‘குடிஅரசு’ வெளியீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் கொண்டு சென்ற வீரமணி, அங்கும் மூக்குடைபட்டார்.
கி.வீரமணி தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற் பதற்கே உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ‘குடிஅரசில்’ பெரியாரின் பேச்சு-எழுத்துக்களை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு செல்லும் பெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தும் தீவிர முயற்சிகளில் தொடர்ந்து கி.வீரமணி ஈடுபட்டு கடும் தோல்விகளையே தொடர்ந்து சந்தித்து வருகிறார்.
பெரியார் நூல்களை வெளியிடும் உரிமை தமது அறக்கட்டளைக்கு மட்டுமே உண்டு; பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டது, தமக்கான காப்பீட்டு உரிமையில் குறுக்கிடுவதாகும் என்று கூறி, ரூ. 15 லட்சம் இழப்பீடு கேட்டு உயர்நீதிமன்றம் வந்தார் கி. வீரமணி. கி.வீரமணிக்கு பெரியார் காப்பீட்டு உரிமை ஏதும் வழங்கவில்லை. அதற்கான ஆவணமும் அவரிடம் கிடையாது என்று உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு திட்டவட்டமாக தீர்ப்பளித்தார். (27.7.2009) வீரமணி விடவில்லை. அடுத்த இரண்டு நாட்களிலேயே உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை வாங்கினார் (29.7.2009). வழக்கு இரண்டு நீதிபதிகளடங்கிய மேல் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஃ.எம். இப்ராகிம் கலிஃபுல்லா, என். கிருபாகரன் ஆகியோர் நீதிபதி கே. சந்துரு வழங்கிய தீர்ப்பையே உறுதி செய்து கி.வீரமணியின் மனுவை தள்ளுபடி செய்தனர். (9.6.2010)
தீர்ப்பு வெளிவந்த உடனேயே பெரியார் திராவிடர் கழகம் அடுத்த இரு நாட்களில் ‘குடிஅரசு’ 27 தொகுதிகளையும் வெளியிட்டுவிட்டது. அதற்குப் பிறகும் வீரமணி விடவில்லை; 5 மாத இடைவெளிக்குப் பிறகு (இதற்காகவே உயர்நீதிமன்றத் தீர்ப்பை அதிகாரப்பூர்வமாக பெற்றுக் கொள்ளாமல், காலம் கடத்தினார்) உச்சநீதிமன்றம் போனார். நவம்பர் 26 ஆம் தேதி சிறப்பு விடுவிப்பு மனு ஒன்றை தாக்கல் செய்து, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடையை கோரினார். தனது சார்பில் வாதாட பிரபலமான வழக்கறிஞரான கே.கே.வேணுகோபாலை நியமித்தார். (கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில், இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்காடியவர். தற்போது பரபரப்பாக பேசப்படும் ‘2ஜி ஸ்பெக்ட்ரடம்’ பிரச்சினையில் சி.பி.அய். தரப்பு வழக்கறிஞர்)
வழக்கு விசாரணை நவம்பர் 27 ஆம் தேதி நடுப்பகல் நீதிபதிகள் தல்வீர்பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு எடுத்த உடனேயே நீதிபதி தல்வீர் பண்டாரி, கி. வீரமணியின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் அவர்களைப் பார்த்து, “இது மேல்முறையீட்டுக்கு உரிய வழக்குதானா? ஒரு நூலின் ஆசிரியர் இறந்து 25 ஆண்டுகள் முடிந்துவிட்டால், பதிப்புரிமை கோர முடியாது என்று சட்டம் தெளிவாகக் கூறும்போது, இப்படி ஒரு வழக்கை நீங்களே எடுத்துக் கொண்டு வரலாமா?” என்று கேட்டார். கே.கே.வேணுகோபால், தொடர்ந்து ஏதோ பேச முற்பட்டபோது, “இந்த வழக்கிற்கு தொடர்பில்லாதவை பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை; சாரி மிஸ்டர் வேணுகோபால்” என்று கூறி மனுவை விசாரணைக்கு ஏற்காமலே தள்ளுபடி செய்து விட்டனர். உயர் நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பில், தலையிடத் தயாராக இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்தில் கழக சார்பில் மூத்த வழக்கறிஞர் பசவ பிரபு எஸ்.பட்டீல் ஆஜரானார். அவருடன், வழக்கறிஞர்கள் சபரீஷ் சுப்ரமணியம், மயில்சாமி, தேபாசிங் மிஸ்ரா ஆகியோரும் ஆஜரானார்கள்.