுக் கொண்டனர். குழந்தைகள் மற்றும் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. போகும் இடங்களில் தோழர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கியது, பெரும் மகிழ்வை கொடுத்தது.  தி.மு.க., ம.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினரையும் அமைப்பு சாராத பெரியாரியல் சிந்தனையாளர் களையும் நாம் தேடி சென்றது, அவர்களுக்கு வியப்பாக இருந்தது. ஓட்டு கேட்கத்தான் மற்ற கட்சிக்காரன் வருவான்; பெரியார் கொள்கையைச் சொல்ல, புத்தகம் வழங்க வந்தது, மகிழ்வை தருகிறது. பெரியார் இயக்கத்திற்கு தோல்வி என்பதே இல்லை என நமக்கு உற்சாகம் ஊட்டினர் தோழர்கள்.

அவர்கள் வீட்டுக்கு நாம் செல்வதற்காக வீட்டி லிருந்து நமக்கு அழைப்புக் கொடுத்து வாருங்கள் என அழைத்தனர். தி.மு.க. ஒன்றிய செயலாளர் கூ.சு.இராமச்சந்திரன் பல்வேறு நிகழ்வுக்கிடையில் நமது தோழர்களை சந்தித்து அளவளாவினார். தானாக முன்வந்து ரூ.500 நன்கொடையும் வழங்கினார். நாங்கள் நன்கொடைக்கு வரவில்லை என நமது நிலையை விளக்கினோம். அவர் மகிழ்வாக இந்த நிகழ்விற்கு எனது பங்களிப்பு என நம்மிடம் பணத்தைக் கொடுத்தார்.

மதியம் 2.30 மணியளவில் நெல்லை மாவட்ட அமைப்பாளர் சு. அன்பரசு தோட்டத்தில் மதிய உணவு விருந்தாக வழங்கப்பட்டது.  அதன் பின் தோழர்கள், தாம் பெரியார் இயக்கத்திற்கு வந்தது குறித்தும், இனி அமைப்பை எந்த வகையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும், தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்பின் நிறை குறைகள் பற்றியும் கருத்து தெரிவித்துப் பேசினர். கலாவதி பேசும்போது, “மாதம் நூறு ரூபாய் சந்தாவாக தோழர்கள் செலுத்த வேண்டும் எனவும், அடுத்த பெரியார் பிறந்த நாள் விழா குடும்ப விழாவாக, குழந்தைகள் கலை நிகழ்வுகளுடன் நடைபெற வேண்டும். மற்றும் தோழர்கள் தங்கள் வீட்டிலிருந்து பெண்களை கண்டிப்பாக இயக்க நிகழ்விற்கு அழைத்து வரவேண்டும்” என தனது கருத்தினை பதிவு செய்தார்.  பயிலரங்கம் மற்றும் பரப்புரைப் பயணம் குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

நிறைவாக கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், “பெரியார் இயக்கம் என்பது ஒரே குடும்பம் என்பதை தோழர்கள் உணரவேண்டும். தோழர்கள் பெண்ணுரிமை குறித்து புரிதல் இல்லாமல் இருப்பதுவும், வீடுகளில் பெண்களை நாம் நடத்தும் விதம்தான், நாம் பொது வாழ்விற்கு வருவதற்கு தடையாக இருக்கிறது. பெண்களை சக மனுஷியாக பெரியார் வழியில் பாருங்கள். பெண்களும் உங்களோடு இயக்க நிகழ்விற்கு வருவார்கள். சுய ஒழுக்கம் மிக்க ஒருவனால்தான் பொது ஒழுக்கத்தை காப்பாற்ற முடியும். குறைந்த அளவு நமது வீட்டில் நாம் அதனை நிறைவு செய்வோம்” என வலியுறுத்தினார்.

குடும்ப விழா நிறைவு பெற்றதும் மறைந்த கழக நெல்லை மாவட்ட முன்னாள் தலைவர் குறும்பலா பேரி வடிவேல் அய்யா வீட்டிற்கு தோழர்கள் அனைவரும் சென்று, அவர்கள் குடும்பத்தாருடன் அளவளாவினர். குளிர்பானம் கொடுத்து அனைவரையும் அய்யா வடிவேல் குடும்பத்தினர் வரவேற்றனர்.

சுயமரியாதை (திராவிடர் கழக) கோட்டையாகத் திகழும் கீழப்பாவூர், பாவூர் சத்திரம் பகுதியில் தோழர்களின் பயணம் மிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிகழ்வில் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், நெல்லை மாவட்டச் செயலாளர் சி.ஆ.காசிராசன், நெல்லை மாவட்ட அமைப்பாளர் சு. அன்பரசு, கீழப்பாவூர் ஒன்றியத்தலைவர் மாசிலாமணி, ஒன்றிய செயலாளர் சுப்பையா, ஒன்றிய பொருளாளர் சங்கர், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் தமிழன், தோழர் கலாவதி, நெல்லை தோழர்கள் வெற்றிமணி, இலட்சுமணன், மெக்கானிக் தங்கத்துரை, சபாபதி, பெரியார் திலீபன், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பொறிஞர்

சி. அம்புரோசு, மாவட்டச் செயலாளர் ரவிசங்கர், மாவட்ட அமைப்பாளர் பால். அறிவழகன், மாவட்டப் பொருளாளர் வீர பெருமாள், மாவட்ட துணைத் தலைவர் வே. பால்ராசு, தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி மாவட்ட தலைவர் கண்ணதாசன், ஜெயாஸ்டின் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வை தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப் பாளர் தமிழன், மாவட்ட கழக அமைப்பாளர் சு. அன்பரசு, கீழ்ப்பாவூர் ஒன்றியத் தலைவர் மாசிலா மணி ஆகியோர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய் திருந்தனர்.    

