உலகின் ஒரே ‘இந்து’ நாடு என்று பார்ப்பனியம் பெருமையுடன் பறைசாற்றி வந்த ‘நேபாளம்’ - மதச்சார்பற்ற நாடாகி விட்டது. ‘இந்து மன்னர்’ ஆட்சி நடந்தது. அந்த மன்னர் விஷ்ணுவின் ‘மறு அவதாரம்’ என்று, மக்களை பார்ப்பனியம் நம்ப வைத்தது. மனு சாஸ்திரமே நாட்டின் சட்டமாக இருந்தது. மன்னர் ‘க்ஷத்திரியர்’; அவர் ‘பிராமண புரோகிதர்’ காலில் விழுந்து ஆசி பெற வேண்டும். சங்கராச் சாரி பார்ப்பனர்கள், தங்களின் தாய் நாடாக நேபாளத்தைக் கருதி வந்தனர்.

1994ஆம் ஆண்டு முதல் ‘மனு தர்ம’ மன்னராட்சிக்கு எதிராக மாவோ யிஸ்டுகள் ஆயுதம் தாங்கியப் போராட்டத்தைத் தொடங்கினர். 2006இல் ஆயுதப் போராட்டத்தை கை விட்டு, அரசியல் பாதைக்குத் திரும்பினர். அதைத் தொடர்ந்து, 2008ஆம் ஆண்டு 239 ஆண்டுகால மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு, மக்களாட்சி முறையைக் கொண்டு வரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு எடுக்கப்பட்டது. ‘மதச்சார்பற்ற’ கொள்கையின் அடிப்படையில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் அமைப்பை உருவாக்குவதில் கருத்தொற்றுமை உருவாகவில்லை. இறுதியாக கருத்தொற்றுமை உருவாகி யது. 601 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி புதிய அரசிய லமைப்புக்கு வாக்கெடுப்பு நடந்தது. பங்கேற்ற 532 உறுப்பினர்களில் 507 பேர் இந்து பார்ப்பனிய மன்னர் ஆட்சியை ஒழிக்கும் புதிய அரசியல் அமைப்புக்கு ஆதரவாகவும், 27 பேர் எதிராகவும் வாக் களித்தனர். புதிய அரசியல் சட்டத்தின்படி நேபாளம் 7 மாநிலங்களைக் கொண்ட மதச்சார்பற்ற நாடாக மாறியுள்ளது.

நேபாள தென் பகுதியில் உ.பி., பீகார் எல்லையை ஒட்டி வாழும் மாதேசி, தரு என்ற சமூகப் பிரிவினர், புதிய அரசியல் சாசனத்தை ஏற்காமல் போராடி வருகிறார்கள். ‘இந்து இராஷ்டிரத்தை’ இந்தியாவில் நிறுவிட ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் தீவிரமாக ஆட்சி அதிகாரங்களைப் பயன்படுத்தி வரும் சூழலில் நேபாளத்தில் ‘இந்து’ ஆட்சியை ஒழித்து மலர்ந்துள்ள மதச்சார்பற்ற ஆட்சிக்கு வெளிப்படையான ஆதரவு தர பா.ஜ.க. ஆட்சி தயங்குகிறது. மாதேசி, தரு சமூகத்தினர் போராட்டங்களுக்கு மறைமுகமான ஆதரவை நல்கி வருகிறது. தங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து விட்டது என்றும், இரண்டாம் தர குடிமக்களாகி விட்டோம் என்றும், மாதேசி, தரு பிரிவினர் நடத்தும் போராட் டத்தை ஆதரித்து, அதற்கேற்ப அரசியல் சாசனத்தைத் திருத்த வேண்டும் என்று நேபாளத்தின் அதிபர் ராம்பரன் யாதவை இந்திய தூதர் நேரில் சந்தித்து வலியுறுத்தி யிருக்கிறார். மோடி ஆட்சி, நேபாள சிறு பான்மையினருக்காக காட்டும் துடி துடிப்பை அண்டை நாடான இலங்கை யிடம் அங்கே வாழும் தமிழர்களுக்காக ஏன் காட்ட மறுக்கிறது என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது.

மதத்தின் பெயரால் அமையும் ஆட்சிகள் மக்கள் விரோத ஆட்சி களாகவே இருக்கும். பல இஸ்லாமிய நாடுகளில் மனித உரிமைகள் முற்றாக நசுக்கப்பட்டு, பெண்கள் அடிமை களாக நடத்தப்படும் செய்திகளும் இஸ்லாமிய மத அடிப்படை வாதிகளின் மதவெறி செயல்பாடுகளும் நாகரிக சமூகத்துக்கு தலைகுனிவையே ஏற்படுத்தி வரு கின்றன.

மதங்களின் ஆட்சிகளும் அதன் காலத்துக்கு ஒவ்வாத பழமைவாதங்களும் நிலைத்து நீடிக்கவே முடியாது.

பார்ப்பனிய மன்னராட்சிக்கு விடை கொடுத்து, மதச் சார்பற்ற ஆட்சிக்கு மாறியுள்ள நேபாள மக்களுக்கு நமது வாழ்த்துகள்!

Pin It