இராயக்கோட்டையில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 29.09.2015 அன்று தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த நாள் விழா, எங்கள் தலை முறைக்கு சாதி வேண்டாம் எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்; மக்களின் விளை நிலங்களை அபகரிக்கும் தனியார் நிறுவனங்களை கண்டித்தும் இராயகோட்டை பேருந்து நிலையத்தில் 29.09.2015 மாலை 4.00மணியளவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு  முனுசாமி தலைமை தாங்கினார். க.குமார், மாவட்ட செயலாளர் முன்னிலை வகித்தார். தி.குமார், மாவட்டத் தலைவர் வரவேற் புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, எழுத்தாளர் வே. மதிமாறன், தமிழரசன், தமிழ்தேசக் குடியரசு இயக்கம், கலைச்செல்வி, பகுத்தறிவாளர் கழகம், பெங்களூரு, பிசிஆர் பள்ளித் தாளாளர் பிசிஆர். மனோகரன் ஆகியோர் சிறப் புரையாற்றினர். கூட்டத்தின் முடிவில் சங்கர் கெலமங்கலம் நன்றி யுரையாற்றினார். தி.வி.க. மாவட்ட அமைப்பாளர்கள் சிவ.மனோகர், ராஜேஷ், ஜெய ராமன், தோழமை இயக்கத்தினர் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். கூட்டம் சிறப்பாக நடந்தது.

தூத்துக்குடி, நெல்லையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்புள்ள பெரியார் சிலைக்கு 17.9.15 காலை 7 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாலை அணிவிப்பு நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ச. ரவிசங்கர் மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், மாவட்டத் தலைவர் பொறிஞர் சி.அம்பு ரோசு, மாவட்டப் பொருளாளர் வீரபெருமாள், மாவட்ட அமைப்பாளர் பால். அறிவழகன், மாவட்ட துணைத் தலைவர்

வே. பால்ராசு, தமிழ் நாடு மாணவர் கழக மாவட்டத் தலைவர் கண்ணதாசன், மாணவர் கழக மாவட்டச் செயலாளர் பிரபாகரன் மற்றும் கழகத் தோழர்களும், தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்.

நெல்லை: பாளையங் கோட்டை பேருந்து நிலையம் முன்புள்ள தந்தை பெரியார் சிலைக்கு நெல்லை மாவட்டக் கழகச் சார்பில் 17.9.2015 அன்று காலை 8.30 மணி அளவில் பெரியாரின் 137ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாலை அணிவிப்பு நிகழ்வு நடை பெற்றது. நெல்லை மாவட்டச் செயலாளர் சி.ஆ.காசிராசன் மாலை அணிவித்தார். பால். பிரபாகரன், அருணாபேரி, கலையரசன் மற்றும் தூத்துக்குடி நெல்லை மாவட்ட பொறுப் பாளர்கள் மற்றும் தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

திருப்பூரில் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா!

திருப்பூரில் தந்தை பெரியார் பிறந்தநாள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இரு சக்கர வாகன ஊர்வலம் மற்றும் 20 இடங்களில் கொடியேற்று விழாவாக நடைபெற்றது.

04.10.2015 அன்று காலை 10 மணிக்கு திருப்பூர் இராயபுரத்தில் துவங்கிய இரு சக்கர வாகன ஊர்வலம் மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் முகில்ராசு தலைமை தாங்கி னார். மாநில பொருளாளர்  துரைசாமி ஊர்வலத்தைத் துவங்கி வைத்தார். ஊர்வலத்தின் துவக்க உரையை சூலூர் பன்னீர் செல்வம் நிகழ்தினார். பறையிசை முழங்க இராயபுரம் பகுதி கழகக் கொடியை மாநகர செயலாளர் நீதிராசன்  ஏற்றி வைத்தார்.

வாகன ஊர்வலம் திருப்பூரின் முக்கிய சாலைகளின் வழியாக இரயில் நிலையம், மாஸ்கோ நகர், கண்ணகி நகர், கொங்கனகிரி, பாலமுருகன் வீதி, திருவள்ளுவர் நகர், ஜீவா நகர், ரங்கனாதபுரம், சாமுண்டிபுரம், பெரியார் காலனி, அம்மாபாளையம், ஆத்துப் பாளையம், போயம்பாளையம், புதிய பேருந்து நிலையம்,  பழைய பேருந்து நிலையம், சந்தைப் பேட்டை, இடுவம்பாளையம், முருகம்பாளையம், வீரபாண்டி பிரிவு ஆகிய இடங்களில் கொடியேற்றப்பட்டது. கொடியேற்றிய ஒவ்வொரு இடங்களிலும் கழகத் தோழர்கள் தெருமுனைப் பிரச்சாரம் செய்து கூடியிருந்த மக்களுக்கு திராவிட இயக்கக் கொள்கைகள், சாதனைகள்,  இயக்கத்தின் செயல்பாடுகளை எடுத்துரைத்தனர்.

இறுதியில் மாலை 7 மணியளவில் வீரபாண்டி பிரிவில் கொடியேற்றத்துடன் வாகன ஊர்வலம் நிறைவடைந்தது. மாதவன் நன்றியுரைஆற்றினர்.

இந்த பெரியார் பிறந்த நாள் நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, அகிலன் உள்ளிட்ட 50  தோழர்கள் கலந்து கொண்டனர்.

Pin It